கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: August 9, 2020
பார்வையிட்டோர்: 54,236 
 
 

*யாரு சுட்ட தோசை இது அப்பா சுட்ட தோசை*

கைகளில் ஃபோனை வைத்துக்கொண்டு ஃபேஸ்புக்கை நோண்டியபடியிருந்த என்னைப்பார்த்து பெருமூச்சி விட்டபடி சொன்னாள், என் மனைவி கமலா.

“‘லாக் டவுன்’ லீவ்ல நீங்கதாங்க லைஃபை என்ஞ்சாய் செய்யறீங்க”

“என்னடி இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டே.? எப்போ இந்த கொரோனா ‘யூ டர்ன்’ அடிச்சி திரும்பி போகும்.எப்போ கார்டு ரீடர்ல ‘பன்ச்’அடிச்சிட்டு கம்பனிக்குள்ள நான் வேலைக்கு போவேன்னு ஆவலா எதிர்பார்த்துக்கிட்டிருக்கிற என்னைப்பார்த்து இப்படி சொல்லிட்டியேடி?!”

“நீங்க வேலைக்கு போறப்பவே, நான் காலையில ஏழு மணிக்குதான் எழுந்திருப்பேன்..இப்பெல்லாம் இன்னும் சீக்கிரமா எழுந்திருக்க வேண்டியதா இருக்கு. உங்களுக்கு மூனு வேளையும் வக்கனையா வடிச்சிப்போட!”

‘வக்கனையா’ என்பது தேவையற்ற ‘அட்ஜக்டிவாய்’ தோணிற்று எனக்கு.ஆனால் சொல்ல முடியுமா வாய் திறந்து? என் வாய்க்கு ‘லாக் டவுன்’ ஆகிவிடுமே அப்புறம்?

“ஏன் ? உன்னை யார் இப்படி ‘பிரும்ம முஹூர்த்த’ நேரத்திலியே எழுந்திருக்க சொன்னது? லேட்டா எழுந்து லேட்டஸ்டா செய்யவேண்டியதுதானே உன் வேலையை?”

“ம்கும்..இதுக்கேதான் காலை டிஃபன் சாப்ட மணி 9 ஆயிடுது. புள்ளைங்க எழுந்ததுமே சாப்பாடுன்னுதானே எழுந்திருக்குதுங்க? புள்ளைங்கள விடுங்க..நீங்க.. அதுங்களைவிட மோசமாதானே இருக்கீங்க? புள்ளைங்களையாவது ஒரு மிரட்டு மிரட்டினா அடங்கிடும்.உங்களை மிரட்டதான்முடியுமா? மிரட்டுனாதான் நீங்க அடங்கிப்போற ஆளா?

“ஏன்டி ஒரு வருஷத்து கஷ்டத்தை ஒரே நாள்ல இப்படி ‘பொல பொல’ன்னு கொட்டி தீர்க்கறியே?”

“சே!! சே !!ஒரு வருஷ மனக்கஷ்டம்னு யார் சொன்னது? அதை கொட்ட இன்னொரு ‘லாக் டவுன் ‘ லீவ் மாதிரி ‘லாங் லீவ்’ தேவைப்படும்.அவ்ளோ இருக்கு.இப்ப சொன்னது எல்லாம் இப்போதைய புலம்பல்தான்”

“சரிடி! உனக்கு இப்போ, நான் ஃபோனை நோண்டக்கூடாது அப்டித்தானே? கொஞ்சம் கஷ்டம்தான்.இருந்தாலும். தினமும் நான், என் விரல்ல மருதாணியை வச்சிக்கிறேன்.போதுமா?”

காலையில் எழுந்ததும் ‘கத்தி’ சண்டை போட்டுக்கொண்டிருப்பதாய் நினைத்து, மகன் சத்யாவும், மகள் மாலுவும் எங்களிருவரையும் உற்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நான் அவர்களைப்பார்த்து சொன்னேன்.

“மாலும்மா..!! .அம்மா பாவம்தான் இல்ல?!!

நீயும் அண்ணனும் ஃபோனை வச்சிக்கிட்டு வீடியோ கேம் விளையாடறீங்க. நான் ‘ ஃபேஸ் புக்’ல மூழ்கிடறேன். ‘லாக் டவுன்’ , அம்மாவுக்கு ரெஸ்டே கொடுக்கலியே?!! அதனால…நான் ஒன்னு செய்யப்போறேன். அதுக்கு , நீங்க ரெண்டு பேரும் எனக்கு உதவி செய்யணும்.செய்யறீங்களா?”

“செய்யறோம்பா”

இருவரின் குரலும் ஒன்றாய் சேர்ந்தே வந்தது பதிலாய்.

சொல்லி விட்டு, அப்பா என்ன செய்யப்போறார் என்று சஸ்பென்ஸில் மூழ்கி இருந்தார்கள், பிள்ளைகள்.

“நாளைக்கு அம்மாவை உட்கார வச்சி, காலை, மதியம், ராத்திரினு மூனு வேளைக்கும்…நாம மூனு பேரும் சேர்ந்து சமைச்சி போட்டு அசத்தறோம்.சரியா?” சஸ்பென்ஸை உடனடியாய் போட்டு உடைத்தேன்.

“அப்பா….!! உங்களுக்கு தண்ணி சுட வைக்கிறதைத்தவிர கிச்சன்ல ஒன்னுமே தெரியாதேப்பா..எப்படி சமாளிப்பீங்க?

மகனின் கேள்வி நியாயமாகப்பட, என் பொண்டாட்டியும் என்னைப்பார்த்து சிரித்தாள்.

“யூ..யூ..யூ..டியூப்பாய நமஹ “என்றேன்.

இரவு முழுக்க எனக்கு தூக்கம் வரவில்லை.புரண்டு புரண்டு படுத்தேன்.’கிச்சன் கில்லாடிகள்’ என்கிற டிவி நிகழ்ச்சி எல்லாம் என் மனசுக்குள் வந்து வந்து கிண்டலடித்துவிட்டு போவது மாதிரி இருந்தது.

நான் முதன் முதலா சமையப்போறேன்.சாரி சமைக்கப்போறேன்.

அதை நினைத்து, நெஞ்சி படபடத்தது.

அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி..சே..!! என்ன கண்றாவி நினைப்பு இது? சமைக்கப்போறோம்னு நினைச்சதுக்கே..பெண்கள் செய்யற எல்லா வேலையும் ,தானாகவே நினைவுக்கு வர்தே?

மறுநாள்.

நான் படுக்கையிலிருந்து எழும்போது , காலை…எட்டு மணி ஆகி இருந்தது.நைட் முழுக்க தூங்காம , விடிய காலையில் கொஞ்சம் கண் அசந்துட்டிருக்கேன் போலிருக்கு. அதான் ‘லேட் வேக் அப்’

‘பெட்’டில் கமலாவைக்காணவில்லை.

“அச்சச்சோ.! .நான் இன்னிக்கு சமைக்கப்போறதால பயந்துபோயி, லெட்டர் கிட்டர் எழுதி வச்சிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாளோ?”

பயந்தபடி..தலையணையை தூக்கி பார்த்தேன்.நல்ல வேளை …லெட்டர், கடுதாசி என்று ஒன்றுகூட கண்களில் தென்படவில்லை.

கிச்சனிலிருந்து பாத்திரச்சத்தம் கேட்டது.

எந்த கதாபாத்திரமாய் இருக்கும் அது? மனைவி, மகள், மகன்?

“கமலா..!! .கமலா!”

என அழைத்தபடி கிச்சன் நோக்கி செல்ல,

அவள் , காலை தோசைக்கு சட்னி அரைக்க வெங்காயம் ‘கட்’ செய்ய தயாராகிக்கொண்டிருந்தாள்.

“நோ நோ..சொன்னது சொன்னதுதான்.நீ உட்கார்ந்து டிவி பார்,..ஃபேஸ் புக்கை நோண்டு, எத எதல்லாம் செய்து எஞ்சாய் செய்ய நினைக்கறியோ செய்.இன்னிக்கு சமையல் நாங்கதான்”

நான் சொன்னதும், அவளின் கண்களில் தண்ணீர். ‘செண்டிமெண்ட் ‘டால் அல்ல.நான் சொன்னதை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் , அவள் வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்திருந்ததுதான் அந்த கண்ணீருக்கு காரணம்.

பிள்ளைங்களும் காலை தூக்கத்துக்கு ‘டாடா’ சொல்லிவிட்டு, என்னோடு வந்து சேர்ந்து கொண்டார்கள்.

“அம்மா…ப்ளீஸ்..! கோ அண்ட் டேக் ரெஸ்ட்.வி ஆர் கோயிங் டு குக் நவ்”

கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை கமலாவுக்கு.

“எப்டியோ செஞ்சித்தொலைங்க ”

என சொல்லிவிட்டு ஹாலில் போய் அமர்ந்தாள்.

மூவரும் சேர்ந்து, அன்றைய மெனுவினை ஃபைனல் செய்தோம்.

காலை பிரேக் ஃபாஸ்ட்க்கு, தோசையும் தேங்காய் சட்னியும்.

மதியம் காரக்குழம்பு, ரசம், தயிர், வெண்டைக்காய் பொறியல், அப்புறம்..அப்பளமும்.

இரவு மீண்டும் தோசை.சைட்டிஷ் எந்த சட்னி என்பதை மட்டும் அப்புறமாய் முடிவெடுத்துக்கொள்வது எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

என் பொண்ணு மாலு, ஃபிரிஜ்ஜிலிருந்து இட்லி மாவினை எடுத்து வந்து கொடுத்தாள்.

பையன்…ஃபோனை எடுத்து வந்து கொடுத்தான்.

“இதை எதுக்குடா இப்ப எடுத்துக்கிட்டு வந்தே?”

“யூ டியூப் பார்க்க வாணாமாப்பா?”

“டேய் !! தோசை ஊத்தறது எப்டின்னு ‘யூ டியூப் ‘ பார்த்தா…அதை விட கேவலம் எதுவும் இல்லைடா.சரியான மாவா இருக்கானே இவன்னு சமூகம் பேசும்டா!”

“அப்பா..!! தோசை ஊத்த தெரியுமா உங்களுக்கு?

என்றாள் பொண்ணு.

கல்தோசையை முன்னாடி ஒரு தடவை ஊத்தி இருக்கேன் என அவளுக்கு சொல்ல நினைக்க, எந்தன் மனம் ஒரு ஃபிளாஷ் பேக் நோக்கி சென்றது.

ஒரு தடவை…ஃபிரிஜ்ஜிலிருக்கிற மாவை எடுத்துக்கொடுங்கன்னு கமலா கேட்டப்போ…அவசர அவசரமாய் மாவு டப்பாவை எடுத்து அவளிடம் கொடுக்கிற சமயம் பார்த்து, பழம் நழுவி பால்ல விழறமாதிரி, கை நழுவி டப்பா கீழே விழ..

முக்கால் வாசி மாவு…தரையில் கொட்டிவிட்டது.

கமலா திட்டி தீர்த்துவிடுவாளே என காதை பொத்திக்கொள்ள நினைத்தபோது..

“தோசையை தோசைக்கல்லுலதாங்க ஊத்துவாங்க. உங்களுக்கென்னங்க அப்படி ஒரு அவசரம்? இப்படி தரையிலியே ஊத்திட்டீங்களே?” என அமைதியுடன் கேட்டாள்.

தரை முழுக்க மொசைக் போட்டு ‘வழ வழ’ என்றிருக்கும்.

” மாவு ஊத்தி இருக்கிற தரையை மட்டும் கொஞ்சம் சூடாக்கினா போதும்.லேசா எண்ணையை ஊத்தி அப்டியே திருப்பிப்போட்றுவேன்.தோசை நல்லா பெரிசா ஃபேமிலி தோசையாயிடும்.குடும்பமே குந்திக்கினு சாப்டலாம்.ஒவ்வொன்னா ஊத்திக்கினு இருக்க தேவை இல்லை.மசால் தோசை மாதிரி இதுக்கு ‘ மொசைக் தோசை’ னு

பேர் வச்சிடலாம்”

அதுவரை டென்ஷனாகாதவள், எனது ‘ ‘மொசைக் தோசை ‘ஐடியாவை கேட்டதுமே.. அப்படி டென்ஷனானாள்.அது வேணாம் இப்போ…விட்றுவோம்.

ஃபிளாஷ் பேக் முடிந்தது.வாங்க கிச்சனுக்கு போவோம்.

தோசை ஊத்த தெரியுமாப்பா என்ற மாலுவிடம் சொன்னேன்.

“கிண்டலிடிக்காத மாலு.! அப்பா ஊத்தின தோசையை ஒரு தடவ சாப்டா, அதுக்கப்புறம் நீ அப்பா ஊத்துற தோசையை மட்டும்தான் சாப்டுவேன்னு அடம்புடிப்பே !.. வேணும்னா பாரேன்”

“மாலு…நீ வெங்காயம் ‘கட் ‘பண்ணு.

“சத்யா…!! நீ…தக்காளிய ‘கட்’ பண்ணி கொடு”

வேலையை பகிர்ந்தளித்தேன்.

“அப்பா வெங்காயம் ரெடி..இந்தாங்க”

பொண்ணை நினைச்சா பெருமையா இருந்துச்சி எனக்கு. இவ்ளோ சின்ன வயசில ,இவ்ளோ திறமையை அடக்கி வச்சிக்கிட்டிருக்காளே!! எவ்வளவு சீக்கிரமா வெங்காயம் ‘கட்’ பண்ணிட்டா? என நினைத்தபடியே திரும்பிப்பார்த்தேன்.

எனது கண்கள் முழுக்க கண்ணீர்.வெங்காயம் ‘கட்’ பண்ணதால வந்ததல்ல அந்த கண்ணீர்.உண்மையிலியே..அழுததால வந்தது.

மாலு…வெங்காயத்தின் தோலை உறிக்காமலேயே ‘கட்’ பண்ணி வைத்திருந்தாள்.அதுதான் எனக்கு கண்ணீரை வரவழைத்திருந்தது.

“என்ன செஞ்சி வச்சிருக்கே நீ?”

“ஆனியன் கட் பண்ணியிருக்கேன் டாடி”

“நான் உங்கிட்ட என்ன சொன்னேன்?”

“‘ஆனியன்’ ‘கட்’ பண்ண சொன்னீங்க!”

“அப்பா விடுங்க…கவுண்ட மணி செந்தில் வாழப்பழ சீன்ல பேசிக்கிற டயலாக் மாதிரி போவுது.தோலை உறிச்சிட்டு கட் பண்ணாலும்…கட் பண்ணிட்டு தோலை உறிச்சாலும் ஒன்னுதானே?” மாலு..நீ தோலை உறி” என்றான், சத்யா.

” வழக்கமா நீ செய்யற அட்டூழியத்துக்கு, அப்பாதானே உன் தோலை உறிப்பாரு.இப்ப ஏன் என்னை உறிக்கச்சொல்றே?”

இது மாலு.

“இபடி கிண்டல் பண்றத விட்டுட்டு, சுண்டல் பண்றதெப்டின்னு தெரிஞ்சிக்கோ.ஈவினிங் அம்மாவுக்கு ஸ்னாக்ஸ் செஞ்சி கொடுக்கலாம்”

“டேய்!! டேய் ! பேச்சைக்குறை.எங்கே தக்காளி ? கட் பண்ணிட்டியா?”

“இல்லப்பா.பார்க்க அழகா இருந்துச்சி..அதனால அதை ‘கட்’ பண்ணவே மனசு கேட்கலப்பா”

“சோம்பேறி!! சோம்பேறி !? தக்காளி ‘ கட்’ பண்ணச்சொன்னா ..கவிதை பேசி திரியுது பாரு..கொண்டா இப்டி நானே’ கட் ‘பண்ணிக்கிறேன்”

தக்காளியை கையில் வாங்கினேன்.

சத்யா சொன்னது சரியாத்தான் இருக்கு.

தக்காளியின் உருவத்தில் ‘ஹன்சிகா’ தெரிந்தாள்.அவ்ளோ அழகா தெரிஞ்சது, தக்காளி.

எனக்கு ஹன்சிகான்னா இவனுக்கு எவளோட முகம் தெரிஞ்சிதோ?

என நினைத்து அவனைப்பார்த்தேன்.எதோ புரிந்து போய் மெல்ல சிரித்தான்.

ஹன்சிகாவை நினைவிலிருந்து தூக்கிப்போட்டு விட்டு, கம்பனியில் என் பாஸின் உருவத்தை நெற்றியின் நடுவில் கொண்டு வந்ததும்..கைகளிலிருந்த தக்க்காளி வேகமாய்’ கட் ‘டுப்பட்டு போயிருந்தது.

“என்னங்க…தோசை ரெடியா? பசிக்குது”

ஹாலிலிருந்து மனைவியின் குரல்.

இவளென்ன பழிக்கு பழி வாங்குறாளோ?

நாம தினம் தினம் சொல்ற டயலாக்கை இன்னிக்கு இவள் சொல்றாளே?

என நினைத்து,

“ரெடியாகிட்டே இருக்கு” என்று கோரஸாக சொன்னோம்.

‘நீங்க சட்னியை சட்டுன்னு அரைக்க மாட்டீங்க போலிருக்கு.முதல்ல தோசை ஊத்துங்க.நான் இட்லி பொடி வச்சி சாப்டுக்கறேன்”

ஹாலிலிருந்தபடியே, அவள், ‘பொடி’ வைத்து பேசியது எனக்கு ரொம்ப பிடிச்சிப்போயிருந்தது.

“அடி தூள்! இட்லி தூளை விட்டுட்டோமே!! மாலு! காலை மெனுவில் சட்னியை அரைச்சிட்டு, சாரி !! சட்னியை அடிச்சிட்டு இட்லி பொடின்னு மாத்தி எழுது”

சத்யாவுக்கும் பசி வயிற்றை கிள்ளியது போல.மாலுவுக்காக வெயிட் செய்யாமல், அவனே அடிச்சிட்டு திருத்தினான் மெனுவை. சீரியலில் இனி இவருக்கு பதில் இவர் என போடுவார்களே அது போல. சட்னிக்கு பதில் பொடி.

தோசைக்கல் அடுப்பில் வைக்கப்பட்டது.

மாலு ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து வந்திருந்த மாவும் ‘குளிர்’ விட்டுப்போயிருந்தது.

இட்லி மாவில் ஒரு கரண்டியை போட்டு ‘கர கர’ என கலக்கினேன்.

பிள்ளைகள்…அசந்து போய்விட்டார்கள்.

” எப்டி இதெல்லாம்..?’கலக்கறீங்க’ டாடி!”

” எத்தினிதடவை பார்த்திருக்கேன்.உன் அம்மா கலக்கினத? இது கூடவா தெரியாது?

“என்ன ஆசசு? தோசை ரெடியா?”

ஹாலிலிருந்து என் உரிமைக்குரல் ஒலித்தது.

“ரெடியாகிட்டிருக்கு கமலா”

“‘பேசிக்கிட்டிருக்கேன் மாமா’ வடிவேல் டயலாக் போலவே இருக்குப்பா நீங்க சொல்றது”

சத்யா காமெடி செய்ய முயற்சித்து தோல்வியை அடைந்தான்.நாங்கள் இருவரும் எள்ளவுகூட சிரிக்கவில்லை.

“தட்டு கழுவி…இட்லி பொடிய ஒருத்தர் வைங்க.எண்ணையை ஒருத்தர் ஊத்தி கலக்கி ரெடியா வைங்க.அம்மாவுக்கு பசிக்குதாம்”

மாலுவும் சத்யாவும் பொறுப்பாய், தவறேதும் செய்யாமல் சரியாய் அந்த வேலையை செய்திருந்தார்கள்.

ஒரு கரண்டி..மாவினை எடுத்து கல்லில் ஊற்றினேன்.அது வட்டமாய் ஓடிப்போய்க்கொண்டிருந்தது. அது ஓடி முடிப்பதற்குள், இன்னொரு கரண்டி மாவினை எடுத்து அதன் தலையிலியே ஊற்றி , தோசையின் விட்டத்தை கரண்டியின் உதவியினால்…பெரிசாக்கினேன்.

சத்யாவும் …மாலுவும் ஆவலுடன் அப்பா சுட்ட தோசையின் ‘ஃபர்ஸ்ட் காப்பி’க்காக காத்திருந்தார்கள்.ரிலீஸ்க்கு அப்புறம் அவர்களிருவரும்தான் டிஸ்ட்ரிபியூட்டர்கள்.’கமலா’ தியேட்டருக்கு.

எனக்கும் ஆவலாகவே இருந்தது. கல்லில் தோசை மாவு அத்தனை அழகாய் வட்டமிடப்பட்டிருந்ததை ரசித்துக்கொண்டிருந்தேன். கையிலிருக்கும் கரண்டியை ஒரு சுழட்டு சுழட்டி பார்த்தேன். அது ஒரு பென்சில் போல காட்சி தந்தது எனக்கு.

நான் பள்ளியில் படிக்கும்போது, கணக்கு ‘ ஜியாமென்றி’ பாடத்தில், மற்றவர்கள் போல , பெண்களின் வளையலையோ, ஒரு ரூபாய் காயினையோ வைத்து வட்டம் போடாமல், பென்சிலால் அப்படியே வட்டம் போட்டு பழகி இருந்ததுதான்..இன்றைக்கு தோசை இவ்ளோ அழகான வட்டமாய் வந்ததிற்கான காரணம் என தோனிற்று.

அந்த நேரம்.

“அப்பா “என்றாள் மாலு.

“என்னம்மா?”

“நான் பார்த்திருக்கேன்பா”

‘என்னத்தை பார்த்தேன்னு சொல்லுடி செல்லம்!””

“கல்லுல மாவை அம்மா ஊத்தினதும்..’சொய்ய்ய்ய்’னு ஒரு சத்தம் வரும்.இப்போ வரலியேப்பா”

“முதல்ல ஹால்ல ஓடுற டிவி யை ஆஃப் செஞ்சிட்டு வா. தோசை போடற சின்ன சத்தம் கூட காதுல விழமாட்டேங்குது.அவ்ளோ சத்தம் டிவியிலிருந்து”

“அப்பா…டிவி ஆஃப்லதான் இருக்கு”

“ஆஃப்ல இருக்கா..? பின்ன ஏன் அந்த ‘சொய்ய்ய்ய்’னு சத்தம் வரல? ஆங்…!! கண்டு புடுச்சுட்டேன்.இவ்ளோ நேரம் மாவு ஃபிரிஜ்லதானே இருந்துச்சி.அது சில்லுனு இருக்கும்தானே…அதான் அந்த சவுண்ட் மிஸ்ஸிங்”

தட்டில் தயாராய் கலக்கி வைத்திருந்த இட்லி பொடியிலிருந்து , எண்ணெய் தனியாகப் பிரிந்து ஓடிக்கொண்டிருந்தது,

பசி தாங்க முடியாமல், கமலா கிச்சனுக்குள்ளே வந்துவிட்டாள்.

“என்னதான் பண்றீங்க நீங்க? ஒரு தோசை சுட லாயக்கி இல்ல.இதுல மதியம் வேற சமைக்கறாங்களாம்”

கோபத்தில் அடுப்பை நெருங்கிய கமலாவிடம். மெல்லிய குரலில் சொன்னாள் மாலு.

“அம்மா !!’சொய்ய்ய்’ னு சத்தம் வராம சைலண்ட் மோட்லியே வேகுதும்மா அப்பா ஊத்தின தோசை”

என்று சொன்ன மாலுவை கொஞ்சம் தள்ளி நிற்கச்சொல்லிவிட்டு, என்னையும் கண்களால் முறைத்து விட்டு, அடுப்பை பற்ற வைத்தாள் ,கமலா.

சத்யாவும், மாலுவும் ஏளனமாய் என்னை பார்த்தார்கள்.

‘பத்த வைக்காம விட்டுட்டியே பரட்ட?!! எனும் வினா அவர்களின் பார்வையில் தெரிந்தது எனக்கு.

இன்னும் கொஞ்ச நேரத்தில், மாலு எதிர்பார்த்த ‘ சொய்ய்ய்ய்’ என்ற சத்தம் வந்துவிடும்.

ஆனால்..என்னோட தோசை ஊத்தும் ‘ப்ளான்’ செம்மயா ‘ஊத்திக்கிச்சி’என நினைக்கும்போது தான் , என் மனம் வெந்துபோனது..பற்ற வைத்த அடுப்பின் மேல் இருக்கும் தோசைக்கல்லில் மாவுபோல…

– ஜூலை 2020 (தேன் சிட்டு மின்னிதழ், முதல் பரிசு பெற்ற சிறுகதை)

Print Friendly, PDF & Email

1 thought on “யாரு சுட்ட தோசை

  1. ‘வக்கனையா’ என்பது தேவையற்ற ‘அட்ஜக்டிவாய்’ அது adverb ! நல்ல நகைச்சுவைதான்! இன்னொன்று ஜியாமென்றி!!! முதல் பரிசு! காலக்கொடுமை! அடிப்படை மொழியறிவு கூட வேண்டியதில்லை என்று முடிவு செய்து விட்டார்களா தமிழ் எழுத்தாளர்கள்?

  2. சார்..

    நல்லா தாேச சுட்டீங்க பாே ங்க…! கடைசில உங்க வீட்டம்மா பார்த்த பார்வையில தான் தாேசைவெந்திருக்கும்னு நினைக்கிறேன்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *