மேதாவிகள் பித்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 9, 2021
பார்வையிட்டோர்: 2,184 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பல மேதாவிகளின் வாழ்க்கையிலே, சில விநோ தங்கள் காணப்படுகின்றன. அவர்கள் விசித்திரமான இரட்டை வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். அவர்க ளுடைய மேதையைக் காட்டும் செயல்கள் மட்டில் அவர் களிடம் வெளிப்பட்டிராவிட்டால், அவர்களின் சில விசித்திர நடவடிக்கைகளைக் கண்டு, அவர்களை ஜனங் தள் அநேகமாய்ப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.

டாக்டர் ஜான்சன் என்னும் ஆங்கிலப் பண்டித ரைப் பற்றி நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவர் ஒரு சிறந்த எழுத்தாளர். ஆரம்ப காலத்தில் பிரசித்தமான ஆங்கில அகராதி ஒன்றைத் தயாரித்தவர். விகட மாய்ப் பேசுவதிலும், எழுதுவதிலும் திறமை மிகுந்தவர்.

அவர் வீதியில் செல்லும் பொழுது, ஒவ்வொரு லாந்தர்க் கம்பத்தையும் தொட்டுக்கொண்டே செல்லுவது வழக்கம். ஏதேனும் ஒரு கம்பத்தைத் தொடுவதற்கு விட் டுப்போனால், ஏதோ சாமானை மறந்து வைத்துவிட்டு வந்தவர் போல், அந்த வீதியின் துவக்கக் கோடிக்குத் திரும்பி ஓடுவார். மறுமுறையும், ஒவ்வொன்றாய் வழியி லுள்ள கம்பம் முழுவதையும் விடாது தொட்டுக் கொண்டே வருவார். லாந்தர்க் கம்பங்கள் இல்லாத வீதி யில் செல்ல அவருக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்காது. அப்படிப்பட்ட வீதியில் செல்ல நேர்ந்தால் தாம் செத் துப் போய்விடுவோம் என்றுகூட அவருக்கு ஒரு பயம் உண்டு. லாந்தர்க் கம்பங்களையெல்லாம் தொட்டுவிட்டு வருவதால்தான் தாம் நலமாய் வாழ்வதாக அவர் நம்பினார்.

ஆங்கிலக் கவி ஷெல்லியின் பாக்கள் அற்புத மானவை என்று உலகமெங்கும் மெச்சப்படுகின்றன. பிற நாட்டு மக்களையெல்லாம் சீர்திருத்த வேண்டுமென்று அவருக்கு ஓர் ஆசையுண்டு. ஏதாவது ஒரு நாட்டு மக்க ளுக்குத் தாம் சொல்ல விரும்பும் புத்திமதிகளை ஷெல்லி சில காகிதங்களில் எழுதுவார். அவைகளைக் கண்ணாடிப் புட்டிக்குள் அடைப்பார். புட்டிக்கு மேலே, அந்த நாட் டின் பெயரை விலாசமாக எழுதுவார்; தபாலில் போடு வதற்காக அன்று ; கடலில் எறிவதற்காகத்தான்! “கடலில் எறிந்தால், அது மிதந்து கொண்டே போய் யாருக்கு எழுதப்பட்டதோ அந்த நாட்டினர் கைக்குக் கிடைத்து விடும்” என்பது அவரது பூரண நம்பிக்கை!

முற்பிறவி ஒன்று உண்டு என்பதையும் அவர் மிகவும் நம்பியிருந்தார். ஒரு சமயம், ஒரு குழந்தையை அதன் தாயிடமிருந்து முரட்டுத்தனமாகப் பறித்து, தம் கை யிலே வைத்துக்கொண்டு, “நீ எந்த உலகத்திலிருந்து வந்தாய்? சொல், நிஜமாகச் சொல்” என்று கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார். குழந்தைக்கு என்ன தெரி யும்? பாவம்! அது கதறி அழ ஆரம்பித்துவிட்டது. “இது ஏதடா பெரிய சனியனாயிருக்கிறது! பதிலே சொல்லமாட்டேன் என்று அடம் பிடிக்கிறதே!” என்று முணுமுணுத்துவிட்டு அகன்றார். சிறு குழந்தைகளைப் போலக் காகிதக் கப்பல் செய்து தண்ணீரில் மிதக்க விட்டுப் பார்ப்பதிலே அவருக்கு ஒரு மகிழ்ச்சி. பையில் எந்தக் காகிதம் இருந்தாலும் சரிதான், அது என்ன காகிதம் என்று பார்க்காமலே கப்பல் செய்துவிடுவார். ஒரு சமயம் பத்துப் பவுன் கரன்ஸி நோட்டு ஒன்றையே காகிதக் கப்பலாய்ப் பண்ணிவிட்டாராம்!

அலெக்ஸாண்டர் டூமாஸ் என்ற பிரபல பிரெஞ்சு நாவலாசிரியர் ஓர் விசித்திரப் பழக்கம் கொண்டவர். நாவல்களை நீலக் காகிதங்களிலும், பாட்டுக்களை மஞ்சள் காகிதங்களிலும், கட்டுரைகளைச் சிவப்புக் காகிதங்களி லும்தாம் அவர் எழுதுவார். ஒன்றை மற்றொரு காகிதத் தில் எழுத ஆரம்பித்தால் சுகமாய் வராது என்று அவர் திடமாக நம்பினார்.

‘தீமையின் மலர்கள்’ (Flowers of Evil) என்ற அருமையான நூலை எழுதியுள்ள சார்லஸ் பாடிலேர் என்பவர், தம்மை அனைவரும் கவனிக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர். அதற்காக, அவர் தம் தலைமயிருக்குப் பச்சை வர்ணம் பூசிக்கொள்வார். அந்த அழகோடு, ஹோட்டலுக்குச் செல்வார். அங்கே சாப்பிடும் பொழுது, “என்னுடைய தகப்பனை நான் இரவில் கொன் றேன், நீ குழந்தைகளைத் தின்றிருக்கிறாயா? அவை என்ன ருசி தெரியுமா?” என்றெல்லாம் கூச்சலிடுவார். அக்கம் பக்கத்திலுள்ள எல்லோரும் இந்தச் சத்தத்தைக் கேட்டு, ‘இவன் யாரடா!’ என்று திரும்பிப் பார்த்து, இவரது அழகைக் கூர்ந்து கவனிப்பார்கள். அப்பொழுது அவர் பூரிப்புற்று, முதல் தரமான ‘ஸெண்டு’களை யெல் லாம் உடைத்து, தம்மேலே விட்டுக்கொண்டு ‘கம கம’ வென்று வாசனை வீசும்படி செய்வார்.

இவரைப் போலவே பால்ஸாக் என்ற பிரபல ஆசிரி யரும், பிறர் தம்மைக் கண்டு மகிழ்ச்சி யடையவேண்டும் என்பதற்காகச் சிவப்பு, கறுப்பு, பச்சை, மஞ்சள் முதலிய பலவித வர்ணங்களும் கலந்த உடைகளை அணிந்து கொள்வார். அவர் எழுத ஆரம்பிக்கும்போது, பாதிரிகள் போட்டுக்கொள்வது போல, வெள்ளை ஆடை அணிந்து கொள்வார். தலையில் கறுப்புக் குல்லாய் தரித்துக்கொள் வார். பரீட்சைக் காலங்களில் டீ, பொடி முதலிய சாத னங்களின் உதவியால் இரவு பூராவும் கண்விழித்துப் படிக்கும் சில பள்ளி மாணவர்களைப்போல, பானை நிறையக் காப்பியும், பத்துப் பன்னிரண்டு மெழுகு வர்த்திகளும் வைத்துக்கொண்டு இரவு முழுவதும் எழுதுவார்.

போலந்தின் மாஜி பிரதம மந்திரிகளில் ஒருவரும், பியானோ வாசிப்பதில் மகா கியாதி வாய்ந்தவருமான பாடே ரெவ்ஸ்கீ என்பவர், பியானோ வாசிக்க உட்காரு கையில் ஐந்து நிமிஷ நேரம் வரையில், தமது ஆசனத்தை ரொம்ப ஒழுங்கெல்லாம் பார்த்துத்தான் போட்டுக் கொள்வார். பிறகு, தமது சிறிய பீடத்துக்கு அருகே அந்தப் பெரிய பியானோவை இழுத்துப் போடச் சொல்வாரே யொழிய, தமது பீடத்தைச் சிறிதுகூட நகர்த்த மாட்டார்.

புலவர்கள் தாம் இவ்வாறென்றால் அரசர்கள், பிரபுக்களின் வாழ்க்கையிலும் இம்மாதிரியான சில விநோ தங்கள் இல்லாமலில்லை. ஒளரங்கசீப்பிற்குச் சங்கீதத் தைக் கேட்கப் பிடிக்காதது போலவே, இங்கிலாந்தை அரசாண்ட இரண்டாவது ஹென்றிக்கும், பூனைகளைக் கண்டால் பிடிக்கவே பிடிக்காது. பிடிக்காததோடல்ல, ஒரு பூனையைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் மூர்ச்சையடைந்து விழுந்துவிடுவார். இவ்வாறு பல தடவை அவர் மூர்ச்சை போட்டிருக்கிறார்.

பிரடரிக் என்னும் கீர்த்திபெற்ற மன்னர், இதற்கு நேர் விரோதமானவர். அவருக்குப் பூனையைக் கண்டால் மிகப் பிரியம். ஆனால், வெப்பம் சிறிதும் பிடிக் காது. இரவு நேரங்களில், கொஞ்சம் வெப்பமாகத் தோன்றினாலும் சரி, உடனே தமது வேலையாட்களை அழைத்து, தண்ணீர் கொண்டுவந்து, தமது தலையில் கொட்டும்படி கட்டளையிடுவார். இவ்வாறு செய்யாவிடில் அவருக்குத் தூக்கமே வராது.

நியூயார்க்கைச் சேர்ந்த வென்டல் என்பவர் ஒரு கோடீசுவரர். அவருக்குக் கறுப்பு உடைகள் போட்டுக் கொள்வதில் தான் பிரியம் அதிகம். அதுவும் ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள கறுப்பு ஆடுகளின் தோலால் செய்த உடைகளாகத்தாம் இருக்கவேண்டும். கோடை காலங்களில் தமது குல்லாய்களுக்கு ‘எனாமல்’ பூசிவிடு வார். அழைப்புக்கள் எல்லாவற்றையும் அவர் லத்தீன் பாஷையில் தான் எழுவது வழக்கம். நமது சமஸ்கிருதம் போல் வழக்கொழிந்தது லத்தீன் பாஷை. என்றாலும், அதைவிட்டு வேறு எந்தப் பாஷையிலும், எந்தக் கார ணத்தைக் கொண்டும் அழைப்புக்களை அவர் எழுதவே மாட்டார். அவருடைய மிதியடியின் கீழே, ஓர் அங்குல கனமுள்ள தோல் வைத்துத் தைத்திருக்கும். உயர மாகத் தோன்றுவதற்காக அன்று. எல்லா வியாதிகளுமே கால் வழியாகத்தான், உடம்பிற்குள் நுழைகின்றன என்பது அவருடைய சித்தாந்தம். ஆகையால், அதைத் தடுக்கவே இந்த முன் ஜாக்கிரதையான ஓர் அங்குலத் தோல்.

இதையெல்லாம் பார்க்கும் போது, எப்படி நோய் பிடித்த சிப்பியிலேயே நல்ல முத்துப் பிறக்கிறதோ அதேபோல, ஏதோ ஒரு மன நோயின் வேரினின்றே, மனித மேதையும் கிளைத்துத் தளிர்த்துப் பூக்கிறது என்று ஸ்டுவர்ட் ராபர்ட்ஸன் என்ற ஆங்கில எழுத்தாளர் வியப்பதில் உண்மையிருக்குமென்றே தோன்றுகிறது.

– வாழ்க்கை விநோதம் (நகைச்சுவைக் கட்டுரைகள்), நான்காம் பதிப்பு: நவம்பர், 1965, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *