மனநல மருத்துவர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 1, 2012
பார்வையிட்டோர்: 10,652 
 
 

கழுத்தில் டையுடன் நீட்டாக உள்ளே வந்தவரைப் பார்த்தவுடன் சற்று மிரண்டு போனதற்கு காரணம், அந்த 28 வயது இளைஞர் இடுப்புக்‍கு கீழ் அணிந்திருந்தது அரைக்‍கால் டவுசர் மட்டுமே. அவரிடமிருந்து வார்த்தைகள் கோர்வையாக வெளிவரவில்லை. அவரது வார்த்தைகள் தெளிவற்று காணப்பட்டன. அதற்குக்‍ காரணம், அவர் அவரது கட்டை விரலை, வாய்க்‍குள்ளே வைத்து சூம்பிக்‍ கொண்டிருந்தார். என்னதான் ஏராளமான மன நோயாளிகளுக்‍கு மருத்துவம் செய்து குணப்படுத்தியிருந்தாலும், வாய்க்‍குள் பெருவிரலை வைத்து்க கொண்டு வித்தியாசமாக பேசும் அந்த இளைஞனின் வார்த்தைகளை விளங்கிக்‍ கொள்ள சற்று சிரமமாகத்தான் இருந்தது.

அருகில் இருந்த அந்த பெரியவர் அவ்வப்பொழுது மொழி பெயர்த்து கூறிக்‍ கொண்டிருந்தார்.

“டாக்‍டர் அங்கிள் என் பேனா மூடி நேத்து தொலைஞ்ச போச்சு”

“ஓ, அப்படியா, அப்புறம்”

“மிஸ், என்னை கிள்ளிட்டாங்க”

“எங்க கிள்ளுண்ணாங்க”

எழுந்து பின்புறமாக திரும்பிக்‍ காண்பித்தான்.

” நீ என்ன பண்ண”

“நான் அழுதேன், அப்புறம் பதிலுக்‍கு திரும்ப கிள்ளிட்டேன்”

டாக்‍டர் அருகில் இருந்தவரைப் பார்த்து இவருக்‍கு என்னவானது என்பது போல் பார்த்தார். அவர் கூற ஆரம்பித்தார், ஆழமாக மூச்சை இழுத்து விட்டுக்‍ கொண்டு.

அவர் கூறுவதற்கு தயார் ஆவதைப் பார்த்தால் கி.பி. 1960லிருந்து ஆரம்பிப்பார் போல இருந்தது. அவர் ஆழமாக ஆழமாக தன் நினைவுகளுக்‍குள் சென்று எதையோ தன் அகக் கண்ணால் பார்த்தபடி கூற ஆரம்பித்தார்.

“எல்லோரும் வேணாம், வேணாம்ன்னு சொல்ல என் அவசரப்புத்தியால ஆடி மாசத்துல கல்யாணம் பண்ணி, சித்திரை மாசத்துல பொறந்தவன்தாங்க இவன். என் புள்ளை ராம மூர்த்தி.”

“சின்ன வயசுல நல்லாதாங்க இருந்தான், நாலாவது படிக்‍கும் போதே12ம் வாய்ப்பாடு வர மனப்பாடமா சொல்வாங்க. அவன் டீச்சரே அவனை பாராட்டுவாங்கன்னா பாத்துக்‍கோங்களேன். எப்ப பாத்தாலும் எதையாவது படிச்சுகிட்டே இருப்பாங்க”

எப்பொழுதும் டாக்‍டர் டெஸ்பிரின் மாத்தி்ரைதான் போடுவார். ஆனால் இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து தன்னை தற்காத்துக்‍ கொள்ள 2 சாரிடானை எடுத்து விழுங்கினார்.

“நேரா விஷயத்துக்‍கு வாங்க”

“அதாங்கய்யா……..ம்….. எங்க வுட்டேன்…..ம்…..எப்ப பார்த்தாலும் படிச்சுகிட்டே இருப்பாங்க.”

டாக்‍டர் நெற்றியில் கை வைத்துக்‍ கொண்டார். நெற்றி சூடாக இருந்தது.

“ஐயோ…. எது கேசுன்னு தெரியலையே” என்று தனக்‍குள் புலம்பினார்.

பெரியவர் தொடர்ந்தார். “ஆதாங்கய்யா……அவன் 10ம் வகுப்பு படிக்‍கும் போது, ஒரு தாடிவச்ச வயசான சாமியாரு போட்டா போட்ட ஒரு புத்தகத்தை வச்சு எப்ப பாத்தாலும் படிச்சுகிட்டே இருந்தாங்க. தம்பி சாப்புடு ராஜான்னு கூப்புட்டா கூட வரமாட்டாங்க. நாள் முச்சூடும் அந்த வயசான சாமியாரோட பொஸ்தகத்தை கைல வச்சுகிட்டே திரிவானுங்க”

“சரிங்க, சீக்‍கிரம் விஷயத்துக்‍கு வாங்க”

“அதாங்கய்யா, அவரு கொழந்த மாதிரி மனச வச்சுக்‍கனும்னு சொல்லிருக்‍காராம். அன்னைல இருந்து கொழந்தை மாதிரி பேசுறான். ​கொழந்தை மாதிரி சிரிக்‍கிறான். கொழந்த மாதிரி விளையாடுறான்……” அப்படியே உடைந்து அழுதார். டாக்‍டர் அவரை தேற்றினார்.

“தைரியமா சொல்லுங்கா, எதுவானாலும் பரவாயில்லை. அழாதீங்க ப்ளீஸ்”

“அதாங்கய்யா கொழந்த மாதிரி வாய் பூரா அப்பிகிட்டு சோறு தின்னா தொடைச்சு விட்ரலாம், ஆனா இவனுக்‍கு இந்த 25 வயசுல, காலங்காத்தால என்னால வீட்லயே இருக்‍க முடியலங்கய்யா, எந்திரிச்சு வெளிய ​எங்கயாவது போயிடுறேங்கய்யா?”

“ஏன் எந்திரிச்சு போயிடுறீங்க”

“அத எப்புடிங்க என் வாயால சொல்​லுவேன்”

டாக்‍டர் டேபிளை திறந்து பார்த்தார்.

“மருத்துவமனையிலேயே ஒரு தலைவலி மாத்திரை கூட இல்லையென்றால் இந்த நாடு உருப்படுமா, நாசமாகப் போக” என சாபமிட்டார்.

“ஐயா, டாக்‍டர்கிட்ட எதையும் மறைக்‍கக்‍ கூடாது, தயவு செஞ்சு சொல்லுங்க”

“அதாங்கய்யா கண்ட எடத்துல கொழந்தை மாதிரி போய் வச்சுருவாங்கய்யா”

அதிர்ச்சி அடைந்த டாக்‍டருக்‍கு இப்பொழுதுதான் புரிந்தது. இவ்வளவு நேரமாக வெளிப்பட்ட ஒரு விதமான மூத்திரவாடைக்‍கு அந்த பெரியவர் தோளில் தொங்கிக்‍கொண்டிருந்த துண்டு காரணம் இல்லையென்று…

“அடக்‍கடவுளே….. நர்ஸ்…… டேய் கணேஷா…… எல்லாரும் இங்க வாங்க, இத கிளீன் பண்ணுங்க. ஐயா நீங்க கொஞ்ச நேரம் வெளியே இருங்க”

(2 மணி நேரத்திற்குப் பிறகு)

“பெரியவரே இப்பத்தான் உங்க பையனோட பிரச்னை என்னன்னு முழுசா புரிஞ்சது. ஒரு விஷயத்த முழுசா நம்பி, அவரோட சப்கான்சியஸ் மொத்தமா ஏத்துக்‍கிட்டதால அப்படியே மாறிப்போறதுதான் இது. இந்த மெண்டல் டிஸ் ஆர்டரை குணப்படுத்திடலாம். கவலைப்படாதீங்க. அவரோட ஆழ்மனசுக்‍குள்ள போயி, உங்க வயசு 3 இல்ல, 25ன்னு புரியவச்சுட்டா போதும். அவரு பழையபடி மாறிடுவாரு”

பெரியவர் உடைந்து அழுதார்.

“ஐயா இத கொணப்படுத்த முடியாதோன்னு நெனைச்சேங்கய்யா, வாழ்நாள் பூரா இது ஒரு தொல்லையா மாறிடுமோன்னு நெனைச்சேங்கய்யா”

“நோ…..நோ….. பேஷண்ட அது இதுன்னெல்லாம் சொல்லக்‍கூடாது. அவங்களும் நம்மல மாதிரி ஒரு உயிர்தான்.அவருகிட்ட ஒருசின்ன தப்பு. ஒரு கோணல் இருக்‍கு. அதை நேர் பண்ணிட்டா போதும் எல்லாம் சரியாயிடும். அவரு பழையபடி திரும்பிடுவாறு, எனக்‍கு ஒரு 5 மாசம் டைம் கொடுங்க. அவர பழையபடி மாத்திக்‍ காட்டுறேன்.

முதல் மாதம்

ராமமூர்த்தி இப்ப நாம் விளையாடுற விளையாட்டுக்‍கு பேர் செஸ்.

ராமமூர்த்தி தலையை 90 டிகிரிக்‍கு நன்றாக 10 முறை ஆட்டினார்.

“இதுதான் ராஜா……..”

ராமமூர்த்தி ராஜா காயினை தொட்டு பயபக்‍தியுடன் கும்பிட்டார்.

“இந்த ராஜா காயினை வெட்டிட்டா அவ்ளோதான் கேம் முடிஞ்சது”

ராம மூர்த்தி, ராஜா காயினை எடுத்து வேகமாக தன் பாக்‍கெட்டுக்‍குள் போட்டுக்‍கொண்டார்.

“ராமமூர்த்தி அதை கீழ வைங்க,அதை யாரும் வெட்ட மாட்டாங்க கீழ வைங்க…… ப்ளீஸ்”

டாக்‍டரிடம் கையில் அடித்து படிப்பு மேல் சத்தியம் வாங்கியபின் தயங்கி தயங்கி ராஜா காயினை ஒப்படைத்தார்.

“ம்…. சரி…… இது தான் ராணி காயின்”

ராமமூர்த்தி, ராணிக்‍கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டார். டாக்‍டர் முகம் மாறினார்.

“இது தான் யானை” தயங்கியபடி கூறினார்.

“எனக்‍கு யானை பிடிக்‍காது” ராமகிருஷ்ணன் தூக்‍கி எறிந்தார் யானையை. அது உடைந்து போனது.

“இப்டியெல்லாம் தூக்‍கி வீசக்‍ கூடாது. சும்மா விளையாட்டுக்‍குத்தான் யானை, உண்மையான யானை கிடையாது சரியா”

“சரி”

“இது மந்திரி, இவங்கள்ளாம் சோல்ஜர்ஸ்” தலையை பலமாக ஆட்டினார் ராமமூர்த்தி.

“இப்ப நாம செஸ் விளையாடப்போறோம் ஓ.கே.”

ராமமூர்த்தி உடனே எழுந்து செஸ் போர்டின் நடுவே வந்து அமர்ந்து கொண்டார்.

இரண்டாவது மாதம்

ராமமூரத்தி இப்ப நீங்க எத்தனாவது படிக்‍கிறீங்க

“6ம் வகுப்பு”

“வெரிகுட், இப்ப நீங்க பெரிய பையன், அதனால கைசூம்பக் கூடாது. பெட்லயே மூச்சா போகக்‍கூடாது, சரியா”

“ம்……சரி…..”

“சரி, நேத்து சொல்லிக் கொடுத்த ரைம்ஸ் சொல்லுங்க பார்ப்போம்”

“கல்யாணம்தான் கட்டிக்‍கிட்டு ஓடிப்போலாமா, ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்‍கிலாமா…..”

“(கடுமையாக) ராமமூர்த்தி நான் இந்த ரைம்ஸ் உங்களுக்‍கு சொல்லித் தரலயே. யாரு உங்களுக்‍கு சொல்லிக் கொடுத்தது. உண்மையை, சொல்லப் போறீங்களா இல்லையா?…”

“நீங்கதான் பாடினீங்க டாக்‍டர்” கைகளை கட்டிக் கொண்டு நல்ல​ பிள்ளையைப்​ போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறினார்.

” எப்ப”

“நேத்து அந்த நர்ஸ் ஆண்டி ரூம்குள்ள வந்த போது இந்த ரைம்ஸ்தான் சொல்லிக்‍ கொடுத்திங்க.அவங்க கூட செருப்ப தூக்‍கி வீசுனாங்க நியாபகம் இல்லையா?”

பொறையேறிப்போன டாக்‍டர்… கண்ணாடி டம்ளரில் வைக்‍கப்பட்டிருந்த தண்ணீரை வாய்க்‍குள் கவிழ்த்தார்.

“சரி…..சரி… அத கெட்ட கனவா நெனைச்சு மறந்துடுங்க. நான் சொல்லிக் கொடுத்த நோ பியர், நோ பியர் போயம் சொல்லுங்க”

ராமமூர்த்தி கைகளைக் கட்டிக் கொண்டு 8 கட்டை சுருதியில் பாட ஆரம்பித்தார். மருத்துவமனைக்‍கு வெளியே அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த நாய், அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் தூக்‍கம் கலைந்து, யார் இப்படி கத்துவது என்பது புரியாமல் தலையை நிமிர்த்தி பயத்துடன் நான்கு திசைகளிலும் பார்த்தது.

மூன்றாவது மாதம்

ராமமூர்த்தி இப்ப நீங்க 7ம் வகுப்புக்‍கு வந்துட்டீங்க. இனிமே நீங்க ட்ரவுசர் எல்லாம் போடக்‍ கூடாது, பேண்ட் சர்ட்தான் போடவேண்டும்.

தின்று கொண்டிருந்த கோன் ஐஸ்கிரீமை வாய் மற்றும் மூக்‍குப் பகுதியிலிருந்து பிய்த்து எடுத்து, டாக்‍டரைப் பார்த்து உருண்டையாக….. ஒரு மாதிரியாக…..குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நந்தா சூரியாவைப் போல தலையை ஆட்டினார். டாக்‍டருக்‍கு அர்த்தம் புரியவில்லையென்றாலும், சரி என்று கூறுவதாக எடுத்துக்‍ கொண்டு மேலும் தொடர்ந்தார்.

“ராம மூர்த்தி இப்போ சில கேள்விகள் கேட்பேன் அதற்கு பதில் சொல்லணும் சரியா பதில் சொன்னீங்கன்னா சீக்‍கிரம் நீங்க 8ம் வகுப்புக்‍கு போயிடலாம் சரியா”

இன்னமும் அவர் ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடிக்‍கவில்லையாதலால், அவர் டாக்‍டரை கவனிக்காமலேயே தலையை ஆட்டினார்.

“2 ஐயும், 2 ஐயும் பெருக்‍குனா என்ன வரும்”

“4”

“4 ஐயும், 4 ஐயும் பெருக்‍குனா என்ன வரும்”

“16”

“வெரிகுட்”

“சரி 176 ஐயும், 176 ஐயும் பெருக்‍குனா என்ன வரும்”

“எனக்‍கு கோவம் வரும், உங்களுக்‍கு ஈசியா ​கேள்வியே கேக்‍கத் தெரியலை சார், லூசு மாதிரி கேக்‍குறீங்க”

டாக்‍டர் சற்று யோசனையில் ஆழ்ந்தார்.

நான்காவது மாதம்

“மிஸ்டர் ராமமூர்த்தி, நீங்க இப்போ 10வது வந்துட்டீங்க, இனிமே உங்களை எல்லோரும் மிஸ்டர் ராமமூர்த்தின்னு தான் கூப்பிடனும். யாராவது உங்களை மிஸ்டர் ராமமூர்த்தின்னு கூப்பட மறுத்தா என்கிட்ட வந்து சொல்லுங்க நான் பாத்துக்‍கிறேன். ஏன் சொல்றேன்னா, உங்களுக்‍குன்னு ஒரு மரியாதை இருக்‍கு அந்த மரியாதைய காப்பாத்திக்‍கனும். மரியாதைங்கிறது மனிதனுக்‍கு மிகவும் அவசியம். மரியாதைதான் ஒருவனுக்‍கு தன்னம்பிக்‍கை தருகிறது. நம்மை யாராவது மரியாதைக்‍குறைவாக நடத்தினால் நமக்‍கு கோபம் வர வேண்டும். நமது தன்மானம் சுட வேண்டும். அப்பொழுதுதான் நமது மரியாதையை நம்மால் காப்பாற்றிக் கொள்ள முடியும். அவ்வளவு ஏன் உங்களை யாராவது மரியாதைக் குறைவா கூப்பிட்டா சப்புன்னு அரைஞ்சிடுங்களேன். என்ன நடந்தாலும் நான் பாத்துக்‍கிறேன். என்ன சரியா….”

ராமமூர்த்தி எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தார்.

“என்ன ராமமூர்த்தி என்ன யோசிக்‍கிற”

துணுக்‍குற்ற ராமமூர்த்தி தனது கையை மேற்கு புறத்திலிருந்து கிழக்‍கு புறமாக வேகமாக விசிறினார். துரதிஷ்டவசமாக கிழக்‍கு பக்‍கத்தில் டாக்‍டர் நின்று கொண்டிருந்தார். டாக்‍டரின் அழகான கன்னம் மேலும் வீங்கி அழகுக்‍கு அழகு சேர்த்தது.

ராமமூர்த்தி ஒவ்வொரு விஷயத்தையும் மிகச்சரியாக, மிக ஆழமாக, மிக வேகமாக கற்றுக் கொள்கிறார் என்று டாக்‍டர் நம்ப ஆரம்பித்தார்.

ஐந்தாவது மாதம்
(ஐந்தாவது மாதம் என்னவோ நடந்தது)

ஆறாவது மாதம்

வெளிநாட்டிற்கு சென்றிருந்த தலைமை மருத்துவர் அன்று மருத்துவமனைக்‍கு வந்து ஒவ்வொரு மனநோயாளியாக பார்த்துக் கொண்டிருந்தார். ராமமூர்த்தியின் அருகில் வந்த தலைமை மருத்துவர்

“என்ன ராமமூர்த்தி எப்படி இருக்‍கீங்க, உடம்பெல்லாம் எப்படி இருக்‍கு” என்று இயல்பாக விசாரிக்‍க முறையே இரண்டு கன்னங்களிலும் தலா இரு அறைகளை வாங்கிக் கொண்டு பொறி கலங்கிப் போய் தனது அறைக்‍குச் சென்று அமர்ந்தார்.

120 வினாடிகள் மட்டுமே அதாவது இன்னும் 2 நிமிடத்தில் ராமமூர்த்திக்‍கு மருத்துவம் பார்த்த டாக்‍டர் என் அறையில் இருக்‍க வேண்டும் என்று மேஜையை வேகமாகத் தட்டியதில் அவரது உள்ளங்கை வலித்ததை வெளியே சொல்லாமல் தனக்‍குள் மறைத்துக் கொண்டார்.

நடக்‍காமல் ஓடிதான் வந்தாரென்றாலும் 60 விநாடிகள் அதிகரித்துவிடவே, தலைமை மருத்துவரின் கடுமையான கோபத்துக்‍கு உள்ளாகிப் போனார் டாக்‍டர்.

தலைமை மருத்துவர் : என்னையா ட்ரீட்மென்ட் குடுக்குறீங்க, 5 மாசமா ட்ரீட்மெண்ட் குடுத்துருக்‍க, பேஷண்ட் இவ்வளவு குரூரமா நடந்துக்‍கிறான். இவ்வளவு நாள் என்னத்தை பன்னி கிழிச்சிருக்‍க. பேஷண்ட் இவ்வளவு வன்முறையோட நடந்துக்‍கிறான்னா உன் ட்ரீட்மென்ட் எந்த பாதிப்பையும் உருவாக்‍கலன்னுதான அர்த்தம். உனக்‍கெல்லாம் டாக்‍டர்ன்னு ஒரு பட்டம் தேவையா? என்னத்தையா படிச்சு கிழிச்ச நீயெல்லாம். பதில் சொல்லுயா என்னத்தை படிச்சு கிழிச்ச நீ………..

டாக்‍டர் : “நான் 11வது முடிச்சுட்டு 10ம் வகுப்புக்‍கு போறேன் சார், வேணும்னா என் கிளாஸ்மேட் மிஸ்டர் ராமமூர்த்திய கேளுங்க சார்”

டாக்‍டர் அவரது வீங்கிப் போன கன்னங்களுக்‍கு நடுவே இருந்த சின்ன வாயின் வழியாக திக்‍கித் திணறி, அந்த கடைசி வாக்‍கியத்தை கூறி முடித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *