பாபா தாசன் அப்புசாமி

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 19,650 
 
 

சீதாப்பாட்டி வெளியூர் ரோட்டரி கிளப் ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுவிட்டுச் சில பல பொன்னாடைகளுடனும், பிரம்மாண்டமான பரிசுப் பார்சலுடனும் வந்து இறங்கினாள்.

ரோட்டரி கிளப்பின் சுயநலமற்ற மனிதகுல மேம்பாட்டுச் சேவைகளைப் பாராட்டி, சீதாப்பாட்டி இருபது நிமிஷம்தான் பேசினாலும் எல்லாருடைய பாராட்டையும் பெற்று விட்டாள். பாராட்டுகளையும் என்பதைவிட பரிசுகளையும் என்பதே பொருத்தம்.

நிறையப் பேர் பாட்டிக்கு வெகுமதிகளைக் குவித்தனர். அதில் கையில் ஒரு பிரம்மாண்டமான கி·ப்ட் பார்சல்.

“எல்லாத்தையும், ப்ளீஸ் ஜாக்கிரதையாக இறக்கி வையுங்க” என்றாள்.

பெரிய கி·ப்ட் பார்சல் அநியாயத்துக்குக் கனத்தது. ”பார்த்து.. பார்த்து… பி கேர்·புல்… க்ளேஸ்… க்ளேஸ்… கண்ணாடி…” என்று ஜாக்கிரதைக் குரல் தந்தாள்.

கால் டாக்ஸி டிரைவர் ஓர் உதவிகரம் நீட்ட ஒரு வழியாக அந்தப் பரிசுப் பொருளை உள்ளே கொண்டு சென்றார் அப்புசாமி.

“இவ்வளவு கனம் கனக்குது. ஏதாவது மினிப் பொணமா?’ என்றார்.

“கிரேக்தனமாப் பேசாதீங்க…. இதை ஊகிக்கிற ஐ க்யூவெல்லாம் உங்களுக்கு கிடையாது. ஸோ, உங்களுக்கு புதிர் போட்டு என் டைமை வேஸ்ட் பண்ணப் போறதில்லை… ‘டாப்’னு போட்டிருக்கிற பக்கத்தை மேலே வெச்சுக் கொண்டு நிதானமாப் பிரியுங்கோ… வொன்ட்டர் ·புல் ப்ரசெண்ட்… ஐ லைக் திஸ் வெரி மச்!”

“என்னது! செட்டியார் பொம்மை! கெட்டிக் கண்ணாடியிலே பண்ணியிருக்கு! இவ்வளவுதானே? இதற்கா இந்த அடி அடிச்சிகிட்டே! கொலுகிலு வைக்கறவங்களுக்குப் பிரயோஜனப்படும். உனக்குத்தான் அந்த இழவுப் பழக்கமெல்லாம் இல்லையே…”

“மூவ் ஐ ஸே…” என்று சீதாப்பாட்டி கணவரை முழங்கையால் இடித்துத் தள்ளாத குறையாக ஒதுக்கிக்கொண்டு அந்தப் பொம்மையைப் பெட்டியிலிருந்து ஜாக்கிரதையாக வெளியில் எடுத்தாள்.

“மை காட்! என்ன வெயிட்! வொன்டர் ·புல் பீஸ்! லா·பிங் புத்தா! அண்டர்ஸ்டாண்ட்?”

அப்புசாமி லா·பிங் அப்புசாமியானார் ”இந்த குண்டு செட்டியார் பொம்மையா புத்தர்? எவ்வளவு பெரிய தொப்பை! உண்ணா விரதமிருக்கிற நம்ம ஊர் அரசியல்வாதி மாதிரியல்ல இருக்காரு இந்த புத்தர்?”

“நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணினாலும் உங்களுக்குப் புரியாது. நம்ம ஊரிலே அதிர்ஷ்ட லட்சுமின்னு சொல்றதில்லையா?”

“லாட்டிரியைச் சொல்றியா?”

“லாட்டிரியையில்லை சார். லக்.” ·பார்ச்சூன்! ஜப்பானிலே அதிருஷ்டத்துக்கு ஏழு கடவுள் இருக்காம். அதுலே ஒண்ணுதான் இந்த ஹாடாயி – ஐ மீன் லா·பிங் புத்தா… இதனுடைய தத்துவம் என்னன்னா… இது ஒரு ஸிம்பல். இன் எவரி ஹ்யூமன் ஹார்ட் தேர் இஸ் த பொடென்ஷியல் டு பி என்லைட்டன்ட். மகிழ்ச்சி ஓரொரு மனுஷனுக்குள்ளும் இருக்குங்கறதுக்கு அடையாளம்தான் இந்த ஹாடாயி பொம்மை. ஹாட்டாயின்னா அவங்க மொழியிலே துணிப்பைன்னு அர்த்தம். பை நிறையக் காசு பணம் அதில் வெச்சிருக்காராம் நமக்கு. ஜப்பான் மேக்! ஆனால் ஸாலிட் கண்ணாடி. டேபிள் வெயிட் இல்லே அந்த மாதிரி கெட்டிக் கண்ணாடி… பொம்மையோட தொப்பையைத் தடவினா பணம், காசு, லக், எல்லாம் கிடைக்கும்னு ஜப்பான், சைனாக்காரர்களுக்கு ஒரு ஸ்டிராங்க் பிலீ·ப்.”

சீதாப்பாட்டி சொல்லி முடிக்குமுன் உடனடியாக அப்புசாமி சிரிப்புப் புத்த சிலையின் தொப்பையை அவசர அவசரமாகத் தடவினார். சீதாப்பாட்டி அவர் கையைத் தட்டிவிட்டாள் கோபமாக.

“மை காட்! உங்க நேஸ்ட்டி கையை வெச்சிக்கிட்டு உடனே தடவ ஆரம்பிச்சுட்டீங்களா?”

“ஏண்டி அலறுகிறே? என்னவோ உன் தொப்பையை நான் தடவிட்ட மாதிரி! நீ என்ன ஜோதிகாவா?” என்று பதிலடி கொடுத்துவிட்டு ”யோவ் குண்டு புத்தர்! உன் தொந்தியை நல்லாத் தடவிக் குடுத்திருக்கிறேன். சாயாந்தரத்துக்குள்ளே எதுனா அதிருஷ்டம் கிடைக்கலன்னா… உன் தொப்பையிலே ஒரு குத்துவுட்டு உன்னை மல்லாக்கச் சாய்ச்சிடுவேன் கபர்தார்… சரி… சரி… ஊருக்குப் போய் வந்ததும் தரேன்னியே.. எடு அந்த நூறு ரூபாயை…. மன்றத்துலே நான் குடுத்தாகணும் இன்னைக்கி…”

சீதாப்பாட்டி அவர் வேண்டுகோளைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

அப்புசாமிக்குக் கோபமாக வந்தது. அவ்வளவு அலட்சியமாக இருப்பதற்கு அது என்ன நதி நீர்ப் பிரசினையா, நெசவாளர் பட்டினிப் பிரசினையா. அன்றாட கொலை கொள்ளைப் பிரசினையா… செய்தித் தாளில் இடம் பெறும் குப்பை கூளக் குவியல், மோசடி நிதி நிறுவனங்களின் தொடர் ஓட்டப் பிரசினையா?

அவரது ஏரியாவின் ரசிகர் மன்றக் காரியதரிசியைச் சந்தித்துப் பேச பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும்.

“தாத்தா! இன்னும் ரெண்டு மாசத்துக்கு என்கிட்டே வராதீங்க” என்று அவரைக் கழற்றிவிடப் பார்த்தான். ”அதுவுமில்லாமல், கூட்டத்திலே நீங்க கூழாயிடுவீங்க தாத்தா… நாங்கள்ளாம் இளம் பசங்க.. உங்களுக்கு என்ன அவசரம் இப்போ” என்றான்.

”அடே அல்பம்! நீ சும்மாத் தரவேண்டாண்டா! நானும் நூறு ரூபா தர்ரேண்டா… உங்க ரசிக மன்றத்துக்குன்னு நூறு டிக்கெட் தந்திருக்காங்களாமே, என்கிட்டே டபாய்க்காதே..”

“தாத்தா! முதல் ரெண்டு நாள் எங்களுக்கு. எங்க கும்மாளத்துலே உங்க மாதிரி வயசான கட்டைங்களெல்லாம் வந்து கலந்துகிட்டா எங்களுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்… நாங்க ஜாலியா விசில் கிசில் அடிச்சிகிட்டு கூவுவோம்… ஆடுவோம்… பாடுவோம்… கத்துவோம்… கலர் கலரா ஜிகினா காகிதம் எறிவோம்.”

“ஏன்… நான் மட்டும் பண்ணமாட்டேனா. என்கூட விசில் போட்டிக்கு வர்ரியாடா… ஒண்டிக்கு ஒண்டி?” என்று சவால்விட்டு உதட்டுக்குள் ஆள்காட்டி விரலை மட்டும் உட்செலுத்தி ஐந்து நிமிஷ நேரத்துக்குப் பயங்கரமாக விசில் அடித்து மன்றத் தலைவனை அசத்திவிட்டார்.

“சரி.. தாத்தா! யாருக்கு இல்லைன்னாலும் உங்களுக்கு ஒண்ணு எடுத்துப் பூட்டி வெச்சுடறேன். ஆனால் துட்டை பன்னெண்டாம் தேதி என்னாண்டை குடுத்துடணும்…”

“கெயவி ஊருக்குத் தொலைஞ்சிட்டா… பன்னெண்டுக்குத்தான் வராள். உடனே வாங்கி குடுத்துடறேன். நீ பேச்சு மாறிடாதே…”

அப்புசாமி விரல்களை பாபா முத்திரையில் டகாரென்று வைத்து கொண்டே, ”ஏ கியவி! நான் கேக்கறேன்… உன் காதுலே விழலியா? ஊருலேருந்து வந்ததும் தரேன்னியேம்மே…”

“ப்ளீஸ். கொஞ்சம் பொறுங்க… ஐ ம் ஸோ டயர்ட்… பர்ஸ்ட் திங் ஐ ஷ¤ட் ஹாவ் மை பாத். இந்த லா·பிங் புத்தா இருக்கே… இது வீட்டிலே இருந்தால் அதிருஷ்டம்னு ஒரு நம்பிக்கை…”

“உனக்கு எந்தப் புத்தரும் இல்லாமலே அதிருஷ்டம்! மாலை, மரியாதை, ஏஸி ரயில் பிரயாணம் எல்லாம் கிடைக்கும்”.

“பொறாமைப் படாதீங்க… லா·பிங் புத்தா வந்த வேளை உங்களுக்கும் ஏதாவது அதிருஷ்டம் அடிக்கலாம்.”

“ஹஹஹ!” அப்புசாமி சிரித்தார். அதிருஷ்டம் அடிக்கலைனா அதிருஷ்டத்தை நான் அடிச்சிடுவேன். உன் ரூமிலே கொண்டு போய் வெச்சுக்கோ. ஹாலிலே செச்சதாலே ஹாலே கண்ணராவியாயிருக்கு! நான் ரெண்டு காத்தாடி கதவு நிலைகிட்டே தொங்கவிட்டதை அன்னைக்கிக் கசக்கிப் போட்டவளில்லே நீ? உன் புத்தரை ஒரு எக்கு எக்கித் தள்ள எத்தினி நேரம் எனக்காகும்?”

லா·பிங் புத்தா சிலையை வெறித்துப் பார்த்த அவருடைய கண்களில் மின்னிய கோபத்தில் அராஜகம் தெரிந்ததைப் பாட்டி கவனித்தாள். கை வசம் பொடா சட்டமிருந்தால் அவரைக் கைது செய்து உடனடியாக உள்ளே தள்ளியிருப்பாள்.

“கான்ட் யூ கீப் காம் ·பார் த நெக்ஸ்ட் தர்ட்டி மினிட்ஸ்.. நான் போய்க் குளிச்சிட்டு டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடறேன்… பை த வே ·பைல் ஹண்ட்ரட் ருபீ நோட்டாக இருக்கிறது. நீங்க சேஞ்ச் வாங்கிட்டு வரணும்…”

“நோட்டைக் குடும்மே மின்னே…”

“உங்களை நம்பி எப்படிக் குடுக்கறதுன்னு கொஞ்சம் யோசிக்கிறேன். யு ஆர் நாட் ட்ரஸ்ட் வொர்த்தி. நம்பர் ஒன் சீட் நீங்க.. ஏமாத்துக்காரர்னு சொல்றேன்.

அவனவன் சீட் பண்டை நம்பி இன்னமும் சீட்டு கட்டிகிட்டிருக்கானாம். நீ என்னைப் பெரிசா சொல்றே? நோட்டை குடுமே.. நாயர் கடையில தோ மாத்தித் தரேன்..”

“ஹ¥ம்!”பாட்டி தோளில் மாட்டிக் கொண்டிருந்த பையிலிருந்து பர்ஸை எடுத்து புத்தம்புது ஐந்நூறு ரூபா நோட்டு ஒன்றை எடுத்துத் தந்தாள்.

“யம்மாடி! அடுக்கி வைச்சிருக்கியேடி அத்தனை?”

“வர்ரப்போ ஏ.டி.எம்மிலே ட்ரா பண்ணிக் கொண்டு வந்தேன்.”

“கார்டைச் சொருகினா சலவை நோட்டு சரக் சரக்னு வந்து விழுமே அந்த மிஷின்லேருந்துதானே! எனக்குக் கூட அது மாதிரி ஒரு கார்டு குடுடி.. நீ தர்ர மாசாந்தர பேட்டாவை இனிமேல் அந்தப் பெட்டிக்குள்ளே போட்டுடு. நானும் ஒரு கார்டைப் போட்டு புது நோட்டா வாங்கிக்கறேன்….”

“அதுக்கெல்லாம் மினிமம் டெபாசிட்டே ஐயாயிரம் இருக்கணும் – என் பாங்க்கிலே.”

“உன் பாங்க்கு? உங்க பாட்டன்தான் முதல் போட்டார். உங்க அப்பா பாங்க்கை நடத்தினார். அவருக்குப்புறம் அது உனக்கு வந்திருக்கு… என் பேங்க்காம்… என் பேங்க்.”

“எனக்கு டைமாச்சு. உங்க பொறாமைக்கெல்லாம் பதில் சொல்ல எனக்குப் பொறுமை இல்லை. சீக்கிரம் நோட்டை சேஞ்ச் பண்ணி ஒரு ஹண்ட்ரட் எடுத்துக் கொண்டு, மீதி கொண்டு வாங்க! லா·பிங் புத்தா வந்த வேளை உங்களோடு சண்டை போடத் தயாராயில்லை.”

அப்புசாமி நாயர் கடைக்குப் போகிற வழியில் நோட்டின் மழமழப்பைத் தடவி, நீவிப் பார்த்தார். அதிலிருந்த மகாத்மாஜிக்கு ஒரு செல்ல முத்தம் கொடுத்தார்.

என்ன ஆச்சர்யம். நோட்டுக்கு அடியில் இன்னொரு மகாத்மா தோன்றினார்.

ஒற்றை ஐந்நூறு என்று பாட்டி கொடுத்த புது நோட்டோடு இன்னொரு ஐநூறு ரூபா நோட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது.

“ஐஸலகும்மா!” அப்புசாமி மகிழ்ந்தார்..

‘குண்டு புத்தர் வந்த வேளை அதிருஷ்ட வேளைதான் போலிருக்குது. அவரோட தொப்பையைத் தடவினதுக்குக் கைமேல் பலன்!’

நல்ல பிள்ளை மாதிரி நானூறு ரூபாயை மனைவியிடம் கொடுத்து விட்டுப் புறப்பட்ட அப்புசாமியின் அடுத்த ஸ்டாப்பிங் ரசகுண்டுவின் வீடு.

அவர் போன நேரம் ரசகுண்டுவின் வீட்டிலும் போர்! போர்! போர்!

ரசகுண்டுவின் மனைவி ராமதாஸின் ஆதரவாளியோ என்னவோ. மணல் போட்டு வாணலியில் வேர்க்கடலை வறுப்பது போலப் புரட்டிப் புரட்டி ரசகுண்டை வறுத்துக் கொண்டிருந்தாள்.

தம்பதிகளின் சண்டைக்கு நடுவே தலையிடக் கூடாது என்பது அப்புசாமியின் கொள்கை. ஏனென்றால் அவருக்கும் மனைவி சீதாவுக்கம் நடைபெற்று வந்த இத்தனை வருட யுத்தங்களில், இந்த நூற கோடி பேர் உள்ள பாரத நாட்டிலிருந்து எந்த ஒரு மனுசனாவது நடுவுலே வந்தது உண்டா? குறைஞ்ச பட்சம் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்ட ஒற்றை மனுஷ விசாரணைக் கமிஷனாவது ஒப்புக்கு மூக்கை நீட்டி நாலு கேள்வி அவளைக் கேட்டுவிட்டு அலவன்ஸோ பேட்டாவோ வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு மேலிடத்துக்க ஒரு ரிப்போர்ட் சமர்ப்பித்திருக்கிறதா?

ஆகவே பொறுமையாக வாசல்படிக்கு வெளியே நின்று எல்லை மீறல் அக்கிரமங்களை சில மேல் நாடுகள் கவனிப்பது போல் யுத்தத்தின் போக்கைக் கவனித்தவாறிருந்தார்.

“ஏண்டா, உனக்கு அத்தனை கொழுப்பாயிட்டுதா? உனக்கு மாயா ஜால்லே போய்ப் பாபா பார்க்கணுமா? இருநூறு ரூபாய்க்குத்தான் டிக்கெட் கிடைச்சுதா? எத்தனை தைரியம்டா.”

அப்புசாமிக்குப் புரியவில்லை. ‘அடா,புடா’ என்று கத்தி அதட்டும் குரல் ரசகுண்டுவின் பாட்டியுடையதாக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அப்புறம் சற்று எட்டிப் பார்த்தவருக்குத் திகீர் என்றாகிவிட்டது.

ருக்மிணிதான் கணவனை அப்படி ஏக வசனத்தில், போடா வசனத்தில் ஏசிக் கொண்டிருந்தாள்.

‘சே! இதென்ன இந்தக் காலச் சிறு பொண்ணுங்க புருஷனை அடா, புடா என்று பேசுகிறாங்க என்று நினைத்தவர் தன் வீடு இருந்த திசை நோக்கி தரையில் தடாலென்று சத்தத்தோடு விழுந்து நீளமாகக் கும்பிட்டார்.

யாரோ விழுந்த மாதிரி இருக்கிறதே என்று, ருக்மிணி, திட்டுக்களுக்குச் சிறிது இடைவேளை கொடுத்துவிட்டு வாசற்படி அருகே விரைந்தாள்.

அப்புசாமி தாத்தா!

ஆயிரத்தொரு இரவு அரபுக் கதையில் வரும் சுவரில் சாத்திய தையல்காரப் பிணம் மாதிரி என்ன இது திடீரென்று தாத்தா இங்கு வந்து விழுந்து செத்துட்டார்….

“ஐயோ! இங்கே வாங்களேன்!” என்று ரசகுண்டுவை அவசரத்தில் மரியாதை தப்புவது தெரியாமல் ‘வாங்களேன்’ என்று கூப்பிட்டு விட்டாள்.

ரசகுண்டு விரைந்தான். குப்புறப்படுத்திருந்தவரை நிமிர்த்தி, அவருக்கு மூச்சு இருக்கிறது தெரிந்த பின்தான் தம்பதிகளக்கு ஆறுதலாயிற்று.

“பயந்துட்டியாடா ரசம்!” அப்புசாமி சிரித்தார். ”எங்க வீடு இருக்கிற பக்கமாகக் கும்பிடு போட்டுக் கொண்டிருந்தேன் – அங்கேயிருக்கிற சீதேக் கிழவிக்கு!”

“ஏன் தாத்தா?” பதறினான். ”பாட்டிக்குப் பெருங் கும்பிடாப் போட்டுட்டு வந்துட்டீங்களா ஒரே அடியா…”

“இல்லேடா… உன் பெண்சாதி உன்னைத் திட்டறதை இந்தக் காதாலே கேட்டேன். ‘வாடா போடா! அடா புடா’ என்று இந்த மாதிரி அநியாயத்துக்கு மரியாதை குறைவாகத் திட்டறாளே… சீதேக் கிழவி ஒரு நாளில் என்னை அடா போட்டுத் திட்டியதில்லே. அவள் பெருமை இப்பத்தாண்டா தெரியுது. சீக்கிரம் நிதி வசூலித்து அவளுக்கு ஒரு கோவில் கட்டணும். உன்னால் முடிஞ்சதைக் குடு…” என்றார்.

“தாத்தா! என்னை ரொம்ப மன்னிச்சிடுங்க…” என்றாள் ருக்மிணி.

மனைவியின் புகழை விட்டுத் தர தயாரில்லாத இந்தக் காலக் கணவர்களில் ரசகுண்டுவும் ஒருத்தனாதலால், ”தாத்தா! நீங்க இப்படியா ஓசைப்படாம வந்து நிற்கிறது. பட்ஜெட் ஸெஷன் நடக்கிறதுன்னா எந்த வீட்டிலும் கொஞ்சம் சூடாகத்தான் விவாதம் நடக்கும். ருக்மிணி என்னை மரியாதை குறைவாப் பேசிட்டதா நீங்க தப்பா நினைச்சிட்டீங்க… அது வந்து…” தடுமாறினான்.

“அடே ரசம்!” அப்புசாமி சிரித்தார். ”தண்ணியடிச்சு தண்ணி விலகாதுடா. கோழி மிதிச்சு குஞ்சுக்குக் காயம் ஏற்படாது. பொண்டாட்டி திட்டி புருஷனுக்கு அவமானம் வந்துடாது. எனக்கு நீ சொல்லித் தர வேண்டாம். என்ன விஷயமாத் தகராறு? சொல்லலாம்னா சொல்லு. எங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்னு எகிறினியானா நான் ஒண்டியா பாபாவுக்குப் போய்க்கிறேன்.”

பாபா!

அந்தப் பெயர் காதிலே விழுந்ததும் சே! காட்சியே அடியோடு மாறிவிட்டது.

‘டிப்பு! டிப்பு! டிப்பு! டிப்புகுமாரே!’ என்று ரசகுண்டு ஆட ஆரம்பித்து விட்டான். ”தாத்தா! தாத்தா! டிக்கெட் வாங்கிட்டீங்களா! பாட்டி துட்டு கொடுத்துட்டாளா? எனக்கும் சேர்த்துத்தானே?”

“அடேய் ரசம்! உனக்கு மட்டுமில்லேடா! உன் பெண்டாட்டிக்கும் சேர்த்து டிக்கெட் வாங்கற அளவுக்குத் துட்டு குடுத்தார்டா அந்தப் பணத் தொப்பை!”

‘பணத் தொப்பை! துட்டு குடுத்துட்டார்!’ ரசகுண்டுவுக்குப் புரியவில்லை.

தாத்தா அசட்டுத்தனமாக எந்தக் கந்து வட்டிக்காரன்கிட்டாயவது கடன் வாங்கிட்டாரா?

“தாத்தா! என்ன காரியம் பண்ணிட்டீங்க தாத்தா! அவசரப்பட்டு மீட்டர் வட்டிக்காரன்கிட்டே சிக்கிக்கிட்டீங்களே! உடனே அதை அவன்கிட்டே குடுத்துட்டு வந்துடுங்க. ‘கந்து வட்டியானாலும் பரவாயில்லை. எங்கேயாவது பணம் வாங்கிட்டுவாங்க. நாம பாபா பார்க்கணும்’னு நான் உங்ககிட்டே சொல்லலையே தாத்தா! நம்ம பாபாவே இதை ஆதரிக்கமாட்டாரே!”

ருக்மிணி ஆத்திரத்தோடு, ”தாத்தா! இவன் சொன்னாலும் சொல்லியிருப்பான். பெருங்காய டப்பாவிலே நான் செலவுக்கு வெச்சிருந்த என் சொந்தப் பணம் இருநூறு ரூபாயை, நான் பாத்ரூம்லே குளிச்சிகிட்டிருந்தப்போ சுருட்டிட்டான் தாத்தா… கேட்டா இல்லே, இது என் பணம்னான். முகந்து பார்த்தா பெருங்காய வாசனை அடிக்குது. அப்புறம் விசாரிக்கிறபடி பையனை விசாரிச்சா ஒப்புக் கொள்றான்… அதான் சண்டை பிடிச்சிகிட்டிருந்தேன். நீங்களே சொல்லுங்க நியாயத்தை. பொறுப்புள்ள ஒரு புருஷன் செய்வானா இந்து வேலை!”

அப்புசாமி பேச்சை மாற்றுவதற்காக. ”முதலிலே ஒரு டம்ளர் ஜூஸ் அல்லது மோர் அல்லது ஐஸ் தண்ணி அல்லது வெறும் தண்ணி கொண்டா… என் நெஞ்சை என்னவோ பண்ணுது…” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டார்.

ரசகுண்டு பதறி, ”தாத்தா! தாத்தா! இந்தச் சிறுசுகளை மன்னிச்சிடுங்க. எங்க சண்டை உங்களுக்கு மார் அடைக்கிற அளவு அதிர்ச்சி தந்துட்டுதா? நீங்களும் பாட்டியும் வெற்றிகரமான ஆயிரமாவது சண்டையெல்லாம் போட்டிருக்கீங்களே…” என்றான்.

சென்ற இதழில் வெளியான பாபாதாசன் அப்புசாமியை காண இங்கே க்ளிக் செய்யவும்

பாபாதாசன் அப்புசாமி

பாக்கியம் ராமசாமி

சென்ற இதழ் தொடர்ச்சி…

“அதானே? தாத்தாவும் பாட்டியும் போடாத சண்டையையா நாம போட்டுட்டோம்… நல்லாச் சொன்னீங்க ஒரு வார்த்தை!” என்றாள் ருக்மிணி. ”கோபம் வந்தால் நாலு வார்த்தை பொம்மனாட்டிகளுக்கு வாயிலே வந்துடும்தான். பாட்டி உங்களை இங்கிலீஷ்லே உசத்தியாத் திட்டறாள். அது மாதிரி என்னாலே இவனை திட்ட முடியலை…”

“கரெக்டாச் சொன்னேடி கன்னுக்குட்டி!” என்று மனைவியின் கன்னத்தை செல்லத் தட்டுத் தட்டினான்.

“ஐயோ! தாத்தா இருக்கார்! உங்களுக்கு வெவஸ்தையே இல்லை!” ருக்மிணி வெட்கப்பட்டாள்.

ரசகுண்டு, ”சரி.. சரி.. சரி… தாத்தா போடாத சண்டையும் நான் போடப் போறதில்லை. தாத்தா கொஞ்சாத சொஞ்சலும் நான் கொஞ்சப் போறது இல்லை… அப்படி ஒண்ணும் சென்ஸார் செய்யப்படறமாதிரி நானும் நடந்துக்கலை…” என்று விரிவாக ஒரு தன்னிலை விளக்கம் தந்தான்.

தம்பதிகளுக்குள் சாந்தி நிலவியதும் அப்புசாமி தான் வந்த விஷயத்தை ரசகுண்டுவிடம் தெரிவித்தார். அவருக்கு அனாமத்தாக ஒரு ஐந்நூறு ரூபாய் கிடைத்ததை வெலாவாரியாக விவரித்தார்.

“என் வீட்டுக் கிழவி சொன்னது கரீட்டுமா ரசம்! அந்த சிரிப்புப் புத்தர் பொம்மையின் தொந்தியைத் தடவினாப் பணம் வரும்னு ஜப்பான் சீனாவுலே இருக்கறவங்களக்கு நம்பிக்கைன்னு சொன்னாள். நான் தடவினேண்டா! அஞ்சாவது நிமிஷமே அடிச்சேண்டா பிரைஸ் ஐந்நூறு ரூபாய்! நாம மூணு பேருக்கு மட்டுமில்லேடா… பீமாக் கண்ணனுக்கும் கூடச் சேர்த்து நாலு டிக்கெட் வாங்கிட்டேன். பாபா! பாபா! பாபா! பாபா! டிப்பு! டிப்பு! டிப்பு! டிப்புகுமாரே! வாங்கிட்டேண்டா…. சக்தி கொடு… சக்தி கொடு….”

“சத்தியமாவா தாத்தா வாங்கட்டீங்க?”

“சத்தியமா சத்தியத்திலேடா…”

“சப்பாஷ் தாத்தா!”

“இதோடா டிக்கெட்!”

அப்புசாமி நாலு பாபா டிக்கெட்டுகளைக் காட்டினதும் ரசகுண்டுவும் ருக்மிணியும் அவர் காலில் விழுந்து விழுந்து கும்பிட்டனர். ”உப்புமா கிளறுடி தாத்தாவுக்கு?” என்று உத்தரவு போட்டான்.

“இதோ கிளறுகிறேனுங்க!” என்று ருக்மிணி ரவை டப்பாவை எடுக்க விரைந்தாள்.

முதல் நாள், முதல் ஷோ பாபாவுக்குப் போய் வந்து விட்டார்கள்.

ஒரு வாரத்துக்கு அதே பேச்சுத்தான். தாத்தாவைப் பார்க்க ரசகுண்டு தினமும் காலையில் வந்து விடுவான்.

வந்ததும் டி.வி. பெட்டி அருகிலிருந்த சிரிப்புப் புத்தர் சிலையின் வயிற்றை ஒரு இரண்டு நிமிஷம் தடவிக் கொண்டு நிற்பான்.

“தாத்தா! சிரிப்பு புத்தர் ரொம்ப லக்கிதான் தாத்தா! நேற்று தடவிட்டுப் போனேனா? ஊரிலிருந்து எங்க பாட்டி, ‘வேர்க்கடலை வித்த பணம் இருநூறு ரூவா வந்தது. உனக்கு ஒரு ஐம்பது ரூபா அனுப்பிச்சிருக்கேன்னு மணியார்டர் வர்ரது தாத்தா! தொந்தி புத்தர் வாழ்க! வளர்க!” என்று புகழ்ந்தான்.

ஒரு சின்ன மாலை வாங்கி வந்து போட்டான். ஊதுவத்தி ஏற்றிக் கற்பூரம் காட்டினான்.

“பாட்டி! பாட்டி! நீங்க வெச்சிருக்கிற தொப்பை புத்தர் ரொம்ப ரொம்ப சக்தி பாட்டி! எங்க முதலாளி நேத்து சொன்னார். தீபாவளிக்கு இந்த வருஷம் போனஸ் தரப் போறாராம்… தினமும் இங்கே வந்து ஒரு தடவை தாத்தாவையும் பார்த்துட்டு, தொப்பையையும் தடவிட்டுப் போக பர்மிஷன் குடுங்க பாட்டி…. தொந்தரவு பண்றேனேன்னு நினைச்சிக்காதீங்க…” என்றான் சீதாப்பாட்டியிடம்.

“சரி.. சரி… ஆனால் கற்பூரம் காட்டறது, தேங்கா உடைக்கிறதுன்னெல்லாம்.. நீ ரெகுலர் கோவில் மாதிரி ஓவர் டூ பண்ணிடுவியோன்னு ஐ ஹாவ் மை ஓன் டெளட்ஸ்…” என்றாள்.

நாலு நாளாயிற்று.

சீதாப்பாட்டி கிளப்புக்குப் போய் விட்டு இரவு வந்தவள் ஹாலைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.

அவளுடைய சிரிப்புப் புத்தருக்குப் பக்கத்தில் இன்னொரு உள்ளூர் (கொசப்பேட்டை) சிரிப்புப் புத்தர்! மஞ்சளும், பச்சையும் சிவப்புமாக வர்ணம் பூசிய ஒரு களிமண் சிரிப்பு புத்தர் ‘கிண்’ என்று உட்கார்ந்து கொண்டிருந்தார்.

அறையுடைய அழகையே சுரண்டி எடுத்துவிட்டது போலிருந்தது அவளுக்கு.

“பேப்பர் மேஷா!” என்று கேட்டவாறு அதை நெருங்கிப் பார்த்தாள். களிமண்தான்.

இன்னொரு திடுக்!

அந்தக் களி மண் சிரிப்புப் புத்தர் அருகே இன்னொரு குட்டி சிபு.

ஜன்னல் அருகே டீபாயின் மீது அவள் வைத்திருந்த மெல்லிசான பூஜாடியைக் காணோம். அதற்குப் பதில் டீபாயின் மீது ஒரு சிரிப்புப் புத்தர் – இன்னொரு சைஸில்…

புக்ஷெல்·பில் என்ஸைக்ளோபீடியா வரிசையில் ஏதோ மாறியிருப்பது தெரிந்தது – அந்த அடுக்கில் எஸ் முதல் யு வரையிலான வால்யூம்கள் உருவப்பட்டுக் கீழே கிடந்தன. அந்தக் காலி இடத்தில் இரு அணிகளுக்கும் நடுநாயகமாக ஒரு சிபு. (சிரிக்கும் புத்தர்).

அணிவகுப்புப் பார்வையிடும் பிரமுகரின் கூடவே அறிமுகம் செய்து வைக்க வருகிற நபரைப் போல சீதாப்பாட்டியுடனே அப்புசாமி பெருமிதமாக அவளுடன் தொடர்ந்தார்.

“எப்படி சீதே! அதை நீ பார்க்கலையே! அப்படி! அப்படி! அப்படி பீரோ மேலே பார்! சரியான குள்ளி! அண்ணாந்து பார்த்தால்தானே தெரியும்!”

காட்ரெஜ் பீரோ மீது வரிசையாக ஏழெட்டு சைஸில் எட்டு ஏழு சிபுக்கள் – கன்னா பின்னா கலர்களில்.

“·பிரிஜ்ஜைப் பார்க்கலையே?” என்றார் அப்புசாமி உற்சாகத்துடன்.

·பிரிஜ்ஜின் மேல் சீதாப்பாட்டி ஒரு சின்ன நெய்ல் கட்டரைக் கூட வைக்க மாட்டாள்.

இப்போது பயங்கர சைஸில் இரண்டு புத்தர்கள்.

“சீதே! எப்படி! நல்லாருக்கா… ஒவ்வொண்ணு என்ன விலை இருக்கும். சொல்லு பார்க்கலாம். உன் துட்டைக் கொள்ளை அடிக்கலைடி தாயே! ரசகுண்டு வாங்கித் தந்தான். போனஸ் தந்துட்டாங்களாம். ஒரு டஜன் புத்தர் வாங்கித் தள்ளிட்டான். எனக்கும் ரெண்டு குடுத்தான்…”

“ஒரே புத்தர் ஸ்ப்ரீயாக இருக்கே! இத்தனை வேணுமா? மை காட்! வாஷிங் மெஷின் மேலே கூடவா?”

“ரொம்ப அதிருஷ்டம் சீதே!”

சீதாப்பாட்டி பெருமூச்சுவிட்டாள்.

பீரோ சாவிக்கொத்தை இடுப்பில் சரி செய்து கொண்டாள்.

“அடியே கியவி! என் மேலே நீ சந்தேகப்படற மாதிரி தெரியுது… இடுப்புச் சாவியைத் தொட்டுக்கறே… இந்த மாச பேட்டா பணம் ஐந்நூறு ரூபா கொடுத்தியா… தீபாவளிக்குன்னு ஒரு ஐந்நூறு குடுத்தியா… அந்தப் பணத்திலேதான் வாங்கி ரொப்பறேன்… சிரிப்புப் புத்தர், அதிருஷ்டப் புத்தர், ஆகா… எங்களையெல்லாம் பாபா பார்க்க வைத்த அதிருஷ்டப் புத்தர்! அடியே கெயவி! ‘நீ அறிஞ்சது துளி! அறியாதது கடல் அளவு! புரியுதா… நீ போய் ரசகுண்டு வீட்டுலே பார்! ஒரு கடையே வைக்கலாம்.. நூறு சிரிப்புப் புத்தர் வாங்கி வெச்சிட்டான். காலைக் கீழே வைக்க முடியாது. ருக்மிணியே தன் கை வளையலைக் கழற்றிக் குடுத்து, ‘இன்னும் நிறைய புத்தர் வாங்கிட்டு வாங்க நாதா’ன்னு கதறுகிறாள்! ஏதாவது லாட்டிரி சீட்டுலே எங்க கூட்டணிக்கு ரெண்டரை கோடி பரிசு அடிச்சாலும் ஆச்சரியப்பட்டு சாகாதே! அத்தனை புத்தருங்க தொப்பையையும் தடவித் தடவி என் விரலைப் பார்த்தியா… முக்கால் விரல் தான் இருக்குது!”

சீதாப்பாட்டி விக்கித்து நின்று விட்டாள். ” ஆர் யூ கிரேஸி! தேர் இஸ் எ லிமிட் ·பார் எவரி திங்” என்று கூவத்தான் நினைத்தாள்.

ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

பாட்டரி கடியாரத்தின் நுண்ணிய டிக் டிக் போல ஓசைப்படாமல் சுறுசுறுப்பாக ஓர் ஒலி கேட்கத் தொடங்கியது. சீதாப் பாட்டியின் மூளை எழுப்பிய ஒலிதான் அது.

எக்ஸிபிஷன் கம் ஸேல் என்ற துணிப் படுதா காற்றில் அல்லாடியது.

செட்டியார் ஹாலில் ஒரு பகுதியைச் சீதாப்பாட்டி தன் சொந்த செலவில் வாடகைக்குப் பிடித்து, அப்புசாமிக்கு அர்ப்பித்திருந்தாள்.

ரசகுண்டு வினாடிக்கு வினாடி, ”பாட்டி! நீங்கதான் எனக்கு அம்மா…” என்றான்.

அப்புசாமி வழி மொழிந்தார்.

“சீதே! நீ ரசகுண்டுவுக்கு மட்டுமில்லேடி! எனக்கும் கூட அம்மாதான்! பாபாவைப் பார்க்க வெச்ச அம்மா! அம்மா என்றழைக்காத உயிரில்லையே…”

சீதாப்பாட்டி அடக்கமாக ”நான் இப்போ என்ன செய்துட்டேன் என்று ‘அம்மா அம்மா’ என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடறீங்க. ஐ ஹாவ் டன் நத்திங்! உங்க புத்தா கலெக்ஷன் எல்லாருக்கும் தெரியணும்னு தோணித்து… எக்ஸிபிட் பண்ண வாடகைக்கு ஒரு இடம் பிடித்துத் தந்தேன். ஸேல் பண்ணினாலும் லாபம்தானேன்னு ஸஜஸ்ட் செய்தேன். லீ·ப்லெட்ஸ் அடித்து டிஸ்ட்ரிப்யூட் பண்ணியிருக்கேன்… தட்ஸ் ஆல்…”

ஸ்டாலில் கூட்டம் அலை மோதியது. எல்லாரும் இளைஞர்கள். விதவிதமான கிராப்… விதவித ஜீன்ஸ்…

அவ்வளவு கூட்டத்தை அப்புசாமியும் ரசகுண்டுவும் எதிர்பார்க்கவே இல்லை.

எந்த விலை சொன்னாலும் டகார் டகாரென்று வாங்கிக் கொண்டு ஓடினார்கள்.

ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை.

ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் திரும்பி வந்து, ”இது வேண்டாம். வேற குடுய்யா!” என்று திருப்பித் தந்தனர்.

“பர்ஸ்ட் கிளாஸ் அதிருஷ்டம் நைனா! தொப்பையைத் தடவிப் பாரு தெரியும்…” என்றார் அப்புசாமி.

“யோவ்! உன் தொப்பையைத்தான் தடவணும்! இதுலே ஒண்ணுமில்லைய்யா. வேற எங்ஙனா சொருகி வெச்சிருக்கியா?”

அப்புசாமிக்குப் புரியவில்லை.

“சொருகி வெச்சிருக்கேனா? இன்னாபா நீ சொல்றது, புரியலையே… தொப்பையைத் தினமும் தடவிகினு இருந்தா அதிருஷ்டம் அடிக்கும்கறேன்.”

“யோவ் பெரீவரு!” என்ற அதட்டல் அப்புசாமியைச் சற்றுக் கலக்கியது. கூடவே சுருக்கென்ற கோபமும்.

அவர் தோளை அந்தக் குரல் அழுத்தமாகத் தொட்டுத் திருப்பிய மாதிரி கூட இருந்தது.

“யோவ்!” என்று உறுமியவாறு அப்புசாமி திரும்பினார். ”தோளைப் புடிச்சு உலுக்காம அப்படித் தூரப் போய் நின்னு கேளுய்யா… உன் அதிருஷ்டத்தை யாரும் வாங்கிட்டுப் போயிடமாட்டாங்க!”

“மிஸ்டர்!” என்றார் ஆட்டுக்கடா மீசை கமிஷனர். வீரப்பனைப் பிடிப்பதற்காக ஒரு காலத்தில் காட்டுக்குப் போய் வெறும் கையோடு வந்தவர்.

கை வெறுமே இருக்க வேண்டாமேன்பதற்காக அடிக்கடி அதற்கு வேலை கொடுப்பதற்காக மீசையை முறுக்கிக் கொண்டிருப்பார்.

“யோவ் டூ நாட் ·போர். எல்லா புத்தரையும் மூட்டை கட்டி ஜீப்புலே எற்றுய்யா. இவுங்களையும் சேர்த்து.”

“நாங்க என்ன சார் தப்பு பண்ணினோம்! அனாவசிய அராஜகமாயிருக்குதே! இப்ப என்ன எலெக்ஷனா ஒண்ணா… எதுக்கு எங்களைப் பயமுறுத்துறீங்க?” என்ற ரசகுண்டு முட்டியில் ஒன்று வாங்கிக் கொண்டான்..

“எல்லாம் ஸ்டேஷனுக்கு வந்து சொல்லுங்க. ஏன்ய்யா.. ஒவ்வொரு பொம்மைக்குள்ளயும் ஒரு பாபா டிக்கெட்டா இருக்குது பாபா டிக்கெட்!”

“ஐயோ அப்படியெல்லாம் நாங்க சொல்லலியே…”

“சொல்லலை. ஆனால் பிட் நோட்டீஸ் அடிச்சு ஊர் பூராக் குடுத்திருக்கியே!”

“நாங்க ஒண்ணும் அடிக்கலையே…”

“உங்க பாட்டன் அடிச்சானா?”

அருகிலிருந்த ஜால்ரா போலீஸ் சிரிப்போடு போட்டுக் கொடுத்தார். ”பாட்டன் இல்லேன்னா பாட்டி அடிச்சிருப்பா!”

லொட் லொட்டென்று அப்புசாமி காலிலும் ரசகுண்டு காலிலும் போட்டார் கமிஷனர். ”பாபா பெயரைக் கெடுக்கணும்னு யாராவது இப்படி உங்களை அனுப்பிச்சாங்களா? ஸ்டேஷனிலே வந்து குடு ஸ்டேட்மெண்ட்.”

இருபத்து நாலு மணி நேரம் கழித்து அப்புசாமி சற்றே நொண்டியபடி வீடு திரும்பினார்.

சீதாப்பாட்டி அதை எதிர்பார்த்திருந்தவள் போல் கையில் முட்டிக்குத் தடவ ஆயிண்ட்மெண்ட்டுடன் அவரை வரவேற்றாள்.

“இதுக்குத்தான் டோன்ட் ஓவர் டூ எனி திங் என்கிறது. அதிருஷ்ட புத்தர்னு கிறுக்குப் பிடிச்சாப்பலே அலைஞ்சீங்களில்லே… அதுக்குத்தான் யாரோ பொறாமைக்காரங்க இப்படி நோட்டீஸ் அடிச்சு உங்களை மாட்ட வெச்சுட்டாங்க. பணத்தை ரொம்ப செலவழிச்சிட்டீங்களில்லே… பொறாமைக்காரங்களுக்கு ஆகலை.”

“அந்தப் பொறாமைப் பிண்டம் எனக்கு அரை அடி தூரத்திலேதான் நிற்குதுன்னு எனக்குத் தெரியும்!” உறுமினார் அப்புசாமி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *