பத்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கனகதாரா சொன்ன நள்ளிரவில் வந்த நட்சத்திரதாசன் கதை
“கேளாய், போஜனே! ஒரு நாள் நள்ளிரவு நேரம்; ‘நட்சத்திர மாநகர், நட்சத்திர மாநகர்’ என்று சொல்லா நின்ற தியாகராய நகரிலே, யாரோ ஒருவன் பதுங்கிப் பதுங்கிப் போய்க்கொண்டிருக்க, அவனைக் கண்ட போலீசார் இருவர் அவன்மேல் சந்தேகம் கொண்டு அவனைத் தொடர்ந்து செல்ல, அவன் பிரபல நட்சத்திரம் பிரேமகுமாரியின் வீட்டை நெருங்கி, சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே அந்த வீட்டு மதிற்சுவரைத் தாண்டி உள்ளே குதிப்பானாயினன்.
‘சரியான திருடன் அகப்பட்டு கொண்டான் இன்று; ஆசாமியைக் கையும் களவுமாகப் பிடிக்காமல் விடுவதில்லை!’ என்று வரிந்து கட்டிக்கொண்ட போலீசார் இருவரும் அந்த ‘நள்ளிரவு நாயக’னைத் தொடர்ந்து உள்ளே குதித்து, அங்கிருந்த ஒரு மரத்துக்குப் பின்னால் மறைந்து கொள்ள, அவன் அந்த வீட்டுக்குப் பின்னாலிருந்த பிரேம குமாரியின் நீச்சல் குளத்தை அகமும் முகமும் ஒருங்கே மலர நெருங்கி, ‘இதிலுள்ள தண்ணீர் செய்திருக்கும் பாக்கியத்தையாவது நான் செய்திருக்கக் கூடாதா? இதில் நாள்தோறும் நீந்தி விளையாடும் என் இதயராணி என்னுடன் ஒரே ஒரு நாளாவது நீந்தாமல் விளையாடக் கூடாதா?’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டே அதன் கரையில் உட்கார்ந்து, மூன்று வாய் தண்ணீரை அள்ளி ‘மொடக், மொடக்’கென்று குடித்துவிட்டு, ஏதோ புண்ணிய தீர்த்தத்தைச் சாப்பிட்டு அதுவரை தான் செய்திருந்த பாவங்கள் அத்தனையையும் போக்கிக் கொண்டு விட்ட பக்தன் போல் அவன் அந்த வீட்டு ஹாலுக்கு வருவானாயினன்.
அங்கே பிரேமகுமாரி உட்காரும் சோபாவில் தானும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து, அவள் ஆடும் ஊஞ்சலில் தானும் கொஞ்ச நேரம் ஆடி, அவள் அழகு பார்க்கும் கண்ணாடியில் தானும் கொஞ்ச நேரம் தன் அழகைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ‘இந்த அறைதான் என் கண்மணி படுக்கும் அறையாயிருக்குமோ?’ என்று அடுத்தாற்போல் இருந்த அறையை அவன் சற்றே எட்டிப் பார்க்க, அங்கே அந்த அழகுராணி தன் அருமை நாய்க்குட்டியை ஆசையுடன் அணைத்தவாறு படுத்துக் கொண்டிருக்க, ‘அடாடாடாடா, அந்த நாய்க்குட்டி பெற்ற பேறுகூட நான் பெறவில்லையே? இந்த ஜன்மம் எடுத்தென்ன, எடுக்காமல் போயென்ன?’ என்று அவன் தன்னையும், தான் எடுத்த ஜன்மத்தையும் ஏக காலத்தில் நொந்துகொண்டே திரும்ப, அதுவரை அவனைக் கவனித்துக் கொண்டிருந்த போலீசார் ஒன்றும் புரியாமல் அவனை நெருங்கி, ‘யாரப்பா நீ? உன் பெயர் என்ன?’ என்று விசாரிக்க, ‘என் பெயர் நட்சத்திரதாசன், பிரேமகுமாரியின் ரசிகன் நான். ஏன், நீங்களும் அந்த நட்சத்திரத்தின் நட்சத்திர ரசிகர்களா என்ன?’ என்று அவன் அவர்களைத் திருப்பிக் கேட்க, ‘நாசமாய்ப் போச்சு, போ! ரசிகன் இப்படித்தான் நள்ளிரவில் வருவானா? நட, ஸ்டேஷனுக்கு!’ என்று அவர்களில் ஒருவன் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ள, ‘பகலில் வந்தால்தான் வாசலில் நிற்கும் கூர்க்கா என்னை உள்ளே விட மாட்டேன் என்கிறானே!’ என்று அவன் அழுது புலம்ப, அந்தப் புலம்பலைக் கேட்டு விழித்துக் கொண்ட பிரேமகுமாரி, ‘இப்படியும் ஒரு மகாரசிகன் தனக்கு இருக்கிறானா?’ என்று வியந்து, ‘யார் அங்கே?’ என்று தன் காரியதரிசிக்குக் குரல் கொடுக்க, ‘இதோ வந்துவிட்டேன்!’ என்று காரியதரிசி ஓடோடியும் வந்து அவளுக்கு முன்னால் நிற்க, ‘அந்த ரசிகனை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று சொல்லிப் போலீசாரை அனுப்பிவிட்டு, அவனுக்கு என் போட்டோ ஒன்றைக் கொடுத்தனுப்பு!’ என்று அவள் உத்தரவிட, அங்ஙனமே அந்தக் காரியதரிசியாகப்பட்டவர் போலீசாரை வெளியே அனுப்பிவிட்டு ரசிக சிகாமணியாகப் பட்டவனிடம் பிரேமகுமாரியின் போட்டோ ஒன்றை எடுத்துக் கொடுக்க, ‘கண்டேன் கண்டேன், என் கனவுக் கன்னியைக் கண்டேன்!’ என்று அவன் ஆனந்தக் கூத்தாட, ‘உம்மைப் போன்ற சோணகிரிகளுக்கெல்லாம் இந்தப் போட்டோவை அனுப்பி வைக்கத்தான் இங்கே ஒரு தனி இலாகாவே வேலை செய்து கொண்டிருக்கிறதே? இந்த எழவை நீர் கடிதம் எழுதிப் பெற்றுக் கொண்டால் என்ன? அதை விட்டு இதற்காக அர்த்த ராத்திரியில் இங்கே வந்து ஏன் கழுத்தை அறுக்கிறீர்? போம் ஐயா, போம்!’ என்று பல்லைக் கடித்துக்கொண்டு அவனை விரட்டி, ‘கடிதம் எழுதினால் நட்சத்திரத்தை நினைத்துக் கொண்டு இந்த வீட்டு நீச்சல் குளத்தில் இறங்கி மூன்று வாய் தண்ணீரை அள்ளி ‘மொடக், மொடக்’கென்று குடிக்க முடியுமா? நட்சத்திரத்தை நினைத்துக்கொண்டு இந்த வீட்டு சோபாவில் உட்கார்ந்து எழுந்திருக்க முடியுமா? நட்சத்திரத்தை நினைத்துக்கொண்டு இந்த வீட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து ஆட முடியுமா? நட்சத்திரத்தை நினைத்துக்கொண்டு இந்த வீட்டுக் கண்ணாடியில் அழகு பார்க்க முடியுமா?’ என்று அவன் ஒரே நட்சத்திரமாக அடுக்க, ‘நல்ல நட்சத்திர ரசிகர் ஐயா, நீர்? போய்த் தொலையும்!’ என்று காரியதரிசி தன் தலையில் தானே அடித்துக்கொண்டு, அவனை வாசல் வரை கொண்டு போய் விட்டுவிட்டு வருவாராயினர்.
மறுநாள் காலை ‘ஏழு மணி கால்ஷீட்’டுக்கு எட்டு மணிக்குப் போவதுகூட நட்சத்திரத்துக்கு அழகல்ல என்று எண்ணியோ என்னவோ ஒன்பது மணிக்குப் படுக்கையை விட்டு எழுந்து, ஒரு மணி நேரம் நீச்சல் குளத்தில் நீந்தி விளையாடி, பத்து மணிக்கு நடப்பன, பறப்பன, ஊர்வன, நீந்துவன ஆக நால்வகை ஜீவராசிகளையும் விதம் விதமாகச் சமைத்துக்கொண்டு வந்து வைக்கச் சொல்லி உட்கார்ந்து, ஒரு பெக் பிஸ்கெட் பிராந்தியோடு அவையனைத்தையும் சேர்த்துச் சாப்பிட்டுவிட்டு எழுந்து, ‘கார் ரெடியா?’ என்று அவள் டிரைவரைக் கேட்க, ‘ரெடி!’ என்று அவன் சொல்ல, ‘அம்மா, நான் வருகிறேன்!’ என்று சொல்லிக்கொண்டே அவள் வாசலுக்கு வருவாளாயினள்.
அதுகாலை அங்கே பேட்டிக்காகக் காத்திருந்த நிருபர் ஒருவர் அவளைக் கண்டதும் எழுந்து நின்று, ‘இரவு தூங்கினீர்களா?’ என்று கேட்க, ‘துங்கினேன்!’ என்று அவள் சொல்ல, ‘காலை எழுந்தீர்களா?’ என்று அவர் கேட்க, ‘எழுந்தேன்!’ என்று அவள் சொல்ல, ‘சாப்பிட்டீர்களா?’ என்று அவர் கேட்க, ‘சாப்பிட்டேன்!’ என்று அவள் சொல்ல ‘என்ன சாப்பிட்டீர்கள்?’ என்று அவர் கேட்க, ‘வழக்கமாகச் சாப்பிடும் ஒரே ஒரு இட்லியைக்கூட விட்டுவிட்டு இன்று நான் பாதிதான் சாப்பிட்டேன்; பாக்கிப் பாதியை என் அம்மா என்னுடைய தலையைச் சுற்றித் திருஷ்டி கழித்துக் காக்காய்க்குப் போட்டுவிட்டாள்!’ என்பதாகத்தானே சொல்லிவிட்டு அவள் காரில் ஏறி உட்கார்ந்து கொள்ள, ‘இன்னொன்றைக் கேட்க மறந்துவிட்டேனே, உங்களுக்கு எப்போது கலியாணம்?’ என்று நிருபர் காருக்குள் தலையை நீட்டிக் கேட்க, ‘நடக்கும்போது சொல்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு அவள் வெளியே வர, அதுவரை அவளுக்காக அங்கே காத்திருந்த நட்சத்திரதாசன் திடீரென்று அவள் காருக்கு முன்னால் பாய, ‘இதென்ன சங்கடம்?’ என்ன விஷயம்?’ என்று விசாரிக்க, ‘நேற்றிரவு வந்த ரசிகன் நான். கொடுக்கவே கொடுத்தீர்கள் போட்டோ, அதில் ஒரு கையெழுத்தைப் போட்டுக் கொடுக்கக் கூடாதா?’ என்று அவன் தன் கையிலிருந்த போட்டோவை நீட்ட, ‘அரசியல் நிர்ணயச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பதினாலு மொழிகளும் தெரியும் எனக்கு. அந்த மொழிகளில் எந்த மொழியில் நான் கையெழுத்துப் போட?’ என்று அவள் கேட்க, ‘தமிழ்தான் தெரியும் எனக்கு: தமிழிலேயே போடுங்கள்!’ என்று அவன் சொல்ல, ‘சரி’ என்று அவள் அந்தப் போட்டோவை வாங்கி ‘பிரேமகுமாரி’ என்று கையெழுத்துப் போட்டுவிட்டு, இடமிருந்து வலமாக ஒரு முறையும், வலமிருந்து இடமாக இன்னொருமுறையும் சரியாக ஆறு எழுத்துக்கள் இருக்கின்றனவா என்று விரல் விட்டு எண்ணிப் பார்க்க, அது எட்டு எழுத்துக்களாக வருவதைக் கண்டு மலைத்து, திகைத்து, ‘ஏன் டிரைவர்! பிரேமகுமாரிக்கு ஆறு எழுத்துத்தானே?’ என்று டிரைவரைக் கேட்க, ‘ஆறு எழுத்துத்தான்!’ என்று அவன் அடித்துச் சொல்ல, ‘எட்டு எழுத்துக்கள் வருகிறதே?’ என்று அவள் தான் போட்ட கையெழுத்தை அவனுக்குக் காட்ட, ‘ஓ, அதுவா? ‘ரே’வன்னாவையும் ‘மா’வன்னாவையும் நீங்கள் இரண்டிரண்டு எழுத்துக்களாகக் கணக்குப் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்; அதனால்தான் எட்டெழுத்து வருகிறது!’ என்று அவன் தட்டாமல் சொல்ல, ‘போடா, போ! அவை இரண்டும் இரண்டு எழுத்துத்தான் என்று எனக்குத் தெரியாதா, என்ன? சும்மா கேட்டேன்!’ என்று அவள் திடீர்ச் சிரிப்பால் திடீரென்று எல்லாவற்றையும் மறைத்துவிட்டுத் தன் கையிலிருந்த போட்டோவை நட்சத்திர தாசனிடம் கொடுத்து அனுப்பி வைப்பாளாயினள்.
அத்துடனாவது அந்த ரசிகன் அவளை விட்டானா என்றால் அதுதான் இல்லை; ஒரு வாரத்துக்கெல்லாம் மாண்புமிகு பொதுப்பணி அமைச்சருக்கு மனு ஒன்றைத் தயார் செய்து கொண்டு வந்து அவன் அவளுடைய வீட்டுக் கேட்டருகே நின்றான். இம்முறை அவள் உள்ளேயிருந்து வெளியே வரவில்லை; வெளியேயிருந்து உள்ளே போனாள். வழக்கம்போல் அவள் காரை மடக்கி அவன் தன் மனுவை அவளிடம் நீட்ட, ‘என்ன இது?’ என்று கேட்டுக்கொண்டே அதை வாங்கிப் பார்த்த அவள், ‘உள்ளே வந்து தொலையும்!’ என்று சொல்லிவிட்டுப் போக, அதனால் உச்சி குளிர்ந்து போன அவன் அவளுடைய காரையும் முந்திக்கொண்டு உள்ளே ‘ஓடு, ஓடு’ என்று ஓடுவானாயினன்.
காரை விட்டுக் கீழே இறங்கிய பிரேமகுமாரி, ‘இந்த மனுவையெல்லாம் படித்துக் கொண்டிருக்க இப்போது எனக்கு நேரமில்லை; நான் போய் ‘ரெஸ்ட்’ எடுக்க வேண்டும். என்ன விஷயம், சொல்லும்?’ என்று சற்றே வெகுண்டு கேட்க, ‘கோடம்பாக்கம் ரயில்வே கேட்டை எடுத்தாலும் எடுத்தார்கள்; என்னைப் போன்ற ரசிகர்களுக்குப் பிடித்தது தலைவலி! உங்கள் தரிசனத்துக்காக நாங்கள் உங்களுடைய வீடு தேடி வந்து, உங்கள் வீட்டுக் கேட்டருகே நின்று தவம் செய்ய வேண்டியிருக்கிறது. அந்தத் தவத்தை நாங்கள் மறுபடியும் கோடம்பாக்கம் கேட்டருகிலேயே நின்று செய்யவேண்டும். அதற்காக இப்போது அங்கே கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்தை உடனே இடிக்க வேண்டும். இடித்துவிட்டு மீண்டும் ரயில்வே கேட்டைக் கொண்டு வந்து அங்கே போடவேண்டும். அதற்குத்தான் இந்த மனு. இதில் நீங்களும் ஒரு கையெழுத்துப் போட வேண்டும்!’ என்று நட்சத்திரதாசன் சொல்ல, ‘இதென்ன வம்பு, இவன் ஒரு மாதிரியான ஆசாமியாயிருப்பான் போலிருக்கிறதே?’ என்று அவனை மேலும் கீழுமாகப் பார்த்த அவள், ‘இது உம்முடைய சொந்த முயற்சியா? இல்லை, ரசிகர் சங்கத்தின் முயற்சியா?’ என்று கேட்க, ‘இரண்டுமில்லை; இது பிரேமகுமாரி மன்றத்தின் முயற்சி!’ என்று அவன் சற்றே வெட்கத்துடன் சொல்ல, ‘அந்த மன்றத்தின் தலைவர் யார்?’ என்று அவள் கேட்க, ‘தலைவரும் நானே; காரியதரிசியும் நானே; பொருளாளரும் நானே; அங்கத்தினரும் நானே!’ என்று அவன் அடுக்க, ‘அப்படியா? இதில் கையெழுத்துப் போட்டால் உம்முடைய ‘லிஸ்ட்’டில் அல்லவா என்னையும் சேர்த்துவிடுவார்கள்?’ என்று அவன் கொடுத்த மனுவை அவனிடமே அவள் திருப்பிக் கொடுக்க, அதற்குள் பித்தம் தலைக்கேறிவிட்ட அவன், ‘இனி நான் வேறு, நீ வேறா?’ என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்; நீ பேச நினைப்பதெல்லாம் நான் பேச வேண்டும்!’ என்று பாட ஆரம்பிக்க, ‘தாங்காது; இனி தாங்கவே தாங்காது!’ என்று நினைத்த அவள் தன் காரிய தரிசியைக் கை தட்டி அழைத்து, ‘இந்தப் பைத்தியத்தை எப்படியாவது வெளியே அனுப்பு!’ என்று உத்தரவு போட்டுவிட்டு உள்ளே போவாளாயினள்.
‘அப்பா, நட்சத்திரதாசா! மரியாதையாக வெளியே போகிறாயா, இல்லையா?’ என்று காரியதரிசி சற்று மரியாதைக் குறைவுடன் கேட்க, ‘மாட்டேன்; பிரேமகுமாரி இந்த மனுவில் கையெழுத்துப் போடும் வரை நான் இந்த இடத்தை விட்டுப் போகமாட்டேன்!’ என்று அவன் அடம் பிடிக்க, ‘போகாவிட்டால் போலீசுக்குப் போன் பண்ணுவேன்!’ என்று காரியதரிசி அவனை எச்சரிக்க, ‘பண்ணு; தாராளமாகப் பண்ணு!’ என்று அவன் அதற்கும் அசைந்து கொடுக்காமல் அங்கேயே நிற்க, காரியதரிசி வேறு வழியின்றிப் போலீசுக்குப் ‘போன்’ செய்து விஷயத்தைச் சொல்ல, ‘எந்தப் பைத்தியமாயிருந்தாலும் அதனால் பிறருக்கு ஆபத்து நேராத வரை நாங்கள் ஒன்றும் செய்வதற்கில்லை!’ என்று அவர்கள் கையை விரித்துவிட, அதற்கு மேல் என்ன செய்வதென்று காரியதரிசி பிரேமகுமாரியுடன் கலந்து யோசிப்பாராயினர்.
அதுகாலை மிஸ்டர் விக்கிரமாதித்தருடைய நினைவு அவளுக்கு வர, ‘அவர்தான் இதற்கு ஏதாவது வழி காட்டக் கூடும்’ என்று அவர்கள் அவரை வரவழைக்க, அவர் எல்லாவற்றையும் அவர்களிடமிருந்து விசாரித்துத் தெரிந்து கொண்ட பின் நட்சத்திரதாசனையும் பிரேம குமாரியையும் ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ‘இவர் இங்கேயே இருக்கட்டும்; நீங்கள் உள்ளே போய் உங்கள் ‘மேக்கப்’பைக் கலைத்துவிட்டு வாருங்கள்!’ என்று பிரேமகுமாரியிடம் சொல்ல, அவள் அப்படியே போய்த் தன் ‘மேக்கப்’பைக் கலைத்துவிட்டு வெளியே வர, ‘இப்பொழுது சொல்லப்பா, இவர்களை நன்றாகப் பார்த்துவிட்டுச் சொல்; கோடம்பாக்கம் கேட்டருகே நின்று இவர்களைத் தரிசிப்பதற்காக நீ இவர்களுடைய கையெழுத்துடன் இந்த மனுவைப் பொதுப் பணி அமைச்சரிடம் கொடுக்க வேண்டியது அவசியந்தானா?’ என்ற விக்கிரமாதித்தர் நட்சத்திரதாசனைக் கேட்க, அவர் சொன்னபடி அவன் அவளை நன்றாகப் பார்த்து விட்டு, ‘ஐயோ வேண்டாம்! இந்த நட்சத்திர தரிசனத்துக் காகக் கோடம்பாக்கம் மேம்பாலத்தை வீணாக இடிக்க வேண்டாம்!’ என்று சொல்லிக்கொண்டே அவன் தலை தெறிக்க ஓடுவானாயினன்.”
பத்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான கனகதாரா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; பதினோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் வித்தியா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு……
– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.