ஒன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நவரத்னா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 1,818 
 

ஒன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நவரத்னா சொன்ன ஒரு தொண்டர் கதை

“கேளாய், போஜனே! ‘வண்ணையம்பதி, வண்ணையம்பதி’ எனச் சொல்லா நின்ற வண்ணாரப் பேட்டையிலேமன்னிக்க; சலவையாளர் பேட்டையிலே, ‘வைத்தியநாதன், வைத்தியநாதன்’ என்று ஒரு வாத்தியார் உண்டு. அந்த வாத்தியாருக்குத் திருவொற்றியூரிலிருந்த ஒரு பள்ளிக் கூடத்தில் வேலை. ‘வேலை என்றால் என்ன வேலை?’ என்று கேட்க மாட்டீர்களென்று நினைக்கிறேன். வாத்தியாருக்கு வேறு என்ன வேலையிருக்கும்? வாத்தியார் வேலைதான்!

அன்பு மனைவி அகிலாண்டத்தோடும், அவள் பெற்றெடுத்த ஆசைக் குழந்தைகள் ஆண் மூன்று, பெண் மூன்று ஆக அறுவரோடும் இழுத்துப் பறித்துக்கொண்டு வாழ்ந்து வந்த அவர் ‘தாம் உண்டு, தம் குடும்பம் உண்டு’ என்று இருந்திருக்கலாம். அங்ஙனம் இருக்க அவர் மனம் ஏனோ விரும்பவில்லை; ‘மனிதன் என்று பிறந்தால் அவன் தன்னை மட்டும் கவனித்துக்கொண்டால் போதாது; மற்றவர்களையும் கவனிக்க வேண்டும். தன்னால் முடிந்தவரை பிறருக்குத் தொண்டு செய்ய வேண்டும்’ என்று நினைத்தார். அதற்காக அதிகாரத்துக்கு வரக்கூடிய கட்சியாகப் பார்த்து, அதில் அவரும் ஓர் அங்கத்தினரானாரா என்றால் கிடையாது; வட்டச் செயலாளர், வட்டத் தலைவர் எனப் படிப்படியாகத் தம்மை உயர்த்திக்கொள்ள முயன்றாரா என்றால் அதுவும் கிடையாது; தேர்தல் சமயத்தில் ஓர் எம். எல். ஏ. சீட்டுக்காகவோ, ஓர் எம். பி. சீட்டுக்காகவோ எந்த தலைவரின் வாலையாவது, காலையாவது பிடித்தாரா என்றால் அதுவும் கிடையாது. பின் என்னதான் செய்தார்?’ என்றால், சொல்கிறேன் கேளும்: காலையில் பள்ளிக்கூடம் போகும் வரை நாலு ஏழைப் பிள்ளைகளுக்குச் சம்பளம் வாங்காமல் தொண்டைத் தண்ணீர் வற்றப் பாடம் சொல்லிக் கொடுப்பார்; மாலை பள்ளிக்கூடம் விட்டதும் பஸ்ஸை ஓடிப் பிடித்து ஏறி உட்கார்ந்து கொள்ளாமல், சாலையில் கிடக்கும் வாழைப் பழத்தோல்கள், கண்ணாடிச் சில்லுகள், தேய்ந்த லாடங்கள் ஆகியவற்றையெல்லாம் ஒன்று விடாமல் பொறுக்கி எடுத்துக் குப்பைத் தொட்டிகளில் போட்டுக் கொண்டே தம் வீட்டுக்கு நடந்து வருவார்; இடையே வழி தெரியாமல் யாராவது அலைந்தால் அவர்களுக்கு வழி காட்டுவார்; வெயிலில் யாராவது செருப்பின்றி நடக்க முடியாமல் தவித்தால், அவர்களுக்குத் தம்முடைய செருப்பைக் கழற்றிக் கொடுத்துவிட்டு அவர் செருப்பில்லாமல் திண்டாடுவார்; மழையில் யாராவது நனைந்தால் ஓடிப் போய் அவர்களுக்குக் குடை பிடித்து, அவர்களைக் கொண்டு போய் அவர்களுடைய வீடு வரை விட்டுவிட்டு வருவார்.

இப்படியாகத்தானே அவர் தொண்டு பிறருக்குப் பயன்பட்டு, அவருக்குப் பயன்படாமல் இருந்துவந்தகாலை, அவருடைய பெண்களிலே ஒருத்தி கலியாணத்துக்குத் தயாரானாள். அவளைத் தொடர்ந்து இன்னொரு பெண்ணும் அதே மாதிரி தயாரானாள். அடுத்தாற்போல் பையன் ஒருவன் எஸ். எஸ். எல். ஸி. பரீட்சையில் தேறிவிட்டு, ‘இதற்குமேல் என்னை என்ன செய்யப்போகிறீர்கள், அப்பா? வேலைக்கு அனுப்பப் போகிறீர்களா, காலேஜுக்கு அனுப்பப் போகிறீர்களா?’ என்று கேட்டுக்கொண்டு வந்து நின்றான். ‘வேலைக்குப் போகக்கூடிய வயதை நீ இன்னும் அடைய வில்லையேடா, காலேஜில்தான் உன்னைச் சேர்க்க வேண்டும்!’ என்றார் வாத்தியார். அவருடைய மனைவியோ, ‘அவனைக் காலேஜில் சேர்த்துவிட்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? வழக்கம்போல் ரோடிலே கிடக்கும் கண்ணாடிச் சில்லுகளையெல்லாம் பொறுக்கிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? அப்படிப் பொறுக்குவதாயிருந்தால் அவனைக் காலேஜில் சேர்க்க வேண்டாம்; அவன் வயதுக்குத் தகுந்த ஏதாவது ஒரு வேலையில் அவனைச் சேருங்கள். இனிமேல் உங்கள் சம்பளத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்னால் இந்தக் குடித்தனத்தை நடத்த முடியாது!’ என்று பொரிந்தாள்.

பார்த்தார் வாத்தியார்; அதுவரை ‘பதி சொல் தாண்டாத பாவை’யாயிருந்த தம் பத்தினி ஏன் இப்போது ‘பதி சொல் தாண்டும் பத்திரகாளியானாள்?’ என்று யோசித்தார். அந்த யோசனையின் முடிவில், ‘வரவரப் பொறுப்புகள் அதிகமாவதுதான் அதற்குக் காரணம்’ என்பதை அவர் உணர்ந்தார். உணர்ந்து என்ன செய்ய? வாத்தியார் இந்த நாளில் தம்முடைய வருவாயைப் பெருக்கிக்கொள்வதற்குள்ள ஒரே வழி ‘டியூஷன்’ சொல்லித் தருவதுதானே? அதுவும்தான் அவருக்குத் தொண்டாகப் போய்விட்டதே!

யோசித்தார் வாத்தியார்; அகிலாண்டம் சொல்வது போல் தம் பையனை ஏதாவது ஒரு வேலையில் சேர்த்து விடுவதுதான் தமக்கும் நல்லது, தம்முடைய தொண்டுக்கும் நல்லது என்று தீர்மானித்து, அவனுக்காக ஓய்ந்த நேரத்தில் வேலையும் தேடத் தொடங்கினார்.

அதற்குள் அவருடைய பெண்களில் ஒருத்தி, எதிர் வீட்டுப் பையனின் ‘திவ்விய தரிசன’த்துக்காக ‘ஜன்னல் தவம்’ செய்ய ஆரம்பிக்க, அதை அவளுக்குத் தெரியாமல் அவர் மனைவி ஒரு நாள் அவருக்குச் சுட்டிக் காட்ட, ‘வளரட்டும் காதல், வாழட்டும் காதல்’ என்று அவர் கொஞ்சம் முற்போக்குடன் சொல்ல, ‘வாழ்ந்தது போங்கள்! அப்படி ஏதாவது இருந்தால் அவனைக்கொண்டே இவள் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட வைக்கலாம் என்று நானே ஒரு நாள் அவன் வீட்டுக்குச் சென்று நாசூக்காக விசாரித்துப் பார்த்தேன். ஏற்கெனவே கலியாணமானவனாம்; அவன் மாமனார் ஸ்கூட்டர் வாங்கிக் கொடுக்கவில்லை என்பதற்காகப் பெண்ணை அவருடைய வீட்டிலேயே வாழா வெட்டியாக விட்டு வைத்திருக்கிறானாம். அவனை நம்பி இவள் இந்த வீட்டை விட்டுத் தாண்டினால் என்னவாகும்? உங்கள் தலைப்பாகையல்லவா கீழே இறங்கிப் போகும்?’ என்று அவள் அவரை எச்சரிக்க, ‘அப்படியா சமாசாரம்?’ என்று அவர் திடுக்கிட்டுத் தம் தலையைத் தாமே தொட்டுப் பார்த்துவிட்டு, ‘நல்ல வேளை, இப்போதெல்லாம் எந்த வாத்தியார் தலையிலும் தலைப்பாகை இல்லாததால் என் தலையிலும் தலைப்பாகை இல்லை!’ என்று சற்றே திருப்தியுடன் சொல்லிவிட்டு, பையனுக்கு வேலை தேடுவதோடு, பெண்ணுக்கு மாப்பிள்ளையும் ‘தேடு, தேடு’ என்று தேடுவாராயினர்.

இங்ஙனம் வேலையையும், மாப்பிள்ளையையும் சேர்ந்தாற்போல் தேடிக் கொண்டிருந்த காலையிலும் அவர் தம் வழக்கத்தை விடாமல் மாலை நேரங்களில் சாலையில் கிடக்கும் தேய்ந்த லாடங்களையும், உடைந்த கண்ணாடித் துண்டுகளையும் தேடிக்கொண்டிருக்க, அதை ஒரு நாள் அந்த வழியாக வந்த மிஸ்டர் விக்கிரமாதித்தர் பார்த்துவிட்டு, ‘என்னத் தேடுகிறீர்கள்?’ என்று ஒன்றும் புரியாமல் கேட்க, அவர் ஓர் அசட்டுச் சிரிப்புடன், ‘ஏதோ என்னாலான தொண்டு, சாலையில் கிடக்கும் தேய்ந்த லாடங்களையும் உடைந்தக் கண்ணாடித் துண்டுகளையும் தேடி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போடுகிறேன்!’ என்று சொல்ல, ‘அட, பாவி மனுஷா! போடவே போடுகிறாய், பக்கத்தில் ஒரு போட்டோகிராபரையாவது வைத்துக்கொண்டு போடக்கூடாதா?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘ஏன்?’ என்று அவர் ‘விழி, விழி’ என்று விழிக்க, ‘வீடு பற்றி எரிந்தால்கூட அதில் விளம்பரத்துக்கு ஏதாவது ‘சான்ஸ்’ இருக்கிறதா என்று தேடும் காலமாச்சே இது? இந்தக் காலத்தில் யாருக்காவது ஒரு கவளம் சோறு போடுவதாயிருந்தால்கூடப் பக்கத்தில் போட்டோகிராபர் இல்லாமல் போடக்கூடாதே!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘ஏழை வாத்தியாருக்கு ஏன் அதெல்லாம்?’ என்று சொல்லிச் கொண்டே அவர் மேலும் ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்து வைப்பாராயினர்.

‘சரியான அசடாயிருக்கும்போல் இருக்கிறதே இது! இந்த மாதிரி அசடுகளின் குடும்பம் அந்தரத்தில் அல்லவா தொங்கிக் கொண்டிருக்கும்?’ என்று அந்த அசடின்மேல் அனுதாபம் கொண்ட விக்கிரமாதித்தர் அதைக் கூப்பிட்டு அதன் நலனையும் அதன் குடும்ப நலன்களையும் பற்றி விசாரிக்க, அது கூசிக் கூசி எல்லாவற்றையும் ஒரு வழியாகச் சொல்லி முடிக்க, ‘வாத்தியார் என்றால் அசல் வாத்தியாராகவே இருக்கிறீரே ஐயா, நீர்! தன்னலத் தொண்டு அல்லவா இந்தக் காலத்தில் தமிழகத் தொண்டு, தாயகத் தொண்டு? அது தெரியாமல் நீர்தான் கெட்டீர் என்றால் உம்முடைய பையனையும் ஏன் உமக்காகக் கெடுக்கப் பார்க்கிறீர்? நாளை அவனை அழைத்துக்கொண்டு வந்து என்னைப் பாரும்!’ என்று விக்கிரமாதித்தர் தம் விலாசத்தைக் கொடுக்க, அந்த விலாசத்திலிருந்து தம்முடன் அத்தனை நேரமும் பேசிக் கொண்டிருந்தவர் விக்கிரமாதித்தர் என்பதை அறிந்த வாத்தியார், ‘கண்டேன் கண்டேன், கடவுளைக் கண்டேன்!’ என்று வாயெல்லாம் பல்லாய்க் குதிக்க, ‘கடவுள், கடவுள், என்று சொல்லி மனிதன் கடவுளையே கல்லாக்கிவிட்டது போதும்; அதே மாதிரி என்னையும் சொல்லிக் கல்லாக்கி விடாதீர்! தயவு செய்து மனிதனாகவே இருக்கவிட்டு, நாளை வந்து என்னைப் பாரும்!’ என்று விக்கிரமாதித்தர் அவரிடமிருந்து விடை பெற்றுக் கொள்வாராயினர்.

மறு நாள் விக்கிரமாதித்தர் சொன்னது சொன்னபடி வாத்தியார் தம் பையனுடன் சென்று அவரைப் பார்க்க, ‘ஏண்டா, பையா! உனக்குப் படிக்க விருப்பமா, வேலை செய்ய விருப்பமா?’ என்று அவர் பையனைக் கேட்க, ‘படிக்கத்தான் விருப்பம்’ என்று பையன் சொல்ல, ‘அவன் விருப்பத்துக்கு விரோதமாக அவனை வேலையில் சேர்த்து, அவனையும் அவன் எதிர்காலத்தையும் கெடுக்கப் பார்த்தீரே, ஐயா! அவனைப் பற்றிய கவலை இனி உமக்கு வேண்டாம். அவன் படிப்புக்கும் பராமரிப்புக்கும் ஆகும் செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன், என்று சொல்லிவிட்டு, ‘அடுத்தாற் போல் உம்முடைய பெண்ணுக்கு மாப்பிள்ளை தேட வேண்டும். அவ்வளவுதானே?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘ஆமாம்’ என்று வாத்தியார் சொல்ல, ‘கையில் காசில்லாமல் மாப்பிள்ளை தேடினால் கிடைக்க மாட்டான்; அப்படியே கிடைத்தாலும் அவன் உருப்படியான ஆளாய் இருக்க மாட்டான். முதலில் காசைத் தேடும்; அப்புறம் மாப்பிள்ளையைத் தேடும். காசை எப்போதும் நேரான வழியில் தேடக்கூடாது; தேடினால் அது கிடைக்கவும் கிடைக்காது. ஏனெனில், காசு எப்போதுமே கோணல் வழியிலேயே வருவது; கோணல் வழியிலேயே செல்வது. ஆகவே, நீரும் கோணல் வழியில் சென்றால்தான் அதைப் பிடிக்க முடியும். அதற்கு உம்மைப் போன்றவர்களுக்கு இப்போதுள்ள ஒரே வழி அரசியல். ‘அயோக்கியர்களுக்குப் புகலிடம் அரசியல்’ என்ற சொன்னவன் சும்மா சொல்லவில்லை; அறிந்துதான் சொன்னான். ஆகவே, நீர் முதலில் ஏதாவது ஓர் அரசியல் கட்சியில் அதி தீவிர அங்கத்தினராகிவிட்டு வந்து என்னைப் பாரும்!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘ம், என்னையும் அயோக்கியனாகச் சொல்கிறீர்களா? சரி!’ என்று வாத்தியாரும் பெருமூச்சு விட்டுக்கொண்டே அங்கிருந்து திரும்புவாராயினர்.

அதன்படி ஏதோ ஓர் அரசியல் கட்சியில் வாத்தியார் அதி தீவிர அங்கத்தினராகிவிட்டு வந்து விக்கிரமாதித்தரைப் பார்க்க, ‘அடுத்தாற்போல் வட்டச் செலாளராகவோ, வட்டத் தலைவராகவோ ஆகிவிட்டு வந்து என்னைப் பாரும்!’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் சொல்லி, அவரை அனுப்பி வைப்பாராயினர்.

அங்ஙனமே அப் பதவிகளை எட்டிப் பிடிக்க முயன்ற வாத்தியார் அதில் தோல்வியுற்று வந்து விக்கிரமாதித்தரைப் பார்க்க, ‘கவலைப்படாதீர்! அடுத்தாற்போல் எந்தத் தலைவரின் வாலையாவது, காலையாவது பிடித்து, ஓர் எம்.எல்.ஏ. சீட்டோ, எம்.பி. சீட்டோ, இரண்டுமில்லையென்றால் ஓர் எம்.சி. சீட்டோ வாங்கப் பாரும்!’ என்று விக்கிரமாதித்தர் சொல்லி யனுப்ப, அதிலும் வாத்தியார் தோல்வியுற்றுத் திரும்ப, ‘இனி உமக்குள்ள ஒரே வழி நிதி சேர்ப்பதுதான். அந்த நிதியையும் உம்முடைய பேரால் சேர்த்துவிட முடியாது; யாராவது ஒரு தலைவரின் பேராலோ, பிரமுகரின் பேராலோதான் சேர்க்க முடியும். இதுதான் ‘சிலை வைக்கும் சீசன்’ ஆயிற்றே? யாருக்காவது சிலை வைக்கப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டு நிதி சேர்க்கப் பாருமே!’ என்று சொல்ல, ‘அதற்கு நான் எந்தத் தலைவரைப் பிடிப்பேன், எந்தப் பிரமுகரைப் பிடிப்பேன்?’ என்று அவர் கையைப் பிசைய, ‘யாரையும் இப்போது பிடிக்க வேண்டாம். நீர்பாட்டுக்கு எந்தத் தலைவரின் பேரைச் சொன்னால் நிதி சேருமோ, அந்தத் தலைவரின் பேரைச் சொல்லி நிதி சேரும். சேரும்போதே கணக்கை எழுத வேண்டிய விதத்தில் எழுதி உமக்கு வேண்டிய வசதிகளை – அதாவது, இருக்க வீடு, பெண்ணுக்கு மாப்பிள்ளை, போக்குவரத்துக்கு ஒரு சின்னஞ்சிறு கார் இத்தியாதி, இத்தியாதி – தேடிக் கொள்ளும். அதற்குப் பின் மீதமான காசில் எந்தத் தலைவரின் பேரைச் சொல்லி நிதி சேர்த்தீரோ, அந்தத் தலைவரின் சிலையைச் செய்து வைத்துவிட்டு, ‘என்ன சொல்கிறீர்? உமக்குச் சிலை வேண்டுமா, வேண்டாமா?’ என்ற அவரைக் கேளும். அவர் ‘தியாகி ஸ்டண்ட்’ அடிக்க விரும்பினால், ‘வேண்டாம்’ என்பார்; அடிக்க விரும்பாவிட்டால், ‘ஆனானப்பட்ட ஆண்டவனே பக்தனின் அன்புக்குக் கட்டுப்படும்போது, நான் உங்களுடைய அன்புக்குக் கட்டுப்படாமல் இருக்க முடியுமா?’ என்று திடீரென்று வந்த அடக்கத்துடன் சொல்வார். உம்மைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றுதான். வசதிக்கு வசதியும் கிடைக்கிறது; ‘சாதாரணத் தொண்டன்’ என்ற நிலையிலிருந்து, ‘தலைசிறந்தத் தொண்டன்’ என்ற நிலைக்கு மட்டுமல்ல; ‘ஒரு குட்டித் தலைவன்’ என்ற நிலைக்கும் உயர முடிகிறது. இப்போதைக்கு அது போதும். போம், போம்; போய் ஜமாயும்!’ என்று விக்கிரமாதித்தர் அவரை உற்சாகப்படுத்த, ‘இதெல்லாம் மக்களை ஏமாற்றுவது போல் அல்லவா ஆகும்?’ என்று வாத்தியார் பின்னும் சொல்ல, ‘மக்களும் சம்பந்தப்பட்டத் தலைவரை ஏதாவது ஒரு விதத்தில் ஏமாற்றத்தான் நிதி கொடுக்கிறார்கள். பரஸ்பரம் தெரிந்தே ஏமாற்றி, தெரிந்தே ஏமாந்து வாழும் காலம் இது. அதைப் பற்றி நீரும் நானும் யோசிப்பது வள்ளுவனாரின் குறளுக்கே விரோதமானது. அவர் என்ன சொல்கிறார்? ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பல கற்றும் கல்லார் அறிவிலாதார்’ என்றல்லவா சொல்கிறார்? போம் போம், யோசிக்காமல் போம்!’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் சொல்லி, அவரை அனுப்பி வைப்பாராயினர்.

காலத்திற்கேற்ற அன்னார் கருத்துப்படி, கருமமே கண்ணாய் நிதி சேர்த்த வாத்தியார் சகல வசதிகளையும் சீக்கிரமே பெற்று, ‘சாதாரணத் தொண்டன்’ என்ற நிலையிலிருந்து ‘ஒரு குட்டித் தலைவன்’ என்ற நிலைக்கு உயர, அங்ஙனம் உயர்ந்தகாலை, எம்.சி. சீட்டுகளும், எம்.எல்.ஏ. சீட்டுகளும், எம். பி. சீட்டுகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரைத் தேடித் தாமாகவே ஓடி வர, அவற்றை விடாமல் பிடித்து மேலும் மேலும் முன்னேறிக் கொண்டே வந்த அவர், மாதத்துக்கு ஒரு நாள் மறக்காமல் போட்டோகிராபர், பத்திரிகையாளர் ஆகியோருடன் வெயிலில் காய்பவர்களையும், மழையில் நனைபவர்களையும் ‘எதிர்கால அமைச்சர்’ பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டே திருவொற்றியூர் சாலைக்குத் தம் புத்தம் புதுக் காரில் சென்று, போட்டோவுக்காகவும், செய்திக்காகவும் இரண்டு தேய்ந்தலாடங்களையும், இரண்டு கண்ணாடிச் சில்லுகளையும் பொறுக்கி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு வருவாராயினர்.”

ஒன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான நவரத்னா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; பத்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கனகதாரா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று வழக்கம்போல் கொட்டாவி விட்டுக் கொண்டே போஜனும் நீதிதேவனும் கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *