புழுதி பறக்கும் மைதானத்தில் திசையெல்லாம் கவிதை, கதை, கட்டுரை, ஆய்வு, ஊடகம், வலை, வலைப்பூ, அமைப்பு, இயக்கம், இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என தமிழகத்தின் மாயத் தீவிரவாதிகளால் நீக்கமற நிறைந்த பொழுது.
”நயன்தாராவுக்குக் கோயில் கட்டிட்டாய்ங்களாம்ல. போயி ஒரு தடவை கெடா வெட்டிப் பொங்க வெச்சுட்டு வரணும்!” என்றார் ஒரு பின் நவீனத்துவர்.
”நாம தமன்னாவுக்குச் சிலை வைப்போம். ஃப்யூச்சர் அதுக்குத்தான். இருளாயி மாதிரி ஒரு கண்ணு. என் வனதேவதைப்பா அது. போஷாக்கு ஏத்திட்டா, பொண்ணு நின்னு வெளாடும்!” என்றார் இன்னொரு ஏகாந்தர்.
”சீட்டுக் கட்டாட்டம் ஷேரெல்லாம் சரியுது. பெட்ரோலுக்கு பங்க்ல ரெண்டு கிலோ மீட்டருக்கு வண்டிக நிக்குது. நேத்து எனக்கு ஒரு கனவுடா சிவா. ரஷ்யா துண்டானப்போ சம்பளத்துக்குப் பதிலா முட்டகோஸ் வாங்கத் தெருத் தெருவா நின்னாய்ங்கள்ல… அப்பிடி நாமெல்லாம் ரேஷன்லயும் பார்லயும் நிக்குற மாதிரி. ‘ரேஷன்’ங்கிற வார்த்தையை இனிமே எவனாவது சொன்னா, அவன் கொரவளை எனக்கு!” – பெருஞ் சிரிப்பு சிரித்தார் ஒரு ஜீன்ஸ் தொங்கு மீசை.
”மாங்கல்யத்தைத் தூக்கி எறிஞ்சா அதான் கதி. எருவடிச்ச நிலத்தை வித்து ஏ.சி. போட்ட கிச்சனைக் கட்டினா என்ன புண்ணியம்? அதான் குளோபலைசேஷன். குண்டுவைக்கிறவன் குற்றவாளிதான். அவன் லஷ்கர்-இ-தொய்பாவா இருந்தா என்ன… ‘சிலம்பாட்டம்’ சந்தானமா இருந்தா என்ன?”
”உளவுத் துறை வந்துருப்பாய்ங்க. ஈழத்தைப் பத்திப் பேசினா கேன்டீன் அழைச்சுட்டுப் போயி, பொடி தோசை வாங்கித் தந்து பொடனியில கிஸ்ஸடிப்பாய்ங்க!”
”யோவ், இங்க எதுக்கு இன்னும் தலித் இலக்கியம்னு பிரிக் கிறீங்க? அதுலயும் உள் ஒதுக்கீடு உண்டா?”
”வாடா வெங்கிட்டு… இப்ப எனக்கு ஐ.ஐ.டி-ல வேலை வாங்கிக் கொடு. இல்லேன்னா, எவனாச்சும் அமைச்சர்கிட்ட பி.ஏ-வா சேர்த்துவிடு. போற ரயில்ல தின்னுட்டுப் போறவன் அவன். அதை வாரிட்டுப் போறவன் எவன்? நீ நெட்ல பிளாக் ஆரம்பிச்சு இந்தி ‘கஜினி’க்கு விமர்சனம் எழுதுறா. அலாரம் அடிச்சு பூனை முழிச்சது, வாக்கிங் போனப்போ வயிறு வலிச்சுதுன்னு. அவன் எழுத்து தப்பு, இவன் அரசியல் தப்புனு ஏதாவது எழுது… போடா!”
”நண்பா! லெக்பீஸ் பிளாக்ஸ்பாட் களம் வந்து பாருங்க. இருக் கிறதுல எக்கச்சக்க பின்னூட்டம் நமக்குத்தான். ஆனா, இதோ இவருதான் வலைதள சுனாமி.”
”அடப் போங்கப்பா. ஒரு எழுத்தும் வெளங்கலியே. பிரமிள் மாதிரி ஒரு தரிசனத்தைக் காங்கலியே. வண்ணதாசன் மாதிரி மனசைப் பொரட்டலியே. நாவல் எழுத இங்கே ஆளே இல்லை. அ.மார்க்ஸையும் ஷோபாசக்தியையும் படிச்சுட்டு அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்ல போய், சங்கிலிய இழுத்து, ரயில நிறுத்தி, டி.டி. ஆரை உதைக்க வேண்டியதுதான்.”
அருளுக்கு மண்டைக்குள் மஞ்சுவிரட்டு ஆரம்பித்திருந்தது. ”நாளைக்கு நம்ம நூல் வெளியீட்டு விழா. இங்க வெளியீடு. அங்க பார்ட்டி. இந்தா, படிச்சுட்டு கருத்தைச் சொல்லு” என்றபடி பொசுக்கென்று புத்தகத்தை நீட்டினான் ஒருவன். ‘அர்த்த ஜாம காம ரூப அதிவதினியின் இருள்’ என்ற தலைப்பைப் படிக்கும்போதே தொண்டையிலிருந்து கெண்டைக் காலுக்கு கரன்ட் அடித்தது.
”இதை சன் பிக்சர்ஸூக்குக் குடேன். நல்லா விளம்பரம் பண்ணி வித்துத் தருவாங்க” எனக் கருத்துச் சொன்ன அருள், ஆவேசமாக சித்தரைத் தள்ளிக் கொண்டு புத்தக ஸ்டால்களை நோக்கி நடந்தான். நுழைந்தவுடனேயே இன்னும் ஓர் இலக்கிய க்ரூப். அதில் பெண் படைப்பாளிகள் இருந்தார்கள்.
சிலர் அவனது தோழிகள். ஒன்றிரண்டு வருடங்களில் இப்படியா மாறிப்போவார்கள் இந்தப் பெண்கள்?
‘சுடிதாரு சல்வாரில் பார்த்த உருவமா?’ எனப் பாடினான் அருள். பாய்கட், ஜீன்ஸ், பாம்பு பெல்ட் என மைக்கேல் ஜாக்சனுக்கு அக்காக்கள் மாதிரி பலர், குண்டு ஆர்த்திக்குத் தங்கச்சி மாதிரி சிலர். தோழி ஒருத்தி கவிதைத் தொகுப்பு தந்தாள். ‘பாசி படிந்த பச்சை இருளிலிருந்து வந்தான் அவன்’ எனத் தொடங்கியது அது.
”கிரெடிட் கார்டு இருக்கா? எனக்கு ஒரு கான்டாக்ட் லென்ஸ் வாங்கித்தா. கண்ணு அவுஞ்சிடும் போலிருக்கு” என அருள் புத்தக மதிப்புரை வழங்கினான். இன்னொருத்தி அவள் எடுத்த குறும்படத்தின் குறுந்தகடைக் காட்டிவிட்டுப் பிடுங்கிக்கொண்டாள். ”கொஞ்சம் காப்பீஸ்தான் இருக்கு. டைரக்டர்ஸூக்குத் தரணும். ஃபிரான்சுக்கு அனுப்பப் போறேன். ஃபிலிம் சேம்பர்ல ஷோ இருக்கும்போது சொல்றேன்” என்றாள்.
”அடுத்த புக் ஃபேருக்கு வரும்போது உங்களை எம்.எல்.ஏ, எம்.பி-யாத்தான் பார்க்கணும். குவாட்டர்ஸ்ல குந்தவெச்சு குவாட்டர் வாங்கித் தரணும்டி மதினிகளா!”
சித்தரோடு கடைகளை அளந்தான். ஏ.ஆர்.முருகதாஸ், பாலாஜி சக்திவேல், மிஷ்கின், லிங்குசாமி, நா.முத்துக்குமார் என அங்கங்கே சினிமாப் புள்ளிகள். கற்பனைக் குளத்துக்கு நீர் வார்க்க, கார் வைத்து வந்திருந்தார்கள். கலைஞருக்கான பிரத்யேக ஸ்டாலைக் கடக்கும்போது, ‘அய்யனாரப்பா’ எனக் கன்னத்தில் போட்டுக்கொண்டான் அருள். ”மம்மிக்கு ஒண்ணு ஓப்பன் பண்ணலாம்ல… ஓ.பி.எஸ். நம்பர் இருக்கா?” எனக் கிளம்பினான்.
சித்தர் சிலபல புத்தகங்களை வாங்கினார். அருள் ஒன்றும் வாங்காமல், வந்து போன குடும்பங்களைப் படித்தான். ஓர் அழகான குடும்பம். குட்டிப் பையன் – ஹாரி பாட்டர், அக்காக்கள் – இன்ஃபோசிஸ் நந்தன் நிலக்கனி, அம்மா – ஜக்கி வாசுதேவ், அப்பா – ‘ஆயுசுக்கும் ஆயுர்வேதம்’ வாங்கினார்கள். வெளியே போய் நிச்சயம் டெல்லி அப்பளம் வாங்கிப் போவார்கள். ஒரு கணம் அந்தக் குடும்பத் தலைவனாகத் தான் இருக்கக் கூடாதா என பாங்கு ஃபீலிங்கில் கண்கலங்க நிமிர்ந்தான் அருள்.
அவன் கண்ணீர்த் திரை விலக்கி எதிரே வந்தாள் இஸபெல்லா. டைமிங் மிஸ்ஸாகாமல் சித்தர் விசில் வைத்தார்… ”உறவுகள்… தொடர்கதை…”
இஸபெல்லா… அருளின் உயிர்த் தூரிகையில் காயாத காவிய ஈரம். மூளையின் சுவரில் மாட்டிக்கிடக்கும் மோன ஓவியம். யுகங்களின் பாலையில், நினைவுகளின் நெடுநீர்ச் சுனை. மரணத்தின் வாசலில் ஜனனத்தின் வானவில். அவன் உணர்ச்சிகளை உடைந்த வளையல் துண்டுகளாக்கி, காலத்தின் கைகளில் கலைடாஸ்கோப் உருட்டிய காதல் பெண்.
அருள் சென்னைக்கு வந்த புதிதில் ஒரு இலக்கியக் கூட்டத்தை விடுவதில்லை, அமாவாசை பகல் காக்கா மாதிரி. அப்படி ஒரு கூட்டத்தில்தான் இஸபெல்லாவைச் சந்தித்தான். வாசமாக இருந்தாள். ஓவியக் கல்லூரி மாணவி. அந்த ஊசி வெடிச் சிரிப்பையும், முதல் சந்திப்பிலேயே தலை கலைத்த விரல்களையும் அதற்கு முன் அவன் அனுபவித்தது இல்லை. ரோட்டோரக் கடையில் ஒரே தட்டில் இட்லி தின்றபோது, அதில் சட்னியானான்.
அடுத்தடுத்த சந்திப்புகளில் அழகழகான குர்தாக்களில் வந்தாள். அப்புறம் அவன் அறைக்கே வந்தாள். டெரகோட்டா புத்தர் தந்தாள். அழுக்குச் சட்டை துவைத்துப் போட்டாள். இங்கிலீஷ் சொல்லித் தந்தாள். ஒருமுறை அவன் தூங்கிக்கொண்டு இருந்தபோது, அவனை அவனுக்குத் தெரியாமல் வரைந்து தந்தாள். அப்போதுதான் அவன் விழித்துக்கொண்டான்.
காதல் விசில் அடிக்க, சொர்க்க வாசலில் கபடி ஆடினான் அருள். பக்கம் பக்கமாகக் கவிதை எழுதினான். இதே புக் ஃபேரில் பை நிறையப் புத்தகங்கள் பரிசளித்தாள். காதலைச் சொல்ல தருணம் தேடியபோது, அவளே வந்தாள்.
”அருள்… ஒரு ஹெல்ப்மா!”
”சொல்லும்மா!”
”ஒரு நம்பர் தர்றேன். அதுக்கு போன் பண்ணி, ‘கேன் ஐ ஸ்பீக் டு மிஸ்டர் ராகேஷ்’னு சொல்லணும். ராகேஷ் லைனுக்கு வந்தா, என்கிட்ட தா. இல்லேன்னா, கட் பண்ணிடு. அவர் வீட்ல பிராப்ளம் ஆகிடும்.”
”ராகேஷா? என்னது? என்ன பிராப்ளம்?”
”அச்சோ… வெக்கமா இருக்குடா.”
ராகேஷ் டெல்லியில் ஓவியப் பேராசிரியர். இஸபெல்லாவுக்கும் அவருக்கும் கலைக் காதல். அதற்கு போன் புறாவானான் அருள். ”கேன் ஐ ஸ்பீக் டு கேணப்பய ராகேஷ்!”
ஒடுங்கி நடுங்கி ஊரைப் பார்க்க ஓடிய அருள், மூன்று மாதங்களில் 13 கிலோ இளைத்து மீண்டான். அவன், தமிழ்நாட்டின் தலைநகரில் பேதலித்தான். அவள், இந்தியாவின் தலைநகரில் காதலித்தாள். கால தேவனின் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப்பட்டன.
வருடங்கள் கடந்து இன்று எதிரே வருகிறாள் இஸபெல்லா. அதே பார்வை. அதே புன்னகை. இன்னும் ஓர் அழகான குர்தா. எக்ஸ்ட்ரா இரண்டு கிலோ தேகம். நிச்சயம் தலை கலைப்பாள்.
சட்டென்று சித்தரை ஓரமாக இழுத்து, ”பாங்கு ஒண்ணு குடு” என்று வாங்கி அவசரமாக விழுங்கினான் அருள்.
”உனக்கு ஒரே ஒரு புத்தகம் வாங்கித் தர்றேன். காலப் புத்தகம். எப்போ படிச்சு முடிப்ப?” – அருளைப் பார்த்து அசரீரியெனச் சிரித்தார் சித்தர்.
அருள் சுழன்றான். உலகம் வெளவாலானது. புத்தகங்கள் நடுவே அவன் அழுதான். ஓவியங்களின் நடுவே இஸபெல்லா அழைத்தாள். குடி குடித்து வெயிலடித்தது. யார் யாரோ வந்து போனார்கள். கபாலம் திறந்து கலர் கலராகக் கொட்டியது. ஒரு பேயலை அவனை அடித்து இழுத்து கன்னித் தீவில் கரை ஒதுக்கியது.
நள்ளிரவுக்கு மேல் எங்கோ யாருமற்ற தெருவோரம், ஏதுமற்ற இஸ்திரி வண்டியில் மட்டையாகிக் கிடந்தவனை உலுக்கி எழுப்பியது பாரா போலீஸ்.
”யார்றா நீ? எங்கேருந்து வர்ற? இங்க என்னடா பண்ற?”
சொக்கிக் கிறங்கி சொப்பனம் கலைந்த எச்சில் வழிய, எழுந்தான் அருள்.
”யார்றா..? என்னத்தத் திருட வந்த?”
”ம்… கொலுசு, கோழி, இஸபெல்லா…”
‘ரப்ப்ப்’பென்று விழுந்த அறையில் கடைவாயில் ரத்தம் கசிந்தது.
‘மானாட மயிலாட’வெல்லாம் முடிந்து நியூஸ் ஓடத் தொடங்கியது…
”சென்னையில் நடந்த புத்தகத் திருவிழா, நேற்று இனிதே நிறைவடைந்தது!”
– 21-01-09