உடல் பருமனுக்குப் பல வகைக் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறார்கள்.
நம்ம உடம்பு அதிகச் சதைப் பிடிப்பாக இருந்தால் கஷ்டம்தான். அனுபவிக்கிறவர்களுக்கு அந்தச் சிரமங்கள் தெரிவதைவிட ஒரு டாக்டருக்கு அதிகம் தெரியும். நண்பன் நாராயணனின் கால் கட்டை விரலில் ஓர் அங்குல நீளத்துக்கு (இரண்டரை சென்டி மீட்டர்) நகம் வளர்ந்திருக்கும்.
காண்டா மிருகக் கொம்பு மாதிரி பயங்கரமாக இருக்கும். “வெட்டித் தொலையேண்டா,” என்று பல தடவை சொல்லியிருக்கிறேன். அக்கறையைவிடத் தற்காப்புதான்.
அவனருகில் நின்று பேச வேண்டிய சந்தர்ப்பங்களிலோ சேர்ந்தாற்போல் வாக்கிங் போகும்போதோ அவனது கட்டை விரல் நகத்தால் என் கால்கள் பலமுறை குத்தப்பட்டு ரணமாயிருக்கிறது.
நகமும் சதையும் போன்ற நண்பர்கள்தானென்றாலும் நகம் அவனுடையது, சதை என்னுடையதாகப் பிரிந்து இருந்ததால் வேதனையைத் தாங்கிக் கொள்வது சிரமமாயிருந்தது.
‘நகம் வெட்டிக் கொள்வதில் என்ன சிரமம்?’ என்று அவனை வற்புறுத்திக் கேட்டபோது அவன் சொன்ன பதில் : “என்னால் என் கால் நகத்தை வெட்டிக் கொள்ள முடியாது. தொப்பை பெரிசாக இருக்கிறது. குனிந்து நகத்தைப் பார்க்கக்கூட முடியாது.”
ஒபிஸிடி ஏற்படுவதற்குக் காரணங்களைப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. ஒருத்தரின் தொப்பை எப்படி எல்லாருக்கும் பகிரங்கமாகத் தெரியுமோ அதேபோல் தொப்பைக்கான காரணங்களும் சகலரும் அறிந்ததே. தொப்பையைக் குரூரமான முறையில் ஆகாரக் கட்டுப்பாடுகள், கொரியன் கிராஸ் மற்றும் பலவகை மூலிகைகள், மருந்து மாத்திரைகள், அளவுக்கதிகமான உடற் பயிற்சிகள் இவற்றாலெல்லாம் உடலை வருத்திக் குறைக்கிறார்கள். ஆனால் வெட்டவெட்டத் துளிர்க்கும் கட்டைப் புளிய மரம் போல, மீண்டும் தொப்பை விழுந்து விடுகிறது.
தொப்பையைக் குறைக்க முடியாதென்றாலும் விழுந்த தொப்பை மேலும் சரிவடையாமல், ஸ்டாக் மார்க்கெட் வீழ்ச்சியைச் சில முயற்சிகள் செய்து மேலும் சரியாமல் செய்வதுபோல் தொப்பையானது மேலும் சரியாமல் செய்ய சில வழிகள் உண்டு.
லேசான எடை தூக்கும் பயிற்சியை ஒருத்தர் சிபாரிசு செய்தார். அந்தப் பயிற்சியினால் வயிற்றுத் தசை நார்கள் வலுவடைந்து, சரியும் தொப்பைச் சதைகளை இழுத்துப் பிடித்து நிறுத்தும் என்கின்றனர்.
ஆனால் நான் அதை முழுவதுமாக நம்பவில்லை. ஏனென்றால் எடை தூக்கும் பயில்வான்களுக்கு நிறையவே தொப்பை உள்ளது. எடை தூக்கும் பயில்வான் ஒல்லியாக ஓமக்குச்சி மாதிரி இருந்தால் யாரும் நம்பவே மாட்டார்கள். ஆகவே எடை தூக்குவதால் தொப்பை விழாது என்பதை பூர்ணமாக நம்புவதற்கு இல்லை.
ஏகப்பட்ட கலோரி அளவுள்ள பண்டங்களைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவு விஷயத்தில் சற்று உஷாராக இருக்க வேண்டும். உணவிலுள்ள கலோரிகளை எரிப்பதற்கு என்னென்ன உபாயங்கள் செய்ய வேண்டுமோ அதெல்லாம் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
வாக்கிங், தேகப்பயிற்சி இவையெல்லாம் வயிறு தொடர்பான தசைகளுக்கு வலுவூட்டி சரியும் தொப்பையை இழுத்துப் பிடித்துக் கொள்ள உதவக் கூடியவை.
ஒரு வருஷமாகத் தினமும் விடியற் காலை ஒரு மணி நேரம் வாக்கிங் போயும் தொப்பை கரையவில்லையே என்று மனம் தளர வேண்டியதில்லை. அந்த மாதிரி வாக்கிங்கால்தான் இந்த அளவோடு தொப்பை நிற்கிறது என்று மகிழ வேண்டும்.
“நான் ரொம்ப சோர்வாகி விடுகிறேன் – சதா உட்கார்ந்து டி.வி. பார்க்கவும் படுத்துத் தூங்கவும்தான் உடம்பு விரும்புகிறது” என்றான் நாராயணன். அவனுக்கு ஒரு ரகசியத்தை சொன்னேன்.
“கூடுமானவரை உட்காராதே, படுக்காதே. எல்லாக் காரியங்களையும் நின்றவாறோ நடந்து கொண்டோ செய்யக் கற்றுக் கொள். உட்காரப் பழகிய உடம்பானது பழக்கம் காரணமாக எப்போ உட்கார சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டே இருக்கும். உட்கார்ந்ததும் அடுத்த காரியம் உடலை சவுகரியமாகத் தொய்வாக்கிக் கொள்வது. தொய்வான உடம்பு படுத்துக்கொள்ள நேரம் பார்க்கும்.
“சாய்வு நாற்காலியில் சரிவதுபோல நாற்காலியில் பலர் சரிந்தே அமர்வார்கள். இந்த மாதிரி சாய்வதைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாதவர் நின்றவாறே வேலை செய்ய வேண்டும்.
“சாப்பிடுவது, கம்ப்யூட்டர் இயக்குவது, எழுதுவது, படிப்பது எல்லாமே நின்றவாறோ நடந்து கொண்டோ செய்யப் பழகிக் கொண்டு விட்டால் (ஆரம்பத்தில் சற்றுக் கால் வலித்தாலும்) தொப்பை குறைய அதிக சான்ஸ் உண்டு!”
(இந்த கட்டுரையைக்கூட நின்றுகொண்டேதான் டைப்பிங் செய்தேன்.)
சிலபேர் ‘நான் துளியூண்டுதான் சாப்பிடுகிறேன். ஆனால் தொப்பை விழுந்துவிட்டதே’ என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நொறுக்குத் தீனி தின்பவர்களாக இருப்பாரகள். நொறுக்குத் தீனி தின்பது என்றால், நான் – ஸ்டாப்பாக – வாய் மூடாப் பட்டினியாக சதா எதையாவது வாயில் போட்டு அரைத்துக் கொண்டிருக்கும் பழக்கம்.
வாய் துறு துறுத்தால் சூயிங்கம் போட்டு மெல்லலாம். கிரிக்கெட் வீரர்கள்கூட முக்கியமாக வெள்ளைக் காரர்கள் சதா அசை போடுபவர்கள்தான். வாய் எதையாவது மென்றுகொண்டே இருக்கவேண்டும். அரசியல் தலைவர் லல்லு பிரசாத் சதா வெற்றிலை பாக்கு மெல்லுகிறவர். மறைந்த மூப்பனார் அவர்கள் பாக்கு மெல்லும் வழக்கமுடையவர்.
நொறுக்குத் தீனியை தவிர்ப்பதற்கே இப்படிப்பட்ட பொருட்களை அவர்கள் மெல்லுகிறார்கள்.
தான் சாப்பிட்டப் பொருளை மாடு விரும்பும்போது வாய்க்குக் கொண்டு வந்து சாவகாசமாக அசை போடுகிறது. அதைப்போல் மனிதர்களுக்கும் வசதியும் வாய்ப்பும் இயற்கை அமைத்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும். பெரும்பாலானவர்கள் ஒல்லி யாகவே இருக்கக்கூடும்!