கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 25,170 
 
 

புதிதாக வாங்கியிருந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்தான் விசு.

பக்க ஆரம்பத்தில், சிலர் `ஸ்ரீராமஜெயம்` என்று எழுதுவார்கள். வேறு சிலர், விநாயகரைத் துணை அழைப்பார்கள்.

விசுவோ, தி.தி என்று எழுதினான். எல்லாம், `திருமணத் திட்டங்கள்` என்பதன் சுருக்கம்தான்.

“படிச்சு முடிச்சு, வேலையும் கிடைச்சுடுச்சு. இப்பவே முன் நெத்தியில வழுக்கை விழுந்திடுச்சுடா! சீக்கிரமா ஒனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைச்சுட்டா, நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்!” டிவியைத் தவிர வேறு பொழுதுபோக்கே இல்லாத அம்மா, சினிமா அம்மாவைப்போல்தான் பேசுவாள்.

உடனே ஒத்துக்கொண்டுவிட்டால், அவன் கௌரவம் என்ன ஆகிறது!

“இப்ப முடியாதும்மா. மொதல்ல நான் ஒரு ஆராய்ச்சி பண்ணப்போறேன்,” என்று புதிர் போட்டான்.

“மேலே படிக்கப்போறியா!” தனலட்சுமி ஆச்சரியப்பட்டாள். பள்ளி நாட்களிலேயே தலைவலி, வயிற்றுவலி என்று ஏதாவது சாக்கு சொல்லி, அடிக்கடி மட்டம் போட்ட மகன்!

“கல்லூரியில படிச்சாத்தானா? நான் வாழ்க்கையைப் படிக்கப் போறேன்!” பெருமையாக, தலையை நிமிர்த்தினான். “அம்மா! எல்லாரும்தான் கல்யாணம் பண்ணிக்கறாங்க. ஆனா, அதில எத்தனைபேர் சந்தோஷமா இருக்காங்க?”

“இதையா கணக்கு எடுக்கப்போறே? வேண்டாத வேலை!”

“இப்போ அப்படித்தான் சொல்வீங்க! நான் கட்டிக்கப்போற பொண்ணை, அதான் ஒங்க மருமகளை எப்படி நடத்தினா, அவ மனசு நோகாம, எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பா — இந்த மாதிரி ஒரு பட்டியல் தயார் செய்யப்போறேன். என்னோட திருமண வாழ்க்கை ரொம்ப ஜாலியா இருக்கப்போகுது, பாருங்களேன்!”

“அதை அப்போ பாத்துக்கலாம். சாப்பிட வா!”

பாராட்டாவிட்டாலும் போகிறது, இப்படி இளக்காரமாகப் பேசுகிறாளே!

விறைப்பாக வெளியே போய், நோட்டுப் புத்தகத்தை வாங்கிவந்தான். பக்கத்தின் நடுவில் ஒரு நீண்ட கோடு, மேலிருந்து கீழே. ஒரு புறத்தில் `நான் செய்ய வேண்டுபவை,` மறு புறத்தில், `நான் செய்யக் கூடாதவை` என்ற உபதலைப்புகள்.

எங்கே ஆரம்பிப்பது என்று விசு அதிகம் குழம்ப வேண்டியிருக்கவில்லை.
முந்தைய வருடம் மணப்பந்தலில் அமர்ந்தவன் செல்வம். தன்னைவிட அதிகம் படித்தவளை, ஒரு பணக்காரியைக் கைப்பிடித்தால், வாழ்க்கையின் உயர்மட்டத்தை சுலபமாக எட்டிவிடலாம் என்று எப்போதும் நண்பர்களிடம் விவாதிப்பான்.

மலாயா ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தபோது, அவனுடைய தாத்தா ரப்பர் எஸ்டேட்டில் கங்காணியாக இருந்தாராம். ஒரு பவுன் பத்து வெள்ளி விற்ற அந்தக் காலத்தில், பத்து விரல்களிலும் மோதிரம், கழுத்தில் இரட்டை வடம் சங்கிலி என்று அலங்காரபூஷணனாக, கப்பலேறி அயல்நாடு சென்றவர், ஒரு செல்வந்தரின் ஒரே மகளை, அதுவும் இவரது இரண்டாம் வகுப்பைவிட அதிகம் படித்தவளை மணந்துகொண்டு, வெற்றிகரமாகத் திரும்பி வந்தாராம்.

செல்வமும் தாத்தா காட்டிய வழியில் நடந்து, நாகரிகத்தில் ஊறிய ஒரு பணக்காரப் பெண்ணை எப்படியோ வளைத்துப் பிடித்திருந்தான்.

அவன் பாட்டி எப்படியோ, ஆனால் அவனுக்கு வாய்த்தவள், `கல்லானாலும் கணவன்` என்று பொறுத்துப்போக மறுத்ததால், விவாகரத்து வழக்கிற்காக செல்வம் வீட்டுக்கும், கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருப்பதாகக் கேள்வி.

விசு எழுத ஆரம்பித்தான்.

தி.தி1: என்னைவிட அதிகம் படித்த, அல்லது பணக்காரியான பெண் வேண்டாம்.

அடுத்து ஒருசந்தேகம் எழுந்தது.

மனைவியாகப் போகிறவள் அழகாக இருக்கலாமோ?

பிறர் பார்த்து ரசிக்கிறார்களே என்ற பொறாமை வருமா?

வரும்.

கண்டிப்பாக வரும்.

அது மட்டுமல்லாது, அந்த அழகி தனக்கு உண்மையாக நடந்து கொள்கிறாளோ என்று யோசித்து யோசித்தே இருக்கிற நான்கு முடியையும் இழக்கவேண்டி வரலாம்.

தி.தி 2: அழகி வேண்டாம். கண், காது போன்றவை இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் போதும்.

அதிகம் யோசித்ததில் தலை வலித்தது. `பசி,` என்று நினைத்துக்கோண்டான்.

பிறகு, முதல் நாளைக்கு இவ்வளவு போதும் என்று எழுந்தான்.

“கை, காலைக் கழுவிட்டு வாடா,” என்றாள் அம்மா.

சாப்பாட்டு மேசைமுன் நாற்காலியில் அமர்ந்து, காலால் அல்ல, கையால் சாப்பிடுவதற்கு எதற்காக காலைக் கழுவ வேண்டும்?

அம்மாவைக் கேட்டால், `குதர்க்கம்,` என்று பழிப்பாள். அப்பாவைக் கேட்கலாம் என்றாலோ, `அம்மாவைக் கேளு,` என்று நழுவி விடுவார்.

அப்படித்தான் அடுத்த தி.தி பிறந்தது.

அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு ஓடியவனை அப்பா எதுவும் புரியாமல் பார்த்தார். அவனுக்கு படிப்பு வேப்பங்காய் என்றால், சாப்பாடு தேன்.

அவர் கேளாத கேள்விக்கு புன்சிரிப்புடன் பதிலளித்தாள் அம்மா: “ஒங்க மகனுக்கு கல்யாண ஆசை வந்திடுச்சு. அப்ப எப்படி நடந்துக்கணும்னு இப்பவே திட்டம் போடறான்!”

“வேண்டாத வேலை!” என்றார் அப்பா.

விசு அறைக் கதவைச் சாத்திக்கொண்டு, வேகமாக எழுதினான்.

தி.தி 3: பெண்டாட்டி தாசனாக இருக்காதே. வரியின் ஆரம்பத்தில், `அப்பாமாதிரி` என்று எழுதிவிட்டு, அதை நன்றாக அடித்தான். `ஏனெனில், ஒரு ஆணின் சுதந்திரம் எந்த விதத்திலும் தடைப்பட்டுவிடக் கூடாது` என்று விரிவாக்கினான். இப்போது அப்பாவைப் பழித்ததால் உண்டான குற்ற உணர்வு மறைந்தது.

அடுத்து, இலக்கணத்தில் சந்தேகம் வந்தது. `ஒரு ஆணா,` இல்லை, `ஓர் ஆணா?`

எதாக இருந்தால் என்ன! இப்போது அதுவா முக்கியம் என்று, `ஒரு` என்ற வார்த்தையை அடித்துவிட்டு, `ஆணின்` என்று போட்டுக்கொண்டான்.

எழுதும்போதே மாற்று யோசனை எழுந்தது. கல்யாணம் என்றால் தனக்கு மட்டும்தானா? அதன்வழி தன்னுடன் இணையப்போகும் பெண்ணுக்கு மட்டும் உணர்ச்சிகள் இருக்காதா, என்ன!

அடுத்த பக்கத்தில், `ஒரு பெண் எதிர்பார்ப்பவை` என்ற தலைப்பின்கீழ், `பெண் சுதந்திரமும் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது` என்று எழுதும்போதே அளப்பரிய பெருமை உண்டாயிற்று.

வரப்போகிறவளின் நல்வாழ்க்கையில்தான் தனக்கு எவ்வளவு அக்கறை!
தன்னை மணப்பவள் கொடுத்து வைத்தவள்! அவளுக்குத் தினமுமே கொண்டாட்டம்தான்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு, நாடெங்கும் கொண்டாட்டமாக இருந்தது. நீண்ட விடுமுறைக் காலம் வேறு.

கிட்டத்தட்ட மறந்திருந்த பழைய நண்பர்களைப் பார்ப்பது என்று முடிவெடுத்தான் விசு. அவர்களுக்கெல்லாம் திருமணம் ஆகிவிட்டதா என்று முதலிலேயே விசாரித்து வைத்துக்கொண்டான். எல்லாம் ஆராய்ச்சியின் பொருட்டுதான்.

தேவா என்கிற நண்பனின் அக்கா, குடிப் பழக்கம் இருந்த கணவர் குடும்பச் செலவுக்குப் பணமே கொடுக்காது, அடித்து வேறு கொடுமைப் படுத்தியதில் மனம் வெறுத்து, பிறந்தகத்துக்கே நிரந்தரமாக வந்திருந்தாள்.

அவர்கள் வீட்டுக்குப் போய் விவரம் சேகரித்த விசு, யாரும் பார்க்காத சமயத்தில், `குடிக்காதே! மனைவியை அடிக்காதே!` என்று, சட்டைப்பையில் தயாராக வைத்திருந்த நாட்குறிப்பில் எழுதி வைத்துக்கொண்டான் விசு.

அபூர்வமாகத் தனது வீடு தேடி வந்திருந்த விசுவின் எதிரே, தேவா தன் அதிகாரத்தைப் பறைசாற்றிக்கொள்ள எண்ணினான் போலும்! சமையலறைக்குள் அவ்வப்போது எட்டிப் பார்த்து, “டிகாக்ஷன் காபி கலக்கிட்டு வாடி. தோசைக்கு வெறும் சாம்பார்தானா! தக்காளி சட்டினி, வெங்காய சட்டினி இரண்டும் அரைச்சுடு. அதான் மிக்ஸி இருக்கில்ல! அப்படியே கொஞ்சம் கேசரி,” என்று மனைவியை வாய் ஓயாமல் விரட்டினான்.

அப்பெண்மணியின் முகம் எவ்வளவு வாடிப் போயிருக்கும் என்று கற்பனையில் பார்த்தே பரிதாபப்பட்டான் விசு. தி.தி எழுத நேரமில்லை.
ஆரம்பப் பள்ளியில் கணக்கு வாய்ப்பாடுகளை மனனம் செய்த பழக்கம் இப்போது கைகொடுத்தது.

`மற்றவர்கள் எதிரில் பெண்டாட்டியை விரட்டாதே!` என்ற பொன்மொழியை திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டான்.

இப்போது நோட்டுப் புத்தகத்தில் சில பக்கங்களே எஞ்சியிருந்தன.

சாவதானமாக, எழுதிய அறிவுரைகளை ஒன்றுவிடாமல் படித்துப் பார்த்தபோது, அயர்ச்சிதான் மிஞ்சியது.

மனைவிக்கும் சுதந்திரம் கொடுக்க வேண்டும், ஆனால் தன் தனிப்போக்கிற்கும் குந்தகம் விளையக் கூடாது. நடக்கிற காரியமா?
இருவரும் அவரவர் வழியில் போவதற்கு இணைவானேன்? புரியவில்லை.

ஒரு தி.தியின்படி, பிறர் எதி¡¢ல் கணவன் மனைவியையோ, அல்லது ஒரு பெண் கொண்டவனையோ தலைகுனிவாகப் பேசக்கூடாது.

தலைகுனிவுக்கு எதிர்ப்பதம் என்னவென்று சற்று யோசித்து, மனைவியை அதிகம் புகழவும் கூடாது. புகழப்பட்டவருக்குத் தலைக்கனம் வந்துவிடும். புகழ்வரை மதிக்கமாட்டார் என்ற முடிவுக்கு வந்தான் விசு.

புகழாவிட்டாலோ, குடும்பத்தில் சுமுகமான நிலைமை இருக்காது. அது அப்பா தன் நடத்தையால் காட்டிய பாடம்.

“இன்னிக்கு ரசம் ஏ ஒன். ஒரு தம்ளரில் விட்டுக் குடு, தனம்!” என்று பாராட்டிய அப்பாவை நம்ப முடியாது பார்த்தான்.

“இன்னிக்கு ரசத்திலே உப்பு போட மறந்துட்டாங்க அம்மா. அதை எப்படிப்பா இவ்வளவு ரசிச்சு, கேட்டு வேற வாங்கிக் குடிக்கிறீங்க?”

அப்பா சிரித்தார். “உண்மையைச் சொல்லிட்டு, யாரு ஒங்கம்மாகிட்ட மாட்டிக்கிறது! நாளையிலேருந்து நீங்களே ஒங்களுக்குப் பிடிச்சமாதிரி சமைச்சுக்குங்கன்னு முரண்டு பண்ணுவா. இல்லே, எப்பவோ செத்துப்போன எங்கம்மாவை வம்புக்கு இழுப்பா — என்னை இப்படி நாக்கு நீளமா வளர்த்ததுக்கு. எதுக்குடா பொல்லாப்பு!” என்று அப்பா விளக்கியது மறக்கக்கூடியதா!

எதிர் வீட்டு மருமகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மூன்று பிள்ளைகளைப் பெற்றுவிட்டு, நான்காவது பிரசவத்தில் இறந்துபோனபோது, இடுப்பின் அகலத்துக்கும், பிள்ளைப்பேறு சுலபமாக இருப்பதற்கும் இடையே உள்ள தொடர்பைத் தற்செயலாக அறிந்துகொண்டான் விசு.

“அப்பாவுக்குப் பெண்பார்க்க, மொதல்ல அவங்கம்மாவும், அத்தையும்தான் என்னைப் பாக்க வந்தாங்க. என்னோட இடுப்பு அப்பவே அகலம்தான். இவதான் நம்ப வம்ச விருத்திக்கு ஏத்தவள்னு முடிவு செஞ்சுட்டாங்க!”

நண்டும் சிண்டுமாக குழந்தைகளை மேய்த்துக்கொண்டு திண்டாடும் விதுரனைப் பார்த்தபோதெல்லாம் தானும் அவன் நிலைமைக்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயம் பிறந்தது.

கட்டியவள் அல்பாயுசில் போய்விட்டால், அவள் பெற்றுப்போட்டதை யார் பார்த்துக்கொள்வது?

அதுவரை அவன் அறைச் சுவர்களை அலங்கரித்த த்ரிஷா, தமன்னா போன்றவர்களின் படங்களைக் கிழித்தான். சரிதாவை அந்த இடத்தில் வைத்துப் பார்த்தபோதுதான் அவனுக்கு மூச்சு வந்தது.

அடுத்த தி.தி, `நாமிருவர், நமக்கிருவர்` என்று, ஏதோ பலான சமாசாரத்தின் விளம்பர வாசகம்போல் இருந்தது.

ஓராண்டுகால ஆராய்ச்சியின் பலனாக, எல்லா சூழ்நிலையிலும் எதையோ கவனமாகத் தேடும் பாவனை வந்தது விசுவுக்கு.

தூக்கம் போயிற்று. ராத்திரியெல்லாம் கண்விழித்துப் படிக்கும் மாணவியுடையதைப் போன்று, முடி உதிர்ந்தது. வயிறு காலியாக இருப்பதால்தான் தூக்கம் வரவில்லையோ என்றெண்ணி, அர்த்த ராத்திரியில் ஐஸ்பெட்டியை முற்றுகையிட்டான்.

அம்மாவுக்குக் கவலை பிறந்தது.

மீண்டும் அந்தப் பேச்சை எடுத்தாள்.

காலமெல்லாம் துப்பு துலக்கினாலும், இந்த புதிருக்கு விடையே கிடையாது என்ற ஞானம் பிறந்திருந்தது விசுவுக்கு.

“சரிம்மா. ஒங்க ஆசையைக் கெடுப்பானேன்!” என்று பெரியமனது பண்ணினான்.

முதன்முதலாகப் பார்த்த பெண்ணே தனது தி.திக்கு உட்பட்டிருந்ததுபற்றி விசுவிற்கு கொள்ளை மகிழ்ச்சி.

அம்மாதான், “பொண்ணு பாக்க சுமாராத்தான் இருக்கு. இடுப்புக்குக் கீழே விகாரமான அகலம் — மார்க்கெட்போன நடிகைமாதிரி. படிப்பும் பெருமையாச் சொல்லிக்கிறமாதிரி இல்ல. இவனுக்கு என்ன குறைச்சல்! அவசரப்பட்டு, போன இடத்திலேயே சரின்னு தலையாட்டிட்டான்!” என்று பார்ப்பவர்களிடமெல்லாம் அங்கலாய்த்துக்கொண்டாள். “நான் ரொம்ப அவசரப்படுத்தி இருக்கக்கூடாது,” என்று பழியைத் தன்மேல் போட்டுக்கொண்டாள்.

அறையை அலங்கரித்த மலர்களின் மணம் சிற்றின்ப உணர்வுகளைக் கிளறிவிட, முன்பின் பழக்கமில்லாத அப்புதுமணத் தம்பதிகள் மௌனமாக இருந்தார்கள்.

ஏதாவது பேசினால் இறுக்கம் குறையும் என்று நினைத்தவனாக, ” ஒனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” அசட்டுத்தனமாகக் கேட்டுவைத்தான் மணமகன்.
மனைவி அளித்த பதில்: “எனக்கு வரப்போறவரு எப்படியெல்லாம் இருக்கணும்னு கனவு கண்டேன், தெரியுமா? கடைசியில, கட்டை குட்டையா, வழுக்கையா நீங்க! ஹம்! ஆசைப்பட்டதெல்லாம் கிடைச்சுடுதா?”

விசுவிற்குள் கிளர்ந்த அவமானம் ஆத்திரமாக மருவியது. ஆரம்பத்திலேயே கோணல் வேண்டாம் என்று அடக்கிக்கொண்டான்.

மேற்கொண்டு அவள் எதுவும் பேசித் தொலைப்பதற்குள், அவள் வாயை இறுக மூடினான் — கையால் அல்ல.

விநாடிகள் நிமிடங்களாயின. நிமிடங்கள் மணிகளாக மாறி.. கணக்கு வைத்திருக்க வேண்டிய காலமா அது!

கணவனை வசப்படுத்திவிட்டோம், இப்போது எது கேட்டாலும் தட்ட மாட்டார் என்ற நம்பிக்கையுடன், “ஏங்க? நானும் ஒத்தைப்பிள்ளை. நீங்களும்தான். ஏதாவது பிரச்னை வந்தா, சொல்லி அழ அக்கா, தங்கச்சி, அண்ணன்னு நமக்கு யாரும் இல்லியேன்னு எத்தனை தடவை வருத்தப்பட்டிருப்பேன் தெரியுமா? அதனால, நமக்கு நாலு பிள்ளைங்களாவது வேணும். என்ன சொல்றீங்க?” என்று கேட்டாள் தர்மபத்தினி.

குறட்டை பதிலாக வந்தது.

மறுநாள் காலை, பல் விளக்குகையில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான் விசு.

அப்பா தெரிந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *