(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பரமசிவத்துக்கு ஜாலி அண்ணாச்சி என்ற பெயர் பொருத்த மாகத்தான் இருந்தது. அடிக்கடி தமாஷ் பண்ணிக் கொண்டிருக் கும் சுபாவம் அவரிடம் அமைந்திருந்தது.
அது சிறு பிராயத்திலிருந்தே வளர்ந்து வந்த குணம். சிறு குறும்புகள் புரிந்து, தன்னோடு இருப்பவர்களை சிரிக்கச் செய்ய வேண்டும் எனும் ஆசையினால் தான் அவர் அநேக காரியங்களை செய்து வந்தார்.
பரமசிவத்தின் சில்லறை விளையாட்டுகள் பிறருக்குத் தொந்தரவும் வேதனையும் கொடுத்து விடுவதும் உண்டு. ஆனாலும் அதற்காக அவர் மனவருத்தம் கொள்வதுமில்லை; தனது போக்கை மாற்றிக்கொள்ள எண்ணியதுமில்லை.
பரமசிவம் சின்னப்பயலாக இருந்தபோது, சில பெரியவர்கள் காசு கொடுத்து மூக்குப்பொடி வாங்கி வரும்படி அவரை ஏவுவது வழக்கம். சில சமயம், பரமசிவம் மூக்குப் பொடியோடு மிளகாய்ப் பொடியையும் கலந்து கொண்டு வந்து கொடுத்து விடுவார். தனது செயலின் விளைவை பார்க்க வேண்டும் என்று அவர் காத்திருப்பதில்லை. அப்படி நின்றால் அவருடைய முதுகுத் தோல் பியந்து போகக்கூடிய விபத்து ஏற்பட்டாலும் ஏற்படலாமே!
வாலிப வயதில், பெரிய கூட்டங்களுக்குப் பரமசிவம் போவது உண்டு. பொழுது போக்கத்தான். போகிறபோது, தண்ணிர்ப் பாம்பைப் பிடித்து, பத்திரமாக மறைத்து எடுத்துக் கொண்டு போவார். கூட்டம் நடைபெறுகிற போது அந்தப் பாம்பை வெளியே விட்டுவிடுவார். அவரும் நண்பர்களும் “பாம்பு பாம்பு” என்று கூச்சல் கிளப்புவார்கள். அந்த இடத்தில் பயமும் குழப்பமும் தலை தூக்கி விடும். மற்றவர்களின் பரபரப்பையும் பீதியையும் கண்டு பரமசிவமும் நண்பர்களும் களிப்படைவார்கள். தெருக்களில் காணப்படும் தபால் பெட்டிகளில் அவர் விளையாட்டாக தண்ணிர்ப்பாம்பை போட்டிருக்கிறார். உரிய நேரத்தில் தபால்களை எடுத்துப்போக வருகிறவர் பெட்டிக்குள் கையை விடும் போது, பாம்பு என்ன செய்யும், அந்த ஆள் எப்படி அலறி அடிப்பார் என்று ரசமாக விரிவுரை செய்து மகிழந்து போவார் பரமசிவம்.
வீதியில் போகிறபோதே, “ஐயா, உம்மைத் தானே! யோவ்!” என்று பரமசிவம் உரக்கக் கூவுவார். முன்னே, தூரத்தில் வேகமாகப்போய்க் கொண்டிருப்பவர்கள் திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள். சிலர் நின்று கவனிப்பார்கள். பரமசிவம், தனக்கு எதுவுமே சம்பந்தம் இல்லாதது போல், சாதுவாகத் தன் வழியே நடப்பார்.
இவ்விதமான சிறு குறும்புகளை எல்லாம் பார்த்து ரசிக்கவும், வியந்து பாராட்டவும் அவருகில் யாரேனும் ஆட்கள் இருந்தால் தான் பரமசிவம் செய்வார். மற்றவர்கள் பாராட்டி விட்டால் அவருக்கு ஏகப்பட்ட குஷி, மேலும் விஷமங்கள் செய்வதில் உற்சாகம் காட்டுவார்.
ஒரு தடவை ஒரு வீட்டுக்கு தந்தி வந்தது. அவ்வீட்டின் தலைவர் எங்கோ போயிருந்தார். தந்தி என்றாலே வீண் கலவரமும் பீதியும் கொள்கிற இயல்பு மக்களிடம் இருக்கத் தானே செய்கிறது? தந்தி விஷயத்தைப் படித்து அறியத் தவித்தார்கள் அவ்வீட்டுப் பெண்கள். வழியோடு போன பரமசிவத்திடம் காட்டினார்கள். அவர் முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டு, “அம்மாவுக்கு ஆபத்து. உடனே புறப்பட்டு வரவும் என்று செய்தி வந்திருக்குது” என்றார். அவ்வளவுதான். அந்த வீட்டில் ஒப்பாரியும் ஒலமும் பொங்கி எழுந்தன. பரமசிவம் அங்கே ஏன் நிற்கிறார்? திரும்பிப் பாராமல் வேகநடை நடந்து வேறொரு தெருவில் புகுந்து மறைந்தார்.
வீட்டுத் தலைவர் வந்து, அழுகையையும் ஒப்பாரியையும் கண்டு, விஷயம் புரியாமல் திகைத்து, தந்தியைப்படித்து விட்டு, அட மடச்சாம்பிராணிகளா! அம்மா புறப்பட்டு வருகிறாள், ஸ்டேஷனுக்கு வந்து சந்திக்கவும்னு தந்தி வந்திருக்கு இதுக்குப் போயி, ஒ ராமான்னு அழுது புலம்புவானேன்?” என்று கண்டித்தார்.
“அந்தத் தடிமாடன் பின்னே அப்படிச் சொன்னானே?” என்றாள் ஒருத்தி. “அவன் பாடை குலைய! அவனுக்கு இங்கிலீசு தெரியாதோ என்னமோ” என்றாள் வேறொருத்தி. “தெரியாதுன்னு சொல்லாமல், இப்படி ஏன் புளுகணும்?”அவன் நாசமாப் போக” என்று பலவிதமாக ஏசிப்பேசினார்கள் பெண்கள்.
பரமசிவம் பத்தாவது படித்துப் பாஸ் பண்ணியவர்; அவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்பதை அவர்கள் எப்படி அறிவார்கள்? அவர்கள் இவ்வாறெல்லாம் ஏசித்துப்பு கிறார்கள் என்பது பரமசிவத்துக்கு தெரிய வழி உண்டோ? அதுவும் கிடையாது.
அப்படி மற்றவர்கள் ஏசுவது பற்றித் தெரிய வந்தாலும், அவர் கவலைப்படமாட்டார். “ஆயிரம் திட்டுக்கு ஒரு ஆனைப் பலம். பிறரது ஏச்சுகள் அதிகரிக்க அதிகரிக்க ஐயாப்பிள்ளைக் கும் பலம் அதிகமாகும்” என்று சொல்லிச் சிரிப்பார்.
“என்ன ஐயா, பலரையும் இப்படி ஏமாற்றுவது நியாயம் தானா? உமக்கே நல்லாயிருக்குதா இந்தச் சேட்டையெல்லாம்?” என்று யாராவது கேட்டால், பரமசிவம் இவ்வாறு பதில் சொல்வார் –
நானா அவர்களை ஏமாறுங்கன்னு கெஞ்சுகிறேன்? அவங்க தான் நாங்க ஏமாறத் தயாராக இருக்கிறோம், எங்களை ஏமாத்துங்கன்னு காத்திருக்காங்க. ரொம்பப் பேருக சுபாவம் இதுவாக இருக்கு. அவங்க அவங்களுடைய இயல்புப் படி ஏமாறுகிறாங்க. நான் என் சுபாவத்தின் படி காரியங்களை செய்கிறேன். அவ்வளவுதான்!”
பரமசிவத்துக்க அப்போது கல்யாணம் ஆகியிருக்கவில்லை. அந்தச்சமயம் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. ஆயினும், அவரும் அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்து, தமாஷாக “திருமண அழைப்பு இதழ்” ஒன்றை முறைப்படி தயாரித்து, அச்சிட்டு, சிநேகிதர் உறவினர், தெரிந்தவர் அனைவருக்கும் அனுப்பி வைத்தார்கள்.
அந்த அழைப்பில் குறிப்பிட்டிருந்த நாளில் தந்திகளும் வாழ்த்துக் கடிதங்களும் நிறைய வந்து சேர்ந்தன. சிலபேர் வெளியூர்களிலிருந்து புறப்பட்டு கல்யாணத்துக்கு வந்து விட்டார்கள். சிலர் பரிசுகள் வாங்கி வந்திருந்தனர். அவர்கள் உண்மையை அறிந்ததும் அடைந்த ஏமாற்றத்தைக் கண்டு வம்பர்கள் ஆனந்த ஆரவாரம் செய்தார்கள்.
எதுவும் கேலிக்கும் கிண்டலுக்கும் அப்பாற்பட்ட விஷய மல்ல; ஜாலி பண்ணி மகிழ்ச்சி அடைவதற்காக எவரையும் ஏமாற்றலாம் என்பது பரமசிவத்தின் வாழ்க்கைத் தத்துவமாக அமைந்திருந்தது.
“பரவசிவம் பிள்ளை காட்டிலே மழை பெய்யுது இப்போ! இதே நிலைமை என்றும் இருந்து விடாது. இப்ப அவர் சிரிக்கிறார். மற்றவர்களுக்கும் சிரிப்பதற்கு சமயம் வரத்தான் செய்யும்” என்று அவரை அறிந்தவர்கள் சொல்வத உண்டு.
அவ்விதமான ஒரு சந்தர்ப்பமும் வரத்தான் செய்தது.
பரமசிவம் திருமணம் விஷயத்தில் நிகழ்த்திய கேலிக்கூத்து முடிந்த சிலவருடங்களுக்கப் பிறகு, அவர் நிஜமாகவே கல்யாணம் செய்து கொண்டார். சாந்தா எனப் பெயருடைய மங்கை நல்லாள் அவருடைய மனைவியாக வந்து சேர்ந்தாள். அவள் எடுத்ததுக்கெல்லாம் எரிந்து விழுகிற குணம் பெற்றிருந் தாள். ஓயாது தொண தொணப்பதும், அடிக்கடி அழுது புலம்புவதும் அவளது சிறப்புப் பண்புகளாக அமைந்திருந்தன. பரமசிவத்தின் சிரிப்பு வெடிகளும் பரிகாச குண்டுகளும் அந்த அம்மணியிடம் எடுபடவில்லை.
ஒரு நாள் பரமசிவம் வீட்டில் இல்லாத போது இளம் பெண் ஒருத்தி வந்தாள். நாகரீகத்தில் முற்றியவளாகத் தோன்றினாள். அவர் இல்லையா, எங்கே போயிருக்கிறார், எப்போ வருவார் என்று தூண்டித் துருவிக் கேட்டாள். அவ்வீட்டில் தாராளமாகப் பழகியவள் போல் அங்கும் இங்கும் திரிந்தாள். அதையும் இதையும் எடுத்துப் பார்த்துப் பொழுது போக்கினாள், “சே, இன்னும் வரக்காணோமே?” என்று அலுத்துக் கொண்டாள்.
”நீங்க யாரு?” என்று சாந்தா விசாரிக்கவும், அவரை எனக்கு ரொம்ப நாளாத் தெரியும். என் பேரு சுந்தரம். இதே ஊரு தான்” என்று அறிவித்தாள் அந்தச் சிங்காரி.
அவளது நடை, உடை, பாவனைகளும், பேச்சும் செயல் களும் சாந்தாவுக்கு எரிச்சல் ஊட்டின; சந்தேகம் அளித்தன. அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனாலும், புதிதாக வந்தவளிடம் ஏசிப்பேசவும் எரிந்து விழவும் அவளுக்கு மனம் வரவில்லை. அவர் வரட்டும் என்று கருவிக் கொண்டிருந்தாள்.
பரமசிவம் வெகுநேரம் ஆகியும் வரவில்லை. மேனாமினுக்கி சுந்தரம், “எனக்கு வேறு வேலை இருக்கு. அவசரமாக ஒரு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு. அவர் வந்ததும், சுந்தரம் வந்து ரொம்ப நேரம் காத்திருந்தாள்னு சொல்லு. நான் வாரேன்” என்று கூறிவிட்டு, ஸ்டைல் நடை நடந்து போனாள்.
”பீடை, பாடை, தரித்திரம்! எவ்வளவு திமிரு ரொம்ப காலத்து சிநேகமாம்! வீட்டுக்கு வந்து, உரிமையா நடந்து, என்னிடம் பெருமை கொழித்து விட்டுப் போறாளே? இப்படி ஒருத்தி சிநேகிதின்னு இருக்கிற போது இவரு ஏன் என்னை கல்யாணம் செய்து கொள்ளணுமாம்?” என்று குமுறிக் கொதித்தாள் சாந்தா.
பரமசிவம் வீட்டில் அடி எடுத்து வைத்த உடனேயே சாந்தா சீறிப் பாய்ந்தாள். “உங்க அருமை ஆசை நாயகி வீடு தேடியே வந்து விட்டாளே? அவளை வரவேற்க நீங்க வீட்டோடு இருந்திருக்க வேண்டாமோ? அவள் ரொம்ப நேரம் காத்திருந்தாளே. பாவம், ஏமாற்றத்தோடு போனாள். அவள் குலுக்கும் மினுக்கும் தளுக்கும் – ஐயே, சகிக்கலே, எவளோ நாடகக்காரி போலிருக்கு. சுந்தரமாம் சுந்தரம் – துடைப்பக் கட்டை அந்தச் சனியனோடு கொஞ்சிக் கிட்டு இருக்க வேண்டியது தானே? என்னை ஏன் கல்யாணம் பண்ணி, குடித்தனம் நடத்தத் துணியனும்?.
அவள் லேசில் அடங்குவதாக இல்லை.
பரமசிவம் விழித்தார். மெதுவாக விஷயத்தை கிரகித்துக் கொண்ட போதிலும், யார் வந்திருக்கக் கூடும் என்று புரிந்து கொள்ள இயலவில்லை அவரால்.
“எனக்கு அப்படி யாரையும் தெரியாதே. ஏமாத்துக்காரி எவளாவது நைசாக வந்து நாகடமாடி, திருடிக்கிட்டுப் போக வந்திருப்பாள்” என்று அவர் விளக்க முனைந்தார்.
சாந்தா அழுது கொண்டே சீறினாள்.
“என்னை ஏமாத்த வேண்டாம். அவ தான் சொன்னாளே, ரொம்ப நாள் சிநேகம்னு. அந்த மூதேவி கூடவே நீங்க ஜாலியாக இருங்க. நான் எங்க அம்மா வீட்டுக்குப் போறேன்” என்று முணுமுணுத்தபடி, அவள் சீலை துணிமணிகளை எடுத்து பெட்டியில் வைக்கலானாள்.
“இதேதடா பெரிய இழவாப் பேச்சு!” என்று புலம்பிய படி பரமசிவம் திண்ணையில் அமர்ந்தார். “எனக்கு எவளும் சிநேகமும் இல்லை, மண்ணுமில்லை. எவள் இப்படி துணிந்து வந்து ரகளை பண்ணியிருப்பாள்?” என்று யோசித்து மூளை யைக் குழப்பிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் சென்றிருக்கும். அவருடைய நண்பர்கள் பட்டாளம் அவரை தேடி வந்தது. “என்னய்யா இது அதிசயமாயிருக்குதே! ஜாலி அண்ணாச்சி உம்மணா மூஞ்சியா உட்கார்ந்திருக்காகளே? என்ன விசயம்?” என்று நீட்டி முழக்கினார்கள்.
“போங்கய்யா! மனுசன் படுற வேதனையை புரிந்து கொள்ள முடியாமல் இதென்ன கேலியும் கூச்சலும்?” என்று சிடுசிடுத்தார் அவர்.
“என்ன அண்ணாச்சி திடீர்னு புதுப்பாடம்?” என்று கிண்டல் பண்ணினார் ஒருவர்.
”சுந்தரம் செய்த வேலை சரியான அதிர்ச்சி மருந்தாக அமைஞ்சிருக்குன்னு தெரியுது” என்று இன்னொருவர் சொன்னார்.
பரமசிவம் திடுக்கிட்டார் “சுந்தரமா? அப்படி ஒருத்தி எனக்குத் தெரியாமல் என் வீட்டுக்கு வந்து.” என்று உணர்ச்சி வேகத்தோடு பேசத் தொடங்கி, தொடர முடியாது திணறினார்.
“உங்க பிரண்டு உங்க வீட்டுக்கு வருகிற உரிமை திடீர்னு இல்லாமல் போய் விடுமா? நீ என்னை தேடிஎன் வீட்டுக்கு வரக் கூடாதுன்னு நீங்க உங்க பிரண்டை எச்சரித்து வைத்தீங்களா? என்று நண்பர் கேட்டார்.
நிலைமை மிகவும் விபரீதமாக முற்றுகிறதே என்று குழம்பிய பரமசிவம் தலையைச் சொறிந்தார். அவர் மனைவி. பத்திரகாளி போல் முன்னே பாய்ந்தாள்.
“இப்ப ஏன் வாயடைச்சுப் போச்சு? வாயிலே ஈர மண்ணையா திணிச்சு வச்சிருக்கு? என்கிட்டே மட்டும் வாயடி அடிச்சீகளே” என்று வெடித்தாள்.
“சத்தியமாக எனக்கு சுந்தரம் என்று யாரையும் தெரியாது” என்று அவர் அழமாட்டாக் குறையாக முணுமுணுத்தார்.
“கள்ளச்சத்தியம் பண்ணாதீங்க அண்ணாச்சி” என்று ஒரு நண்பர் முன் வந்தார். “என்னை உங்களுக்குத் தெரியாது? நான் சுந்தரம் இல்லையா?” என்றார்.
“சுந்தரம் என்கிற பெண் எவளையுமே எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். இதிலே ஏதோ சூது இருக்குது.”
“இன்னும் தமாஷ் பண்ணி நெருக்கடியை வளர்க்க வேண் டாம். உண்மையை சொல்லிப் போடுவோம்” என்று ஒருவர் தீர்மானம் கொண்டு வந்தார். மற்றவர்கள் அதை அங்கீகரித் தார்கள். விஷயத்தை அம்பலப்படுத்தினார்கள்.
பரமசிவம் எல்லோரையும் கிண்டல் செய்து ஜாலி பண்ணிய படி இருக்கிறாரே, அவரையே ஒருசமயம் நாம் “கோட்டா பண்ணினால்” என்ன என்று அவர்கள் நினைத்தார்களாம். அதனால், நண்பர் சுந்தரம் பெண் வேஷம் போட்டுக் கொண்டு பரமசிவத்தின் வீட்டுக்கு வந்து விளையாட்டு காட்டினார். அவர் அமெச்சூர் நாடகங்களில் பெண் வேடம் தாங்கிச் சிறப்பாக நடிக்கும் பழக்கம் உடையவர். திறமையாக நடந்து சாந்தாவை ஏமாற்றி விட்டார். அதன் பலனை பரமசிவம் அனுபவிக்க நேர்ந்தது.
இதைக் கேட்ட பரமசிவம் ”அடபாவிப் பயல்களா குடியை கெடுத்தீர்களே! இதெல்லாமா தமாசு?” என்று கோபித்துக் கொண்டார்.
“நீங்க உங்க மனம் போன போக்கிலே எல்லோரையும் கேலியும் கிண்டலும் பண்ணுறிகளே; மத்தவங்க உணர்ச்சிகளை மதிக்கவா செய்றிங்க? அவங்க எவ்வளவு வேதனைப்படு வாங்க, எப்படி பாதிக்கப்படுவாங்க என்பதை யோசிக்காமலே தானே நீங்க ரகளை செய்கிறீங்க? அதே பாடத்தை உங்க சிநேகிதர்கள் உங்களிடமே காட்டி விட்டாங்க” என்று சாந்தா சொன்னாள்.
நண்பர்கள் அட்டகாசமாய் சிரிததார்கள். பரமசிவமும் சேர்ந்து சிரித்தார்.
“சிரியுங்க, சிரியுங்க! ஒக்கச் சிரித்தால் வெக்கமில்லே என் பாங்க” என்று கூறிச் சிரித்தவாறே வீட்டுக்குள் போனாள் சாந்தா.
– தேவி 1980
– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.