சதிபதி கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 2,287 
 
 

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன சதிபதி கதை

மறுபடியும் விக்கிரமாதித்தர் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன ஒன்பதாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ஓர் ஊரில் ஒரு கணவனும் மனைவியும் இருந்தார்கள். அந்தச் சதிபதிகள் இருவரும் எங்கே போனாலும் சேர்ந்தே போவார்கள்; சேர்ந்தே வருவார்கள். அவ்வாறு போகுங் காலையில் கணவனாகப்பட்டவன் முன்னால் செல்வதும், மனைவியாகப்பட்டவள் அவனுக்குப் பின்னால் செல்வதும் அவர்களிடையே வழக்கமாக இருந்து வந்தது. இப்படியாகத்தானே இருந்து வந்த வழக்கம், ‘மாதர் முன்னேற்றச் சங்க’த்தில் சேர்ந்ததன் காரணமாக மனைவிக்குப் பிடிக்காமற்போக, ஒரு நாள் அவள் சற்றுத் தூரத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு பூனைகளைத் தன் கணவனுக்குச் சுட்டிக் காட்டி, ‘அதோ, அந்தப் பூனைகளைப் பார்த்தீர்களா?’ என்று கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்?’ என்று கணவன் கேட்பானாயினன்.

‘பெண் பூனை முன்னால் செல்ல, ஆண் பூனை அதற்குப் பின்னால் செல்லவில்லையா?’ என அவள் பின்னும் கேட்க, ‘ஓ, அதைச் சொல்கிறாயா?’ என அவன் மேலே நடப்பானாயினன்.

சிறிது தூரம் சென்றதும் சற்றுத் தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த இரண்டு நாய்களைச் சுட்டிக் காட்டி, ‘அதோ, அந்த நாய்களைப் பார்த்தீர்களா?’ என்று மனைவியாகப் பட்டவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்?’ என்று கணவனாகப்பட்டவன் கேட்பானாயினன்.

‘பெண் நாய் முன்னால் ஓட, ஆண் நாய் அதைத் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கவில்லையா?’ என அவள் பின்னும் கேட்க, ‘ஓ, அதைச் சொல்கிறாயா?’ என அவன் மேலே நடப்பானாயினன்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் சற்றுத் தூரத்தில் போய்க்கொண்டிருந்த இரண்டு ஆடுகளைச் சுட்டிக் காட்டி, ‘அதோ, அந்த ஆடுகளைப் பார்த்தீர்களா?’ என்று அவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்?’ என்று அவன் கேட்பானாயினன்.

‘கிடேரி முன்னால் போக, கடா அதைத் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கவில்லையா?’ என அவள் பின்னும் கேட்க, ‘ஓ, அதைச் சொல்கிறாயா?’ என அவன் மேலே நடப்பானாயினன்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும் சற்றுத் துரத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு மாடுகளைச் சுட்டிக் காட்டி, ‘அதோ, அந்த மாடுகளைப் பார்த்தீர்களா?’ என்று மனைவியாகப்பட்டவள் கேட்க, ‘பார்த்தேன், என்ன விசேஷம்?’ என்று கணவனாகப்பட்டவன் கேட்பானாயினன்.

‘பசு முன்னால் செல்ல, காளை அதைத் தொடர்ந்து சென்று கொண்டிருக்கவில்லையா?’ என அவள் பின்னும் கேட்க, பொறுமை இழந்த கணவனாகப்பட்டவன், ‘அதற்காக என்னை நீ என்ன செய்யச் சொல்கிறாய்?’ என அவள்மேல் எரிந்து விழுவானாயினன்.

‘ஈ, எறும்பு முதல் எண்ணாயிரம் ஜீவராசிகளும் எங்கே போனாலும் பெண் முன்னாலும், ஆண் அதற்குப் பின்னாலும் போய்க்கொண்டிருக்க, நாம் மட்டும் அதற்கு விரோதமாக ஏன் போக வேண்டுமாம்?’ என மனைவியாகப் பட்டவள் சிணுங்க, கணவனாகப்பட்டவன், ‘சரி, நீ வேண்டுமானால் முன்னால் போ; உனக்குப் பின்னால் நான் வந்து தொலைக்கிறேன்!’ என்று அவளை முன்னால் நடக்க விட்டுவிட்டு, அவளுக்குப் பின்னால் அவன் நடப்பானாயினன்.

அதுகாலை அவனுக்கு எதிர்த்தாற்போல் வந்த அவனுடைய முன்னாள் காதலி ஒருத்தி அவனைப் பார்த்து ‘இளி, இளி’ என்று இளிக்க, அவனும் அவளைப் பார்த்து ‘இளி, இளி’ என்று இளித்தபடி, அவளோடு கொஞ்சம் நெருங்கி நின்று ஏதோ பேசுவானாயினன்.

வெற்றிப் பெருமிதத்துடன் அவனுக்கு முன்னால் வீசி நடை போட்டுக் கொண்டிருந்த அவன் மனைவியாகப் பட்டவள் சிறிது தூரம் சென்றதும் தனக்குப் பின்னால் தன் கணவன் வராததைக் கண்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அவன் யாரோ ஒருத்தியுடன் இளித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரமுற்று, ‘இதற்குத் தான் இந்த ஆண்களை அந்த நாளிலேயே பெண்களுக்கு முன்னால் போகவிட்டார்கள் போலிருக்கிறது!’ என்று கருதிக் கொண்டே திரும்பி வர, அவளைக் கண்டதும், ‘அவள்தான் உங்கள் மனைவியா? அது தெரியாமல் போச்சே, எனக்கு! நான் வரேன்!’ என்று மாஜி காதலியாகப்பட்டவள் நழுவ, அதற்குள் ‘யார் அவள்?’ என்று கண் சிவக்கக் கேட்டுக் கொண்டே அவன் மனைவியாகப்பட்டவள் அங்கே வர, ‘அவளும் உன்னைப்போல் ஒரு பெண்தான்டி, நீ போ!’ என்று கணவனாகப்பட்டவன் சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டு நடக்க, ‘அதெல்லாம் முடியாது! என்னதான் இருந்தாலும் மனுஷனுக்கு இருக்கிற புத்தி வேறே, மிருகத்துக்கு இருக்கிற புத்தி வேறே என்கிறதுதான் இப்போது எனக்கு ரொம்ப நல்லாத் தெரிந்து போச்சே! நீங்கள் முன்னால் போங்கள், நான் பின்னால் வந்து தொலைகிறேன்!’ என்று ‘மாதர் சங்க’த்தை மறந்து, ‘முன்னேற்ற’த்தையும் மறந்து, பழையபடி அவனை முன்னால் நடக்க விட்டுவிட்டு, அவள் அவனுக்குப் பின்னால் நடப்பாளாயினள்.’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘யாரை யார் நம்ப வேண்டும்?’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘கணவனை மனைவி நம்ப வேண்டும்; மனைவியைக் கணவனும் நம்ப வேண்டும். இருவரும் ஒருவரை யொருவர் நம்பாமல் வாழ்வதும் ஒன்றுதான்; வாழாமல் இருப்பதும் ஒன்றுதான்!’ என்று விக்கிரமாதித்தர் ‘விளக்கெண்ணெய் முறை’யைக் கைவிட்டு ‘வெட்டு ஒன்று, துண்டு இரண்டு’ என்று சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட்டது என்றவாறு… என்றவாறு… என்றவாறு……

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email
விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *