கல்கத்தாவில் மிஸ்டர் வேதாந்தம்

 

(அமரர் தேவனின் மிஸ்டர் வேதாந்தம் நாவலிலிருந்து ஒரு பகுதி)

சென்னைப்பட்டணத்தைப் பெரிய நகரம் என்று எண்ணினவன் வேதாந்தம். கல்கத்தாவைக் கண்டதும் ‘அம்மாடி!’ என்று பிரமித்தான்.

தூத்துக்குடியில் அவன் வீடுதான் மிகப் பெரிய கல் கட்டடம், சென்னையில் அது மிகச் சிறிதாக அவனுக்குத் தோன்றியது. இங்கே, கல்கத்தாவில், சென்னையில் பெரிதாகவுள்ள ஆபீஸ்களைப் போன்ற கட்டடங்கள் சர்வசாதாரணமாகப் புலப்பட்டன. ஆறு மாடி வீடுகள் சகஜமாகக் காணப்பட்டன. அகன்ற ரஸ்தாக்கள், அழகான டிராம்கள், டிராம்களில் இரு வகுப்புகள், இரண்டு மாடி பஸ்கள்; இடம் இருக்கும் வரையில் எத்தனை பேர் வேண்டுமானாலும் ஏறலாம். மோட்டாரில் போகும் போதே இங்குமங்கும் பார்த்துக்கொண்டு சென்றான்.

இது எந்தத் தேவதையின் வேலை? எந்தச் சக்தி அவனைப் பிடித்து அலக்காகத் தூக்கி சென்னைக்கும் சென்னையிலிருந்து கல்கத்தாவுக்கும் இழுக்கிறது? அதிக அன்பு காட்டும் சிங்கம் நல்லவர்தானா? அவரைவிட மேதாவியும் அக்கறை கொண்டவருமான சுவாமி இப்போது எங்கே இருக்கிறார்? இப்படி கல்கத்தாவுக்கு வந்ததை அவர் அறிந்தால், ஒப்புக் கொள்வாரா? அவருடைய யோசனையைக் கேட்க முடியாதபடி ஜோலிகள், அவரை ஊரைவிட்டே அனுப்பி விட்டனவே! ஏன், அவர் சென்னையில் இருந்தால் வெங்கட் அண்ட் ராமிடம் பறி கொடுத்திருப்பானா பணத்தை? சர்மா எப்பேர்ப்பட்டவர்? சென்னையில் பிளேன் ஏறியது முதல் இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே! அநாவசியமாகப் பேசாத குணமா? அல்லது மரியாதையா? அவர்கூடத்தானே வைத்துக்கொள்ளப் போகிறார்? நன்றாகக் கவனிக்கலாம். என்ன கோபக்காரராயிருந்தாலும் அடங்கி ஒடுங்கிக் காலத்தைத் தள்ள வேண்டும்-சிங்கத்திடமிருந்து அழைப்பு வரும் வரையில்!

அவர்கள் மோட்டார் ஒரு கட்டடத்தின் முன் நின்றது. சர்மா இறங்கி, ”இறங்கும், வேதாந்தம்! இதுதான் வீடு!” என்றார் கண்டிப்பாக.

மோட்டார் டிரைவர் ஸ்தானத்தை விட்டு எழுந்திருக்கவில்லை. சர்மாவும் மூட்டைகளைக் கவனிக்கவில்லை. ஆகவே, வேதாந்தமே இரு கைகளிலும் இரு பெட்டிகளையும் எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்தான். ஒரு பெரிய வீட்டின் முன் ஹாலைத் தாண்டி, மாடிப் படியை அடைந்து, மேலே ஏறத் தொடங்கினார்கள். சுமக்கமாட்டாமல் சுமந்துகொண்டு வேதாந்தம் படிகளின்மீது திணறிக்கொண்டு ஏறியபோது, சர்மா ‘லெட்’ ‘லொட்’ என்று ஒவ்வொரு படிக்கும் ஒவ்வொரு முறை கழியால் தட்டிக்கொண்டு ஏறினார்.

மாடியில் ஒரு கனமான அம்மாள் நின்றாள். சர்மாவைக் கண்டதும் முகத்தில் ஒரு புன்னகைகூடக் காண்பிக்காமல், ”சுந்தரேசனைப் பார்த்தீர்களோ?” என்று கேட்டாள்.

”இல்லையே? அவன் எங்கே?”

” ‘ஏரோட்ரோமுக்குப் போனாலும் போவேன்’ என்று சொன்னான்.”

”அவன் எதற்காக வருகிறது? எனக்கு வழி தெரியாதா?”

”அதென்னமோ! சொல்லிக் கொண்டிருந்தான்…”

சர்மா பல்லைக் கடித்தார். ”முட்டாள்…முட்டாள்…அநாவசியம்! நான் வந்துகொள்கிறேன். கடுதாசி போட்டிருந்தேனே, ஒரு பையனையும் அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று. அப்புறம் இவன் என்ன வருகிறது?”

”ஏதோ சொன்னதாக ஞாபகம். நிச்சயமாகச் சொல்லவில்லை!”

”அதை எதற்காக என்னிடம் இப்போது சொல்கிறாய்?”

”தெரியாமல் சொல்லிவிட்டேன், போங்கள்.”

கதவிடுக்கின் வழியாக ஓர் இளம்பெண் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த வீட்டு மாட்டுப் பெண்ணாக இருக்க வேண்டுமென்று சரியானபடி ஊகம் செய்தான் வேதாந்தம். ஒரு கட்டிலின்மீது சில புத்தகங்களை விரித்துப் போட்டுக்கொண்டு ஒரு சின்னப்பயல் உட்கார்ந்து படிப்பதாக பாவை செய்து கொண்டிருந்தான். பெரியவர் வந்ததும், படிப்பை நிறுத்தி அவரைப் பார்க்கவும், ”ஏண்டா! நான் வந்தால் நின்றுவிட வேண்டுமா? ஊம்! செம்மையாக உதைக்க வேண்டும் உன்னை!” என்று சர்மா ஆசீர்வதித்தார். அந்தப் பயல் சடாரென்று விட்ட இடத்தில் படிக்கத் தொடங்கிவிட்டான்.

வேதாந்தம் கை நோகப் பெட்டிகளுடன் நிற்பதை இப்போதுதான் சர்மா கவனித்தார். உதட்டை இறுக்கி, விறைத்து, ”ஏன் ஐயா, அறையில் கொண்டுபோய் வையுமேன்! நின்றுகொண்டேயிருந்தால், உமக்கு யார் சொல்வார்கள்?” என்று அதட்டினார்.

”அறை எது என்று?…”

”ஆ…மா…ம்! உமக்கு அது காண்பிக்க வேண்டுமோ? வாரும் இப்படி!’

மாடி பூராவையும் அந்தக் குடும்பந்தான் வைத்திருந்தது. சர்மாவுக்கு ஒரு விசாலமான அறை; சர்மா மகனுக்கு ஓர் அறை; ஸ்திரீகளுக்கு ஓர் அறை; நாலுபேர் உட்கார்ந்து பேச ஒரு பெரிய ஹால்; சாமான் அறை; சமையல் அறை; சாப்பிடும் அறை; ஸ்நான அறைகள் என்று பாகுபாடுகள் இருந்தன. இத்தனை பெரிய நகரத்தில் இம்மாதிரி ஒரு வீட்டுக்கு ஒரு பெருந்தனத்தையே வாடகையாகக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று வேதாந்தம் ஊகித்தான்.

வேதாந்தம் யோசனை செய்து கொண்டே சாமான்களை உள்ளே வைத்துவிட்டு நின்றான்.

”போமேன், ஐயா! சும்மா நின்றால்! உமது காரியத்தைப் பாருமேன்!” எனத் திடீர் என்று சர்மா அதட்டியதும் வேதாந்தத்துக்குத் தூக்கி வாரிப்போட்டது.

”எனக்கு எந்த இடம்?” என்று மெல்லக் கேட்டான்.

”ஓ! அதை உமக்குச் சொல்லவில்லையோ? கீழே வாரும்… காண்பிக்கிறேன்! எடுத்துக்கொள்ளும் உமது பெட்டியை!” என்று கூறி, வேதாந்தத்தை அழைத்து வந்தார்.

கீழே ஓர் அறையில் மூன்று கட்டில்கள் போட்டிருந்தன. இரு கட்டில்கள்மீது படுக்கைகள் விரித்து இருவர் படுத்திருந்தார்கள். அடியில் அவர்களுடைய பெட்டிகள் இருந்தன.

மூன்றாவது கட்டிலைச் சர்மா வேதாந்தத்திற்குக் காட்டினார். ”அதுதான் உம்முடைய இடம். உம்முடைய பெட்டிகளை அடியில் வைத்துக்கொள்ளலாம். ஸ்நான பானங்களுக்கு எல்லாம் கீழேயே இடம் இருக்கிறது. நான் கூப்பிடுகிறபோது நீர் மேலே வந்தால் போதும். அரைமணி கழித்து வந்து காபி சாப்பிட்டுவிட்டுப் போம்!”

சர்மா போய் விட்டார். வேதாந்தம் கட்டிலில் உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான். அதைத் தொடர்ந்து அவன் கட்டிலுக்கு எதிர்க் கட்டிலில் படுத்திருந்த இளைஞன் சடக்கென்று தன் கையிலிருந்த புத்தகத்தைப் போட்டுவிட்டு எழுந்தான். ”நீங்கள்தான் சர்மாவிடம் வேலைக்கு வந்திருப்பவரா?” என்று கேட்டான்.

”ஆமாம்.”

”இப்படிக் கையைக் கொடுங்கள். குலுக்குகிறேன். மற்றும் ஒரு முறை நாம் சந்திக்க அவகாசம் இல்லாமலே போய் விடலாம். அதனால் பார்த்தவுடனே நம்மை அறிமுகம் செய்து கொண்டு விடலாம்!” என்றான் அவன்.

அடுத்த படுக்கைக்காரன் இதற்குக் ‘களுக்’கென்று சிரித்துவிட்டுப் புரண்டு படுத்தான்.

வேதாந்தம் அவர்களுடன் பேச ஆரம்பிக்கு முன், மாடியிலிருந்து சர்மா இரைச்சலாக அவனை அழைத்துக் கொண்டிருந்தார். ”என்ன ஐயா வேதாந்தம்! அரை மணிக்குள் வரச் சொன்னேனே!”

”ஓடும், ஓடும்! வந்த மறு நிமிஷமே வேலை தீர்ந்துவிடப் போகிறது! ஓடும்!” என்றான் இளைஞன்.

படுக்கைக்காரன் மறுபடி சிரித்து, மீண்டும் புரண்டு படுத்தான். வேதாந்தம் மாடியை நோக்கி விரைந்தான். 

தொடர்புடைய சிறுகதைகள்
காதல் போயின்…
மல்லா ராவ் மூக்குப் பொடியை உறிஞ்சும் சப்தம் கேட்டவுடனேயே, ரசமான ஒரு விஷயமும் செவிக்கு எட்டும் என்று விரைவில் ஊகித்துக் கொண்டேன். அதைத் தொடர்ந்து அவர் பின் கையைக் கட்டிக் கொண்டு உலாவவே, பேர்வழி பலமாக எதற்கோ அஸ்திவாரம் போடுகிறார் என்று ...
மேலும் கதையை படிக்க...
அலமுவின் சுயசரிதை
[ஸ்ரீமதி அலமு தன் சுய சரிதையை எழுதியிருக்கிறாள். அவளுக்கு எழுதுவதற்கான அவகாசம் அதிகமாய்க் கிடையாதாகையால், இந்தச் சரித்திரத்தின் நடை ஒரு மாதிரியாயிருந்தாலும் நீங்கள் மன்னித்துக் கொள்ளவும். அவளுடைய வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களைப்பற்றிய குறிப்புகள் அவ்வப்போது அவள் வைத்திருந்தபோதிலும், அவைகளை அவள் லக்ஷ்யம் ...
மேலும் கதையை படிக்க...
(சின்ன ராஜாமணி சொன்னபடி) லீவ் நாள் வரப்போறதுன்னு நினைச்சுண்டாலே எனக்குச் சந்தோஷம் தாங்கல்லே. நடுக் கிளாஸ்லே 'டட்டட் டோய்!'ன்னு கத்துவோமான்னு தோண்றது. ஆனால், நான் அப்படிக் கத்தல்லை. ஏன்னா, வாத்தியார் ஏதாவது நினைத்துக்கொள்வார். அவர், ''என்னடாலே! என்ன ஆனந்தம் தாங்கல்லே! வீட்டுக் கணக்கைப் ...
மேலும் கதையை படிக்க...
என்னுடைய நண்பர் ஒருவர் பத்திரிகாசிரியராக இருக்கிறார். அவருக்கு வந்த கடிதம் ஒன்றை நான் பார்க்க நேர்ந்தது. முன் பின் பார்த்திராத யாரோ ஒருவர் விகடத் துணுக்கு ஒன்றை அனுப்பி, "தயவு செய்து இதைப் பிரசுரிக்க வேணும்; அதற்காக என் ஆயுள் பூராவும் ...
மேலும் கதையை படிக்க...
மிஸ்டர் ராஜாமணி
என் மருமான் சின்ன ராஜாமணியைப்பற்றி என் ஆபீஸ் துரையவர்கள் கேள்விப்பட்டு அவனைத்தாம் பார்க்க வேண்டுமென்று சொல்லியிருந்தார். இந்தச் செய்தியை நான் குழந்தையிடம் தெரிவித்தேன். அவனும் வெள்ளைக்காரர் எவரையும் பார்த்ததில்லை யாகையால் மிகவும் ஆவலுடன் தன்னுடைய நிஜாரையும், சொக்காயையும் மாட்டிக்கொண்டு தயாராய் நின்றான். குழந்தையுடன் ...
மேலும் கதையை படிக்க...
நாகப்பனுடைய தொழில் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளக் கூடியதுமல்ல; நாலு பேர் அறியச் செய்யக் கூடியதுமல்ல, அவன் செய்தது திருட்டுத் தொழில். அவனுடைய ஆயுளில் எத்தனையோ பொருள்களை எவ்வளவோ சிரமப்பட்டுக் களவாடியிருக்கிறான்; ஆனால் அவனுடைய மனைவியின் இதயத்தைக் கொள்ளை கொள்வது மட்டும் அவனுக்கு அசாத்தியமாகவே ...
மேலும் கதையை படிக்க...
அட நாராயணா!
காலையில் நான் பேப்பர் படிக்க உட்காருவதும், "ஸார்!" என்று கூப்பிட்டுக் கொண்டு அடுத்த வீட்டு நாராயணசாமி ஐயர் வருவதும் சரியாக இருக்கும். ஆசாமி வந்து விட்டால் நான் பேப்பர் படித்தாப் போலத்தான்! அவர் கையில் அதைக் கொடுத்து விட்டுச் 'சிவனே' என்று ...
மேலும் கதையை படிக்க...
என் அன்பார்ந்த விச்சு, உன் அருமையான கடிதம் கிடைத்தது. 'அருமை' என்ற பதத்தை நான் ரொம்ப ரொம்ப யோசனை செய்து உபயோகிக்கிறேன். குழந்தாய்! 'என் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி' நீ அந்தக் கடிதத்தில் ஐந்து தடவைகள் திரும்பத் திரும்ப 'அருமை'யாக எழுதியிருப்பது ...
மேலும் கதையை படிக்க...
ஸரஸ்வதி காலெண்டர்
போஸ்டாபீஸ் பத்மநாபையரை ஊரில் தெரியாதவர் கிடையாது. அவர் வேலை பார்ப்பதுதான் போஸ்டாபீஸ் என்றாலோ, அவர் சட்டை வேஷ்டிகளிலும் பல ஆபீஸ்களைத் திறந்து வைத்திருந்தார். சம்சாரி என்பதற்கு இல்லை; ஒரு பெண்டாட்டியும் இரண்டு குழந்தைகளுந்தான். ஆனாலும் அநாவசியமான செலவுகள் ஒன்றுமே செய்ய மாட்டார். ...
மேலும் கதையை படிக்க...
(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தினசரிப் பத்திரிகைகளில் சில தினங்களாக ஓர் ஆச்சரியமான விஷயம் "அடிபட்டுக்கொண்டிருக்கிறது. தேச சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள், மனிதவர்க்கத்தின் பண்டைய வாழ்வைச் சோதனை செய்பவர்கள், கற்பனை மன்னர்கள் ஆகியவர்களின் மூளையை மிகவும் ...
மேலும் கதையை படிக்க...
காதல் போயின்…
அலமுவின் சுயசரிதை
சில விளையாட்டுக்கள்
எனது மனமார்ந்த நன்றி
மிஸ்டர் ராஜாமணி
நாகப்பன்
அட நாராயணா!
விச்சுவுக்குக் கடிதங்கள்
ஸரஸ்வதி காலெண்டர்
மதுரஸா தேவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)