கரிக்கார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 9, 2021
பார்வையிட்டோர்: 2,400 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கரியால் வாழ்ந்து, ஜனங்களை ஏற்றிக்கொண்டு, நான்கு சக்கரங்களுடன் செல்லும் ஓர் உருவம் கரிக்கார் என்பது உலகறிந்த விஷயம். இந்தக் கார்கள் அதிக மாக உற்பத்தியானதற்குக் காரணம் ஹிட்லர்தான் என் றால் பொய்யாகாது.

“என்ன ஐயா, ஹிட்லர் கரிக்கார் உற்பத்தி செய் யும் தொழிற்சாலை வைத்து, அதில் இவைகளை உற்பத்தி செய்தாரா?” என்று யாரும் என்னிடம் கேட்கமாட்டார் கள் என்பது நிச்சயம். ஏனென்றால், கரிக் கார்கள் எதனால் பெருகின? யுத்தம் வந்ததனால். யுத்தம் எதனால் வந்தது? ஹிட்லரால் தானே? இதன் விளைவால் அழகிய கார்களும் கூட, பின்னால் கரி எரியும் குழாயுடனும், தலையில் கரி மூட்டைகளுடனும் காட்சி அளிக்க ஆரம்பித்தன.

கார்கள் நமது நாட்டிற்கு வந்த புதிதில் அவற்றை ஓட்டும் டிரைவர்களுக்கு அதிக மரியாதை இருந்ததாம். கமர்ஷியல் டாக்ஸ் ஆபீஸருக்குக்கூட யுத்தகாலத்தில் கடைக்காரர்கள் அவ்வளவு மதிப்புக் கொடுக்கமாட்டார் களாம். பல வீடுகளில், கார்களுக்குச் சொந்தக்காரர்கள் கூடப் பின்புதான் சாப்பிடுவார்களாம். ஆனால் டிரைவர் களுக்குத்தான் முதல் பந்தியாம்! பழைய காற்றைத் திறந்துவிட்டுப் புதுக்காற்று அடைக்கவேண்டும் என்று கூறி, முதலாளிகளிடம், சில டிரைவர்கள் பணம் பெற்ற தாகக்கூடக் கேள்வி!

ஆனால், கரிக்காரால், அந்த டிரைவர்களும், கண் டக்டர்களும் படும்பாட்டைப் பார்த்தால், உண்மையி லேயே வருந்தாமல் இருக்க முடியவில்லை. அவர்கள், கரியைக் குழாயில் போடுவதையும், தீப்பற்ற வைப்பதை யும், விளையாட்டுப் பொம்மைகளுக்குச் சாவி கொடுப்பது போல் பின்னால் இருக்கும் கைப்பிடியைச் சுற்றுவதையும் கண்டால், கண்ணீர் வருகிறது.

ஆனால், இந்தக் கார்கள் அவர்களுடைய பிராணனை வாங்குவதோடு நிற்கவில்லை. பிரயாணிகள் பிராணனையும் சேர்த்து வாங்குகின்றன.

பிரயாணம் செய்யும்போது, கணப்புச் சட்டிக்குப் பக்கத்தில் இருப்பதுபோல இருக்கிறது. மழைக்காலத்திலாவது பரவாயில்லை. ஆனால் வெய்யில் காலத்திலோ, உஷ்ணம் தாங்காது.

முன்பிருந்த பெட்ரோல் வண்டிகளில் சில புறப்பட மாட்டா; புறப்பட்டால் நிற்கமாட்டா! ஆனால், இந்தக் கரிக்கார்களோ, நிற்க வேண்டிய இடங்களில் மட்டுமல்ல; எந்த இடத்திலும், எந்தச் சமயத்திலும் நின்று விடுகின்றன. “வேலை நிறுத்தம் செய்பவர்கள் முன்ன தாகவே அறிவிக்க வேண்டும். இல்லையேல் பாதுகாப்புச் சட்டப்படி தண்டனைக்குள்ளாவார்கள்” என்ற சட்டத்தை இந்தக் கார்கள், பிரயாணிகள் பேசும்போதுகூடக் கேட்டதில்லை போலும்!

மேடுகளைக் கண்டால், மூச்சுத் திணற ஆரம்பித்து விடும். அப்பொழுதெல்லாம் பிரயாணிகளுக்கு அஸ்தியிலே ஜுரம்தான். எங்கேயாகிலும் இறங்கித் தள்ள வேண்டிய நிர்ப்பந்தம் வந்துவிடுமோ என்ற பயம். வேகத்திலோ கேட்க வேண்டியதில்லை. எதிரே வரும் ஆட்கள், வண்டிகள் – ஏன்?- கார்களைக்கூட ‘ஸைடு’ வாங்கிவிடுகின்றன என்றால் பாருங்களேன்! மண் குதிரையை நம்பி ஆற்றிலே போகிறவனையும் கரிக்காரை நம்பி அவசர வேலையாகப் போகிறவனையும் ஒரே ரகத்தில் சேர்க்கலாம்.

சென்னை மாநகரத்திலே, கரிக்காரால் கஷ்டப்பட்டவர் அநேகர் . அநேகமாக, எல்லோரும் இந்தக் கரிக்கார் தள்ளும் வைபவத்திலே கலந்துகொண்டிருப்பார்கள். எல்லோருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருப்பினும், எனது அனுபவத்தைக் கேட்க வேண்டாமா?

ஒரு நாள், கரிக்காரில் மைலாப்பூர் போவது என்று தீர்மானித்தேன். அங்கு ஒரு நண்பர் வீட்டில் விருந்து என்றால் அவசர வேலைதானே! ஆனால், வெகு நேரம் நான் நின்றும், காரில் இடம் கிடைக்கவில்லை. கூட்டம் அதிகம். அதில் முண்டியடித்து ஏற முடியவில்லை. சில பயில்வான்கள் மட்டும், எல்லோருக்கும் முன்னால் ஏறி விட்டனர். உடலில் பலம் இல்லாததால் அகிம்சையே நல்லது’ என்று சொல்லிக்கொள்ளும், என்னைப்போன்ற சில தீவிர அகிம்சா வசதிகள், இடம் கிடைக்காது தவித்து நின்றோம்.

இந்த அவசரத்தில் ஒருவர் காரில் ஏறுவதற்கு முன்னால், அவரது பூட்ஸ் காலை எனது கால்மேல் ஏற்றி விட்டார். வலி பொறுக்க முடியவில்லை. ”சார் கால், கால்,” என்று கத்தினேன். உடனே அவர் காலை எடுத் துக் கொண்டு, “சாரி, சாரி (sorry)” என்றார். நானும், ‘பரவாயில்லை, பரவாயில்லை’ என்று சொல்லிக்கொண்டே, காலைத் தடவிக்கொண்டு, அந்தக் காரில் ஏறும் முயற்சியை விட்டுவிட்டு, கண்ணீர் கலங்கும் கண்களால், மறு காரை எதிர்பார்த்துக்கொண்டு நின்றேன்.

எத்தனையோ கார்கள் வந்தன; சென்றன. ஆனால் நான் மட்டும், நின்ற இடத்திலேயே நின்று கொண் டிருந்தேன். வெகுநேரத்துக்கு அப்புறம், ஒரு கார் வந்தது. பிரம்மப் பிரயத்தனப்பட்டு அதில் ஏறிவிட்டேன்! நிற்கத்தான் இடம் கிடைத்தது.

அந்தக் காரில் இருந்த கண்டக்டர், ஹாஸ்யமாகப் பேசும் சுபாவம் உடையவர் போலக் காணப்பட்டார். ஒவ் வொருவரிடமும், அவர் வேடிக்கையாகவே பேசிக் கொண்டு வந்தார்.

ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் பக்கத்தில் இறங்கு பவர், ”ராயப்பேட்டை ஆஸ்பத்திரி” என்றும், போலீஸ் ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இறங்குபவர் , “போலீஸ் ஸ்டேஷன்” என்றும் கூறி டிக்கெட்டுக்குப் பணம் கொடுத்தனர். உடனே, அந்தக் கண்டக்டர், டிக்கெட் டைக் கொடுத்துவிட்டு, ஆஸ்பத்திரிக்கு என்றவரை, “ஏன் சார், யாராவது உடம்பு சரியில்லாது ஆஸ்பத்திரி யில் இருக்கிறார்களா?” என்றும், போலீஸ் ஸ்டேஷ னுக்கு என்றவரை, “என்ன சார், யார் மேலே கம்ப்ளயின்ட் கொடுக்கப் போறீங்க? இனிமேல் அதிகமாக ஏத்தலிங்க, மன்னிச்சுக்க மாட்டீங்களா?” என்றும் வேடிக்கையாகக் கேட்டார். “மைலாப்பூர் குளத் திற்கு” என்று சொல்லி, டிக்கெட் கேட்டார் வேறு ஒருவர். உடனே கண்டக்டர் “ஏன் சார், குளத்திலேயா இறங்கிறீங்க?” என்று கேட்டார். யாவரும் சிரித்தோம்.

நானும் மைலாப்பூர் குளத்தின் அருகேயே இறங்க வேண்டி யிருந்தது. கார் போய்க் கடைசியாக நிற்கும் இடமும் குளமும் ஒன்றாக இருந்ததால், கண்டக்டரைப் பார்த்து, “அப்பா, இதுபோய், நிற்கும் இடத்துக்கு ஒரு டிக்கெட் கொடு” என்று, சாமார்த்தியமாகக் கூறிவிட்ட தாக நினைத்துப் பணத்தை நீட்டினேன். ஆனால் அந்தக் கண்டக்டரோ, “சார், இது கரிக்காராக்கும். எந்த இடத் திலும், எந்தச் சமயத்திலும் நிற்கும்” என்று கூறி, ஆனால், சரியாகவே டிக்கெட்டைத் தந்தார்.

நின்றுகொண்டிருந்ததால், கால் வலிக்க ஆரம் பித்து விட்டது. சினிமாவில், கதாநாயகன் தூக்கு மேடையில் நிற்பது போல, இருபுறமும் இருக்கும் கைப்பிடி வாரைப் பிடித்தவாறே நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. குறைந்த சார்ஜ் கொடுத்து, யார் டிக்கெட் வாங்கி இருக் கிறார்கள் என்று பார்த்து, அவர் பக்கம் போய் நின்று கொண்டேன். ஏனென்றால், அவர் சீக்கிரம் இறங்கிவிடு வார்; அந்த இடத்தை நான் கைப்பற்றிக்கொள்ளலா மல்லவா?

சிறிது நேரத்திலேயே என் எண்ணம் பலித்தது. உட்கார்ந்துகொள்ளும் பாக்கியம் பெற்றேன். சந்தோ ஷம் தாங்க முடியவில்லை. ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு ஓர் எல்லை வந்துவிட்டது. அதுதான், அந்தக் கரிக்கார் நின்று கொண்ட இடம்; எனது சந்தோஷத்தைத் தாங்க முடியாதுதான் அது நின்றுவிட்டது என்று எண்ணுவதற்குப் போதிய ஆதாரம் இல்லை.

உடனே கண்டக்டர், “சார், கொஞ்சம் இறங்குங்க” என்றார். “தனனனன” என்று இழுப்பதுவே, பாடப் போவதற்கு அறிகுறிதானே. “சரி, இனித் தள்ளச்சொல் லத்தான் போகிறார்” என்று நினைத்தேன். அவரும் அப்படியே , “சார், எல்லோரும் கொஞ்சம் கை கொடுங்கோ” என்றார். சுற்றுமுற்றும் பார்த்தேன். இருட்டு நேரம்; அத்துடன் யாரும் தெரிந்தவர்கள் இல்லை. எல்லோ ரோடும் சேர்ந்து பலமாகத் தள்ளினேன்.

கார் வெகு நேரத்துக்கு அப்பால் தான் புறப் பட்டது. சேரவேண்டிய இடத்தை அடைந்தேன். ஆனால் எல்லோரும் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கி, மூச்சுவிடும் சப்தம் கேட்டது. என்ன செய்வது? அவர் களை எழுப்பி, வேறு இடத்தில் சாப்பிட்டுவிட்டதாகச் சமாதானம் கூறி, அவர்களுடன் தூக்கத்தில் கலந்து கொண்டேன். எல்லாம் கரிக்கார் செய்த வேலை யல்லவா?

எடுத்ததற்கெல்லாம் கவிபாடும் காளமேகப்புலவர் மட்டும் இருந்திருந்தால், நிச்சயம் அவர் இந்தக் கரிக் கார் மேலே பாடாமல் இருக்கமாட்டார்.

“கார் என்று பேர்படைத்தாய்.
கரியாலே வாழ்கின்றாய்.
சேரிடம் அறிந்து சேர்க்காய்
‘சீக்கிரம்’ உணர மாட்டாய்,
தார்ரோட்டில் நின்று கொண்டு,
தள்ளிட வழியும் வைத்தாய்.
பாரினில் யாரிடம் போய்ப்
பட்ட என் அவஸ்தை சொல்வேன்?”

இதுமாதிரி அவர் பாடலாம். ஏன்? இதைவிட நன்றாகக் கூடப் பாடலாம். யுத்த காலத்தில் அவர் இருந்தால் இது ஒன்றைப் பற்றி மட்டுந்தானா பாடுவார்? உலகில் நடக் கும் ஒவ்வொரு விபரீதத்தையும் பற்றி, ஒவ்வொரு பாட்டுப்பாடி எழுதிக் குவித்துத் தள்ளி யிருக்க மாட்டாரா?

ஆனால், ரேஷன் அரிசியைச் சாப்பிடுவதற்கும், மண்ணெண்ணெய்க் கடையில் புட்டியோடு நின்று இடிபடுவதற்கும், விறகுக் கடையில் விளக்கு வைக்கும் வரை காத்திருப்பதற்கும் கொடுத்துவைக்க வேண்டாமா?

– வாழ்க்கை விநோதம் (நகைச்சுவைக் கட்டுரைகள்), நான்காம் பதிப்பு: நவம்பர், 1965, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *