திடீரென்று ராத்திரி இரண்டு மணிக்கு பாத்திரம் உருளும் சத்தம். சமையலறையில் இருந்ததுதான் வந்தது. பக்கத்தில் படுத்திருந்த பங்கஜத்தைக் காணோம். பகீரென்றது…..
ஒரு வாரமாகவே பங்கஜம் சரியில்லை. ஏதோ முணு முணுத்துக் கொண்டும் , குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டும்……
“பங்கஜம். .. பங்கஜம் ..என்று கூப்பிட்டால் காதில் விழாத மாதிரி நடந்தது கொண்டும்….
இன்றைக்கு என்னடாவென்றால்..!
ராத்திரி சமயலறையில் என்ன வேலை?
அடுப்பில் ஏதோ பாத்திரம். பால் காச்சிக்கொண்டிருக்கிறாளா ???
“பங்கஜம் ! ராத்திரி மணி என்ன தெரியுமா ? மணி ரெண்டு ! இப்போ எதுக்கு பால் காச்சற ?”
“உங்களை யார் இப்போ கூப்பிட்டா ? இந்த பங்கஜம் யார்னு உனக்கு காட்டரேண்டி! எங்கிட்டயா மோதற? இன்னிக்கு உனக்கு குடுக்கிற மயக்க மருந்து எப்படி வேல செய்யப் போறது பாரு !!!”
எனக்கு பயம் பிடித்துக்கொண்டது.
“பங்கஜம் என்ன உளர்ற ? யாருக்கு மயக்க மருந்து?”
“உஸ்… சத்தம் போடாதீங்க! நம்ப பொன்னம்மாவ பாவம்ன்னு நினக்காதிங்க ! நம்ப எல்லாருக்கும் தூக்க மருந்து குடுத்து நகையெல்லாம் அபேஸ் பண்ண திட்டம் போட்ருக்கா! அவளுக்குத்தான்?.
“பங்கஜம் ! அப்படியெல்லாம் பேசாத! பாவம் பொன்னம்மா கிழவி ! காது கூட கேக்காது ! ஏதோ கனவு கண்டியா ! வந்து படு!
மறுநாள் ஒன்றுமே நடக்காத மாதிரி அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தோம்.
இரண்டு நாள் கழிந்தது.
விடிகாலை யாருடனோ போனில் சீரியஸாக பேசிக்கொண்டு இருந்தாள்.
“மாலா….நேத்து ‘ அம்மா..தாயே.’ சீரியல் பாத்தியா…???
எனக்கு ஆரம்பத்திலேர்ந்தே ரமா மேலதான் சந்தேகம். இவள் டாக்குமென்டை எடுத்து வச்சா , ஆனந்த் கண்டுபிடிக்க மாட்டானா?
நான் எதுக்கு இப்போ கூப்ட்டேன்னா நேத்து ‘ விடாது நாகம் ‘ சீரியல்ல மஞ்சரிய பாம்பு கடிச்சுதே , அவளும் பாம்பா மாறிட்டாளா ? அந்த நேரம் பாத்து விருந்தாளிங்க வந்துட்டாங்க . பாக்க முடியல…..”
எனக்கு மறுபடியும் பயம் பிடித்துக்கொண்டது. இது கொஞ்சம் கவலைப்பட வேண்டிய விஷயம் தான்.
என்னை அவசரம் அவசரமாக ஆஃபீசுக்கு அனுப்புவதிலியே குறியாக இருக்கிறாள்.
“மச மசன்னு நிக்க ஆரம்பிச்சுட்டீங்க ! கிளம்புங்க ! ஆஃபீஸ் வேன் போய்டப்போறது!”
“இன்னும் பத்து நிமிஷம் இருக்கு ! உக்காரு பங்கஜம் ! உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.!”
“எல்லாம் சாயங்காலம் பேசிக்கலாம். எனக்கு நிறைய வேலை கிடக்கு!”
பங்கஜத்தை ஒரு டாக்டரிடம் காண்பிக்கலாமென்று தோன்றியது. ஆனால் கண்டிப்பாக வரமாட்டாள்!
என்னுடைய நெருங்கிய நண்பன் மந்தவெளியில் ஒரு சின்ன க்ளினிக் வைத்திருக்கிறான். அவன்தான் என்னுடய குடும்ப டாக்டர்… முதலில் அவனைப் போய்ப் பார்க்க நிச்சயம் செய்தேன்.
சங்கரன் முதலில் ஒரு நல்ல நண்பன்… அப்புறம் தான் டாக்டர். பரோபகாரி. குடும்பமே டாக்டர். ஏழைகளிடம் ஒன்றும் எதிர்பார்க்க மாட்டான். என்ன குடுத்தாலும் வாங்கிக் கொள்வான்.
மழைக்காலம் , குளிர் காலத்தில் கூட்டம் அப்பும். மற்றபடி அனேகமாய் ஃப்ரீ தான்.
“வா வா ! உன்னைப்பற்றிதான் நினைத்துக்கொண்டிருந்தேன். என்ன ஆளையே காணும் ?? பங்கஜம் சௌக்யமா ?”
நல்ல வேளை ! அவனே ஆரம்பித்து வைத்தான்!
“இல்ல சங்கரா ! அது விஷயமாத்தான் உன்னைப் பார்க்க வந்தேன்.”
நடந்ததெல்லாம் சொன்னேன்.
சங்கரன் ஒரு ஜாலி பேர்வழி. சிரித்துக்கொண்டே கேட்டான்.
“பங்கஜம் ரொம்ப T.V. பாக்கறாளா? ”
“கொஞ்சமா ? ஒரே நேரத்துல மூணு channel பார்க்க அவளால் மட்டும் தான் முடியும் . விளம்பரம் வரும்போது மாத்தி மாத்தி மூணு serial பாத்துடுவா !”
“கவலய விடு ! இப்போ அனேகமாய் நிறைய பேருக்கு இந்த வியாதி வந்திருக்கு .
பேரு”MULTIPLE SERIALOSIS”
“என்னப்பா ! என்னென்னவோ சொல்லி பயமுறுத்தறயே !”
“பயப்படாத! உயிருக்கெல்லாம் ஆபத்தில்லை! ஆனா நீ ஆரம்பத்திலேயே கூட்டிட்டு வந்திருக்கவேண்டியது.
இப்பொழுது stage 3 . ஆனாலும் குணப்படுத்திடலாம்”
“ஜோக் அடிக்கிறயா அல்லது நிஜம்மாதான் சொல்றயா ? ”
இல்லப்பா! இப்போ இது ஒரு வியாதி மாதிரிதான்! இதுக்கு மூணு வழி இருக்கு. முதல்ல சீரியல் பார்க்கறத கொஞ்சம் கொஞ்சமா குறைக்கணும். ஒரேடியாக நிறுத்தினா சில சமயம் side-effects நிறைய இருக்கும்.
முதல்ல பத்து சீரியல எட்டா குறைக்கணும். அப்படியே படிப்படியாக 5 , 3 ன்னு குறைச்சு அத அப்படியே ஒரு மாசம் மெயின்டைன் பண்ணனும். ராத்திரி படுக்கும்போது கண்டிப்பா No T.V.
இரண்டாவது… ஒரு வாரம் T.V., டவர் இல்லாத இடத்துக்கு டூர் போகணும்.”
“நிறுத்து ! அது மட்டும் முடியாது. எங்க போனாலும் முதல்ல T.V. இருக்கான்னு தானே கேப்பா ! ”
“அப்போ அடுத்தது. Shock treatment “தான் !!
“Shock treatment ஆ ???”
எனக்கு ஷாக் அடித்த மாதிரி இருந்தது…..
“ஆமாம் சீரியல் பாக்கறதையே வெறுக்கறா மாதிரி ஒரு நிகழ்ச்சி நடக்கணும். !!”
சங்கரன் சொன்ன முதல் வழிக்கு சான்ஸேயில்ல ! ஒரு வாரம் எங்கேயாவது கண் காணாத ஊருக்கு கூட்டிப் போக தீர்மானித்தேன்.. ஊட்டி போகணும்னு கொஞ்ச நாளா ஆசை. பங்கஜத்தை எப்படியும் சரிகட்டணும்!
என்னுடைய நண்பன் ஒருத்தனுக்கு ஊட்டியில ஒரு சின்ன கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. எப்பவும் “போய்ட்டு வாடா “ன்னு சொல்லுவான். சரி கேட்டுப்பாப்போம்னு ஃபோன் பண்ணினேன்.
ஒரே சந்தோஷம்!
“உனக்கில்லாததா ! ஆனால் ஒரே ஒரு ப்ராப்ளம்… ஒரு மாசமா கேபிள் கனெக்சன் இல்லடா ! கம்ளெயின்ட் பண்ணியிருக்கேன்!
போன் கூட தகராறு பண்ணும் ! டவர் இல்லாததால் சிக்னல் வீக் தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”
எனக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது மாதிரி ஒரே குஷி. பங்கஜத்திடம் கெஞ்சி கூத்தாடி ஊட்டி வந்தாச்சு ! வந்ததும் T.V. இருக்கா என்று செக் பண்ணிக்கொண்டாள்.
ஏற்கனவே 11 மணியானதால் அலுப்பில் நிம்மதியாக துங்கிவிட்டாள். எனக்கு அடுத்த நாள் என்ன நடக்குமோ என்ற பயத்தில் தூக்கம் வர ரொம்ப நேரமாச்சு!
காலையில் எழுந்ததுமே “இத பாருங்க ! நான் இன்னிக்கு எங்கயும் வரல்ல . நேத்தே எல்லா எபிசோடும் மிஸ் பண்ணிட்டேன். நீங்க வேணா ஊரைச் சுத்திட்டு வாங்க ! எனக்கு எல்லாம் ரூம் சர்வீஸ் ஆர்டர் பண்ணிட்டு போய்டுங்க !”
வேகமா எழுந்திருந்து பல் தேய்த்து விட்டு T.V . ரிமோட்டை எடுத்தாள்.
பூகம்பத்துக்கு தயாரானேன் !
“என்னங்க ! No signal ன்னு வருது ? ”
“லூஸ் கனெக்க்ஷனா இருக்கும் ! நல்லா செக் பண்ணும்மா ! ”
“நீங்களே பண்ணுங்க ! ”
கொஞ்ச நேரம் அப்படி இப்படி போக்கு காட்டிப் பார்த்தேன் . பங்கஜத்தின் முகத்தைப் பார்க்கும் தைரியமில்லை .
“போனால் போகட்டும் ! விடு ! சூப்பர் வெதர். …!! வா வெளியே ஒரு ரவுண்டு போய்ட்டு வரல்லாம் ”
பங்கஜத்தை அப்படி நான் பார்த்தேயில்லை !
“நல்ல கெஸ்ட் ஹவுஸ் பாத்தீங்க ! ஒரு T.V. கூட பாக்க முடியாம ! முதல்ல ஃபிரண்டுக்கு ஒரு போனப் போடுங்க ”
நானும் அவனைச் சும்மா இரண்டு திட்டு திட்டி விட்டு ,
“இப்பவே கூப்பிட்டு கேக்கறேன் ! “என்றேன் ……
அவன் சொன்னபடியே போன் கிடைக்கவில்லை !
“நான் வெளில போய் ட்ரை பண்ணிப் பாக்கறேன் ! “என்று நழுவினேன் !
தடாலென்று கதவை ஓங்கி மூடினாள். இது தான் அவன் சொன்ன ‘ side effect ‘ போலிருக்கு!!!!!
உள்ளே வந்து பார்த்தால் முகமெல்லாம் சிவந்து இருந்தது.
“இது தான் கடைசி தடவை ! இனிமே உங்கள் நம்பி வெளியே வந்தா எம்பேரு பங்கஜம் இல்லை ! “என்று சீரியல் நடிகை மாதிரி சூளுரைத்தாள்.
“சரி ! இப்போ என்ன பண்ணலாம் ? ”
“வேற வழி ? வெளியே போக வேண்டியதுதான்”
பேய் , புளியமரம் என்று ஏதோ
வார்த்தைகள் காதில் கேட்டது. நான் கவனித்தது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.
பொடானிக்கல் கார்டன் போகலாம் என்று தீர்மானமாயிற்று.
எங்கு திரும்பினாலும் பூக்களும் மரங்களும் மனசுக்கு இதமாயிருந்தது.பங்கஜமும் ரோஜாப்பூக்களில் மயங்கி விட்டாள்.
நிறைய சுற்றி விட்டோம்.
கால் வலிக்க ஆரம்பித்தது. புல் வெளியில் உட்கார்ந்தோம்.
அப்போதுதான் விதி சதி செய்தது. சதியில்லை , அனுக்கிரகம் என்று அப்போது புரியவில்லை.
திடீரென்று ஒரே பரபரப்பு. ஒரு பத்து பதினைந்து பேர் இருக்கும் …. அவர்களைச் சுற்றி ஒரே கூட்டம். நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஒன்றும் தெரியவில்லை.
“போங்க ! போய் என்னன்னு பார்த்துட்டு வாங்க ! ”
இன்றைக்கு அவள் என்ன வேலை சொன்னாலும் செய்வதாக பிரமாணம் செய்திருக்கிறேனே ! வாயைத் திறக்காமல் எழுந்து போனேன்.
கூட்டம் இருக்கும் பக்கம் போய்விட்டேன்! உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை! அங்கிருந்த ஒருத்தரைக் கேட்டதில் ஏதோ சீரியல் shooting என்றார்.
என்னுடைய நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
‘ கொடுமை ..கொடுமை என்று கோவிலுக்குப் போனால்…’
சீரியலேவேண்டாமென்று ஓடி வந்தால் இங்கே shooting என்றால் …
பங்கஜத்தை எப்படியாவது இங்கிருந்து கிளப்பவேண்டும்.!
அதற்குள் என் தோளை யாரோ தொட்டதுபோல் இருந்தது! பங்கஜமேதான்!
“உங்களை நம்பி அங்கேயேஉட்கார்ந்திருந்தால் அவ்வளவு தான். நீங்களும் உங்க நண்பரும் எத்தனை சதி பண்ணினாலும் பாருங்க கடவுள் என் பக்கம் தான் ! ”
இவளுக்கு எப்படி தெரிந்தது? ஒரு வேளை சீரியல் பார்த்து பார்த்து புத்தி ரொம்பவே கூர்மையா குமோ ?
“நான் எல்லாம் விசாரித்து விட்டேன்!
‘மஞ்சள் பொடி மஞ்சுளா ‘shooting! ஒரு வார எபிசோட் ஊட்டிலதானாம் ! TRP .NO 1 தெரியுமா? இங்கே தான் ஒரு வாரமும் இருக்கப்போறோம் !
அப்பொழுதான் அது நடந்தது ! இரண்டு மூன்று பேர் , நல்ல பருமனான உடல்.
எல்லாரையும் பார்த்து… .
“இங்க யாரும் கூட்டம் போடக்கூடாது. Please cooperate! சீரியல் telecast ஆகும் போது பாத்துக்கங்க ! இப்போ போங்க பிளீஸ்”என்று அடிக்காத குறையாய்த் தள்ளி விட்டார்கள்.
தள்ளி விட்ட வேகத்தில் ஒரு பையன் பங்கஜத்தின் மேல் விழுந்ததில் அப்படியே நிலை குலைந்து கீழே விழுந்தாள். எந்திருக்கவே முடியவில்லை.
கைத்தாங்கலாகப் பிடித்து வண்டியில் ஏற்றி ஒரு வழியாக கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தோம்.. வலி உயிர் போகிறது என்றாள்.
டாக்டர் வந்து பார்த்து விட்டு fracture ஒன்றுமில்லை, வெறும் சுளுக்கு தான். பத்து நாள் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் எடுத்தால் நல்லது! தலையணை இல்லாமல் தூங்க வேண்டும்………..தலையைக் கூட தூக்கக் கூடாது!
எப்படியோ பின் சீட்டில் படுக்க வைத்து வீடு வந்து சேர்ந்தோம்.
வழியெல்லாம் எனக்கும் சங்கரனுக்கும் சரியான அர்ச்சனை !
“என்ன திமிர் அந்த சீரியல் எடுக்கிறவனுக்கு ! கண்டிப்பா அந்த சீரியல் ஓடவே ஓடாது. நான் சேலஞ்ச் பண்றேன் ! இனிமே இந்த பங்கஜம் T.V. பக்கம் போனா ஏன்னு கேளுங்க !”இன்னும் என்னென்னவோ முனகிக் கொண்டே வந்தாள்.
சொன்னபடியே பத்து நாள் படுத்த படுக்கைதான். மறந்து போய் கூட சீரியல் பேச்சு வரவேயில்லை! எப்போது பார்த்தாலும் பாட்டுதான்! விக்ஷ்ணு சகஸ்ரநாமம் , லலிதா சகஸ்ரநாமம் , பஜன் , அபங் என்று பக்தி மணம் தான் !
பத்து நாளில் நன்றாக பழையபடி ஆகிவிட்டது. நான் கூட மறுபடியும் சீரியல் காத்து அடிக்குமோ என்று பார்த்தேன். அதைப் பற்றி பேச்சேயில்லை !
ஒரே வாரம் கழித்து ஒரு பையில் ஏதோ புத்தகங்கள் எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
“இன்னையிலிருந்து கமலா மாமியின் பஜனை க்ளாஸ் போறேன். வர லேட்டானால் ராத்திரிக்கு சப்பாத்தி , கூட்டு பண்ணி வைத்திருக்கிறேன்! வெயிட் பண்ணாதீங்க ! ”
கொஞ்சம் நிம்மதியா இருந்தது. சங்கரனைப் பார்த்து நன்றி சொல்லணும்!
இரண்டு நாள் கழித்து ராத்திரி 12 மணி இருக்கும், ஏதோ மணி அடிக்கிற சத்தம் !
பூஜை ரூமில் பங்கஜம் நின்றுகொண்டிருந்தாள்.
மணியடித்து கற்பூரம் காட்டிக் கொண்டிருந்தாள்.
“வாங்க ! சரியான சமயத்தில் வந்தீங்க ! இந்தாங்க ! எடுத்துக்கங்க ! “என்று கற்பூரத் தட்டை நீட்டினாள்.
“பங்கஜம் ! என்னாச்சு ? என்றேன்.
“பயப்படாதிங்க ! எனக்கு ஒண்ணும் இல்லை ! சாமி கும்பிட்டுட்டே இருந்ததில் நேரம் போனதே தேரியல ! இந்தாங்க ஒரு வாய் பாயசம் குடிங்க !
“பாயசமா ? “வயத்தைக் கலக்கியது !
“தூக்க மாத்திரை எதுவும் கலக்கலயே ??
“ஏங்க அபசகுனம் பிடிச்ச மாதிரி பேசறீங்க ? சாமி பிரசாதம் ! நீங்க போய்ப் படுங்க! நான் பின்னாடியே வரேன்”
கத்தி போய் வாலு வந்த கதைதான்.
ஆனாலும் ஒரு சமாதானம்! இனிமேல் சவால் விடமாட்டாள்.
நான் எதற்கும் இப்போவே சங்கரனைப்போய் பார்த்து விட்டு வந்து விடுகிறேனே !!!