கண்ணா! காப்பி குடிக்க ஆசையா?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 15, 2018
பார்வையிட்டோர்: 18,399 
 
 

“கண்ணா! செப்புப் பாத்திரத் தண்ணி குடிச்சியா?” ரமா பரபரப்பாக சமையலறையில் காரியம் செய்து கொண்டே அப்போது தான் தூங்கி எழுந்து வந்த பிள்ளையை விசாரித்தாள். பல் தேய்த்து விட்டு ஆசையாக சூடாகக் காப்பி குடிக்கலாம் என்ற நினைப்போடவே எழுந்திருந்த கண்ணன் உடனே சோகமாக ஆனான். ஆஞ்சநேயர் கோவிலிலிருந்து அம்மா தினமும் துளசி கொண்டு வந்து போட்டு செப்புப் பாத்திரத்தில் இரவே ஊற்றி வைக்கும் தண்ணீரில் தன் பங்கான ஒரு டம்ளர் எடுத்துக் குடித்தான். “அப்படியே இரண்டு பூண்டு பல்லை எடுத்து எல்லா பல்லிலும் படும்படி நல்லா மென்னு சாப்பிடு! சொத்தைப் பல்லே இருக்காது பாரு!”

வெறும் வாணலியில் வதக்கி தோலுரித்து வைத்த பூண்டு பற்களை கண்ணன் மென்று கொண்டிருக்கும்போதே ராம் அங்கே வந்தார். “வாங்க! வாங்க! எங்கே காணுமேன்னு தேடிண்டிருந்தேன். செப்புப் பாத்திரத் தண்ணியைக் குடிச்சதோட சரி. இன்னும் மிச்சம் இருக்கிற ஐட்டங்கள் கிட்ட வரவேல்லியே நீங்க? இந்தாங்க! தோலுரிச்ச இரண்டு சின்ன வெங்காயம், இரண்டு பூண்டு பல்லு. இது இரண்டையும் நல்லா மென்னு சாப்பிட்டுட்டு அடுத்த ரவுண்ட் வாங்க!” என்று பேசிக்கொண்டே குக்கரை அடுப்பில் ஏற்றினாள். ராமும் கண்ணனைப் போலவே சோகமான முகபாவத்தோடு அவள் சொன்னபடியே செய்தார்.

“ஆச்சா? இந்தாங்க! இந்த வேப்பங்கொழுந்தை மென்னு சா£ப்பிட்டுட்டு, ராத்திரி ஊற வச்ச வெண்டைக்காயை நல்லாபிழிஞ்சு வச்சிருக்கேன் பாருங்க, இந்தத் தண்ணியைக் குடிச்சுட்டீங்கன்னா, கொஞ்சம் நேரத்தி;ல காப்பி குடிச்சிடலாம்.”

அந்த நல்ல வார்த்தைக்காகவே ராம் கொழ கொழவென்றிருந்த வெண்டைக்காய் ஊறிய தண்ணீரைக் குடித்தார். முகம் அஷ்ட கோணலானது. பொறுத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்து பேப்பரைக் கையிலெடுத்தார்.

“டேய் கண்ணா! சொல்ல மறந்துட்டேனே! ஒனக்கு கீழாநெல்லியை வேரோடு பறிச்சு அரைச்சு வச்சிருக்கேன்.”

‘இது ஏதுடா புதுசா இருக்கு!’ என்று கண்ணன் கலவரத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ரமா சொன்னாள், “வாரத்துக்கு ஒரு தடவை இதைக் குடிச்சா போதுமாம். கண் பார்வை கோளாறுகள் எல்லாம் தன்னாலே சரியாகி விடுமாம். நேத்திக்கி ஹீலர் ஹரிஹரன் சொல்லியிருக்கிறதா ஃபேஸ் புக்கில பார்த்தேன். இன்னிக்கு ஆரம்பிச்சிடலாம். இனிமே புதன்கிழமை புதன்கிழமை இந்த ஜூஸ் பண்ணிடறேன். யார் கண்டா? நீ ஒருவேளை கிட்டப் பார்வைக்காகப் போட்டிருக்கிற கண்ணாடியை எடுத்தாலும் எடுத்திடலாம். சொல்றதிக்கில்லை.”

கசந்து வழிந்த அந்த ஜூஸை உடம்பை உதறிக் கொண்டும் புலம்பிக்கொண்டும் கண்ணன் ஓரளவு குடித்ததும் சற்றுப் பொறுத்து, எதற்காக தினமும் பொழுது புலர்கிறதோ, அவன் எதற்காக தினமும் கண் விழிக்கிறானோ அந்த அருமையான காப்பி அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் வந்தது.

ஒருவழியாக அப்பாவும் பிள்ளையும் குளித்து அலுவலகத்திற்கும், காலேஜுக்கும் ரெடியானபோது இரண்டு சிறு கிண்ணங்களில் முளைகட்டியப் பயறு அவர்களுக்கு முன்பாக சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தது. இரவே ஊற வைத்த இரண்டு பாதாமும் பேரிச்சம்பழங்களும் கண்ணனுக்கு மட்டும் ஸ்பெஷலாக. ராமுக்கு சர்க்கரை இருப்பதால் இந்த ஐட்டங்கள் அவருக்குக் கிடையாது.

“அம்மா! இன்னிக்கு ஒருநாள் இதெல்லாம் வேண்டாம்மா! கீழாநெல்லி வேற குடிச்சிருக்கேனே” என்று ஈனஸ்வரத்தில் கோரிக்கை விடுத்துப் பார்த்தான் கண்ணன்.

“முளைப்பயறு சாப்பிட்டா ஒரு நாளைக்கு தேவையான பி காம்ப்ளெக்ஸ் விட்டமின் ஈஸியா கெடச்சிடும்னு ஒன் கிட்ட எத்தனை தடவைடா சொல்றது? பாதாமும் பேரிச்சம்பழமும் நினைவாற்றல், இரும்பு சத்துக்காக! ” என்று அலுத்துக் கொண்டே ஒரு தட்டில் நாலு இட்லியை போட்டுக் கொண்டு வந்தாள் ரமா.

“இதையெல்லாம் சாப்பிட்டுட்டு என்னால நாலு இட்லியெல்லாம் சாப்பிட முடியாதும்மா! ” என்று சாப்பாட்டு மேஜை மேலேயே கவிழ்ந்து படுத்து சத்தியாக்கிரகம் செய்தான் கண்ணன்.

“அம்மா! தாயே! எனக்கு இன்னும் என் வயத்துக்குள்ள வெண்டைக்காய் ஊறிய தண்ணியே சக்கர வட்டம் அடிக்குதும்மா! எனக்கு ஒரு இட்லியே போதும்!” என்று அவள் இட்லி தட்டுடன் வரும்போதே அலறினார் ராம்.

இரண்டுபேரும் சாப்பாட்டுப் பைகளுடன் அவரவர் வண்டியை எடுக்கக் கீழே இறங்க ரமா ஃபோனும் கையுமாக சோஃபாவில் வந்தமர்ந்து ‘வாட்ஸ் அப்பை’ நோட்டம் விட்டாள்.

இந்த இம்சையெல்லாம் சமீபகாலமாக ஆரம்பித்தது தான். ‘வாட்ஸ் அப் வாத்தியார்கள்’, முகநூல் மருத்துவர்கள் தினசரி சராமாரியாக அளிக்கும் உடல்நலக் குறிப்புகளை வேறு யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ, ரமா கண்டிப்பாகக் கடைப்பிடித்து தன் வீட்டில் நடைமுறைக்குக் கொண்டு வந்து விட்டாள்.

சர்க்கரை வியாதி இருக்கும் கணவனுக்கென்றே ஸ்பெஷலாக இரண்டு சின்ன வெங்காயம் தினமும் பச்சையாகச் சாப்பிட தோலுறித்துத் தயாராக இருக்கும். வேப்பங்கொழுந்தும், வெண்டக்காய் ஊறிய நீரும். அவ்வப்போது வாழைப்பூ ஜூஸ், மாதுளம்பழ தோலை ஊற வைத்த துவர்ப்பு நீர் என்று விதவிதமான சிகிச்சை முறைகளிலிருந்து ராமால் தப்பிக்கவே முடியவில்லை. செப்புப் பாத்திரத்தில் துளசியைப் போட்டு தண்ணீரை விட்டு ஊற வைத்து காலை எழுந்தவுடன் அந்தத் தண்ணீரைக் குடித்தால் இருபது வகையான வியாதிகள் நம்மை அண்டாதாம்.

கடைசியாக இரவு படுக்கப் போகுமுன் அப்பாவும் பிள்ளையும் ஆளுக்கு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகப்பொடியை வாயில் போட்டுக் கொண்டு வெத வெத வென்றிருக்கும் வெந்நீரை குடித்தால் தான் அன்றைய தூக்கம் ‘சாங்க்ஷன்’ ஆகும். அது சர்வ ரோக நிவாரணியாம். கண்ணன் அதைத் தவிர்ப்பதற்கென்றே நைஸாக தூங்கிவிட்டது போல போர்வையைப் போர்த்து கொண்டு படுத்து விடுவான். விடுவாளா ரமா? போர்வையை முதலில் பெயர்த்தெடுப்பாள். கைக்குழந்தைக்குப் போட்டுவது போல ஒரு கையில் ஸ்பூனில் பொடியையும் மற்றொரு கையில் வெந்நீரையும் வைத்துக் கொண்டு படுக்கையில் அவனருகே அமர்ந்து விடுவாள். தப்பிக்க வழி? சிறு குழந்தை போல சிணுங்கிக்கொண்டே கண்ணன் அந்தப் பொடியை முழுங்கி வைப்பான்.

‘இவளிடமிருந்து தப்பிக்க ஒரே வழி எங்கேயாவது வெளியூருக்கு ஒரு வாரம் ஓடிவிடுவது தான்!’ என்று கோபமாக நினைத்துக் கொள்வார் ராம். ஆனால் திரும்ப இங்கே தானே வந்தாகணும் வேறு போக்கிடமில்லையே என்கிற விவேகம் அவரை அவ்வாறு செய்ய விடாமல் தடுத்தது.

அன்று பொழுது விடிந்தபோதே ஏதோ வித்தியாசமாகத் தோன்றியது அப்பாவுக்கும் பிள்ளைக்கும்.

“என்ன? எழுந்தாச்சா? காப்பி போடலாமா?”

ஒரு கணம் மனம் புல்லரித்துப் போக, இந்த வார்த்தைகளைக் கேட்டு எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தார்கள். பேசுவது நம் அம்மா தானா என்று ஒரு கணம் ரமாவையே உற்றுப் பார்த்தான் கண்ணன்.

“ஒன்னைத் தாண்டா கேக்கிறேன்? காப்பி வேண்டாமா?”

மற்றதெல்லாம் இன்னிக்கு ஏன் இல்லை என்று கேட்கவே பயமாக இருந்தது கண்ணனுக்கு. அம்மா நீட்டிய காப்பியை பாய்ந்து வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான். ராம் சமையலறையில் நைஸாக நோட்டம் விட்டார். எங்கேயாவது உரித்த வெங்காயம், கொழகொழ வெண்டைக்காய் ஜூஸ் கண்ணில் தென்படுகிறதா என்று.

“என்ன இது? உங்க ரெண்டு பேருக்குமா மறந்து போச்சு? இன்னிக்கு என்னோட பொறந்தநாள் !” என்ற ரமா, “ஆமா! ஒங்க ரெண்டு பேருக்கும் ஒங்க பொறந்தநாளே ஞாபகம் இருக்காது. நான் தான் சொல்லணும்! இதில என்னோட பொறந்த நாளை எங்கேயிருந்து ஞாபகம் வச்சுக்கப் போறேள்?” என்று சூள் கொட்டினாள்.

அடாடா! ரமாவின் பொறந்த நாள் வந்து நம்மை இந்த இம்சைகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறதா என்று அப்பாவும் பிள்ளையும் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டார்கள். தலைவர்களின் பிறந்த நாளன்று நன்னடத்தை சர்டிபிகேட் வாங்கிய சிறைக்கைதிகளை விடுதலை செய்வார்களே அந்த ஞாபகம் மின்னல் போல் ஒரு கணம் வந்து போனது ராமுக்கு.

“ஹாப்பி பர்த்டே!” இருவரும் உற்சாகமாக ரமாவுக்குக் கை கொடுத்தார்கள்.

“இன்னியிலிருந்து நாம்ப நம்ப ஓல்ட் ரொடீனுக்கு மாறிட்டோமா அம்மா?” தயங்கி தயங்கித் தான் கேட்டான் கண்ணன்.

“என்ன ஓல்ட் ரொடீன்?” ரமாவுக்குப் புருவம் சுருங்கியது.

“அதாம்மா பல் தேச்சு காப்பி குடிச்சு……”

“ஓ! அதச் சொல்றியா? இன்னிக்குப் பொறந்தநாளும் அதுவுமா எனக்கு ஏகப்பட்ட வேலை. நாலு கோவிலுக்குப் போகணும். அதனால தான் இன்னிக்கு எழுந்தவுடனேயே நேர காப்பி குடுத்தாச்சு. நாளையிலிருந்து நாம நல்ல விஷயங்களைத் தொடரலாம்.”

“யூ மீன்? அந்த வெங்காயம், வெண்டக்கா… இத்யாதி இத்யாதி…..?” ராம் கேட்டார்.

“சந்தேகமில்லாம அதே தான். இப்போ போய் சீக்கிரமா குளிச்சிட்டு என்னை நம்ப சிவன் கோவில்ல கொண்டு போய் விடற வழியைப் பாருங்க!” என்று ரமா குரலை உயர்த்த, ‘அட! நம்ப சந்தோஷம் அல்ப சந்தோஷந்தானா?’ என்று பேய் முழி முழிக்க ஆரம்பித்தார்கள் கண்ணனும் ராமும்.

– கலைமகள் மாத இதழில் வெளியானது

Print Friendly, PDF & Email
சிறு குறிப்பு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்ற்ருக்கிறார். இலைக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது. இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *