கடவுளை காண விலகி போ!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 26, 2024
பார்வையிட்டோர்: 2,650 
 
 

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது?

நிறைய பேரை கேட்டான் “கோவிலுக்கு போ!” என்றார்கள்.

உடனே புறப்பட்டான்.

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார்.

“எங்கே போகிறாய்?”

“கடவுளை காண போகிறேன்!”

“எங்கே?”

“கோவிலில்!”

“அங்கே போய்…”

“அவரை வழிபட போகிறேன்!”

“அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா?”

“தெரியாது”

“எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?”

“அப்படியென்றால்”

“உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும்”

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

“ஏ, மனிதனே ….. நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல …. இன்றைக்கு மனிதர்கள்”வழிபாடு”என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான்”

“நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் …”

“நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?”

“அப்படியானால் .. ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி?”

“அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும்!”

“அதற்கு வழி?”

“தியானம்”

“தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா?”

“இல்லை”
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

“தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய் . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும்”

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

தன்னுடைய தேவையை சொன்னார்:

“I WANT PEACE”

ஞானி சொன்னார்:

“முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு, மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம்!” எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

‘I’ . ‘WANT’ இரண்டையும் விட்டு விலகினால் ‘PEACE’ நெருங்கி வருகிறது!

‘நான்’ என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ‘என்னுடையது’ என்கிற ஆசைகளை விலக்குங்கள். ‘ அமைதி ‘ என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

“சுவாமி! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம்! அந்த அளவுக்கு வேறே யாருக்கும் கிடைச்சிருக்காது!”

“எப்படி அது?”

“ஸ்பெஷல் தரிசனம்! 50 ரூபாய் டிக்கெட்! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது!”

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம்!

ஞானி கேட்டார்

“அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம்?”

“ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான்!”

உற்சாகமாக சொன்னான் .

“உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா?”

“இல்லை”

“அந்த வகையில் பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு!”

“யார் அவர்”

“அங்கே இருக்கிற அர்ச்சகர்!”

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

“சரி , சுவாமி . நான் வர்றேன்!”

சோர்வோடு நடந்து போனான்.

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

ஞானி கேட்டார்:

“எங்கே போகிறாய்?”

“வீடுக்கு!”

“கோவிலுக்கு போகவில்லையா?”

“இல்லை”

“அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய்?”

“ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன். ‘நான்’ ‘என்னிடம்’ இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன்”

ஞானி இருகைகளையும் உயர்த்தினார்.

“ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல, விலகுவது! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ, அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *