கஞ்சத்தனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 2, 2022
பார்வையிட்டோர்: 1,700 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கந்தையா அண்ணன் ஊரிலுள்ள பெரும் புள்ளிகளில் ஒருவர். பெட்டி போன்ற முகம். அதற்கேற்ற நீண்ட மூக்கு கண்ணிரண்டையும் மறைத்துக் கொண்டு கண்ணாடி.

உதிக்கும் வெயில் ஒளித்தெறிப்படையும் வலுக்கல் மொட்டை இத்தனை தோற்றத்தையும் ஒருங்கே கொண்டவர் தான் கந்தையா அண்ணன்.

இவரோ சிக்கனம் பிடிப்பதில் பெரும் விண்ணர், அதிகாலை கோழி கூவும் முன்னே அடுப்பு மூட்டுவதற்கு நெருப்புக் குச்சியை வீண் விரயம் செய்யாமல், பக்கத்து வீட்டில் நெருப்புக் கொள்ளி வாங்குவதிலேயே தினசரி சிக்கனத்தை ஆரம்பித்து வைப்பார்.

பின்பு ஓசிப் பத்திரிகை தேடும் படலத்தை ஆரம்பிப்பார். “பேப்பர்” வாங்குவதென்றாலும் செலவு. வாசிகசாலைக்குச் சென்று ஓ வாசகனாகவாவது இருப்பதென்றால் “ரவுனுக்கு” பஸ்ஸில் செவ்வதற்கு அதிக செலவு.

அதனால் ஒவ்வொரு வீடாகச் சென்று “பேப்பர்” எடுத்ததா? ‘பேப்பர்’ எடுத்ததா? என்று கேட்டுக் கேட்டு ஒரு செலவும் இல்லாமல் பத்திரிகை பார்த்து முடித்து விடுவார்.

வீட்டில் தேநீர் குடிப்பதே மிகக் குறைவு. ஏதும் அலுவலாக ‘ரவுனுக்கு’ சென்றால் தான் தேநீர் குடிப்பது வழக்கம். அதுவும் தனியே குடிக்க மாட்டார், அவருடைய ஐந்து அல்லது ஆறு நண்பர்களையும் கூடவே அழைத்துச் செல்வார்.

முதலில் எல்லோருக்குமாகச் சேர்த்து ‘ரீ’ ஓடர் பண்ணுவார்.

சர்வர் தேநீரை வைத்தவுடன் உடனடியாக தேநீரைக் குடித்து விட்டு (வழமையில் தேநீரை அருந்திய பின்பு சிறிதளவு மண்டியை வைப்பது தான் வழக்கம்.) ஏனைய நண்பர்கள் வைத்த தேநீர் மண்டியை அக்கிளாசுக்குள் ஊற்றி தேநீர் அளவுக்கு நிரப்பி வைத்துக் கொண்டு.

‘தம்பி சர்வர் நான் ரீ குடிக்கிறதில்லையே நீ மேலதிகமாக ஒரு ரீ கொண்டு வந்திட்டாய், இதைத் திருப்பிக் கொண்டு போ” என்று கூறி நண்பர்கள் குடித்த அனைத்துக்கும் நண்பர்கள் காசைச் கட்ட அவர் தேநீர் குடியாதவர் போல் நைசாகக் காசு கொடுக்காமலே நழுவி விடுவார்.

இவர் ஹோட்டல்களில் சாப்பிடுவதே தனி ரகம் கடைகளுக்கு போகும் போது சேர்ட் பையினுள் ஒரு கரப்பொத்தான் பூச்சியை கொண்டு செல்வார்.

ஹோட்டல் சர்வர் சாப்பாட்டை வைத்து விட்டு அப்பால் நகர்ந்ததும் சேர்ட் பையினுள் இருக்கும்” கரப்பான் பூச்சியை எடுத்து சோற்றின் மூலையில் புதைத்து வைத்துக் கொண்ட பின் சோற்றை உண்ண ஆரம்பிப்பார்.

சோற்றைச் சாப்பிட்டு முடியும் தருவாயில், சர்வர் அம்மேசைக்கு அருகில் வந்தவுடன் கரப்பான் பூச்சியை வெளியே ‘கிண்டி’ எடுப்பது போல் பாசாங்கு செய்வார்.

இதைக் கண்ட ஹோட்டல் முதலாளி, மற்றவர்கள் இனிச் சாப்பிட வரமாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவரைக் கூச்சல் போடாமல் வேண்டி அவரிடம் காசும் வாங்காமல் வெளியே அனுப்பி விடுவார்கள்.

கந்தையா அண்ணனோ பெரிய கெட்டித்தனம் செய்தவர் போல் அலுப்பில்லாமல் வெளியேறி விடுவார்.

இவருடைய இந்தக் “கஞ்சல்” போக்கு அவருடைய பெண்டாட்டிக்கோ அன்றி பிள்ளைகளுக்கோ ஏன்? வீட்டு வேலைக்காரனுக்குக் கூட சிறிதளவும் பிடிப்பதில்லை.

அன்று அவருடைய கூரை வீட்டு ஓலைமட்டை இறந்ததனால் மழைநீர் ஒழுகத் தொடங்கியது. எனவே வீட்டை வேய்வதற்கு ஒலை மட்டை வாங்குவதற்காக மட்டக்களப்பு ரவுனுக்குச் சென்றார்.

அங்கு எல்லா இடமும் அலைந்தார். ஆனால் அங்கு ஐம்பது ரூபாவுக்குக் குறைய மட்டையே கிடைக்காததால், மனமுடைந்த கந்தையா அண்ணனுக்கு குருநாகலுக்குச் சென்றால் மலிவாக ஓலை மட்டை வாட்டை வாங்கலாம் என்று ஒரு எண்ணம் உதித்தது.

அவ் எண்ணத்தை அவர் மனைவியிடம் எடுத்துக் கூறினார். அவளோ ‘போக வேண்டாம்’ என்று எவ்வளவோ தடுத்துரைத்தும் கேளாமல் கொழும்பு மினி பஸ்ஸில் எறி குருநாகளுக்குர் சென்றார்.

குருநாகலில் நூற்றி இருபத்தைந்து ரூபாவுக்கு ஓலை மட்டையை ஒருவாறு வாங்கிக் கொண்டு அதை லொறி ஒன்றின் மேலே போட்டுக் கொண்டு வீட்டை நோக்கி வந்தார்.

வரும் வழியில் ஓலை மட்டையை அவதானித்த போது அது காற்றில் அடிக்கப்பட்டு, ஓலைகள் கிழிந்து வெறும் ஈர்க்குகளே தெரிந்தன. இதனால் மனமுடைந்த கந்தையா அண்ணன் அவ்விடத்திலிருந்து அம்மட்டைகளை கிழியாமல் கொண்டு செல்லும் நோக்கில் மாட்டு வண்டி ஒன்றில் ஏற்றிக் கொண்டு வந்தார்.

மாடு மிக மெதுவாக வந்ததினால் இடை நடுவில் பொழுது நன்றாக இருட்டி விட்டது. எனவே அன்றிரவை எங்கேயாவது தங்கிச் செல்ல வேண்டி இருந்தது.

ஹோட்டலில் தங்குவதாயின் அதிக செலவு வரும் என்றெண்ணியவர், அருகில் உள்ள வீடொன்றில் தங்குவதற்கு திட்டமிட் டார்.

அருகில் உள்ள வீட்டிற்கு சென்று, நடந்த நிலைமையைக் கூறி இன்றிரவு படுப்பதற்கு இடம் தருமாறு கேட்டார். அதற்கு அவ்வீட்டுக்காரர்கள் “இங்கு குமர்ப்பிள்ளைகள் இருக்குதுகள் அதனால் இடம் தர இயலாது” என்று கூறினார்கள்.

‘சரி’ என்று கூறிக் கொண்டு இப்படியாகப் பல வீடு ஏறி இறங்கினார் கந்தையா அண்ணன். ஆனால் எல்லா வீடுகளுமே ‘குமர்’ இருக்குது. இடம் தர இயலாது என்ற வார்த்தையே வந்தது.

இப்படி, ஒவ்வொரு வீடாகக் கேட்டு அவத்த நிலையில் ‘ சண் டியன்’ சின்னத்தம்பியின் வீட்டுக்குச் சென்ற கந்தையா அண்ணன் நேரடியாகவே சின்னத்தம்பியிடம் ‘குமர் இருக்க’ என்று கேட்டார்.

அதற்கு சின்னத்தம்பியோ ‘ஏன்’? என்று கேட்க கந்தையா அண்ணன் ‘படுக்க’ என்று வார்த்தைகளைச் சுருக்கிக் கூறினார்.

இதைக் கேட்ட சின்னத்தம்பிக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கந்தையாவின் கால் முறியும் வரைக்கும் அடித்தார். மறுநாள் ஒற்றைக் கால் உடைந்த நிலையில் வீட்டை அடைந்தார் கத்தையா, வீட்டில் மனைவியிடம் நடந்தவற்றை கூறினார் கந்ததையா. இதைக் கேட்ட கந்ததையா அண்ணனின் பெண்டாட்டி. “எங்கெண்டாலும் போய்த் துல” என்ற பேசினாள்.

மனமுடைந்த கந்தையாண்ணன் “இனி இந்த உலகத்தில இருக்கிறதில்ல தற்கொலை செய்து சாகுவம்” என்ற எண்ணத்தில் தனது மகளை அழைத்து “மகளே தான் தற்கொலை செய்து சாவம்” என்றார்.

அதற்கு மகளோ “சந்தோஷமாக சாகுங்க” என்றாள்.

மேலும் மனமுடைந்த அவர் இறுதியாக வீட்டு வேலைக்காரனிடமாவது சொல்லிப் போட்டு போவம் என்ற எண்ணத்துடன் வேலைக்காரனை அழைத்து-

“நான் சாகப் போகிறன்” என்றார், வேலைக்காரன் “என்ட ஐயா…” (என்று சோகமாகக் கத்தி} “சந்தோஷமாசு போயிற்று வாங்க”‘ (சாதாரணமாக) என்று கூறினான்,

மேன்மேலும் மனமுடைந்தவர் தற்கொலை செய்வதற்காக ரயில் வரும் தண்டவாளங்களை நோக்கி நடந்தார்,

சிறிது நேரம் நின்று சிந்தித்தவர், ‘ஏன் நான் தற்கொலை செய்ய வேண்டும்” என்ற எண்ணம் வரவே மீண்டும் வீட்டை நோக்கி நடந்தார்.

வீட்டுக்கு வந்தவர் சாப்பாட்டு மேசைக்குக் கீழே குத்தி ஒளித்துக் கொண்டார். பசி அவரது வயிற்றைப் பிடுங்கிக்கொண்டிருந்ததுv.

சிறிது நேரத்தின் பின் தாயும் மகளும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டு பாண் சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிடும் போது பாணில் காணப்படும் வண்டுப் பகுதிகளைப் பிய்த்து பிய்த்து கீழே வீசிய வண்ணம் சாப்பிட்டனர்.

பசியினால் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த கந்தையா அண்ணன் அவ்வண்டுப் பாண் துண்டுகளை ஏன் வீணாக்குவான் என்று நினைத்து அவற்றைப் பொறுக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இதை எப்படியோ கண்டு விட்டாள் கந்தையா அண்ணனின் மனைவி, துள்ளி எழுந்தாள் ஆவேசம் கொண்டவளாய். அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை,

“இனி இந்தப் ‘பிசின்’ வேலை செய்யமாட்டேன்” என்று பெண்டாட்டியின் காலைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவள் காலால் ஓங்கி அடிக்காமல் இருப்பதற்காகப் போலும்.

– ஓ.கே.குணநாதன் நகைச்சுவை கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1993, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *