ரயிலில் இருந்து இறங்கும்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. அடக்க முடியவில்லை. இந்த டக்கீலா கருமத்தை இரவு அடிச்சாலே இதே பிரச்சினை தான். அவதானமாக இருந்திருக்கவேண்டும், இருக்கத்தான் டக்கீலா விடவில்லையே! காலையிலேயே ஒரு மாதிரி மார்க்கமாக தான் இருந்தது. கொஞ்சம் இஞ்சி போட்டு கோப்பி குடிச்சதால அவ்வளவு தெரியவில்லை. ஆனால் ரயில் ஜோலிமொன்ட் ஸ்டேஷன் கடக்கும் போது வயிறு கொஞ்சம் மக்கர் பண்ண தொடங்கியது. அட இதெல்லாம் நமக்கு சாதாரணம் என்று அதை பற்றியே யோசிக்காமல் பாட்டு கேட்டுக்கொண்டு வந்ததில் ஒருமாதிரி சமாளித்தாயிற்று. மெல்போர்ன் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கும்போது புரிந்துவிட்டது. இன்றைக்கு சங்கு தான்.
அலுவலகத்துக்கு பதினைந்து நிமிடங்கள் நடக்கவேண்டும். இந்த வயிற்றோடு தாம் தாம் என்றும் நடக்கமுடியாது. கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும். நின்று அடக்கிப்பார்த்துவிட்டு போகலாமா? வேண்டாம் யோசிக்காதே. அதைப்பற்றி யோசிப்பது தான் எமன். ஏதாவது பாட்டு. ம்ஹூம். புத்தகம். ஆ, புத்தகம் பற்றி யோசிக்கலாம். என்ன புத்தகம். “The Namesake”? சுத்தம்! இந்த நேரத்தில அந்த புத்தகத்தை எல்லாமா யோசிப்பது? “Too Perfect” , போன வாரம் வாசித்த புத்தகம். உணர்வுகளை கட்டுப்படுத்தலை எத்தனை அழகாக சொல்கிறது. “When being in control gets out of control…” அய்யய்யோ, இப்ப நான் என்ன கன்ட்ரோல்ல இருக்கிறேன்? ஷிட், எது யோசிச்சாலும் அங்க தான் போய் நிற்கிறது. அட, அவசரத்திலேயும் என்ன “சுத்த தமிழ்” வேண்டி இருக்கு? “நிக்குது”. என்னப்பா இது! ஒண்டையும் யோசிக்கவேண்டாம். முதலில் ஆபீஸ் போவம். முருகப்பெருமானே அது வரைக்கும் என்னோட கக்கூசை கட்டுப்படுத்தும் வரம் தா. அடுத்த நல்லூர் தேருக்கு காவடி தூக்கிறேன்!
அலுவலகம் வந்துவிட்டது. கால்களை ஒருக்களித்தே ஒரு மார்க்கமாக நடந்தபடியே உள்ளே நுழைகிறேன். ரிசப்ஷனில் இருந்த பெண் சிரித்தாள். பதிலுக்கு சிரித்துவிட்டு எதுவுமே காட்டிக்கொள்ளாமல் கொஞ்சம் மெதுவாகவே நடந்தேன். கக்கூஸ் இடது பக்க மூலையில் இருந்தது. திரும்பும்போது தான் ஜிம் எதிரே வந்தான்.
“Hey maite … how are ya?”
இந்த ஆஸ்திரேலியர்கள் தொல்லை தாங்க முடியாது. எங்கே கண்டாலும் “How are you?” சொல்லுவார்கள். பற்றாக்குறைக்கு “mate” என்பதை “maite” என்று உச்சரிப்பார்கள். அது புரிவதற்கே எனக்கு ஆறு மாசம் எடுத்தது. எது சொன்னாலும் பதிலுக்கு ஒரு “Thanks” சொல்லி வைப்பார்கள்.
“I am good .. Jim … yourself?”
“I am great … Thanks, How was your weekend…?”
அடடா weekend பற்றி விசாரிக்க ஆரம்பித்துவிட்டான். இவனுக்கு பதில் சொல்லி, பதிலுக்கு இவன் weekend இல் என்ன செய்தான் என்று கேட்பதற்குள் இங்கேயே ஆய் போய் விடும்! வெட்ட வேண்டியது.
“Sorry Jim, I gotta make an urgent call.. catcha in a while”
“No worries maite ..…”
ஜிம் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும் முன்னரேயே கழிப்பறை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஓடும்போது தான் லேப்டாப் பை இன்னமும் தோளில் கிடந்தது ஞாபகம் வர, அட லாப்டாப் பையுடன் கக்கூசுக்குள் போனால், அத்தனை அவசரமா என்று எல்லாரும் சிரிப்பார்களே என்று துணுக்குற்றேன். ம்ஹூம், வேகமாக என் காபினுக்கு திரும்பி வந்து பையை வைக்கும் போது தான் பார்த்தேன். பக்கத்தில் பீட்டர் உட்கார்ந்திருந்தான். அடடா ..இவனா, தொடங்கினால் நிறுத்தமாட்டானே!
“Hey buddy … How’s thing? Had a great weekend?”
“Was cool Peter …. Excuse me mate… I really have to make this call urgently”
பீட்டர் என்ன பதில் சொன்னான் என்பதை கேட்கும் நிலையில் நான் இல்லை. மெதுவாக ஆனால் வேகமாக கக்கூஸ் நோக்கி நடந்தேன். ஓடினேன் என்று தான் சொல்லவேண்டும். கதவை திறந்தபோது தான் பெருத்த நிம்மதி வந்தது. அப்பாடா ஒருவரும் உள்ளே இல்லை. மொத்தமாக ஐந்து அறைகள் காலியாக இருந்தது. நேரே வரிசையில் கடைசியில் இருந்த அறைக்கு ஓடினேன். திறந்து பார்த்தால் யாரோ ஒரு நாதாரி பயல் டாய்லெட் சீட்டை மடிக்காமல் ஒன்றுக்கு போயிருக்கவேண்டும். சீட் முழுதும் மஞ்சள் நிறத்தில் திட்டு திட்டாய் ஈரம். இவர்கள் எல்லாம் எப்படி பெண்கள் இருக்கும் வீடுகளில் வாழ்கிறார்களோ தெரியாது. ஒன்றுக்கு போகும்போது சீட் தூக்கி விட்டு தான் போகவேண்டும் என்று கூட தெரியாதவனுக்கு எல்லாம் எப்படி இங்கே வேலை கிடைத்தது? அது சரி, இண்டர்வ்யூ என்றால் மினுக்கிக்கொண்டு பேசத்தேரிந்தவர்கள் தானே!
எந்த ஒரு பொது கக்கூஸ் அறைகளிலும் முதலாவதாக இருக்கும் அறைக்கு தான் போகவேண்டுமாம். உளவியல் ஆராய்ச்சிப் படி பொதுவாகவே எல்லோரும் கடைசியில் இருக்கும் அறையை தான் நாடுவார்களாம். அதனால் அது அசுத்தமாகவும், முதலாவது அதிகம் பாவிக்கப்படாமல் சுத்தமாகவும் இருக்குமாம். அந்த அவசரத்திலும் எங்கோ வாசித்தது மூளையில் புலப்பட, உடனடியாக, வரிசையில் முதலாவதாக இருந்ததுக்கு ஓடினேன். சுத்தமாக இருந்தது. டிஷு உருண்டையும் புதுசாக இருக்க, சீட்டை விரித்து அதை சர சரவென்று இழுத்து சீட்டில் இன் மீது கவனமாக விரித்தேன். அப்படியே திரும்பி, ஜீன்ஸை இறக்கி ஆயாசமாய் உட்காரும்போது தான் போது அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ச்சே யாரோ வந்துவிட்டான்!
யாராக இருக்கும்? மெலிதான விசில் சத்தம். நான் இருக்கும் கக்கூஸ் கதவிடுக்கால் வெளியே பார்க்கலாம். வெளியில் இருந்து பார்த்தால் உள்ளே தெரியுமா? இந்த நிலையில் என்னை பார்த்து விடுவானா? இதை எல்லாம் கட்டும்போது கவனிக்கமாட்டார்களா? சரி, யார் தான் வந்தவன்? இந்த விசில் எங்கேயோ கேட்ட விசில் ஆச்சே! கதவிடுக்கினை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தேன். கலிங்கத்து சிறையில் அகப்பட்டிருந்த கருணாகரபல்லவன், சிறை நடமாட்டங்களை, தான் தப்புவதற்காக உன்னிப்பாக கவனித்துக்கொண்டு இருந்தது தான் ஞாபகம் வருகிறது. கூடவே இருந்த கூலவாணிகனின் அசட்டை ஆச்சரியாமாய் தோன்றியது. அவனைப்போய் எப்படி சோழர் ஒற்றனாக நியமித்தார்கள்? அட கருமமே! கக்கூஸில் இருக்கும் போது கடல்புறாவா? மற்றவனும் இப்படித்தான் ஆய் போகும் போது ஏறுக்கு மாறாக சிந்திப்பானா? இடுக்கினூடாக பார்க்கும் பொது அந்த ஆள் கடந்து போவது தெரிந்தது. கடவுளே இது அதே ஜிம் தான். சந்தேகமேயில்லை. இவன் ஏன் இங்கே வந்தான்? நான் இருக்கும் நேரம் பார்த்து தான் வரவேண்டுமா? எனக்கு தான் யாராவது அருகில் இருப்பது தெரிந்தால் ஒன்றுமே போகாதே! பக்கத்து அறைக்கு தான் போகிறான். ஐயோ இவனுக்கு நான் இங்கே இருப்பது வேறு தெரிந்திருக்குமோ? நான் கக்கூஸ் போகும்போது டர் புர் என்று சத்தம் வந்து அவன் கேட்டுவிட்டால்? ஐயோ அவமானமாய் போய்விடுமே! ஆண்டவா ஏன் இப்படி மீண்டும் மீண்டும் என்னை சோதிக்கிறாய்?
இரண்டு காதுகளையும் தீட்டிக்கொண்டேன். ஜிம் அவசர அவசரமாக அவன் டாய்லட் சீட்டினை டிஷ்ஷு பேப்பரால் துடைக்கும் சத்தம் கேட்கிறது. ம்ம்ம் வெள்ளைக்காரன், வெட்கம் மானம் இல்லாதவன். பக்கத்து கக்கூஸில் ஒருத்தன் இருக்கிறான் என்ற விவஸ்தை இல்லாமல் கர் குர் சத்தத்தோடு சிவனே என்று போவான். அட அவனுக்கு எப்படி சிவனை தெரியும்? கக்கூஸில் எதுக்கு கடவுளை நினைக்கிறேன்? ஆக்கப் பொறுத்தவன், ஆறப்பொறுப்பது தான் உசிதம். ஜிம் முடித்துவிட்டு போகட்டும். இரவு வேறு டக்கீலாவுடன் பப்பாளி பழம் சேர்த்து சாப்பிட்டது. நாற்றத்தில் கண்டுபிடித்துவிடுவான். கொஞ்சநேரம் தான், அடக்கிவிடலாம். ஆனால் ஜிம் நான் இருப்பதை சட்டை செய்வதாய் தெரியவில்லை. அவன் பாட்டுக்கு யேசுவே என்று போய்க்கொண்டு இருந்தான். அவன் சப்பாத்து கூட மர அடைப்புக்கு கீழால் தெரிந்தது. அடிடாஸ் பிராண்ட். இவனுக்கு எவ்வளவு சம்பளம் வரும்? என்னை விட அதிகம் தான். என் சப்பாத்தின் பிராண்ட் எனக்கே தெரியவில்லை. சப்பாத்தை கொஞ்சம் உள்ளே இழுத்துக்கொண்டேன். ஏன்தான் இந்த கக்கூஸ் பக்கத்து மர அடைப்புக்கு கீழே இத்தனை இடைவெளி விடுகிறார்களோ!
எனக்கு இதற்கு மேல் அடக்க முடியவில்லை. கொஞ்சம் வியர்க்கவும் ஆரம்பித்துவிட்டது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவதை வீரம் என்கிறார்கள். இதை எவன் அடக்க முடியும்? நான் வீரனா கோழையா? வேண்டாம். இன்னும் கொஞ்சநேரம் தான். ச்சே ஜெஸ்ஸி தான் என்னை தவிக்கவிடுகிறாள் என்றால் ஜிம் கூடவா! மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்! பேசாமல், வெட்கம் பார்க்காமல் ஆய் போய் விட்டால் தான் என்ன? ஐயோ வேண்டாம் இந்த விஷ பரீட்சை! எனக்கென்று அலுவலகத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. அவமானமாக இருக்கும். இத்தனை அடக்கிவிட்டு இனி ஆய் போனால் சத்தம் வேறு இன்னும் பெருத்து கேட்கும். அப்புறம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனை பார்ப்பது. வேண்டாம். மனிதனாய் பிறந்தால் எப்போதும் dignity மிக முக்கியம்.
ஜிம் முடித்துவிட்டான். வெட்கம் கெட்டவன். இப்படியா ஒருத்தன் கக்கூஸ் போகும்போது சத்தம் போடுவது? அது வேறு அந்த நாற்றம் நாறுகிறது. என்ன கருமத்தை நேற்று சாப்பிட்டானோ! இருந்து முடித்த ஆயாசத்தில் பெருமூச்சு வேறு. ச்சே நாடு விட்டு நாடு வந்து நிமமதியாய் கக்கூஸ் கூட போகமுடியாத நிலைக்கு போய்விட்டென். ஆ, டிஷ்யூ உருண்டை உருளும் சத்தம். இனி போய் விடுவான். சப்பாத்தும் அசைகிறது. போடா ராசா போடா.
புறப்பட்டு விட்டான். இன்னும் முப்பது செகண்ட்ஸ் தான். கையை கழுவி, துடைத்துவிட்டு போய்விடுவான். இனி ஒருத்தரும் இல்லை. நிம்மதியாய் போகலாம். பத்து செகண்ட்ஸ் தான். பத்து, ஒன்பது, எட்டு, ஏழு, ஆறு, ஐந்து, ஒன்று! ஜிம் கதவு திறக்கும் சத்தம் கேட்க, அப்பாடி இனி வாழ்க்கையில் நிம்மதி. ஆயாசமாய் கண்ணை மூடிக்கொண்டு ஆய் போகலாம் என்று ரெடியாகும் போது தான் புதிதாக ஒரு பேச்சு குரல் கேட்டது.
Hi Jim, how are ya?
Great Thanks .. Yourself Peter?
ஐயோ பீட்டரா? எண்ட கடவுளே!
பிற்குறிப்பு: இந்த கதையில் காட்டப்படும் உணர்வை Parcopresis என்று உளவியல் நிபுணர்கள் அழைப்பார்கள். பக்கத்தில் யாராவது இருந்தாலோ, இருப்பது போல பிரமை கொண்டாலோ அவர்களால் இயல்பாக இயற்கை கடன்களை கழிக்கமுடியாது. இது பற்றிய மேலதிக விவரங்களுக்கு!
http://en.wikipedia.org/wiki/பர்கோப்றேசிஸ்
– ஜனவரி 10th, 2012