“நாராயண… நாராயண…”
என்றவாரே நுழைந்த நாரதரை யாரும் கண்டுகொண்டதாய்த் தெரியவில்லை. சிவன் ஐஃபோன் 8-இல் பூலோகத்து அப்டேட்ஸ் பார்த்துக்கொண்டிருக்க, இன்னொரு ஐஃபோன் 8-இல் பார்வதி வாட்ஸ்ஆப்பில் எதையோ அவசர அவசரமாக அனுப்பிக்கொண்டிருக்க, வினாயகரும் முருகரும் ஆளுக்கொரு ஐஃபோன் 8-இல் ‘கிரிட்டிக்கல் ஆப்ஸ்’, ‘கிளாஷ் ரொயேல்’ விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்ட நாரதர் “மாம்பழத்திற்காக சண்டைவந்த குடும்பம் ஆப்பிளை வைத்துக்கொண்டு ஒற்றுமையாக இருக்கிறதே!” என்று எண்ணியவாரே மீண்டும் “நாராயண… நாராயண..” என்றார்.
“ஓ வந்துட்டியா.. வா வா” என்பதுபோல் சிவன் லேசாகத் தலையைத் தூக்கிப்பார்த்துவிட்டு மீண்டும் ஐஃபோனில் கண்களைச் செலுத்தியவாரே, “வாரும் நாரதரே! இப்போது என்ன செய்யப்போகிறீர்?” என்றார்.
“நான் இப்போது கொண்டுவந்திருக்கும் செய்தியைக் கேட்டால் தங்கள் கையிலிருக்கும் ஐஃபோன் 8-ஐ அப்படியே தூக்கிப் போட்டுவிட்டு என் பின்னாலேயே வந்துவிடுவீர்கள்.”
பரமேஸ்வரன் இப்போது நன்றாகவே தலையை நிமிர்ந்து நாரதரை உற்றுப் பார்த்தவர் “நாரதா ஏன் சோர்வாகக் காணப்படுகிறாய்? உன் கண்களெல்லாம் சிவந்திருக்கின்றனவே?”
“அதைத்தான் சொல்ல வந்தேன் ஐயனே! நம்ம திருமாலுக்கு ஐஃபோன் 8 சலித்துப் போய்விட்டதாம். அதனால் புதிதாய் ஏதாவது வந்திருந்தால் சொல்லேன் என்றார். தேடிப்பார்த்ததில் ஆர்ச்சர்டு ரோட்டில் மிக நீண்ட வரிசை இருந்தது. அதில் போய் நானும் நின்றுவிட்டேன்”
“நீளவரிசை என்றால் போய் நின்றுவிடுவாயா? என்ன ஏதென்றெல்லாம் கேட்கமாட்டாயா?”
“கேட்கவேண்டிய அவசியமேயில்லை மகேஸ்வரா. சிங்கப்பூரில் எங்காவது நீண்ட வரிசையைக் கண்டால் கண்ணை மூடிக்கொண்டு கடைசியில் நின்றுவிடலாம். ஏனெனில் சிங்கப்பூர்வாசிகளுக்கு எங்கு நல்ல பொருள் கிடைத்தாலும் காலநேரம் பார்க்காமல் வரிசையாக நின்றுவிடுவார்கள். அதனால் நின்றபிறகு கேட்டுக்கொள்ளலாம்”
“நேற்று மாலை 6 மணிக்குச் சென்று வரிசையில் நின்ற நான், இன்று காலை சுமார் 11 மணிக்குத்தான் ஒரு ஐஃபோன் எக்ஸை வாங்கிக் கொடுத்துவிட்டு அந்த நல்ல செய்தியை தங்களுக்கும் தெரிவிக்கலாம் என்று ஓடோடி வந்திருக்கிறேன் மகாதேவா!”
“வாங்கியதுதான் வாங்கினாய் எனக்கும் சேர்த்து ஒன்று வாங்கிவர வேண்டியதுதானே?” எனப் பரம்பொருள் உரைக்க, உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சகதர்மிணி முறைக்க, “…எங்களுக்கும் வாங்கிவர வேண்டியதுதானே என்றேன்.” என்றார் அசடு வழிந்துகொண்டே! “ஐஃபோன் எக்ஸ்-இல் அவ்வளவு என்ன விசேஷம்?”
“தென்னாடுடையோனே! சொல்கிறேன் கேளுங்கள். இது தாங்கள் தற்போது வைத்திருக்கும் ஐஃபோன் 8-ஐ விட மிகவும் எடை குறைவு. அதோட திரைதான் மாஸ்சு. கீபேட் கிடையாதாம்! காமிராவில் அனிமோஜி வேற இருக்காம். கட்டைவிரலை அடையாளம் வைத்து ரகசியம் காப்பதெல்லாம் பழைய கதை.”
“…..தூங்கும்போது என் கட்டைவிரலால என் பாதியுடலாள் ஐஃபோன் 8-ஐத் திறந்து என்னோட பர்சனல் மெசேஜஸப் பார்த்துடறா.” என ரகசியமாய் நாரதரின் காதில் புலம்ப,
“அதற்காகத்தான் ஐயனே ஓடோடி வந்தேன். நம் கஷ்டம் நமக்குத்தானே புரியும்! ஐஃபோன் எக்ஸ் உங்கள் முகத்தை ஸ்கேன் பண்ணிடுமாம். உங்கள் முகம்தான் பாஸ்வர்டாம்.”
“நீங்கள் தூங்கும்போது உங்கள் முகத்தைக் காட்டித் திறந்து யாரும் உபயோகப்படுத்த முடியாது. நீங்கள் கண்திறந்தால்தான் காரியம் ஜெயமாகும்.”
“இதற்காகத்தான் காத்திருந்தேன். நானே உடனே சென்று வாங்கிவருகிறேன்!” என்று கிளம்பினார் ஆர்ச்சர்டு ரோட்டுக்கு, தோணிபுரத்தான்!