என்னிடம் வாலாட்டாதீர்கள்

0
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 11,559 
 
 

தற்செயலாக அங்கே வந்த சீதாப்பாட்டி, “எங்கே! எங்கே! இப்படித் திரும்புங்கள்,” என்று அப்புசாமியின் தோளைத் தொட்டுத் திருப்பினாள்.

ஜீப்பா, பனியன் இவைகளைக் கழற்றிவிட்டு, தனது தேக காந்தியைக் கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த அப்புசாமி, “ஏய், என்ன இது, ஆட்டு வியாபாரி பிடித்துப் பார்க்கிற மாதிரி கையைப் போட்டு என்னவோ திருகுகிறாயே?” என்றார்.

“என்ன ஆச்சரியம்!” என்றாள் சீதாப்பாட்டி.

“பிரைமரி வாக்ஸினேஷன் தழும்புகூடக் காணோமே. உங்களுக்குக் குழந்தையில் அம்மையே குத்தவில்லையா?”

அப்புசாமி சும்மா இருந்ததிருக்கக் கூடாதா? பெருமிதத்துடன், “குழந்தையில் மட்டுமல்ல, அதற்கப்புறம் இதோ இன்றைய தேதி வரையில் ஒரு அம்மை குத்தற இன்ஸ்பெக்டர் பயலிடம் நான் மாட்டிக்கொண்டது இல்லை!” என்று சொல்லித் தொலைத்து விட்டார்.

அவ்வளவுதான்.

” ஸ்மால் பாக்ஸ் இராடிகேஷனுக்காக ஸ்கீம் மேலே ஸ்கீம் போட்டு, லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து காம்ப்பெய்ன் நடத்துகிறார்கள் ஒருபுறம். இன்னொருபுறம் இந்த மாதிரி இல்லிடரேட்ஸ் அம்மை குத்திக் கொள்ளாததை ஒரு சாமர்த்தியமாக நினைத்துக் குதிக்கிறார்கள்!” என்று பொரிந்து தள்ளி விட்டாள் சீதாப்பாட்டி.

எப்போதோ யாரோ அம்மை குத்திக் கொள்வதைப் பார்த்தே மயக்கமாக விழுந்தவர் அப்புசாமி. “தரைச் சக்கரம் மாதிரி எதையோ வைத்துக் கொண்டு சரக் சரக் என்று அம்மைக்காரன் குடைகிற குடைசலை எவனால் பொறுக்க முடியும்?” என்று உடம்பைச் சிலிர்த்துக் கொண்டார்.

சீதாப்பாட்டி, “பா.மு. கழக பிரசிடெண்டின் கணவர் இன்னமும் தன் ஆயுளில் வேக்ஸினேட் செய்து கொள்ளவில்லை என்றால், எனக்கு அது பெரிய அவமானம் இல்லையா?” என்றாள்.

அப்புசாமி எரிச்சலுடனும், கோபத்துடனும், “கை, யாருடையது, உங்க அப்பனுதா? தாத்தனுதா? என் கைடீ, என் கை,” என்று சொன்ன விதம் சீதாப்பாட்டியையே சிரிக்க வைத்து விட்டது.

கணவனைச் சீண்டும் நோக்கத்துடன் “உங்களுக்கு இப்போது பெரிய கோல்டன் ஆப்பர்சூனிடி,” என்றாள் சீதாப்பாட்டி. “ரஷ்யன் வேக்ஸின் வந்திருக்கிறது. ‘வெரி குட் எ·பக்ட். ரிமார்க்கபிள் ரியாக்ஷன். நீங்கள் சிரமமே பட வேண்டாம். பா. மு. க. வுக்கு இதோ இப்போ சொல்லி அனுப்பினால், அடுத்த நிமிடம், அவர்களே ஏற்பாடு பண்ணி விடுவார்கள். உங்களுக்குச் சகல மரியாதையுடன் அம்மை குத்துவார்கள். அவர்களுக்கும் பெருமை. உங்களுக்கம் சே·ப்டி…”

அப்புசாமி, “தபீல், தபீல், தபீல்” என்று தலை தலையாய்ப் போட்டுக் கொண்டார். “அம்மை குத்திக் கொள்வது என்ன அதிரசமா, மைசூர்பாகா, இப்படி ஓட ஓட உபசரிக்கிறாயே? அம்மைக் குத்துவதற்குப் பதில் என் தலையில் ஓர் ஆணிமை வேண்டுமானாலும் அடி!” என்று சொல்லிக் கொண்டே நழுவி விட்டார்.

சீதாப்பாட்டி இந்தச் சம்பவத்துக்கப்புறம் ‘இதோ வந்து விட்டார்கள் அம்மை குத்த’ என்று அடிக்கடி பயமுறுத்தி வேடிக்கை பார்ப்பது சகஜமாகி விட்டது.

இருந்தாற்போலிருந்து அப்புசாமி, ஷேவிங் செய்து கொண்டிருக்கும்போது, “க்விக்! க்விக்! சீக்கிரம்! சீக்கிரம்! ஐயையோ! அவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஓடுங்கள்,” என்று வாசலிலிருந்து குரல் கொடுப்பாள்.

“சீதே! சீதே! ஐயோ, நான் என்ன செய்யட்டும்?” என்று அப்புசாமி, ஷேவிங் செட், தண்ணீர், கண்ணாடி எல்லாவற்றையும் மேஜை டிராயரில் போட்டு மூடிவிட்டுக் குடுகுடுவென்று இங்கும் அங்கும் ஓடி, ஒரு வழியாக ஸ்க்ரீன் மறைவில் போய்ப் பதுங்கிக் கொள்வார்.

ஒரு நிமிடமாகும், இரண்டு நிமிடமாகும், ஐந்து நிமிடமாகும். முகத்தில் அப்பிக் கொண்டிருந்த சோப் உலர்ந்தது அப்புசாமியின் மோவாய்ச் சதையை உறிஞ்சப் பார்க்கும். ‘என்னது, பீடைகள் இன்னமா வரவில்லை?’ என்று நினைத்தபடி மெதுவான ரகசியக் குரலில், “சீதே… சீதே…” என்று கூப்பிட்டார்.

சீதாப்பாட்டியிடமிருந்து கலகலவென்று சிரிப்புத்தான் வரும்.

ஸ்கிரீனுக்கு இந்தப் புறமாக வந்து எட்டிப் பார்த்துக் கொண்டே, “ஐயோ பாவம், ரொம்பப் பயந்து விட்டீர்களா? மை டீப்பஸ்ட் ஸிம்ப்பதீஸ்…ஒருத்தரும் வரவில்லை… வெளியில் வந்து கண்ட்டின்யூ யுவர் ஷேவிங்…” என்று பரிகாசம் செய்வாள்.

அப்புசாமியின் முகத்தில் எள்ளு கொள்ளும் வெடிக்கும். “ஓகோ! இது விளையாட்டா? அந்த விளையாட்டெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதம்மே. எதெதுலே விளையாடுகிறது என்றில்லை?” என்று உறுமுவார். ஆனால் சீதாப்பாட்டி தன் விளையாட்டை நிறுத்தவில்லை, ராஜபாளையத்தான் வரும் வரைக்கும்.

சீதாப்பாட்டி, துணிச்சல்காரிதான். எத்தனையோ நெருக்கடியான கட்டங்களில் அவன் எ·கு மனுஷி மாதிரி நடந்துகொண்டு நிலைமையைச் சமாளித்திருக்கிறாள். ஆயிரம் கீதாப்பாட்டிகளுக்கு அவளால் ஒன்றியாகப் பதில் சொல்ல முடியும். ஆனால் ‘ளொள்!’ என்று ஒரு சின்ன நாய்க் குட்டி விளையாட்டுக்காகக் குரைக்கட்டும், அவள்…

இப்படித்தான் ஒருநாள்.

“ஐயோ, ஐயோ, கதவைத் திறங்கள்…க்விக்! க்விக்!…ஐ அம் இன் டேஞ்சர்!” என்று பா. மு. கழகத்துக்குப் புறப்பட்ட சீதாப்பாட்டி திரும்பி ஓடி வந்து படபடவென்று இடித்தாள். என்னவோ ஏதோ என்று கதவைத் திறந்தார் அப்புசாமி.

“ஓ மை காட்!” என்று வீட்டுக்குள் ஒரே பாய்ச்சல் பாய்ந்து கதவைச் சாத்தினாள் சீதாப்பாட்டி. நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள். “திரெச்சட்பிட்ச்!” அவளுக்கு மூச்சு இரைத்தது.

ஜன்னல் வழியே அப்புசாமி எட்டிப் பார்த்தார். தெரு நாய் ஒன்று தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது.

“ஒன்றையும் காணோமே சீதே! ஒரு பொறுக்கி நாய்தான்…” அப்புசாமி பாதியிலேயே நிறுத்திவிட்டுச் சீதாப்பாட்டியை ஆச்சரியத்துடன் பார்த்தார். ‘நாய்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அவள் உடம்பு ஏன் இப்படி நடுங்குகிறது!

பளிச்சென்று புரிந்தது அப்புசாமிக்கு.

“ஏன் சீதே, நாய் என்றால் உனக்கு?”

“சிம்ம சொப்பனம்,” என்றாள் சீதாப்பாட்டி. “அதுவும், ஒரு ஹைட்ரோ ·போபியா கேஸைப் பார்த்ததிலிருந்து…ப்ளீஸ்…கதவைச் சரியா ‘போல்ட்’ போடுங்கள். விண்டோவையும் சாத்துங்கள்.”

‘விண்டோ’வைச் சாத்துவதோடு விட்டாரா அப்புசாமி? நாய் ஒன்று வாங்கி வருவதென்று அந்த நிமிடமே நிச்சயம் பண்ணி விட்டார்.

மூன்றாம் நாளே முழங்கால் உயரத்துக்கு ஒரு நாய் வந்து சேர்ந்தது. அப்புசாமி குடுகுடுவென்று உள்ளே போனார். பீரோவைத் திறந்தார்.

வெடவெடவென்று உதறல் எடுக்க, சீதாப்பாட்டி பீரோவை மறித்தாள். “நத்திங் டூயிங்..டாக்ஸ் ஆர் ஸ்ட்ரிக்ட்லி ப்ரொகிபிடட்…சும்மாக் கொடுத்தாக்கூட அந்த நாய் இங்கு வரக் கூடாது!” என்றாள்.

அப்புசாமி, “சே, நகரு! இந்த வீட்டுக்கு ஒரு நாய் இருந்தாக வேண்டும்!” என்று வள்ளென்று விழுந்தார். சீதாப்பாட்டி குற்றுயிரானாள்.

எண்ணூறு ரூபாயை நாய்க்காரனிடம் கொடுத்த அப்புசாமி. “ஆமாம். திடீரென்று நாளைக்கே பட்டையை அறுத்துக் கொண்டு உன் இடத்துக்கு ஓடி வந்துவிடுமோ?” என்று சந்தேக விளக்கம் கேட்டுக் கொண்டார். தூணில்ல கட்டிப் போட்டிருந்த நாயைப் பெருமையோடு பார்த்தான் நாய்க்காரன்.

“மனுஷாள் அப்படிப் பண்ணலாம் சாமி. பொறந்த வீட்டுக்குக் கோபிச்சிகிட்டுப் போகிற பொண்சாதி அப்படிப் பண்ணூவா சாமி. ராஜா, சாதி நாய்…இதோ, இப்ப காட்டறேனே, பாருங்கள். இவ்வளவு நாள் வளர்த்தேனில்லே. இப்ப நீங்க இதை வாங்கிட்டீங்க. ஒரு பிஸ்கட் இருக்குதா?…”

“ஓ…”

நாய்க்கு பிஸ்கட்டைக் கண்டதுமே மூக்கில் மட்டுமல்ல, முகம்பூரா வியர்த்தது. வாலை ஆட்டிற்று.

நாய்க்காரன் சொன்னான்: “நீங்க இப்போ இதுக்கு இந்தப் பிஸ்கட்டைப் போடுங்க. என்னைக் கை சாடை காட்டி, ‘அஸ்க்’ குணு சொல்லிப் போடுங்க. அது பண்ணற காரியத்தைப் பாருங்க.”

அப்புசாமி பிஸ்கட்டை வீசிப்போட்டு ‘அஸ்க்’ என்று நாய்க்காரனைக் காட்டினார். காஸ் ஸிலிண்டரின் மீது ஸீல் இருக்கும் அதை இழுத்துத் திறக்க ஒரு கயிறு இருக்கும்.

உங்கள் பலத்தையெல்லாம் காட்டி கயிறை இழுத்தால் கயிறு அறுக்குமே தவிர மூடி திறக்காது. முழிப்பீர்கள். கயிறை வளையத்தின் படுக்கை வசமாக வைத்துச் சற்று முன்னுக்கு இழுத்தால் மூடி திறந்து கொள்ளும்.

(இந்தக் குறிப்பு விளக்கமாக இல்லையென்றால் உங்களுக்கு ஒரு இழவும் சுலபமாக புரியாது என்று அர்த்தம்.)
 

அடுத்த கணம் அது பிஸ்கட்டை லபக்கென்று மின்னல் வேகத்தில் விழுங்கிவிட்டு, நாய்க்காரனைப் பார்த்து, வள்…வள்…வார்ற்…வார்…” என்று பெரிதாக உறுமியது.

“பார்த்தீர்களா…இப்ப இது என்னையே விரட்டுது. நீங்க எஜமானன்னு அதுக்குத் தெரிஞ்சிகிட்டுது…ஒரு வினாடியிலே தெரிஞ்சிகிட்டுது…” என்றவன், கண்வ மகரிஷி பாணியில் புலம்பலானான். “கண்ணுக்குக் கண்ணா ராஜாவை வளர்த்தேனுங்க…என் புள்ளையை ஒப்படைக்கிற மாதிரி ஒப்படைக்கிறேங்க. ஜாக்கிரதையாக வளருங்க. இனி இதுக்கு நீங்கதான் எல்லாம். வர்ரேன் சாமி. நல்லாக் குளிப்பாட்டுங்க. எட்டுலே பத்திலே டாக்டருங்ககிட்டே கூட்டிப்போய்க் காட்டுங்க, நோக்காடு சீக்காடு இருக்குதாண்ணு. எண்ணூறு ரூபாய் பொருளாச்சிங்களே…வரட்டுங்களா…வர்ரேன்…சாமி…”

நாய்க்காரன் தலை மறைந்ததும், பஸ்மாசுரன் தான் வாங்கின வரத்தைச் சோதிக்க அவசரப்பட்டதுபோல் அவசர அவசரமாக ஒரு பிஸ்கட்டைச் சீதாப்பாட்டி பக்கம் தூக்கிப்போட்டு ‘ராஜா, அஸ்க்!’ என்று கை காட்டினார் அப்புசாமி.

அடுத்த கணம் ராஜா, “ஊர்…வள்! வள்! வெள்! வெள்!” என்று சீதாப்பாட்டியை ‘டாவு’ கட்டியது.

சீதாப்பாட்டி, “ஐயோ, இதைக் கூப்பிடுங்களேன், கூப்பிடுங்களேன்,’ என்று அலறியவாறு நாற்காலியில் ஏறிக்கொண்டாள்.

யானையை வரவழைத்து வள்ளியை மிரட்டிய முருகக் கிழவர் மாதிரி, அப்புசாமி, “ஹி! ஹி! ஹி!” என்று பெரிதாகச் சிரித்தார்.

பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்தாள் சீதாப்பாட்டி.

நாய் வந்து நாலுநாள் இருக்கும். அப்புசாமி, ஆகா! கல்யாணம் செய்து கொண்டால் ஒரு நாயைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்! என்ன விசுவாசம், என்ன அறிவு!’ என்று வியந்தார்.

அவரைக் கண்டால் அது வாலை யாட்டும். சீதாப்பாட்டியைப் பார்க்கிற போதோ, வாலை ஆட்டிக் கொண்டு சண்டைக்கு வருவது போல் உறுமும்.

அப்புசாமி அதைச் செல்லமாக, ‘அடே! எண்ணூறு!’ என்று தான் கொடுத்த விலையைக் குறிப்பிட்டே கூப்பிடுவது வழக்கம்.

ஒருநாள் சீதாப்பாட்டி, பரபரப்புடன் அப்புசாமியிடம் வந்து, “ஐயையோ…தே ஹாவ் கம்…தே ஹவ் கம்…” என்று கையைப் பிசைந்தாள்.

“யார் கம்மினாலென்ன, யார் கோயினால் என்ன?” என்றார், நடு வீட்டில் நாயைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த அப்புசாமி.

“அம்மை குத்துவதற்கு வந்துவிட்டார்கள், எங்கள் கழகத்திலிருந்து. அடுத்த தெருவில் ஸ்மால் பாக்ஸ் அட்டாக் ஆகி இருக்கிறதல்லவா? வீடுவீடாக ஏறி வருகிறார்களாம். எனக்கே அவர்கள் ப்ரோக்ராம் தெரியாது. நீஜம்மா ப்ளீஸ்…நிஜம்மா…ஷ்யூர்…ஷ்யூர்…நான் ஒன்றும் அவர்களுக்கு இன்·பார்ம் செய்யவில்லை…” என்றாள்.

குளியலை உத்தேசித்துக் குழாயில் கட்டிப் போட்டிருந்த நாயை அப்புசாமி அவிழ்த்தார். “ஓகோ, அவ்வளவுக்கு வந்துவிட்டாயா நீ? எண்ணூறு ரூபாய் செலவு பண்ணி எதற்கு இது வாங்கியிருக்கிறேன்…டேய் எண்ணூறு! அடே எண்ணூறு! அஸ்க்! கிழவியை அஸ்க்!” என்று ஒரு பிஸ்கட்டைப் போட்டார்.

‘எண்ணூறு’ வள் வள் வள் என்று பயங்கரமாகக் குலைத்தவாறு சீதாப்பாட்டியை விரட்டியது.

பாட்டி பின்னடைந்த வேகத்தில் செம்பு தடுக்கிவிட்டு டமால் என்று விழுந்தாள்.

அப்புசாமி, “ஊம்…சீக்கிரம் எழுந்து போய், ஐயோ, என் வீட்டுக்காரர் ஊரிலேயே இல்லை’ என்று சொல்கிறாயா, இல்லை மறுபடியும் விடட்டுமா எண்ணூறை?” என்றார்.

சீதாப்பாட்டி, “ஓ…….வேண்டாம்…வேண்டாம்……ஐயோ, என் கழகத்துக்காரர்களிடம் கழகத் தலைவியாகிய நானே பொய் சொல்வதா? ப்ளீஸ்…ப்ளீஸ்…உங்கள் நல்லதுக்குச் சொல்கிறேன். மேலாகக் குத்தச் சொல்கிறேன். ப்ளீஸ்…” என்றாள்.

அப்புசாமி, ” தங்கத்தாலே சக்கரம் செய்து என் கையில் திருகினாலும் எனக்கு வேண்டாம். போ! எழுந்திரு. விரட்டு…அடே எண்ணூறு! அஸ்க்! கிழவி அஸ்க்!”

சீதாப்பாட்டி வேறு வழியின்றி, “சொல்லிவிடுகிறேன். சொல்விவிடுகிறேன். பொய் சொல்லிவிடுகிறேன்,” என்று எழுந்து முன் ஹாலுக்கு விரைந்தாள்.

பா. மு. கழகத்தின் அம்மை ஒழிப்புப் பிரிவு ஒரு பட்டாளமாக வந்திருந்தது.

“என்ன அது, நாய் குரைக்கிற சத்தம் கேட்டதே… பிரசிடெண்ட் நாய் வளர்க்கிறாரா என்ன?” என்று ஒரு அங்கத்தினள் கேட்டாள்.

“எஸ்…எஸ்…ஐ வாஸ் ஜஸ்ட் பேதிங் இட்…” என்றாள் சீதாப்பாட்டி.

“ஓ…டிஸ்டர்ப் பண்ணிவிட்டோம். மன்னித்துக் கொள்ளுங்கள் பிரசிடெண்ட்ஜி…” என்றவள் இழுத்தாள்.

சீதாப்பாட்டி அதைப் புரிந்து கொண்டு, “ஹப்பி இஸ் அவுட் ஆ·ப் ஸ்டேஷன்…வர இரண்டு நாளாகும். ஐ ஷல் லெட் யூ நோ, அவர் வந்தவுடன்…” என்றாள்.

அப்புசாமி உள்ளிருந்து, ‘அப்படிச் சொல்லு கழுதை,’ என்று வெற்றி மதர்ப்போடு சொல்லிக் கொண்டார்.

வந்தவர்களை அனுப்பிவிட்டு சீதாப்பாட்டி வந்ததும், “தொலைந்ததுகளா சனி,” என்று அப்புசாமி மகிழ்ச்சியுடன் கேட்டார்.

சீதாப்பாட்டி முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டவள் நீங்கள் நாயைக் காட்டி என்னைப் பொய் சொல்ல வைத்துவிட்டீர்களே, திஸ் அட்ரோஷஸ்!” என்றாள்.

“ஆ! பெரிய அரிச்சந்திரிணி! சரிதான் கிட,” என்றார் உரக்க.

“ஐயோ! டோன்ட் ஷெளட்…டோன்ட் ஷெளட். போய்க் கொண்டிருக்கும் அவர்கள் காதில் விழுந்து விடப்போகிறது. பிரசிடெண்டே இப்படிக் கணவனை மறைத்து வைத்துக்கொண்டு பொய் சொல்கிறாள் என்றால் எனக்கு அவமானம்…” “ஆகவே…ப்ளீஸ்…எனக்காக…”

“என்னது உனக்காக?” என்றார் அப்புசாமி.

“நிஜமாகவே பக்கத்தில் ஏதாவது ஒரு ஊருக்கு போய் இரண்டு நாள் இருந்துவிட்டு வாருங்கள். அதிலே இன்னொரு ஸீக்ரட் இன்பர்மேஷனும் எனக்கு வந்தது. அடுத்த தெருவிலே ஒரு கேஸ் கொலாப்ஸ் ஆகிவிட்டதால், இன்னும் இரண்டு நாளைக்கு இந்த இரண்டு தெருவிலும் ரொம்ப ஸிவியராக வெக்ஸினேஷன் ரெளண்ட்ஸ் நடக்குமாம். வேறு யார்கிட்டேயாவது நீங்கள் மாட்டிக் கொள்ளலாம், இல்லையா?” என்றாள்.

அப்புசாமிக்குத் தன் எதிரி சொல்வதிலும் எள்ளு மூக்கத்தனை நியாயம் இருப்பதாகப்பட்டது. இரண்டு நாளைக்குத் தலைமறைவாக இருப்பதென்று தீர்மானம் செய்து வெளியூர் கிளம்பிவிட்டார்.

அப்புசாமி காஞ்சீபுரம் போய் இரண்டு நாள் குட்டித்தங்கல் செய்த பிறகு திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. நாயை விரட்டுவதற்குச் சீதாப்பாட்டி இந்த மாதிரி சூழ்ச்சி செய்து என்னை வெளியூருக்கு அனுப்பியிருப்பாளோ?

நினைக்கவே பயமாக இருந்தது. மறு பஸ்ஸிலேயே சென்னை வந்து சேர்ந்தார்.

எஜமானனை எதிர்கொண்டழைக்க எண்ணூறு ரூபாய் ராஜா எங்கே?

“ஓகோ? வந்தாயிற்றா ஐயா காம்ப் முடிந்து? வெரி க்ளாட் டு வெல்கம் யூ…வெரி க்ளாட்…” என்று சீதாப்பாட்டி சிரித்த சிரிப்பு அப்புசாமியை என்னவோ செய்தது. விஷம் வைத்தே கொன்றிருப்பாளோ?

“எல்லாம் கிடக்கட்டும். எங்கே என் எண்ணூறு? எங்கே என் ராஜா?” என்றார். நாற்புறமும் அவர் கண்கள் தேடின.

“இட் இஸ் தேர் இன் தி பேக் யார்ட். கொயட், ஓகே…கவலைப்படாதீர்கள்,” என்றவள், “உங்களுக்கு?” என்று சிரித்துவிட்டு, “போன் செய்துவிட்டு வந்து காப்பி போடலாமா, இல்லை, காப்பி போட்டுவிட்டுப் போன் செய்யப் போகட்டுமா?” என்றாள்.

“போனா? இப்போது யாருக்கு போன்? எதற்குப் போன்?” என்றார்.

சீதாப்பாட்டி அரைச் சிரிப்புடன், ‘ஓ! நீங்கள் எவ்வளவு லீடிங் பெர்ஸனாலிடி! நீங்கள் ஊரிலிருந்து வந்ததும் அதைத் தெரிவிக்கச் சொல்லி எங்கள் பா. மு. க. எவ்வளவு ஆவலோடு காத்திருக்கிறது தெரியுமா? தே ஆர் ஈகர்லி வெய்ட்டிங் ·பார் யுவர் அரைவல்…வந்ததும் வாக்ஸினேட் செய்ய வேண்டுமாம்,” என்றாள்.

அப்புசாமிக்கு ரத்தம் கொதித்தது. “ஏ, கிழவி, உன்னை என்ன செய்கிறேன் பார்,” என்றவர், “ஏ, எண்ணூறு!” என்று கூவிக்கொண்டு புறக்கடைக்குப் போனார்.

“அஸ்க்! ராஜா! அஸ்க்! துரோகிக் கிழவியை உண்டு இல்லை என்று ஆக்கு சொல்கிறேன். அஸ்க்!” என்றார்.

என்ன ஆச்சரியம்! ராஜா பேசாமல் வாலையாட்டிக் கொண்டு நின்றது.

சீதாப்பாட்டி அப்புசாமியைப் பார்த்து ஒரு பிஸ்கட்டைத் தூக்கிப் போட்டு, ‘அஸ்க்!’ என்றாள்.

அவ்வளவுதான். அடுத்த நிமிடம் ராஜா அப்புசாமி மேல், “ளொள்! ளொள்! ளொள்!” என்று பாயத் தொடங்கிவிட்டது.

அப்புசாமி நிலைகு¨லைந்து போய் “ஏய்! ஏய்! கழுதைஸ! கழுதை! உதைப்பேன்! உதைப்பேன்!” என்று அலறியவாறே மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் வாபஸானார், வாசல் வழியே.

சீதாப்பாட்டி, “வெரி ஸாரி சார்,” என்றாள். “நாய் நன்றியுள்ள பிராணி அல்லவா? இரண்டு நாளாக நான் தானே சோறு போடுகிறேன்? அது என்னிடம்தான் விசுவாசமாக இருக்கிறது. உங்க ‘அஸ்க்’க்கு இனி வேல்யூ இல்லை…” என்று கெக்கலி கொட்டினாள்.

அப்புசாமி, தெருவுக்கே வந்துவிட்டார். அப்புறமும் ராஜா ‘வள்! வள்! வள்!’ என்று தன் முன்னாள் எஜமானனைத் தெருவுக்கு விரட்டியது.

“ஐயோ! அம்மாடி செத்தேனே!” என்று அப்புசாமி பின்னுக்குச் சாய்ந்து விழுவதற்கும், ஏழெட்டுக் கரங்கள் அவரை, “பயப்படாதீர்கள்! பயப்படாதீர்கள்!” என்று தாங்கிக் கொள்ளவும் சரியாக இருந்தது.

அப்புசாமி, “நாய்…நாய்…நாய்…” என்று குழறினார்.

“பயப்படாதீர்கள்…இதோ அதை விரட்டுகிறேன்,” என்று கைத்தடியைச் சுழற்றி ஒருவர் நாயின்மேல் வீசி எறிந்தார்.

‘வீல் வீல் வீல்’ என்று அது கத்திக்கொண்டு வாபஸானது.

அந்தக் கத்தல் அப்புசாமியின் காதில் இன்பத் தேனாக வந்து பாய்ந்தது.

“ஆகா! தக்க சமயத்தில் வந்து காப்பாற்றின உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவேன்? கை கொடுங்கள்” என்றார்.

“நாங்கள் கொடுத்தென்ன பிரயோசனம். நீங்களல்லவா கை கொடுக்க வேண்டும்?” என்று அப்புசாமியின் கையை ஒரு கரம் அன்புடன் பற்றியது.

அப்புசாமி தன்னைச் சூழ்ந்துள்ள கூட்டத்தை இப்போது¡ன் பார்த்தார்.

‘ஆ!’ என்று அடுத்த கணம் அவரிடமிருந்து ஓர் அலறல் புறப்பட்டது.

“சாருக்கு இன்னும் பிரைமரி வேக்ஸினேஷன் கூட ஆகவில்லை போலிருக்கிறதே. இரண்டு நாள் நாம் இந்தத் தெருக்களில் சுற்றி என்ன பிரயோசனம்? தற்செயலாக நாய் துரத்தியதும், இவா நம்மிடம் வந்ததும் எவ்வளவு நல்லதாகப் போயிற்று! அந்த நாய்க்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்!” என்று தொப்பி வைத்துக் கொண்டிருந்த ஒருவர் புன்னகையுடன் கூறிவிட்டு, “வாட்டரை பாயில் பண்ணு…க்விக்…” என்றவர் திருதிருவென்று விழித்த அப்புசாமியிடம், “நாங்கள் கொள்ளைக்காரர்களோ திருடர்களோ அல்ல. ஹெல்த் ஆபீஸர்கள்தான். தெருவில் நின்றபடிக்கே வருகிற போகிறவரை ‘செக்’ செய்து அம்மை குத்திக் கொள்ளாதவர்களுக்கெல்லாம் அம்மை குத்தும் மொபைல் யூனிட்,” என்று அவர் முடிப்பதற்கும், அப்புசாமி, “ஆ!” என்று அலறுவதற்கும் சரியாக இருந்தது.

“துடைக்காதீர்கள், துடைக்காதீர்கள். அவ்வளவுதான். குத்தியாகிவிட்டது நீங்கள் போகலாம்.” என்று விடை கொடுத்தார், அம்மை குத்துகிற இன்ஸ்பெக்டர்.

“தாங்க்யூ இன்ஸ்பெக்டர்,” என்ற குரல் கேட்டது.

அப்புசாமி விழித்துப் பார்த்தார். கணவனுக்காக நன்றி கூறியது சீதாப்பாட்டிதான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *