ஒரு பழைய காலத்துக் கதை உண்டு; ஒரு சமயம் ஒரு பைராகிக்கும் ஒரு பிராம்மணனுக்கும் சண்டை வந்ததாம். பிராம்மணன், ”படவா, ராஸ்கல், காமாட்டி, அயோக்கியா” என்று தெரிந்தவரையில் வைது பார்த்தான். பைராகியோ அவன் பாஷையில், ”ஹி,ஹ¤, ஹை” என்று சரமாரியாய்ப் பொழிந்தான். பிராம்மணனுக்குச் சிறிது நேரத்திற்குள் வசவுகள் ஆகிவிட்டன; சளைத்தவனாகவும் காட்டிக் கொள்ளக்கூடாது. ”அடே! மோர்க் குழம்பே, வெண்கலப் பானையே, கற்சட்டியே, பொடலங்காய்ப் பொரிச்ச கூட்டே, முள்ளங்கிச் சாம்பாரே…!” என்று ஆரம்பித்து அடுக்கினான். பார்த்தான் பைராகி. ”ஏது பேர்வழி, பலே ஆசாமியாக இருக்கிறானே!” என்று மூட்டையைச் சுருட்டிக்கொண்டு நடந்தான்.
சாதாரணமாக மாணவர்கள் எழுதும் கட்டுரைகளில் பெரும் பகுதியும் உபாத்தியாயர்களைப் பரிகசிப்பதாகவே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரண உபாத்தியாயர்களை ஆதரித்து, அவர்கள் கஷ்ட நிஷ்டூரங்களைச் சரிவர எடுத்துச் சொல்ல ஒருவரும் முன்வராமைதான். அவர்களைப் பூராவும் ஆதரித்துப் பேச நான் சக்தியற்றவனாக இருந்த போதிலும் மேற்படி பிராம்மணனின் மோர்க் குழம்பு வரிசையையாவது கைக்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்.
பொதுவாக உபாத்தியாயர்கள், ”அல்ப சந்தோஷிகள், பையன்களை அடிப்பதில் திருப்தி உடையவர்கள், பக்ஷபாதம் நிறைந்தவர்கள்” என்று மாணவர்கள் பலவாறாகத் தூஷிக்கிறார்கள். அவர்கள் பேரில் எவ்விதக் குற்றமும் சொல்வதற்கு நமக்கு அதிகாரமில்லை. தலைப்பாகை வைத்துக் கொண்டுவிட்டால் மட்டும் மனிதனுக்கு சுபாவமாக இருக்கும் குணங்களைக் கைவிடுவது முடியாது காரியம். மேலும் உபாததியாயர் ஒருவர். எதிரில் உட்காருபவர் ஐம்பது பேர். அவர் உங்களைப் பற்றி ஓர் அபிப்பிராயம் கொள்வதற்குள், அவரைப்பற்றி ஐம்பது அபிப்பிராயங்களைச் சொல்கிறீர்களே, இது நியாயமா?
ஒருவரைப் பரிகசிப்பதோ, ஏளனம் செய்வதோ மிகவும் இலகுவான காரியம். ஆனால் அந்த உபாத்தியாயர் நிற்கும் இடத்தில் நின்று, பின்னால் கறுப்புப் பலகையும் முன்னால் பரிகசிப்பதற்கென்றே வந்திருக்கும் 40, 50 பையன்களுமாகக் கையில் சாக்பீஸைப் பிடித்துப் பார்த்தால் அந்த சிரமம் தெரியும். எனக்கும் அதில் கொஞ்சம் அநுபவம் உண்டு. பி.ஏ. பட்டம் வாங்கியதும் ஒரு பள்ளிக்கூடத்தில் அதிர்ஷ்டவசமாய் உபாத்தியாயர் உத்தியோகம் கிடைத்தது.
பாடத்திற்குத் தகுந்தாற்போல் ஒரு மரியாதை நீங்கள் வைக்கிறீர்களே, சரியாகுமா? இங்கிலீஷ், கணக்கு என்றால் ஓர் உயர்ந்த மரியாதை. சம்ஸ்கிருதம், தமிழ் என்றால் ஓர் ஏளனம், என்னவோ, தெரியவில்லையே? எனக்கு ஸம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்த அப்பாசாமி சிரெளதிகளை (பாவம்!) என்ன பாடுபடுத்துகிறீர்கள்? அவர் சற்று ஆசாரமாயிருந்தால் என்ன? சட்டை போட்டுக் கொள்ளாவிட்டால் என்ன பிழை? நிஜார், தொப்பியுடன் வெகு ஆடம்பரமாய் கிளாஸில் வந்து விழிக்கும் உபாத்தியாயர்கள் கிடையாதோ!
மேற்படி சிரெளதிகள் ஒரு சமயம் எங்களைப் பார்த்து, ”நீங்களெல்லோரும் இனிமேல் சம்ஸ்கிருதத்தில்தான் பேச வேண்டும். பெரிய கிளாஸ் வந்துட்டேள் அல்லவா?” என்றார். நாங்கள் எல்லோரும் குதூகலமாய் ஆர்ப்பரித்து ஆமோதித்தோம். ”ஸார், ‘வெளியில் போகணும்’ என்பதற்கு என்ன சம்ஸ்கிருதம்?” என்றான் திருவாலங்காட்டு ராமன். அவரும் சாதாரணமாய் ‘பஹிர் கந்தும் பிரவிச்யத’ என்றார். சிறிது நேரஞ் சென்றது.
அவர் ஏதோ கேள்வி கேட்டார். அடுத்த நிமிஷம் ஒரே மூச்சாய் கிளாஸ் முழுவதும் ஆள்காட்டி விரலை நீட்டிக் கொண்டு ‘பகிர் கந்தும் பிரவிச்யத!’ என்று எழுந்து நின்றார்கள். நீங்கள் ஒரு க்ஷண காலம் அப்பாசாமி சிரெளதிகளாக இருந்து பாருங்கள். இந்த அவமானத்தைப் பொறுக்க மாட்டீர்கள். சிரெளதிகள் வாயைத் திறக்கவில்லை.
|
பையன்களுக்குள் மற்றொரு கெட்ட பழக்கம், உபாத்தியாயர்கள் மனிதர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். ‘அடே, இன்னிக்கி எஸ்.ஆர்.கே. இருக்கோல்லியோ, கீழே விழுந்து காயம்டா’ என்றும், ‘இன்னிக்கு ஆர்.வி.கே. வராது; அதன் வீட்டிலே திவசம்’ என்றும், ‘அந்த ஸி.என்.ஜி. இருக்கே, சிங்கம்டா அது’ என்றும் ஏக வசனமாய் மொழிந்து வருகின்றார்கள்.
ஆனால், ஒவ்வொரு மாணவனும் தானும் உபாத்தியாயரின் நாற்காலியில் பின் ஒரு சமயம் உட்கார தேரிடலாம் என்று மட்டும் சிறிது சிந்தித்துப் பார்ப்பானானால் உபாத்தியாயர்களிடம் அநுதாபங்கொள்ளாமல் இருக்க முடியாது.