“அஞ்சு ருவாயா, பத்து ருவாயா? ஆறு லச்சமாச்சே… ஆறு லச்சமாச்சே… உங்காமத் திங்காம, உடுத்தாமக் கிடுத்தாம, வாயக்கட்டி வகுத்தக் கட்டி சேத்து வச்ச பணமாச்சே…’ என்று, வழி நெடுக வாய் விட்டு, அரற்றியபடியே வேலந்தாவளம் மண்டியிலிருந்து காடு திரும்பிக் கொண்டிருந்தார் கஞ்சலிங்கக் கவுண்டர்.
வாழைக்கறை படிந்த பழைய அங்கராக்கு; மண்ணும், சாணமும் ஒட்டிய அழுக்கு லுங்கி, பீத்தைப் பச்சைத் துண்டிலான உருமாக்கட்டு. இந்த அலங்காரத்தோடு, பொக்கை வாய் பிளந்த ஹெட்லைட் டூம், குறுக்கு வசமாக பாதி உடைந்த துண்டு மட்டும் உள்ள நம்பர் ப்ளேட் சகிதம் துருவேறிச் சிதைந்த உதிரி பாகங்கள், எந்த விநாடியிலும் அக்கக்காக உதிர்ந்துவிடும் போலிருக்கிற ஆதி கால ட்டீவீசில் பவனி வரும், அவர் ஒரு கோடீஸ்வரர் என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? நாக்கில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டீர்கள்.
செட்டியார்களம் பிரிவில் பொட்டக்குளத்துக்கு அருகேயுள்ள ஏழரை ஏக்கர் தோட்டத்துக்கு உரிமையாளர் அவர். மாதம் 12 வண்டி தேங்காய் உளுகிற தென்னந்தோப்பு உள்ளிட்ட நஞ்சை நிலங்களும், கிணறு – ஆழ்குழாய் – கம்ப்ரசர் ஆகிய மும்முனைப் பாசனங்களும், சேகேறிய தேக்கஞ்செரையும் கொண்ட அத்தோட்டம், இன்றைய நிலவரப்படி ஏக்கருக்கு, 20 லட்சம் வீதம், 1.5 கோடி ரூபாய் பெறும். இது போக, 15 லட்சம் பெறுமானமுள்ள டெரஸ் வீடு உட்பட, அங்கிருக்கும் அசையா – அசையும் சொத்துக்களின் மதிப்பு, 1.15 கோடியை எட்டும். (அந்த ஆதிகால ட்டீவீசை பழைய இரும்புக்கு பேரீச்சம் பழக்காரன் கூட சும்மா கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டான் என்பதால், அதைப் பட்டியலில் சேர்க்கவில்லை.) ஆக, அவர் 2.75 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர்.
குடும்பம் மொத்தமும், காலாட்டீட்டு உக்காந்து தின்னாலும், மாளாமல் பெருகிக் கொண்டிருக்கும் சொத்து. இல்லாவிட்டாலும், கவுண்டர் பெறத்தால கையக் கட்டீட்டு பொளிமேல நின்னு பண்ணையத்தை மேற்பார்வை பார்த்தால் போதும். ஆனால், அவர் தன் பீத்தை அலங்காரத்தில் பண்ணையத்தாள்களோடு பண்ணையத்தாளாக நின்று வேலை செய்து கொண்டிருப்பார். ஒழலப்பதி கடை கண்ணிகளுக்கோ, வேலந்தாவளம் மண்டிக்கோ போவதென்றாலும் அதே அலங்காரத்தோடுதான். அதுவும், அந்த ஆதிகால ட்டீவீசில். நல்லது பொல்லதுகளுக்கு வெளியிடங்களுக்குப் போவதென்றால் மட்டுமே வெள்ளையுஞ் சொள்ளையுமாக உடுத்தி, பைக்கை எடுப்பது. குடும்பம் மொத்தமும் கெவுருதியாகப் போய் இறங்கவேண்டிய இடம் என்றால் தான், கார் உறை விலக்கப்படும்.
இந்த ஏழரை ஏக்கர் தோட்டத்துக்கும், இவர்களின் குடும்பத்துக்கும், சர்வாதிகாரி மாராத்தாள் கவுண்டச்சி. வழிச்சு நக்குன கையாலும், ஈ ஓட்டாத கொடைவள்ளி.
கஞ்சத் தம்பதி, பிள்ளை பெறுவதிலும் கொள்கையை கறாராக கடைபிடித்ததால், ஏக வாரிசு சின்ராசு மட்டுமே. லட்சியத் தம்பதியின் வித்து சாமானியமாகவா இருக்கும்? பெற்றோர் அளவுக்கு வீரியமில்லாவிட்டாலும், காசிலே கருக்கடையானவன். பண்ணையத்தில் பங்கெடுப்பதோடு, உழவு மற்றும் லோடு அடிப்புகளுக்கு ட்ராக்ட்டரை வாடகைக்கும் ஓட்டுகிறான். அதென்னுமோ ஆன்சோ கீன்சோ, அது தவிர வேறு கெட்ட பழக்கம், அம்பது பைசா அனாவசிய செலவு கிடையாது. அவனுக்குத் தொழில் விவசாயம் என்றால், உபதொழில் பணம் பெருக்குவது.
ஈமு பண்ணை யோசனை கூட, அவனது மல்ட்டிப்பிள் மண்டையில் விளைந்ததுதான்.
ரெண்டு மூணு வருசமா பெருந்துறை – ஈரோடு பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஈமு புயல், கொங்கு வட்டாரமெங்கும் விளாசியடித்துக் கொண்டிருந்தபோதே, அதைக் கண்டிருந்த இந்த மலையாளக் கரையினர், “அதென்னுப்பா… அது அந்த கோளி ஊடொசக்கத்துக்கு இருக்குது! பூசிணிக்கா சைசுக்கு மொட்டு போடுது…’ என்று பிரமித்துப் பேசிக் கொண்டிருந்தனர். புயல் மையப்பகுதிக்கு யேவாரத்துக்கோ ஒறம்பறைக்கோ போகக் கூடியவர்கள், “ஈரோடு – பெருந்துறைல எக்கச்சக்கமா ஈமு கம்பெனிகள் இருக்குதப்பா. அங்கல்லாம் ஈமு கறிக் கடைகளே இருக்குது. கறி கிலோ ஐநூர்ருவாயாமா. மொட்டொண்ணு ஆயரம், ஆயரத்தி எரநூறுங்கறாங்கொ. பெருந்துறைல ஈமுக்கறி ஐட்டத்துக்குன்னே ப்பெசலா ஒரு ஓட்டலு இருக்குதுன்னாப் பாரே…’ என்று வியப்புச் செய்திகளையும் வெளியிட்டனர்.
ஈமு கறி காசம், எய்ட்ஸ், கேன்சர், பொண்டாட்டி மேல் சந்தேகம் முதலான வியாதிகளைக் கூட குணப்படுத்தக் கூடியது. அதன் முட்டை, ஆண்மையை பெருக்கக் கூடியது என்பது போன்ற நம்பிக்கைகளும் இங்கத்திய மக்கள் மத்தியில் பரவியிருந்தன.
ஈமு புயல் கரை கடந்து வருசத்திலிருந்து, இந்த மலையாளக் கரையிலும் வீசத் துவங்கியிருந்தது. உயர்தொகை முதலீடு காரணமாக, ஆரம்பத்தில் சாமான்ய விவசாயிகள் அதில் நாட்டம் செலுத்தவில்லை. 15 – 20 கி.மீ., சுற்றளவில் ஏதோ ஒரு ஊரில் யாரோ ஒரு கோடீஸ்வரர் லட்சங்களை முதல் முடக்கி வளர்த்தக் கூடியதாகவே இருந்தது. நாள்பட ஈமு நிறுவனங்கள் பெருகி, வியாபாரப் போட்டியால் சலுகைகள் அதிகரிக்கவே, 10 கி.மீ., சுற்றளவில், ஓரிரு பண்ணைகள் என்று ஆனது.
சின்ராசு, ஈமு யோசனையை வீட்டில் முன்வைத்ததும், அச்சமயத்திலேயே தான்.
“ஏன்டா சின்னு… அதுக ஆனைக் குஞ்சாட்ட அத்தாச்சோட்டு இருக்குதுகொ. அதுகளுக்குத் தீவனம் போட்டுக் கட்டுபடியாகுமா? வண்டி வண்டியால்ல கொட்டோணும்?’ என்று கேட்டாள் மாராத்தாள்.
“அதொண்ணுமில்லீம்மா… அதுக, ஒரு நாளைக்கு குஞ்சுன்னா காக்கிலோ, பெருசுகன்னா ஒரு கிலோதான் திங்கும். கம்பினிக்காரங்களே, பண்ணை கிண்ணையெல்லாம் பிரியாப் போட்டுக்குடுத்து, தீவனம்மு பிரியாக் குடத்தர்றாங்கோ. வளத்திக் குடக்கற சோலி மட்லுந்தான் நம்முளுது.
“குஞ்சுகளுக்கு வெடியால கா மணிக்கூரு, பொளுதோட கா மணிக்கூரு ஒதுக்கி தீவனந்தண்ணி வெச்சாப் போதும். வெயிலு – மள – பனி எல்லாத்தையும் தாங்கீட்டு, அது பாட்டுக்கு இருந்துக்கும். நாம நம்ம பாட்டுக்கு மத்த சோலிகளப் பாத்துக்குலா. சாவலொண்ணு, கோளியொண்ணுன்னு மூணு சோடி குஞ்சு, ஒரு செட்டுன்னு கணக்கு.
“மொட்டுடற பருவம் முட்டும் அதைய வளத்திக் குடக்கறக்கு மாசச் சம்பளம் ஆறாயரம். செட்டுக்கு ஒன்ரை லச்சம் டிப்பாசிட்டு. பேங்கு வட்டியக் கணக்குப் பண்ணுனாலே ஆயரத்தி ஐநூறுதான் வரும். இவிக ஆறாயரம் குடுக்கறாங்களே… நாலு செட்டுக்கு டிப்பாசிட்டு பண்ணுனா நாலாறு இரவத்தி நாலாயரம், மாசா மாசம் ஒன்றை வருசத்திக்கு சொளையா மடீல வந்து உளுகும்’ என புள்ளி விவரங்களோடு விளக்கினான் ஏழரைக் கோடி வாரிசு.
அன்னாடும் அரை மணிக்கூர் பராமரிப்புக்கு மாசம், 24 ஆயிரம் மேல் வரும்படி என்றதும் மாராத்தாளின் கண்களில் நட்சத்ரங்கள் ஜொலித்தன. அறிமுக ஆப்பராக அரைப் பவுன் தங்கக் காசும் கொடுக்கின்றனர் என்றதும், “உருவுடா கார் ஒறைய; பொறப்பட்றா பெருந்தொறைக்கு…’ என்றாள்.
காந்திக் கட்டு மஞ்சப் பை, மறு வாரமே ஈமுப்பண்ணையாக முளைத்தது.
“மூணு மாசத்துக் குஞ்சுகளா இதுகொ? மயில விடப்பெரிசா, இப்பவே இடுப்பொசக்கத்துக்கு இருக்குதுகளே’ என்று பண்ணையத்தாட்களும், கூலியாட்களும் மூக்கில் விரல் வைத்தனர். உள்ளூர், அண்டை அயல் ஊர்களிலிருந்தெல்லாம் விவசாயிகளும் மற்றவர்களும் அந்த ராட்சச குஞ்சுகளை வந்து பார்த்துப் போவது வாடிக்கையாயிற்று.
ஈமுக்கள் சாதுவானவை. அவற்றின் பிரம்மாண்டம், பார்ப்பவரில் அச்சத்தை ஏற்படுத்துமேயல்லாது மனிதர்களை அவை கொத்துவதோ, தாக்குவதோ இல்லை. எனினும், வளர்ப்பாளர்களோ, பார்வையாளர்களோ பண்ணைக்குள் வரும்போது, அவர்களின் ஆடைகளில் உள்ள நிறமோ, கடிகாரம், வளையல், செருப்பு உள்ளிட்ட அணிகலன்களில் மினுங்கி ஈர்க்கக்கூடிய <உலோகப் பூச்சுகளோ இருந்தால், ஆர்வத்துடன் அதை கொத்திப் பார்க்கும். விரட்டினால், விலகிப் போய்விடும். எனினும், எவ்வளவு தைரியப்படுத்தினாலும், மாராத்தாளுக்கு பயம் போகவில்லை. வெளி வேலை இல்லாமல், தோட்டத்தில் இருந்தால், தீவனம், தண்ணி வைப்பான் சின்ராசு. மற்றபடி கஞ்சலிங்கக் கவுண்டர்தான் முழுப் பராமரிப்பும். நிறுவனத்திலிருந்து தீவன வினியோகம், மாதாந்திர ஊதியக் காசோலை யாவும், தவறாமல் வந்து கொண்டிருந்தன. குஞ்சுகள் அதிவேகமாக வளர்ந்து, ஒன்றே கால் வருடத்தில் ஆளுயரமாகி விட்டன. முழு வளர்ச்சியின் அறிகுறியாக, கழுத்துப் பகுதியில் நீல நிறமும் தென்படுகிறது. இன்னும் மூன்று மாதங்களில், கோழிகளை நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொள்ளும். டெப்பாசிட் தொகையும் திரும்பக் கிடைக்கும். அதை மறு சுழற்சியாகப் போட்டு, மேலும், நான்கு செட் கூடுதலாக பண்ணையை விரிவுபடுத்தலாம் என்றிருந்தார் கஞ்சலிங்கக் கவுண்டர். ஆனால், வெண்ணை திரளுகிற நேரத்தில், தாழிக்குள் பெருக்கான் பேண்டு வெச்ச மாதிரி ஆகிவிட்டது. மண்டியில் கேள்விப்பட்டதும், நாளிதழில் பார்த்ததுமான சங்கதிகள். சொந்த டெம்போவில் கொண்டு சென்றிருந்த நேந்தரந்தார்கள், பூசணி, புடலை முதலான காய்கறி வகையறாக்களை மண்டியில் இறக்கிய பின், டெம்போவை அனுப்பிவிட்டு, ஏலத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அங்கு வந்திருந்த குளிங்காட்டு கோபால்தான் அதைத் தெரிவித்தான். "ஏனுங் கவுண்ட்ரே... தென்னுமோ ஈமு கம்பினிகல்லாம் டிப்பாசிட் பணத்த சுருட்டீட்டு பைனான்ஸ்காரனுகளாட்டம், "எஸ்'சாகர ப்ளான்ல இருக்கறதாப் பேசிக்கறாங்களே... உங்களுக்கு வெகரம் தெரிஞ்சுதுங்ளா?' என்று, அவன் கேட்டதுமே, இவருக்கு தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்ட மாதிரி இருந்தது. "ஆரு சொன்னா... எவுரு சொன்னா...' என்று படபடத்தார். "இன்னாரு, இந்த ஊருன்னு இல்லாம... இப்ப எல்லாப் பக்கம்மே, இதுதானுங் கவுண்ட்ரே பேச்சு... ஈரோடு - பெருந்துறைல இருக்கறவீகளே சொன்னாங்கோன்னு சொல்றவீக சொல்றாங்கொ...' என்பதற்குள், அங்கிருந்த சக விவசாயிகள் மற்றும் யேவாரிகளில் சிலரும், அதை ஆமோதித்து, உறுதிப்படுத்தினர். லாட்டரிக்காரர், ஒருவர் கக்கத்தில் சுருட்டி இடுக்கியிருந்த நாளிதழை விரித்து, "ஈமு வளர்ப்பாளர்கள் எதற்கும் எச்சரிக்கையோட டெப்பாசிட் செய்யுங்கள்!' என்று ஈரோட்டுக் கலெக்டர் அறிக்கை வெளியிட்டிருந்ததையும் காட்டினார். இவருக்கு அடி முதல், முடி வரை ஆட்டம் காணத் துவங்கி விட்டது. எண்ணும், எழுத்தும் அழிந்து மொண்ணையாகியிருக்கிற செல்போனை எடுத்து நிரடி, தொடர்பு அட்டவணைக்குள் புகுந்து, சின்ராசுவுக்கு அழுத்தினார். மஞ்சக்குன்னுக்கோ, கிராமப்பாறைக்கோ கருங்கல் லோடு ஓட்ட ட்ராக்ட்டருடன் போயிருந்த அவனது தொடர்பு கிடைக்காமல், எல்லைக்கு வெளியே; பிற்பாடு அழைக்கவும் என்றது பதிவுப் பெண் குரல். ஏலம் முடிகிற வரை, "மோசம் போயிட்டமே... மோசம் போயிட்டமே...' என்று புலம்பிக்கொண்டிருந்தார். ஏலம் முடிந்து, தொகை கைக்கு வந்ததும் ஆதிகால ட்டீவீசை அரும்பாடு பட்டுக் கிளப்பி, ""அஞ்சு ருவாயா, பத்து ருவாயா? ஆறு லச்சமாச்சே... ஆறு லச்சமாச்சே! கொல தெய்வம் குப்பீண்ணா... பெரம்படிக் கருப்பராயா... முத்து மலை முருகா! ஏன்டா எல்லாருஞ் சேந்துட்டு என்னைய இப்படி சோதிக்கறீங்கோ?' என்று வழி நெடுக வாய்விட்டு அரற்றியபடியே காடு வந்து சேர்ந்தார். மத்தியானச் சோத்துக்கு வீடு வந்திருந்த மாராத்தாளிடம் தகவல் சொன்னதுதான் கேடு, கால் நீட்டி அமர்ந்து, "காளியாத்தா, மாரியாத்தா' என்று சக ஆத்தாள்களை யெல்லாம் அழைத்து, நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு பிலாக்கணமே துவங்கி விட்டாள். சாயங்காலத் தீவன நேரம். "ஆறு லச்சமாச்சே... ஆறு லச்சமாச்சே...' என இன்னமும் அரற்றிக் கொண்டே கம்பி வலைத் தடுப்புகளால் அமைக்கப்பட்ட ஈமு பண்ணையின் கதவில் உள்ள ரகசிய எண் பூட்டைத் திறந்து உள்ளே சென்ற கஞ்சலிங்கக் கவுண்டர், கதவைச் சாத்திவிட்டு தீவனம் தண்ணி வைக்காமல், அந்த ராட்சதக் கோழிகளையே வெறித்துக் கொண்டிருந்தார். "கட்டைல போற கம்பினிக்காரனுக டிப்பாசிட் பணத்தோட முட்டூட்டு ஓடீட்டானுகன்னா இந்த எருமைக் கோளிகள வெச்சுட்டு, நாம என்னத்தப் பண்றது? நாப்பது அம்பது கிலோ வர்ற ஒவ்வொண்ணையும் அடிச்சு சாறு காச்சத்தான் முடியுமா, ஆருக்காச்சும் விக்கத்தான் முடியுமா? இரவதாயரம் குடுத்து ஆரு வாங்குவாங்கொ? மூணு மாசம் கிருமிச்சு இதுக மொடாச்சோட்டு மொட்டு போட்டுச்சுன்னா, அதையாச்சும் ஒரு ஊரு வறுத்துத் திங்கறது ஆகற காரியமா? ஊரையே கூட்டியல்லொ விருந்து வெக்கோணும்! ஆயரத்தி எரநூர்ருவா மொதல, அப்புடி அனாமத்தா ஒவ்வொரு சலக்காவும் ஓசீல ஊரான் திங்கறக்கு எப்புடிச் குடுக்கறது? மனசார நாமளுந் திங்க முடியாது; மத்தவீகளுக்கும் குடுக்க முடியாதே...' என வேக்காட்டில் வெந்து கொண்டிருந்தது, அவரது மனம். காலைத் தீவனம் எப்போதோ காலியாகி, இத்தனை நேரம் கற்களையும், மண்ணையும், தம் கழிவுகளையுமே கூடத் தின்று கொண்டிருந்த ஈமுக்கள், கவுண்டர் வந்ததுமே தீவன ஆவலுடன் அவரைப் புடை சூழ்ந்திருந் தன. கையிலிருந்ததைக் கொட்டாமல், அவர் அந்தம் விட்டு நிற்பதைக் கண்டதும் அவரது ஆடைகளைக் கொத்தி இழுக்கலாயின. "ச்சூ... எருமைக்குப் பொறந்த கோளீகளா... போங்க அக்கட்டால! கம்பினிக்காரனுக காச முளுங்கறானுகன்னா, இதுக ஆளையே முளுங்கீருமாட்ட இருக்குதுகொ...' என்றபடி அவற்றைத் தள்ளிவிட்டு, மக்காணித் தூளும், கருவாட்டுத் தூளும் கலந்த கம்பெனித் தீவனத்தை பாத்திரங்களில் கொட்டலானார். ஈமுக்கள் முண்டியடித்து, ஒவ்வொரு பாத்திரங்களிலும் இடம் பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது கதவு அனக்கம் கேட்டு, சின்ராசுதானோ எனத் திரும்பிப் பார்த்தார். ஆறு லட்ச வெம்பறப்பில் உட்புறம் தாழிட மறந்த கதவு, காற்றுக்கு லேசாகத் திறந்திருக்க, ஒரு ஈமு அதில் வெளியே முட்டிக் கொண்டிருந்தது. தீவன பக்கெட்டை தொப்பென்று போட்டுவிட்டு, "உஸ்சூ புடி... உஸ்சூ புடி...' என்று தன்னையே உஸ்படுத்திக்கொண்டு, ரெண்டு கால் பாய்ச்சலில் ராஞ்சினார். அதற்குள் ஈமு முட்டிக் கொண்டு வெளியே போயே விட்டது. அந்த அவுதியிலும் மீண்டும், அதே தவறை செய்துவிடக் கூடாதென்ற கவனத்தோடு வெளிப்புறம் தாழிட்டு கொண்டியில் பூட்டை வெறுமனே செருகிவிட்டு கூப்பாடு போட்டுக்கொண்டே, அதன் பின்னால் ஓடினார். அதற்குள், அந்த ஆறடி ஒசக்க ராட்சஸக் கோழி எட்டடி நீளத்துக்கு எட்டு வைத்து மஞ்சள் அணப்புகளை நன்னான்கு தாவலில் கடந்து கொண்டிருந்தது. கவுண்டரின் கூப்பாடும், "திப்புரு திப்புரு' என்ற நில அதிர்வும் கேட்டு பொரியல் தண்டை பறித்துக் கொண்டிருந்த மாராத்தாளும் மற்ற பொம்பளையாட்களும் நிமிர்ந்து பார்க்கையில் ஈமு, அவர்களின் திசையில் ஓடி வந்து கொண்டிருந்தது. "அய்யோம்மா...' என்று, அவர்கள் அலறியடித்து விலகியோட, ஹைப்ரீட் தக்காளிக் காட்டில் கம்பி-சூடி கட்டிக்கொண்டிருந்த பண்ணையத்து மாதேரிகளும், மலசர்களும் நிலவரத்தை அறிந்து, பரபரத்து கூய் கூய் எனக் கூவியபடி, ஈமுவைப் பிடிக்க, அரைச் சக்கர வியூகம் அமைத்தனர். முன்னால், அந்தக் குழுவின் அரை வளையமும், பின்னால் கவுண்டரும் இருக்க, ஈமு ஒரு சுழல் நோட்டமிட்டு விட்டு, சட்டென்று இடப்புறம் திரும்பி பூட்டையெடுத்த மக்காணிக் கொல்லைக்குள் புகுந்து விட்டது. கொல்லைக்குள், ஒரு பெரும் பிளவு ஏற்பட்டு மறைய, நுனியில் மென் குஞ்சங்கள் கொண்ட உச்சாணிப் பூட்டைப் பரப்புக்கு மேல் ஈமுத் தலை அதிவேகமாக நீந்திச் சென்றது. கண்மூடித் திறப்பதற்குள் தென்னந்தோப்புக்குள் தோன்றிய ஈமு, அப்படியே தேக்கஞ் செரைக்குள்ளும் புகுந்து, இவர்களின் தோட்ட எல்லை கடந்து தெற்கே சவாரி விட்டது. கெஸ்ஸு வாங்க பொளி மீது நின்ற கவுண்டர், "அதைய ஓடிப் புடிக்கறக்கு மனுசன்னால ஆகாது. நாம் போயி வண்டியெடுத்துட்டு முடுக்கறன். நீ இந்தா, சின்றக் கூப்புட்டு சமாச்சாரத்த சொல்லு...' என செல்போனை மாராத்தாளிடம் ஒப்படைத்துவிட்டு களத்தை நோக்கி குண்டுறு குண்டுறுவென ஓடினார். "ங்ம்க்-ம்ம்... இதுல ஒண்ணு ரெண்டும் தெரியறதில்ல... ஏப்பீசீடியும் தெரியறதில்ல. இதைய வெச்சுட்டு எப்புடி ப்போன் பண்றது?' என மாராத்தாள் குரல் கொடுப்பது அவருக்குக் கேட்டாலும், நிற்க அவகாசமில்லை. களத்து வாசலில் நிறுத்தியிருந்த ஆதிகால ட்வீஸைக் கிளப்பி, வண்டித்தடத்தில் தெற்கே விரைந்தார். ஈமு என்ன தடம் பார்த்தா ஓடும்? யார் தோட்டத்துக்குள் புகுந்து, எந்தத் திக்கில் போனதோ தெரியவில்லை. வறத்தவக்காய் கத்துவது போன்றதும், மனிதக் குறட்டை போன்றதுமான அதன் சத்தத்தை, அடித் தொண்டையிலிருந்து எழுப்பியபடியே, அண்டை அயலார் காடுகளுக்கெல்லாம் சென்று துளாவிப் பார்த்தார். சுப்பே கவுடர் தோட்டத்தில் வேலை கை மாறிக்கொண்டிருந்த ஆட்களுக்கு, ஐந்து நிமிடம் முன் அது தென்பட்டதாம். "கள்ளக்காட்டு, பூந்து அப்புடியே கௌக்கதானுங் ஓடுச்சு. அது போன வெசையப் பாத்தா, இந்நேரம் சின்னாக்கண்ணூரே போய்ச் சேந்திருக்கும்...' என்றனர். ""சின்னாக்கண்ணூரென்னொ, வீரப்பகண்ணூரென்னொ... ஆஸ்த்திரேலியாவே போனாலும், அதையப் புடிக்காம திரும்ப மாட்டன். இல்லாட்டி,"இரவத்தஞ்சாயர்ருவா மொதல எஸ்கேப்பாக உட்டுட்டயேடா ஆக்கங் கெட்ட கவுண்டா'ன்னு மாராத்தா நம்மள உசுரோட எண்ணெய் சட்டீல போட்டு வறுத்துத் தின்னு போடுவா,'' என்றபடி, ஆக்சலேட்டரை முறுக்கினார். மறுநாள் வெடியக் காலம், அந்த ஓடுகால் ஈமு, பண்ணைக்கு வெளியே வந்து நின்றுகொண்டிருக்கும் அதிசயத்தைக் கண்டு மாராத்தாளும், சின்ராசும் உச்சி குளிர்ந்தனர். சின்ராசு போய் கதவை எச்சரிக்கையாக பாதி திறந்து பக்கத்திலேயே நிற்க, ஈமு மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு உள்ளேயும் போய் விட்டது. "போன மச்சான் திரும்பி வந்தான் கோவணத்தோட'ங்கற கோப்புல, ஓடிப்போன ஈமு, எப்புடியோ வந்து சேர்ந்துடுச்சு. தொளாவீட்டுப் போனங்கொய்யன இன்னீங் காணமே சின்று... மண்டைல மசாலில்லாத அந்த மசக் கவுண்டன் செலுப்போன வேற என்றகட்ட குடுத்துட்டும் போயிட்டான். இப்ப எங்கிருக்கறான்னு காங்கறது... எப்புடித்தான் அவனுக்குத் தகவலுச் சொல்றது...' என்று ஆவலாதிப்பட்டாள் மாராத்தாள். - ஜனவரி 2013