இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் காந்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 3,669 
 
 

இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் காந்தா சொன்ன அழகுக் கதை

“கேளாய், போஜனே! ‘சிங்காரம்பட்டி, சிங்காரம்பட்டி’ என்று ஓர் ஊர் உண்டு. அந்த ஊரிலே ‘சிற்சபேசன், சிற்சபேசன்’ என்று ஒரு சீரணித் தொண்டர் உண்டு. அந்தத் தொண்டர் ஒரு நாள் மாலை கல்லாத முதியோர் சிலரைக் கூட்டிக் கல்வி புகட்டிக் கொண்டிருந்தகாலை, அவர்களில் சிலர் அந்த வழியே போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருந்த பெண்களை வெறித்துப் பார்க்க, அவர்களுடைய கவனத்தைத் திருப்புவதற்காக, ‘பெரியோர்களே! பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறதென்று தெரியுமா, உங்களுக்கு?’ என்று அவர் ஒரு கேள்வியைப் போட்டு வைப்பாராயினர்.

கேள்வி பிறந்ததுதான் தாமதம், ‘அதுவா தெரியாது எங்களுக்கு. பெண்களுக்கு அழகு அவர்களுடைய கூந்தலிலே இருக்கிறது!’ என்றார் ஒருவர்; ‘இல்லை, கண்ணில்தான் இருக்கிறது!’ என்றார் இன்னொருவர். ‘கண்ணில் அழகு இருக்கலாம்; ஆனாலும் கன்னத்தின் அழகுக்கு அது ஈடாகாது!’ என்றார் மற்றொருவர். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை; பெண்களுடைய அழகு அவர்களுடைய உதட்டிலேதான் இருக்கிறது!’ என்றார் மற்றும் ஒருவர். கடைசியாக ஒருவர் நாணிக்கோணி எழுந்து நின்று, ‘அதைச் சொல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது!’ என்று சற்றே நெளிய, ‘நல்லவேளை, அதைச் சொல்லிவிட்டு வெட்கப்பட்டு வைக்காமல், சொல்லாமலே வெட்கப்பட்டு வைத்தீர்களே, அந்த மட்டும் க்ஷேமம், உட்காருங்கள்!’ என்று சிற்சபேசன் அவரை உட்கார வைத்துவிட்டு, ‘இன்றிலிருந்து உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன்; என்னுடைய கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடித்துக்கொண்டு வாருங்கள்!’ என்று சொல்ல, ‘ரொம்ப நல்லது; அப்படியே செய்கிறோம்’ என்று அனைவரும் எழுந்து, அவரவர்கள் வீடு நோக்கிச் செல்வாராயினர்.

வழி நெடுக, ‘பெண்களுக்கு அழகு எங்கே இருக்கும், பெண்களுக்கு அழகு எங்கே இருக்கும்?’ என்று ஒருவரையொருவர் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டும், அதி அதி தீவிரமாக யோசித்துக் கொண்டும் வந்த பெரியோர்கள், கடைசியில், ‘சரி, பெண்களையே கேட்டுவிட்டால் போகிறது!’ என்று தம் தம் மனைவிமாரைத் தேடி அவசர அவசரமாக வீட்டுக்கு வருவாராயினர்.

வீட்டுக்கு வந்ததும், ‘ஏண்டி, பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்று தம் தர்மபத்தினியைக் கேட்டார் ஒருவர்; அவளோ, ‘முதலில் உங்கள் தலையிலே என்ன இருக்கிறதென்று சொல்லுங்கள்; அதற்குப் பிறகு நான் பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறதென்று சொல்கிறேன்!’ என்றாள். இன்னொருவர், ‘ஏண்டி, பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்று தம் இல்லாளைக் கேட்டார்; அவளோ, ‘மூஞ்சைப் பார், மூஞ்சை! இப்படிக் கேட்க வெட்கமாயில்லை உங்களுக்கு?’ என்று அவருடைய கன்னத்தில் ஓர் இடி இடித்துவிட்டுச் சென்றாள். மற்றொருவர் எடுத்த எடுப்பில் ‘பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்று தம் மனையாளைக் கேட்டுவிடாமல், ‘ஏண்டி, உன்னை ஒன்று கேட்க வேண்டும்; கோபித்துக் கொள்ளமாட்டாயே?’ என்ற ‘பிள்ளையார்சுழி’யுடன் ஆரம்பிக்க, ‘என்ன, கேளுங்கள்!’ என்று அவள் அவருக்குத் தைரியம் கொடுக்க, அதுதான் சமயமென்று ‘பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்று அவர் அவளுடைய முகவாய்க் கட்டையைப் பிடிக்க, ‘ஐயே! கேள்வியைப் பார், கேள்வியை?’ என்று அவள் அவருடைய கையைத் தட்டி விட்டுவிட்டுப் போவாளாயினள். மற்றும் ஒருவர் தம் மனையரசியைக் கண்டதும், ‘பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறது?’ என்ற கேள்விக் கணையை உடனே தொடுத்து விடாமல் மெளனமாக நின்று முன்னும் பின்னுமாக அவள் அழகைப் பார்க்க, ‘என்ன, அப்படிப் பார்க்கிறீர்கள்?’ என்று அவள் ஒன்றும் புரியாமல் கேட்க, ‘ஒன்றுமில்லை; ஒரு நிமிஷம் இப்படி வந்து நில்!’ என்று அவர் அவளுடைய தோளைப் பற்றி இழுத்து நிறுத்தி உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை அவளை ஊடுருவிவிட்டு, ‘இப்படிப் பார்த்தால் தெரியாதுபோல் இருக்கிறது; அழகிப் போட்டிக்கு வந்து நிற்கும் பெண்களைப்போல நீயும் நீச்சல் உடையில் வந்து நின்றால்தான் தெரியும்போலிருக்கிறது!’ என்று முணுமுணுக்க, ‘அப்படியா சமாசாரம்? என்ன தெரிய வேண்டும், உங்களுக்கு?’ என்று அவள் கேட்க, ‘பெண்களுக்கு அழகு எங்கே இருக்கிறதென்று தெரிய வேண்டும்!’ என்று அவர் சொல்ல, ‘அட கடவுளே! இப்பொழுது நீங்கள் எங்கே போய்விட்டு வருகிறீர்கள்? பெங்களுருக்கா, பாண்டிச்சேரிக்கா?’ என்று அவள் அவருடைய வாயை முகர்ந்து பார்ப்பாளாயினள்.

இப்படி ஒரு நாள் அல்ல; இரண்டு நாட்கள் அல்ல; மூன்று நாட்கள் முயன்றும் பெண்களின் அழகு ரகசியத்தைத் தெரிந்து கொள்ள முடியாத முதியவர்கள் நான்காவது நாள் மாலை வாடிய முகங்களுடன் வந்து தங்கள் வாத்தியாருக்கு முன்னால் நிற்க, ‘என்ன, தெரிந்ததா?’ என்று வாத்தியார் கேட்க, ‘தெரியவில்லை; நீங்கள்தான் சொல்லவேண்டும்!’ என்று அவர்கள் அனைவரும் சேர்ந்தாற்போல் கையை விரிக்க, வாத்தியார் சிரித்து, ‘உண்மையில் அது எனக்கும் தெரியாது; பெண்கள் பக்கம் சென்ற உங்கள் கவனத்தை என் பக்கம் திருப்புவதற்காகவே அன்று நான் அப்படி ஒரு கேள்வியைப் போட்டேன்!’ என்று விளக்க, ‘அட, விக்கிரமாதித்தா! இப்போது அந்தக் கேள்விக்கு விடை கிடைக்கா விட்டால் எங்கள் தலையே வெடித்து விடும்போலிருக்கிறதே, என்ன செய்வோம்?’ என்று பெரியவர்கள் அத்தனை பேரும் தங்கள் தலையைப் பிடித்துக் கொண்டு தவிக்க, ‘வந்தேன், வந்தேன்!’ என்று மிஸ்டர் விக்கிரமாதித்தர் அவ்விடம் வந்து, ‘பெண்களுக்கு அழகு வேறு எங்கும் இல்லை; அவர்களுடைய உள்ளத்தில்தான் இருக்கிறது!’ என்று சொல்ல, ‘இவ்வளவுதானா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் போச்சே எங்களுக்கு!’ என்பதுபோல் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்வாராயினர்.”
இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான காந்தா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபத்தாறாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கலா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு……

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *