இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 3,645 
 
 

இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மனோரஞ்சிதம் சொன்ன கடவுள் கல்லான கதை

“கேளாய், போஜனே! அல்லும் பகலும் அனவரதமும் ‘கடவுளே கதி’ என்று இருந்த ஓர் ஆத்மாவுக்குத் திடீரென்று ஒரு நாள் ஒரு சந்தேகம் பிறந்தது. அந்தச் சந்தேகம் என்ன வென்றால்:

‘மற்ற யுகங்களிலெல்லாம் என்னென்னவோ அவதாரங்கள் எடுத்துத் துஷ்ட நிக்கிர சிஷ்ட பரிபாலனம் செய்து வந்த கடவுள் இந்தக் கலியுகத்தில் மட்டும் ஏன் கல்லானார்?’

இந்தச் சந்தேகம் பிறந்த நாளிலிருந்து அவர் தமக்கு எதிர்ப்பட்டவர்களையெல்லாம் ‘கடவுள் ஏன் கல்லானார், கடவுள் ஏன் கல்லானார்?’ என்று கேட்டுக்கொண்டே வர, அவர்கள் ஒவ்வொருவரும் ‘அது என்னவோ எனக்குத் தெரியாது; நான் கடவுளைக் கல்லாக்கவில்லை!’ என்று கையை விரிக்க, கடைசியாக அந்த ஆத்மா எங்கள் விக்கிரமாதித்தரிடம் வந்து அதே கேள்வியைக் கேட்க, அவர் சொன்னதாவது:

‘ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் ஊரில் ‘தனகோடி, தனகோடி’ என்று ஒரு தன வணிகன் இருந்தானாம். அவன் இரவு பகல் என்று பாராமல் உழைத்து ஒரு லட்சம் பொன் வரை சேர்த்தானாம். அந்தப் பொன்னை ஓர் இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு அவன் நேராகக் கடவுளிடம் வந்து, ‘கடவுளே! கடவுளே! நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு ஒரு லட்சம் பொன் சேர்த்து வைத்திருக்கிறேன். அதை என்னிடமிருந்து யாரும் அபகரித்துக் கொள்ளாமல் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டானாம். ‘கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய் வா!’ என்றாராம் கடவுள். அவன் பரம திருப்தியுடன வீட்டுக்கு வந்து, அன்றிரவு நிம்மதியாகத் தூக்கமும் போட்டானாம். அடுத்தாற்போல் ஒரு திருடன் கடவுளைத் தேடி வந்து, ‘கடவுளே, கடவுளே! இன்றிரவு நான் தனகோடி வீட்டில் திருடப் போகிறேன். நீதான் யாரிடமும் என்னைச் சிக்க வைக்காமல் காப்பாற்ற வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டானாம். கடவுள் என்ன செய்வார், பாவம்! ‘கவலைப்படாதே, நான் கவனித்துக் கொள்கிறேன்!’ என்று சொல்ல முடியுமா! இல்லை, ‘மாட்டேன்; நான் உனக்குத் துணையாக இருக்கமாட்டேன்!’ என்றுதான் கையை விரிக்க முடியுமா? விரித்தால் அவரை எல்லோருக்கும் பொதுவானவர் என்று எப்படிச் சொல்ல முடியும்? எல்லோரையும் ரட்சிக்கக் கூடியவர் என்றுதான் எப்படிச் சொல்ல முடியும்? ஆகவே, ‘இந்த மனித சகவாசமே இனி நமக்கு வேண்டாம்!’ என்று அவர் உடனே கல்லாகிவிட்டாராம்!’

விக்கிரமாதித்தர் இந்தக் கதையைச் சொல்லி முடித்து விட்டு, ‘இப்பொழுதாவது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?’ என்று வந்தவரைக் கேட்க, ‘தீர்ந்தது சுவாமி, தீர்ந்தது’ என்று வந்தவர் தலையை ஆட்டிக்கொண்டே வந்த வழியைப் பார்த்து நடப்பாராயினர்.”
இருபத்து நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான மனோரஞ்சிதம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘’நாளைக்கு வாருங்கள்; இருபத்தைந்தாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் காந்தா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதி தேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க… காண்க… காண்க……

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *