இன்னொரு குதிரை!

 

குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள்.

வாஸ்து தேவதைகளைத் தெரிந்தவர்களுக்குக்கூட அஸ்து தேவதைகளை அவ்வளவாகத் தெரியாது. இதுகள் சதா வானத்தில் சஞ்சரித்தபடி, யாராவது “எழவு விழ’, “நாசமாகப் போ’, “சனியன் பிடிக்க’ போன்ற அசுபமான பிரயோகங்களை உதிர்த்தால் உடனடியாக ஆமோதிப்புத் தீர்மானம் நிறைவேற்றி அந்தப்படிக்குக் காரியங்கள் நடக்க வைப்பதையே முழுநேரம் வேலையாக கொண்டவை.

இன்னொரு குதிரை

கங்கையூரில் நகரசபைத் தேர்தல் அறிவித்ததுமே ஒட்டுமொத்தமாக அஸ்து தேவதைகள் இங்கே திரண்டு வந்து விடும். அதில் கொஞ்சம் லேட்டாக வந்து சேர்ந்த ஒன்று குப்பனை சபிக்க, சீனியர் தேவதை லிஸ்டில் முதல் இடம் பெறும் பிரமுகர்களில் சிலர் – டாக்டர் கண்ணுக்கினியான், பெட்டிக்கடை சாமி, முறுக்கு மொத்த சப்ளை முனியாண்டி, மளிகைக்கடை ராவுத்தர், ஸ்டானிஸ்லாஸ் வாத்தியார்.

மொத்த பன்னிரண்டு வார்ட் ஊரில். ரெண்டாம் வார்டில் டாக்டர் கண்ணுக்கினியானும், பெட்டிக் கடைக்கார சாமியும் மோத, நாலாம் வார்டில் குப்பனும் முறுக்கு முனியாண்டியும் போட்டி.
நகரசபை எலேக்ஷனுக்குத் தேர்தல் சின்னம் ஒதுக்குகிறது யாரென்று தெரியவில்லை. கடியாரம், குதிரை வீரன், மோட்டார் கார், ரயில் என்ஜின், கதவு, ரேடியோ, ரோடு ரோலர், விசிறி, பனைமரம், குடை, கிணறு, இரும்பு வாளி, பிராக்டர் இப்படி.
குப்பனுக்கு குதிரைவீரன் கிடைக்கும். முறுக்குக்காரருக்குக் கிணறு. பெருமாள் கோவில் தெரு, ஒற்றைத் தெருவில் ஐம்பது வீடு, இதுதான் தொகுதியின் அளவு. வீட்டுக்கு வீடு இருக்கப்பட்ட நண்டு சிண்டு நார்த்தங்காய் தள்ளி இருநூறு பெருசுகள். இவர்கள்தான் ஓட்டுச் சாவடிக்குத் திரண்டு வந்து வாக்களித்து கிணறையோ குதிரையையோ முனிசிபல் ஆபீஸ் படியேற்றக் கடமைப்பட்டவர்கள்.

கடைசியாக பத்திரிகை தாக்கல் செய்தாலும் குப்பன் முதல் ஆளாக, சூறாவளிப் பிரசாரத்தில் இறங்கிவிடுவான். அவனுடைய மூணு சீட்டு கோஷ்டி தேர்தல் கமிட்டியாக உருமாறி இறங்கி பாட்டியின் முதல் வசவுக்குப் பாத்திரமாகும்.
“தடித் தாண்டவராயன்கள், பேசறான், கொட்டிக்கறான், காபி எங்கேடி கிழவிங்கறான். இவன்கள் கட்டேலே போற வரைக்கும் யார் நித்தியப்படிக்கு வடிச்சுக் கொட்டி, பிண்டம் படைச்சு லோல்படறது?’. பாட்டி உருட்டி விட்டெறிந்த சாம்பார் சாதம், மூளையைச் சூடேற்ற கோஷ்டி முதல் தேர்தல் தந்திரத்தை எட்டும்.

நாளைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு தொகுதியில் இருக்கப்பட்ட எல்லா வீட்டுக்கும் அப்பம் வடை போட்டுவிட்டு வருவது.
“ஏண்டா தோசி, யாராவது மண்டையைப் போட்டா இல்லே பத்தாம் நாள் காரியம் முடிஞ்சு சாயந்திரம் அண்டை அயல்லே அப்பம் வடை போடற சம்பிரதாயம். இங்கே என்ன எழவு விழுந்துடுத்துன்னு அப்பம் வடை போட அலையறே?’
பாட்டியின் பிரம்மாஸ்திரத்தைப் புன்முறுவலுடன் எதிர்கொண்டு குப்பன் “எங்க தாத்தா அதான் உன் வீட்டுக்காரர் போனதுக்கு இப்போதான் அதைப் போட நேரம் குதிர்ந்திருக்கு’ என்பான். “அட எழவே’ என்று பாட்டி வாழ்த்தவாள்.
தொகுதி முழுக்க வினியோகம் செய்து விட்டு வீடு திரும்ப, “பாடையிலே போக. ஊருக்கு தானம் கொடுக்க முந்தி வீட்டுக்கு எடுத்து வைக்கணும்னு இந்த பிரம்மஹத்திக்குத் தெரியாதா’ என்றபடிக்கு முன் ஜாக்கிரதையாகப் பதுக்கி வைத்திருந்த தேர்தல் பிரசாரச் சாதனங்களை பூண்டு சட்னி சகிதமாக கபளீகரம் செய்து கொண்டிருக்கும் ராமாமிர்த பாட்டியைக் காண நேரும்.

நாலாம் வார்ட் இப்படி சாப்பாட்டு வசனையோடு தேர்தலை எதிர்கொள்ள, ரெண்டாவது வார்டில் டாக்டருக்கும் பெட்டிக்கடை சாமிக்கும் நட்பான மோதல். டாக்டர் தினசரி ராத்திரி அரைக்கவுளி வெற்றிலை மென்றுவிட்டு கோலி சோடா குடிக்க, ஊர் வம்பு பேச வசதியாகத் தேர்ந்தெடுத்திருப்பது சாமி கடையைத்தான்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தன் கடையில் இருந்த படிக்கே சாமி பிரசாரத்தைத் துவங்கி விடுவார். அவருக்குத் தேர்தல் சின்னமாக வெற்றிலை வழங்கப்படும். யார் எது வாங்க வந்தாலும் வெற்றிலையில் பேச்சை முடித்து காசு வாங்கிப் போட்டபடி சாமி பிரசாரம் நடத்த, டாக்டருக்கு மகா பெரிய பிரச்னை.

டாக்டருக்குக் கடியாரச் சின்னம். சாமி தேர்தல் சின்னத்தைப் பிரசாரத்தோடு விற்றுக் காசாக்குவதுபோல் அவர் கடியாரத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரு பாட்டில் கார்பனேட் மிக்சர் அல்லது சிரிஞ்ஜி இப்படி சின்னத்தை அவருக்கு ஒதுக்கி இருந்தால் சௌகரியமாக இருக்கும்.
சாமி கடை வாசலில் ராத்திரி வம்பு மடத்தை உடனே நிறுத்தி வைக்க டாக்டர் மனசே இல்லாமல் முடிவு செய்வார். அடுத்து பழனியின் குதிரை வண்டி, டாக்டர் பிரசார சாதனமாக்கப்படும்.
டிஸ்பென்சரிக்கு வரமுடியாத நோயாளிகளுக்கு நேரடியாகக் காட்சியளிக்க அவர் அந்த வாகனத்தைத்தான் அல்லும் பகலும் பயன்படுத்துவது வழக்கம்.

திட்டத்தின்படி குதிரை வண்டி ஓட்டுகிற பழனிக்குப் பின்னால் வழக்கம் போல் வண்டிக்குள் உட்காராமல் பழனி பக்கத்திலேயே டாக்டர் உட்கார்ந்து கருடாழ்வார் போல் ரெண்டு கையையும் கூப்பிக் கொண்டு வரவேண்டும். வண்டியில் ரெண்டு பக்கமும் கடியாரம் படம் எழுதிய படுதா தொங்க விடப்படும்.
தொகுதி முழுக்க பிரசார வாகனம் பதினைந்து நிமிடத்தில் சுற்றி வந்து விடும் என்பதால் அங்கங்கே வண்டியை நிறுத்தி டாக்டர் மினி அரட்டை கச்சேரிகளை அரங்கேற்றிய வண்ணம் பிரசாரத்தில் ஈடுபடுவார். நாலு ரவுண்ட் இப்படித் தொகுதி சுற்றி வருவதற்குள் பெரும்பாலான வாக்காளர்களைச் சந்தித்து விட முடியும். கூடவே நலம் விசாரித்து, கொஞ்சம் சுகவீனம் என்று புகார் செய்தவர்களை அடுத்தநாள் டிஸ்பென்சரிக்கு வரச்சொல்லி தொழிலுக்கும் வழிவகுக்க முடியும்.
“குப்பா, உன் தொகுதியிலே குதிரை வீரன்தானே உனக்கு சின்னம்?’ சாயந்திரம் பாட்டி கண்ணில் படாமல் ஒரு சிகரெட் பற்றவைக்க வரும் குப்பனை அக்கறையோடு விசாரிப்பார் சாமி. பூரிப்போடு சிரிப்பான் குப்பன்.

“அப்போ எதுக்கு அப்பம் வடைன்னு வீடு வீடா சப்ளை பண்ணிட்டு இருக்கே?’

குப்பனும் யோசித்துப் பார்ப்பான். சாமி சொன்னது நியாயமாகப்படும்.

“குதிரை மேலே ராஜபவனி வரணும் நீ…’ சாமி அஸ்திரத்தை வீசுவார்.

“அப்பம் வடை சில்வர் தூக்கை எப்படிப் பிடிச்சுக்கறது?’ இது குப்பனின் சந்தேகம்.

“ரெண்டு நாளைக்குப் பலகாரத்தை நிறுத்து. கடிகாரத்தையும் நிறுத்திடலாம்’ சாமி மர்மப் புன்னகை புரிவார். அவருக்கும் குப்பனுக்கும் நல்லது செய்கிற யுக்தியாம்.

பகல் நேரத்தில் டாக்டர் சின்னத் தூக்கம் போடுவது ஊருக்கே தெரியும் சங்கதி. சாமி பழனியை அந்த நேரத்தில் வரவழைத்து குப்பனையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஓர் உடன்படிக்கை ஏற்படுத்துவார். அதன் படிக்கு இந்த வாரம் முழுக்க சாயந்திரம் ஐந்து முதல் இரண்டு மணி நேரம் பழனியின் குதிரை குப்பன் வீட்டு வாசலில் நிற்க வேண்டும். மிச்சத்தை குப்பனும் குழுவும் பார்த்துக் கொள்வார்கள்.

குப்பன் வகையில் சாயந்திர வண்டி வாடகை. டாக்டர் ஏழு மணிக்கு அப்புறம் தான் குதிரைவண்டிப் பிரசாரம் கிளம்புவார் என்பதால் பழனிக்கு அந்த சவாரியும் கிடைக்கும்.

சாமி பழனிக்குச் சொல்லாமல் விடுவது ஒன்று உண்டு. குதிரைக்க டியூட்டி ரெண்டு மணி நேரம் என்றாலும் நடுவில் ஒரு சிறிய இடைவேளை ஒரு மணி நேரத்திற்கு. ஆக ராத்திரி டாக்டர் பிரசாரத்துக்குக் கிளம்பும்போது குதிரை வண்டி கிட்டாது.
குப்பன் டிராயிங் மாஸ்டர் வேலப்பன் சகாயத்தோடு சாயந்திரம் குதிரை வீரனாக அவதாரம் எடுப்பான். கரி மீசையும் கன்னத்தில் கும்கும வர்ணமும் வரைந்து கொள்வான்.

“சனியன்கள், உசிரை வாங்கறதுக்குன்னே பொறந்து வச்சிக்கு எல்லா ஜந்துவும்’ என்று பாட்டி குப்பனையும் குதிரையையும் பொதுவாகப் பார்த்துத் திட்டி விட்டு திருஷ்டி படாமல் இருக்க குதிரைக்கு வெகு அருகே கற்பூர ஆரத்தி எடுப்பாள். வெப்பம் தாங்காத குதிரை அவளை ஒரு முட்டு முட்டி தட்டுத் துடுமாறி விழச் செய்யும். “பொணமே, உனக்க எழவு விழாதா?’ என்று குதிரைக்கு இன்னொரு உடனடி வசவு தானம் செய்து விட்டு பதட்டி தரையில் விழுந்து மயக்கமாவாள்.

அவள் திரும்ப எழுந்து எந்த நிமிடமும் அடுத்த அசுப வார்த்தையைத் தன்னைப் பார்த்துச் சொல்வாள் என்று எதிர்பார்த்து குப்பன் அதற்குள் குதிரையை விட்டிறங்க நினைப்பான். குதிரை வளைந்து கொடுக்க மாட்டேன் என்று நேரே நிற்பதோடு பெரிய பற்களைக் காட்டிக் கொண்டு வில்லன் போல் கனைக்கும். வேறு வழி இன்றி குப்பன் குதிரை மேலேயே அரோகணித்திருக் மணி ஏழரை.

குதிரை வண்டிக்குத் தயாராக டாக்டர் வீட்டு வாசலில் காத்திருப்பார். கம்பவுண்டர் வைரவனை அழைத்து என்ன விஷயம் என்ற விசாரிக்கலாம் என்று நினைப்பார். ரகசியமாக வெற்றிலையும் சீவலும் வாங்க அவனை சாமி பெட்டிக் கடைக்கு அனுப்பியிருப்பது அப்போதான் நினைவு வரும். டாக்டருக்காக இல்லை. அவன் வீட்டில் விசேஷம் என்றுதான் வாங்கி வரவேண்டும் என்பது ஹெட் மாஸ்டரின் திட்டத்தின் சிறுபாகம்.
வெற்றிலையும் வராமல், குதிரையும் வராமல் டாக்டர் காத்திருக்க, குப்பன் வீட்டில் கூச்சல் குழப்பம். ராமாமிர்தப் பாட்டி கண்ணைத் திறக்காமலேயே ஈன ஸ்வரத்தில் நாட்டு அளவில், மாநில அளவில் இரக்கப்பட்ட பிரபலங்களை “பாடையிலே போற பீடைகளா’ என்று வைய ஆரம்பிப்பாள்.

டாக்டர் கண்ணுக்கினியான் வந்தால்தான் பாட்டி பிழைப்பாள் என்ற தெருவே குப்பன் கணக்கில் பூண்டு வெங்காய வடை தின்ற திருப்தியோடு ஏப்பம் விட்டபடி சொல்லும். அதற்குள் கையில் வெற்றிலைப் பொட்டலத்தோடு வைரவன் தகவல் அறிந்து குதிரையைப் பறித்துக் கொண்ட விஷயமாகச் சண்டை பிடிக்க குப்பன் வீட்டுக்குப் போய் சேர்வான்.

அவன் பேசவே தேவையில்லாமல் நிலைமை புரிபட்டுப் போகும். வைரவன் குதிரை பக்கம் நெருங்கி குப்பனை இறக்கி விட என்ன செய்யலாம் என்று யோசிக்க வெற்றிலைப் பொட்டலம் இப்போது குதிரை மூக்குக்கு முன். டாக்கடருக்கு வருடக்கணக்காக சேவகம் செய்து அந்த வாசனை அதற்குப் பிரியமான ஒன்று. வெற்றிலை வாசனையை முகர்ந்துகொண்டு குதிரை முன்னால் நகர ஆரம்பிக்கும்.

வைரவன் வெற்றிலையைக் காட்டியபடி முன்னால் நடக்க பின்னால் குப்பன் தாறுமாறாக எந்த நிமிஷமும் விழுந்துவிடும் பயத்தோடு குதிரை ஏறி வர, அந்த ஊர் வலம் ரெண்டாம் வார்டில் டாக்டர் வீட்டை நோக்கிப் புறப்படும்.

டாக்டரையும் குதிரை ஏறச் சொல்வான் குப்பன். எடை மொத்தமும் தாங்காது என்று டாக்டருக்குப் பட அந்த ஊர்வலம் குப்பன் வீட்டுக்கு, கால்நடையாகத் திரும்பி நடக்கும். ஊர்வலக் கடைசியில் ஆனந்தமாக வெற்றிலை மென்றபடி டாக்டர் நடப்பார். அவர் கொடுத்த வெற்றிலையைக் குதிரை அசை போடும்.

பாட்டிக்கு ஒன்றும் கேடு வராது. வெறும் மயக்கம்.
எல்லோருக்கும் சந்தோஷம் என்றாலும் நாலாம் வார்ட் வாக்காளர்கள் தான் குழம்பிப் போவார்கள். நாலாம் வார்ட் குதிரை வீரன் குப்பனும் ரெண்டாம் வார்டு கடிகார டாக்டரும் சேர்ந்தது என்ன மாதிரி அவசர கூட்டணி? ஏன் சேரணும்? டாக்டரை யுதிர்த்த வெற்றிலை சின்னம் எதுக்கும் நடுவில் வரணும்? யார் யார் பக்கம்? எது எது பக்கம்? அப்பம் வடை தேர்தலுக்கு அப்புறமும் கிடைக்குமா?

குப்பன் தோற்றுப் போவான்.

“சவண்டித் தீனி எழவுகள். வாய்க்கு ருசியாக் கொட்டிக்கத் தயார். ஓட்டுப்போட வீட்டை விட்டு வர முடியாதா இந்த சவங்களுக்கு? நாசமாப் போக.’

பாட்டியின் வசவை கடன் வாங்கி அவன் ஒலிக்கும் போது ரெண்டாம் வார்டில் டாக்டருடைய வெற்றியின் வேட்டு முழக்கம் கேட்டுக் கொண்டிருக்கும். கொண்டாட்டத்தின் பகுதியாக சாமி கடைக்கு வந்து ஆனந்தமாக வெற்றிலை போட்டுக் கொண்டு குப்பனைப் பற்றிய ஊர் வம்பில் ஆழ்ந்திருப்பார் டாக்டர்.

குதிரை வண்டிப் பழனி மேல் ஏழாம் வார்ட் மளிகைக்கடை ராவுத்தருக்கு வருத்தம் வரலாம். பழனிக்கு அந்த வார்டில்தான் வீடு. அவன் ஓட்டு நிச்சயம் அவருக்குக் கிடைத்திருக்கும். தேர்தலுக்கு முதல்நாள் அந்தத் தெரு வெட்டனரி ஆஸ்பத்திரியில் சக வண்டிக் குதிரை ஒன்றுக்கு முரட்டு ஊசியைப் போட்டு வதைத்தது பழனியின் மண்டிக் குதிரையின் பார்வையில் படாமல் இருந்தால் அது தேர்தல் தினத்தில் தெருவை பூரணமாக பகிஷ்கரித்திருக்காது. பழனியையும் வீட்டுக்காரியையும் தன்னைத் தேடி நாள் முழுக்க அலைய வைத்திருக்காது.

தேர்தல் வெற்றியை குதிரைகள் நிர்ணயிக்கக் கூடாது என்று சட்டமா என்ன?

- ஏப்ரல் 2011 

தொடர்புடைய சிறுகதைகள்
'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் ' என்று கண்ணபிரான் சொன்னபொழுது, நானுந்தான் என்று அரையாண்டுத் தேர்வும் சேர்ந்து கொண்டது. தமிழ் ஐயா நீலமேகம் அட்டவணையைப் படித்ததற்கு அடுத்த பத்து நாளும் முதலாம் பானிப்பட் யுத்தமாகவும், பத்து வரியில் கண்ணகி மதுரையை எரித்ததாகவும், ஆப்பிரிக்காவில் ...
மேலும் கதையை படிக்க...
"கண்ட எடத்துலே எல்லாம் ஒண்ணுக்கு இருக்க ஒக்காரக்கூடாதுன்னு சொல்றாங்களே... அது சரிதான் சார்..." ரவிச்சந்திரன் நிமிர்ந்து ஆட்டோ டிரைவரைப் பார்த்தான். பெசலான உருவம். முதுகில் காக்கிச்சட்டை சின்னதாகக் கிழிந்திருக்கிறது. தெருவின் இரைச்சலையும் ஆட்டோ ஒடுகிற சத்தத்தையும் மீறி ஒலிக்கிற குரல். கொஞ்சம் தயங்கினார் ...
மேலும் கதையை படிக்க...
சரவணன் நடு ராத்திரிக்கு எழுந்தபோது கேத்தி அறையில் ‘பிடி ஜூட்’ என்று அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் சுமார் முன்னூறு வருஷம் முந்திய இங்கிலாந்து ராணுவ உடை அணிந்த இளைஞன் ஒருத்தன். இந்த நஜீபை இழுத்துப் போட்டு உதைக்க வேண்டும். சரவணனுக்குப் ...
மேலும் கதையை படிக்க...
'எனக்கு ஒரு பாடை அனுப்பவும் ' பாலன் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஏனோ சிரிப்பு வந்தது. அதையே பாட்டாகப் திரும்பத் திரும்பப் பாடியபடி திரெளபதி அம்மன் கோயில் பொட்டலுக்கு டயர் வண்டியோடு அவன் போய்ச் சேர்ந்தபோது உச்சி வெய்யில் மணடையைப் பிளந்து கொண்டிருந்தது. வண்டி ...
மேலும் கதையை படிக்க...
வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள் : " மதியம் ரெண்டு மணிக்குக் கும்பகோணம் போகணும்..நினைவிருக்கில்லே?" "ஆபீஸிலிருந்து நேரா எழும்பூர் வந்திடறேன்" "எக்மோர் எதுக்குப் போறது? வீடியோ பஸ். வீட்டு ...
மேலும் கதையை படிக்க...
தத்தாத்ரேயன். அப்படி ஒரு பெயரை வைத்திருக்க வேண்டியதில்லை. வைத்துத் தொலைத்து விட்டார்கள். சாதாரணமாகச் சொல்வதற்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சொல்ல ஆரம்பித்த உடனேயே கேட்பவர் அலுப்படைந்து விட்டதாகத் தோன்றும். கல்யாணப் பத்திரிகையில் கூட இவன் இப்படித் தத்தகாரம் பாடிக்கொண்டு நிற்க, நறுக்குத் ...
மேலும் கதையை படிக்க...
‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார்.மகா தப்பு. அவர் சேட் இல்லை. தமிழ்தான். அப்புறம், அவராக பஸ்ஸில் ஏறவில்லை. திடகாத்திரமான நாலு இளவயசுப் பிள்ளைகள் பித்தளை கூஜா, கான்வாஸ் பை சகிதம் அவரை அலாக்காகத் தூக்கி ...
மேலும் கதையை படிக்க...
பஸ்ஸா, வேனா, ஆஸ்பத்திரியில அறுத்து முடிச்சு அள்ளிப் போட்டுக்கிட்டுப் போகிற பொண வண்டியான்னு தெரியலை. எங்கேயோ தூக்கலா பச்சை இலை வாசனை. கூடவே, விடிகாலையிலே மீன் சாப்பிட்டு, வரிசையா ஏழெட்டு பேர் ஏப்பத்தோடு விட்ட வாடை. சக மனிதர்கள். பொறுத்துக்கணும். அனேகல். னேகல். ...
மேலும் கதையை படிக்க...
கடவுளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். விஷயம் ஒன்றும் பிரமாதமானதில்லை. என் தம்பி ஒரு மலையாளத் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிான். நான் தாய்லாந்தில் வறுத்த மீன் விற்று அனுப்புகி பணத்தில் நடக்கி காரியம் அது. முண்டும் பிளவுஸ÷ம் தரித்த சுந்தரிகள், தழையத் தழைய வேட்டியும் ...
மேலும் கதையை படிக்க...
கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள். மாதுளம் பழத்தை உரித்து உடலெங்கும் ஒட்டவைத்தது போல் சின்னச் சின்னக் கொப்பளங்கள். நாலுநாள் கண்ணைக் கூடத் திறக்க முடியாமல் இமை ...
மேலும் கதையை படிக்க...
ஆதம்பூர்க்காரர்கள்
பொம்மை
ஒண்டுக் குடித்தனம்
சைக்கிள் முனி
ஒரு பயணம் – ஒரு ராத்திரி – ஒரு மணி
அலுவலகம் போகும் கடவுள்
ரங்கா சேட்
ஒட்டகம்
சிபி நாயர் கதை
வினைத்தொகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)