கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 42,511 
 
 
ஆண்கள் மட்டும்

இது லேசாக கெட்டுப்போன சில இளைஞர்களின் கதை. எனவே, படிக்கும் காலத்தில் படிப்பை மட்டும் கவனித்த, அம்மா சொல்படி வாரா வாரம் சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றிய நல்ல பிள்ளைகளுக்கு இக்கதையை ஜீரணிப்பதில் சிற்சில சிரமங்கள் உள்ளன. அவ்வாறான நபர்கள் இதைப் படிப்பதைத் தவிர்க்கவும்! (என்ன… அப்படி யாருமே இல்லையா?) இப்போதெல்லாம் இளைஞர்கள் தங்கள் பருவ வயது தாபங்களை தீர்த்துக்கொள்ள மொபைலிலேயே ‘சகலத்தையும்’ பார்த்துவிடுகிறார்கள்.

ஆனால், ஏறத்தாழ 1990கள் வரை, இளைஞர்கள் இதற்காக காலைக்காட்சி மலையாளப் படங்களையும், போர்ன் புத்தகங்களையுமே சார்ந்திருந்தார்கள். அப்போதெல்லாம் தமிழ்நாட்டு புத்தகக் கடைகளில் இது போன்ற காமப் புத்தகங்கள் ஏராளமாக விற்கப்படும். அட்டையில் ‘மலபார் மோகினி’, ‘கொச்சின் கோமளா’ என்று கேரளாவை டச் பண்ணி தலைப்பு வைக்கப்பட்ட புத்தகங்கள் கில்லியாக விற்றுத் தீர்க்கும்.

அப்போது நான் திருச்சியில் ஹாஸ்டலில் தங்கி, பி.எஸ்ஸி முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தேன். ஃபர்ஸ்ட் செமஸ்டர் விடுமுறை முடிந்து திரும்பும்போது, திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் அந்த புத்தகக் கடையையே நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு நின்றேன். ‘மலபார் மோகினி’ என்ற புத்தகத்தின் அட்டைப்படத்தில், ஒரு கவர்ச்சி நடிகை முக்கால்குறை ஆடையுடன் மழையில் நனைந்துகொண்டிருந்தாள். எப்படி கடைக்காரரிடம் கேட்பது என்று நான் கூச்சத்துடன் நின்றுகொண்டிருந்தபோது, “அண்ணா… ‘சின்னவீடு சிங்காரி’ நாவல் இருக்கா?” என்று சத்தமாகக் குரல் கேட்க… திரும்பிப் பார்த்தேன்.

சின்னா எனப்படும் சின்னப்பன். எங்கள் காலேஜ்தான். ஹாஸ்டலிலும் நான் இருக்கும் ஹால்தான். இருப்பினும் அவன் பி.ஏ. எகனாமிக்ஸ் என்பதால் அதிகம் பழக்கமில்லை. அப்போது ‘சின்ன வீடு சிங்காரி’ மிகவும் பிரபலமான புத்தகம். அது எழுத்தாளர்(?) மன்மதன் சார்(?) எழுதிய மிகவும் ஃபேமஸான நாவல்(?). (அட்டையில் நாவல் என்றுதான் போட்டிருப்பார்கள்). அநேகமாக தமிழில், ‘பொன்னியின் செல்வனை’விட அதிக எண்ணிக்கையில் விற்ற நாவல் அதுவாகத்தான் இருக்கும்!

“இல்லையே தம்பி… இன்னைக்கிதான் இருபது புக் வந்துச்சு. எல்லாம் வித்துடுச்சு!” என்றவுடன் சின்னாவின் முகத்தில் மிகுந்த ஏமாற்றம். அப்போதுதான் என்னை கவனித்த சின்னா, “என்ன கார்த்தி… இங்க நிக்கிற?” என்றான். நான் கூச்சத்துடன், ‘‘‘மலபார் மோகினி’ புக் வாங்கணும். கேக்க வெக்கமா இருக்கு…” என்றேன். “இதுல என்ன வெக்கம்? அண்ணா… தம்பிக்கு ஒரு ‘மலபார் மோகினி’!” என்று சின்னா கூற, அந்த நாவல் என்னிடம் தஞ்சமடைந்தது.

இவ்வாறுதான் ஒரு மறக்கமுடியாத காவிய தருணத்தில், எனக்கும் சின்னாவிற்குமான நட்பு ஆரம்பித்தது, அன்று ஞாயிற்றுக்கிழமை. மாணவர்களின் வாசிப்பு ஆர்வம் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. ஹாஸ்டல் ஹாலிலிருந்த அத்தனை பசங்களும் அமைதியாக சிங்காரிகள், மோகினிகள் மற்றும் சின்னப் பாப்பாக்களின் சிருங்காரச் சிரிப்பில் மூழ்கியிருந்தார்கள்.

எனது ‘மலபார் மோகினி’யில், மோகினி குளிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக வார்டனும், ஃபாதருமான சேவியர் குரல் கேட்டது. பியூன் ஜார்ஜிடம், “இந்த ஹாஸ்டல்ல வேலை செய்றத நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு! ஞாயித்துக்கிழமையும் அதுவுமா விளையாடக் கூடப் போகாம பசங்க படிக்கிறதப் பாத்தியா?” என்றபடி ஃபாதர் சென்றுகொண்டிருந்தார்!

அப்போது எனக்கு எதிர் வரிசையிலிருந்த சங்கர் அந்தப் புத்தகத்தில் என்ன நகைச்சுவையைக் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. திடீரென்று உருண்டு உருண்டு சிரித்தபடி புத்தகத்தைப் படிக்க… ஃபாதர் அதை ஜன்னல் வழியே பார்த்து விட்டார். “ஸம்திங் ராங்…” என்றபடி அவர் ஹாலில் நுழைந்தார். எங்கள் ஹாஸ்டலில் தனி அறைகள் கிடையாது. கல்யாண மண்டபம் போல் நீண்ட ஒரே ஹாலில், நாங்கள் வரிசையாக பெட்டிகளை சுவரோரம் வைத்து, அதற்கு நேரே படுக்கையைப் போட்டிருப்போம்.

“ஜார்ஜு… கதவச் சாத்துடா…” என்ற ஃபாதர் மாணவர்களின் பெட்டிகளை செக் பண்ண ஆரம்பித்தார். நாங்கள் புத்தகங்களை மறைக்க ஆளுக்காள் ஒவ்வொரு டெக்னிக்கைப் பின்பற்றினோம். 120 கிலோ எடைகொண்ட குண்டு குமார், போர்வைக்குள் புத்தகங்களைப் போட்டு மேலே ஏறி அமர்ந்துகொண்டு பெட்டியைத் திறந்து ஃபாதரிடம் காட்டினான். ஃபாதர் சந்தேகப்பட்டு அவனை எழச் சொல்ல… “பைல்ஸ் சார்… சும்மா சும்மா பொசிஷன மாத்தமுடியாது!” என்றான்.

ஃபாதர் அவனை உருட்டித் தள்ளிவிட்டு போர்வையை உதற… கொத்துக் கொத்தாக ‘மாந்தோப்பு மாலினி’களும், ‘ராங்கால் ராகினி’களும் கீழே விழுந்தார்கள்! நல்லொழுக்க வாத்தியார் மகன் தேவராஜ் கக்கத்தில் துண்டைச் செருகியபடி, “எங்க வேணும்னாலும் பாத்துக்குங்க…” என்று அவன் பெட்டி, படுக்கை… கட்டியிருந்த லுங்கி உட்பட அனைத்தையும் உதறிக் காட்டினான்.

அப்போதும் அவன் கக்கத்தில் இருக்கும் துண்டை விடாமல் பிடித்துக்கொண்டிருந்தது ஃபாதரை உறுத்தியது. அவர் துண்டைப் பிடித்து இழுக்க… ‘காமினி என் காமினி’ கீழே விழுந்து சிரித்தாள்! பெரும்பாலோருடைய பெட்டியில் ஒரு புத்தகம் தவறாமல் இருந்தது. ‘முரண்தர்க்கவாதத்தில் பொருள்முதல்வாதத்தின் கூறுகள்’ என்பது போன்ற விநோதமான புத்தகங்களைப் படித்துவிட்டு கால்தாடியுடன், “தமிழில் இதுவரையிலும் வெளியான சிறுகதைகள் அத்தனையும் குப்பை…” என்று கூறும் விமல்குமார் கூட, ஒரு காப்பி ‘சின்னவீடு சிங்காரி’யோடு பிடிபட்டதிலிருந்து அந்நாவலின் வாசக வீச்சை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்!

பால்வினைநோய் டாக்டர் மகன் பால்ராஜின் பெட்டியிலிருந்து மட்டும் மொத்தம் 35 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன! அதில் ‘சின்னவீடு சிங்காரி’ மட்டும் நான்கு காப்பி!
“ஒரே புக்குக்கு எதுக்குடா இத்தனை காப்பி?” என்ற ஃபாதர் அவனை ஓங்கி அறைந்தார். அவன் கண்கலங்க, “ஊருக்குப் போறப்ப என் ஃப்ரண்ட்ஸ்களுக்கு கொடுக்கிறதுக்காக வச்சிருக்கேன் சார்…” என்று கூறி நட்பின் உச்சத்தை எனக்கு உணர்த்த… எனக்கும் கண்கலங்கியது.

எனக்கு நான்கு பெட்டி தள்ளியிருந்த சின்னாவை வார்டன் நெருங்கினார். சின்னா பெட்டியைத் திறந்து வைத்துவிட்டு சீரியஸாக ‘மைக்ரோ எகனாமிக்ஸ்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். “இப்ப என்ன படிப்பு… பெட்டியக் காமி…” என்று கூற சின்னா காண்பித்தான். அவன் பெட்டியில் புத்தகம் ஒன்றுமில்லை. ஃபாதர் அவனைக் கடந்து செல்ல… சின்னா ‘மைக்ரோ எகனாமிக்ஸை’ விரித்து என்னிடம் காட்டினான். உள்ளே, ‘கொச்சின் கோமளா’ கள்ளச்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தாள்!

இதை ஜார்ஜ் பார்த்துவிட… கோமளா, சின்னாவிடமிருந்து கைப்பற்றப்பட்டாள்! என்னிடமிருந்து ‘மலபார் மோகினி’ மற்றும் ‘பால்கோவா பாப்பா’ ஆகிய புத்தகங்கள் பறிக்கப்பட்டன. ரெய்டு முடிந்தபோது அந்த ஹாலில் மொத்தம் 820 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன! அந்த ஹாலில் இருந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையே முந்நூறுதான்!

அனைவரையும் ஹாலின் நடுவில் உட்காரவைத்து ஃபாதர், “இந்த விஷயத்த உங்க வீட்டுக்கு லெட்டர் போட்டு தெரிவிக்கப்போறேன்… அதுக்குப் பிறகு மறுபடியும் மாட்டினீங்கன்னா ஹாஸ்டல விட்டு அனுப்பிடுவேன்…” என்று கூறிவிட்டு வெளியே சென்றார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஹாஸ்டலே பெற்றோர் வருகையால் கலகலத்துப் போய் கிடந்தது. கடிதத்தில் ஆண்களை மட்டும் வருமாறு கூறியிருந்தனர்.

என் வீட்டில், நான் ஒரே பையன் என்பதால் மிகவும் செல்லம். திடீரென்று ஹாஸ்டலில் கூப்பிட்டிருக்கிறார்கள்… என்னமோ ஏதோ என்று என் அப்பா, தாத்தா, பெரியப்பா, சித்தப்பா என்று நான்கு பேர் வந்து இறங்கியிருந்தனர்! அனைவரையும் ஃபாதர் எதிரே உட்காரச் சொன்னார். நான் கைகளைக் கட்டிக்கொண்டு, தலையைக் குனிந்தபடி ஓரமாக நின்றிருந்தேன்.

ஃபாதர் ஒவ்வொருவரிடமிருந்தும் கைப்பற்றிய புத்தகங்களை ஒரு கயிறில் கட்டி, மேலே பெயரை எழுதி வைத்திருந்தார். பியூன் பெருமாள், எனது கட்டை தேடி எடுத்து ஃபாதரிடம் கொடுத்தார். “இதெல்லாம் ஹாஸ்டல்ல உங்க பையன் படிச்ச புத்தகங்கள்…” என்று ஃபாதர் புத்தகங்களை நீட்டினார். ‘பால்கோவா பாப்பா’ என்று படிக்க ஆரம்பித்த அப்பாவின் முகம் சட்டென்று மாறியது. தாத்தா, “என்னடா புத்தகம்?” என்று வாங்கிப் பார்த்தார். அவ்வளவுதான். கண்கள் கலங்க… “ஆண்டவா….” என்று ‘நாயகன்’ கமல் போல் நெஞ்சைத் தடவியவர், எழுந்து என்னருகில் வந்தார்.

முகம் நூறு சிவாஜி போல் உணர்ச்சி வசப்பட்டுத் துடிக்க…. என் இரண்டு கன்னத்தையும் இரண்டு கைகளாலும் தடவியபடி, குரல் தழுதழுக்க, ”அய்யா…. நீ கவர்னர்கிட்ட பட்டம் வாங்கிட்டு கறுப்புகோட்டோட வந்து நிப்பன்னு நினைச்சனே… கடைசில… அது என்ன புத்தகம்?” என்றார். நான் தொண்டை அடைக்க மெதுவாக, “பால்கோவா….” என்று நிறுத்தினேன்.

“ம்….அப்புறம்” என்றார் தாத்தா. “பாப்பா….” என்று சொன்னதுதான் தெரியும். மடேரென்று என் இரண்டு கன்னங்களிலும் தாத்தா இரும்பு போல் இரண்டு அறை விட்டார் பாருங்கள்… காதில் ‘ஙொய்…’ என்று சத்தம் கேட்டது. பிறகு என் அப்பா, பெரியப்பா… என்று அனைவரும் ஒன்று கூடி என்னை அடிக்க…. நான் ஓடி சித்தப்பாவின் பையை எடுத்து, முகத்தில் அடி விழாமல் மூடிக்கொண்டேன். அப்பா விடாமல் பையை விலக்கிவிட்டு, என் முகத்தில் குத்த…. பை கீழே விழுந்தது.

அப்போது பையிலிருந்து வெளியே சிதறி விழுந்த ஒரு பொருளைப் பார்த்து அத்தனை பேரும் அமைதியானார்கள். அடிப்பது நின்றது. என்னடா அமைதியாகிவிட்டார்கள் என்று திரும்பி அந்தப் பொருளைப் பார்த்தேன். அது ‘சின்னவீடு சிங்காரி’ புத்தகம். அங்கு பத்து வினாடிகள் பேரமைதி நிலவியது. பதினோராவது வினாடி, “உருப்படாத நாயே….” என்று தாத்தாவும், அப்பாவும், பெரியப்பாவும் சித்தப்பாவைத் துரத்திக்கொண்டு ஓடினர்!

பெற்றோர் சந்திப்புக்குப் பிறகு, மீண்டும் மாட்டினால், ஹாஸ்டலை விட்டு அனுப்பி விடுவார்கள் என்பதால், செகண்ட் செமஸ்டர் எக்ஸாம் வரை சிங்காரிகளின் நடமாட்டம் ஹாஸ்டலில் குறைந்துவிட்டது. பிறகு சின்னாதான் முதலில் ஒரு புத்தகம் வாங்கி வந்தான். அப்படியே மீண்டும் ஹாஸ்டலில் புத்தகங்கள் நடமாட ஆரம்பிக்க… மீண்டும் ரெய்டு. ஃபாதர் வாசல் பக்கம் ரெய்டை ஆரம்பிக்க, சின்னாவும், பால்ராஜும், குண்டு குமாரும் அவசர அவசரமாக தங்கள் பெட்டிகளிலிருந்த புத்தகங்களை எடுத்து ஜன்னல் வழியாக வெளியே தூக்கி எறிந்தனர்.

நான் அதன் பிறகு எந்த புத்தகமும் வாங்கவில்லை என்றாலும் எதற்கும் என் பெட்டியில் ஏதாவது இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துக்கொண்டேன். இல்லை. ஃபாதர் ஒவ்வொரு பெட்டியாகப் பார்த்துவிட்டு வர லேட்டானது. நான் எதிரேயிருந்த குண்டு குமாரிடம் சென்று பேசிக்கொண்டிருந்தேன். வார்டன் நெருங்க… நான் திரும்பிப் பார்த்தேன்.

கந்தசாமி என் பெட்டிக்கருகிலிருந்து வேகமாக நகர்ந்து செல்ல… எனக்கு லேசாக சந்தேகம். ஓடி வந்து என் பெட்டியைத் திறந்து பார்த்தேன். உள்ளே பேன்ட்டுகளுக்குக் கீழ் ஒரு ‘சின்னவீடு சிங்காரி’! குப்பென்று வியர்த்துவிட்டது. ஜன்னல் வழியாக வெளியே போடலாமா என்று பார்த்தேன். ஃபாதர் அருகில் வந்துவிட்டார். ஜன்னலுக்கருகில் சென்றால் அவர் பார்த்துவிடுவார். ஃபாதர் என்னை நோக்கி வர இன்னும் நான்கு பெட்டிகள் மட்டும்தான் இருந்தன. என்ன செய்வது என்றே புரியவில்லை. மாட்டினால் நிச்சயம் ஹாஸ்டலை விட்டு அனுப்பிவிடுவார்கள்.

வேறு வழியே இல்லை. பேசாமல் நானும் வேறு யார் பெட்டியிலாவது வைத்துவிடவேண்டியதுதான். சுற்றிலும் பார்த்தேன். எனது இடது பக்கம், குமரேசன் பெட்டி மீதே அமர்ந்திருந்தான். சட்டென்று முடிவெடுத்து, இன்று வரையிலும் நான் நினைத்து நினைத்து வெட்கப்படும் அந்தக் காரியத்தைச் செய்தேன். பக்கத்தில் சின்னாவின் பெட்டி திறந்து கிடந்தது. சின்னா சற்று தள்ளி நின்று ஃபாதரையே கவனித்துக்கொண்டிருந்தான். நான் நைஸாக எனது பெட்டியிலிருந்த ‘சின்னவீடு சிங்காரி’யை எடுத்து, சின்னாவின் பெட்டியில் வைத்தேன்.

மானுடகுல வரலாற்றின் மகத்தான தனிமனித துரோகம் இவ்வாறுதான் நண்பர்களே இழைக்கப்பட்டது. இரண்டு நிமிடங்கள் கழித்து ஃபாதர், சின்னாவின் பெட்டியிலிருந்து ‘சின்னவீடு சிங்காரி’யை எடுக்க… சின்னா அதிர்ந்தான். ஹாஸ்டலிலிருந்து வெளியேற்றப்பட்டான்..இவையெல்லாம் நடந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால், நான் சின்னாவுக்கு செய்த துரோகம் மட்டும் என் நெஞ்சில் உறுத்திக்கொண்டேயிருந்தது.

சென்ற வாரம், சரியாக 24 ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பில் சின்னாவை சந்தித்தேன். சம்பிரதாயமான உரையாடலுக்குப் பிறகு, என் வாழ்க்கையின் மிகவும் செக்ஸி(?)ட்டிவ்வான அந்த மேட்டரைத் தொட்டேன்.“சின்னா… ஒரு விஷயத்துக்காக நான் உன்கிட்ட ஸாரி கேட்கணும்…” என்றேன். “எதுக்கு?”
தயங்கித் தயங்கி அந்த சினேக துரோகத்தின் கதையைக் கூறினேன்.

நான் சொல்லி முடித்தவுடன் சின்னா சிரித்தபடி, “நீதான் என் பெட்டில வச்சேன்னு எனக்குத் தெரியும்!” என்றான். அதிர்ந்தேன். “நான் வச்சப்ப நீ பாத்துட்டியா?” “இல்ல… நான்தான் என் பெட்டில இருந்த புத்தகத்தை உன் பெட்டில வச்சேன்! மறுபடியும் அது என் பெட்டில இருந்துச்சுன்னா, நீதானே வச்சுருக்கணும்!” “என்னது…. நீயா வச்ச? நான் கந்தசாமின்னு நினைச்சுகிட்டிருந்தேன்.

நீதான் எல்லா புத்தகத்தையும் ஜன்னல் வழியா தூக்கிப் போட்டியே…” “ஆமாம்…. ஆனா, ஃபாதர் கிட்ட வந்த பிறகு, எதுக்கும் ஒரு தடவை செக் பண்ணலாம்னு மறுபடியும் பெட்டில பாத்தேன். கீழ ரெக்கார்டு நோட்டுக்குள்ள ஒரு ‘சின்னவீடு சிங்காரி’ இருந்துச்சு. எனக்கு என்ன பண்றதுன்னே புரியல. ஃபாதர் கிட்ட வந்துட்டதால ஜன்னல் வழியாவும் போடமுடியாது. நீ பெட்டிகிட்ட இல்ல. சட்டுன்னு உன் பெட்டில வச்சுட்டேன்!” சின்னாவை நான் முறைத்தேன். இந்த வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்!

– பெப்ரவரி 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *