கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: September 22, 2023
பார்வையிட்டோர்: 12,567 
 
 

“விருப்பப்பட்டதை சாப்பிடக்கூட முடியலை… சீ… இதெல்லாம் ஒரு வாழ்வா?!” என்றபடி மன்னர் வீரவர்மன் தன்னுடைய உணவை நஞ்சைப்போலப் பார்த்தார். இரண்டு ரொட்டித்துண்டுகள், நூறு எறும்புகள் சாப்பிடும் அளவிற்குச் சோறு, பாகற்காய், கீரையுடன் அருகம்புல்சாறு.

“யாரங்கே?”

ஓடிவந்த அமைச்சர் “மன்னா” என்றார்.

“ராணியார் எங்கே?”

“மன்னா, கடைவீதிக்குச் சென்றிருந்த மகாராணியார் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டாராம். வருவதற்கு தாமதமாகுமென்று சற்றுமுன்னர்தான் குறுந்தகவல் அனுப்பினார்.”

“அப்படியா!”

மன்னர் தன்னுடைய கைத்தொலைபேசியை எடுத்துப்பார்க்க, அவருக்கும் செய்தி வந்திருந்தது.

“இளவரசர்கள்?”

“அரண்மனை உணவுகள் அலுத்துவிட்டதென்று பீட்சா வரவழைத்து சாப்பிட்டுவிட்டு போக்கிமான் பிடிக்கப் போயிருக்கிறார்கள் மன்னா”

“என் குலக்கொழுந்துகளல்லவா வீரத்திற்கு கேட்கவா வேண்டும்?” என்றார் மன்னர் மீசையை முறுக்கியபடி.

“அது என்ன… நான் இதுவரை பிடிக்காத மானாகவுள்ளது…?”

“அது கைத்தொலைபேசியில் விளையாடக்கூடிய விளையாட்டு மன்னா” அமைச்சரின் பதிலுக்கு வெகுண்டெழுந்து, “என்ன…. புலி வேட்டையாட வேண்டிய பருவத்தில் போக்கிமானா? வெட்…கம்.”

“பீட்சா… என்ன அது? புது உணவு..?” புருவத்தைச் சுருக்கியபடி கேட்டார்.

அமைச்சர் தன்னுடைய ஐபேடில் பீட்சாவின் படத்தைக் காட்டினார்.

“காய்ந்துபோன ரொட்டி…

அதன்மேல் பாலாடைக்கட்டி…

இதைக்கொண்டுபோ எட்டி…”

என்றுரைத்தவர் “இன்று அரண்மனையில் என்ன உணவு தயாராயிருக்கிறது?” முழங்கினார்.

‘அந்தம்மா இல்லேன்னா இவரோட அட்டகாசம் தாங்கமுடியாதே’ என்றெண்ணிய அமைச்சர்,

“விசாரித்து வருகிறேன் மன்னா.”

“வேண்டாம், நானே சென்று பார்க்கிறேன்.”

“மன்னர் பெருமான் அடியேனை மன்னிக்கணும். தங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாலும், ரத்தத்தில் சர்க்கரையினளவு கூடியிருப்பதாலும் உணவுக் கட்டுப்பாடு அவசியமென்பது அரசியாரின் உத்தரவு.”

“ஹா… உணவுக் கட்டுப்பாடு… எப்போதும் காய்ந்த ரொட்டிகளும், ஆடுமாடுகள் தின்னும் இலைதழைகளும்… நாக்கு செத்துவிட்டது அமைச்சரே…”

‘இன்றைக்கு ராணியாரால் நான் சாகப்போகிறேன் மன்னரே…’ அவரது ராசிக்கு அன்றையதினம் ஆபத்தில் முடியுமென்று, நாள்காட்டியில் பார்த்தது நினைவுக்கு வந்துபோனது.

அறைக்குள் நுழையுமுன் உணவின் வாசனை முகத்தில் மோத, ஒருகணம் நடையை நிறுத்தி மணத்தை நுகர்ந்தார் மன்னர்.

‘வேற வேலை எங்கேபோய் தேடுவது…’

“அமைச்சரே, என்ன யோசனை?”

‘மைன்ட்வாய்ஸ் கேட்டுவிட்டதோ’ பதறிய அமைச்சர், சிந்தனைக்குத் தடைவிதித்துவிட்டு “ஒன்றுமில்லை மன்னா” என்றார் சுட்டக்கோழிபோன்ற முகத்துடன்.

கோழி பிரியாணி, ஆட்டுக்கறி வறுவல், மீன்சம்பால், மிளகுநண்டு பிரட்டல், இறால் பொரியல், ஆட்டுக்கால்சூப் ஆகியவை மன்னரைப் பார்த்துச் சிரித்தன. அவற்றுக்கு உடனே ஆதரவு கொடுக்க மன்னரின் மனம் ஏங்கியது.

“அனைத்தையும் கொண்டுவாருங்கள்.”

‘ராணிக்கு என்ன பதில் சொல்லப்போகிறேனோ’ பொரித்த இறாலாய் சுருண்டுபோனார் அமைச்சர்.

‘ராணி வருவதற்குள் ஒருக்கட்டு கட்டிடணும்’ குவளையில் ஊற்றிய கொக்கோகோலாவானது மன்னரின் மனது.

“ம்… ஆகட்டும்.”

நடுங்கும் கரங்களால் உணவுகளை மேசையில் பரப்பினார் அமைச்சர்.

அதென்ன வாயிலில் சப்தம். ராணியின் வாகனம் போலல்லவாயிருக்கிறது.

அவசரமாக உள்ளே நுழைந்த மகாராணி “ஏன் இவ்வளவு தாமதமாக சாப்பிடுகிறீர்கள், நேரந்தவறாமல் சாப்பிட வேண்டுமென்பது மருத்துவரின் அறிவுரையல்லவா?” என்றவாறே மேசையை நோக்கினார்.

அமைச்சரின் இதயத்துடிப்பு ஒருகணம் வேலைநிறுத்தம் செய்தது.

“எனது இதயதாரகை பசியுடன் வருவாயே என்று உனக்காக உணவுகளை எடுத்துவைக்கச் சொல்லி, உன் வரவுக்காகத்தான் காத்திருந்தேன் தேவி.”

அருகம்புல்சாற்றை ஒரேமூச்சில் குடித்துமுடித்தார் மன்னர்.

‘நல்லபேரு வச்சாங்கப்பா இவருக்கு’ மனதில் குமைந்தார் மந்திரி.

– சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கதைக்களத்தில் (ஜனவரி 2017) முதல் பரிசு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *