அப்புசாமியும் அழகிப் போட்டியும்

1
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 24, 2012
பார்வையிட்டோர்: 13,221 
 
 

அப்புசாமிக்கு அவசரமாக மூன்று கூடை அழுகல் தக்காளியும், இரண்டு கூடை அழுகல் முட்டையும், ஒரு கூடை காது அறுந்த செருப்புகளும் தேவைப்பட்டன.

மாம்பலத்தின் கசகச காய் மார்க்கெட்டில் தக்காளி செல்வரங்கத்தின் ஹோல்ஸேல் தக்காளி மண்டியில் பேரம் செய்து கொண்டிருந்தார்.

“நல்லா அழுகியிருக்கணும் கூடைக்கு அஞ்சு, பத்து அதிகம் கேளு, குடுத்துடறேன். ஆனால் தக்காளி சும்மா கப்பெடுக்கணும். ஆமாம், “என்றார். “எதுக்கு சாமி அவ்வளவு அழுகின தக்காளி? ஓட்டல் எதுனா வெச்சிருக்கியா?” என்று செல்வரங்கம் விசாரித்தான்.

“அதையெல்லாம் கேட்காதே. உன்னை வடையைத் தின்னச் சொன்னால் தொளையை எண்ணுறியே…” என்று அவனைக் கடிந்துகொண்டார். “நீயாகப் பொறுக்கித் தர்றியா? நானாகப் பொறுக்கி ஆகட்டுமா?”

ஒரு வழியாக நல்ல அழுகல் தக்காளி கூடை இருநூறு ரூபாய் வீதம் விலை பேசி ஆட்டோவில் வைத்துக்கொண்டார்.

“இன்னா சார், இந்தக் கப்பு அடிக்குது,” என்று முகம் சுளித்தான் ஆட்டோக்காரன் “மாட்டுக்கா சார்?”

“எல்லாம் மனுசனுங்களுக்குத் தான். உன்னை வடையைத் தின்னச் சொன்னால் துளையை எண்ணுறியே. அம்பது ரூபா அதிகம் தர்றேன்னு சொல்லியிருக்கேனில்லே? நேராக முட்டைக் கடைக்கு வண்டியைச் சீக்கிரம் வுடு. இரண்டு கூடை அழுகல் முட்டை வாங்கணும். அப்புறம் பிளாட்பாரத்திலே பழைய செருப்பு தைக்கிறவனாப் பார்த்து நிறுத்து. பழைய செருப்பு ஒரு கூடை வாங்கியாகணும்.” நாற்றம் குடலைப் பிடுங்கினாலும், வந்த கிராக்கியை விட்டுவிடக் கூடாது என்று ஆட்டோக்காரன் பல்லையும், மூக்கையும் கடித்துக் கொண்டு பொறுமையாக வண்டியை விட்டான்.

திடீரென்று ஒரு பயம், வந்துவிட்டது. ஒரு கால் இந்தக் கிராக்கி பைத்தியம் கியித்தியமோ? பாதியிலே மீட்டருக்குப் பணம் குடுக்காம இறங்கி ஓடிடுமோ…’

வண்டியை டக்கென்று ஒரு ஸ்பீடு பிரேக்கரில் வேகமாக ஏற்றி ஒரு மாபெரும் சிறப்புக் குலுக்கல் செய்தான். பல சில அழுகல் தக்காளிகள் எழும்பிக் குதித்தன. அவற்றுடன் அப்புசாமியும் எகிறிக் குதித்தார் என்று சொல்லத் தேவையில்லை.

“வண்டி பிரேக்டவுன் சார். இறங்கிக்குங்க…”

“என்னப்பா இது? டகால்னு இப்படிச் சொன்னால் எப்படி?”

“நீங்க துட்டை முதல்லே அட்வான்ஸாக் குடுத்துடுங்க… ரிப்பேர் பண்ணிப் பார்க்கிறேன். வண்டியைத் துடைச்சுக் கிளீன் பண்ணினாக்கூட கப்பு நாத்தம் போக ஒரு வாரம் ஆகும்.”

அப்புசாமி புரிந்துகொண்டார். “இன்னா நைனா… கலாச்சாரக் காவலர் நான். என்கிட்டே இப்படி ‘கப்’ அண்ட் ரைடாப் பேசிறியே. துட்டா பெரிசு? மனுசங்கதான் முக்கியம். நம்ம நாட்டோட பண்பு, கலாச்சாரம், கிழவிங்க இவுங்கதான் முக்கியம்.”

“சரி. சரி… துட்டை வெட்டுங்க மொதல்லே. இல்லாட்டி வண்டி நவுராது.”

அப்புசாமி இரண்டு நூறு ரூபாய் நோட்டை அலட்சியமாக அவனிடம் நீட்டினார். “ஏம்பா, என்னை அன்னக்காவடின்னு நினைச்சிட்டியா? சரி… சரி… முட்டைக் கடைக்கு வுடு, ரெண்டு கூடை அழுகல் முட்டை உடனடியாக வேணும்.”

ஆட்டோக்காரன் ரூபாயை வாங்கிப் போட்டுக்கொண்டதும் அவரது பரம தாசனாக ஆகிவிட்டான்.

“செய் சார். தப்பா நெனச்சிக் காதேபா… வண்டியிலே நல்லவனும் ஏறுவான். மிஸ்டீக்கான கசுமாலங்களும் ஏறும். ஆட்டோக்காரன் பொல்லாதவன்னு பப்ளிக்கு நெனக்கறாங்களே கண்டி, ஏறுகிற வன்லே எத்தினி பேரு சாவு கிராக்கி, ரெளடின்னு யார் ஆக்ஷன் எடுக்கறானுங்க. சொம்மா ஒரு வார்த்தைக்கு சொல்றேன்.”  

“சரி…சரி… நீ ரொம்ப நல்லவன். வண்டியை வுடுப்பா முட்டை கடைக்கு.”

அப்புசாமியைத் தேடித் தடாலென்று ஒருபட்டம் வந்தது. வீடு தேடி வந்த மகாலட்சுமியைக் காலால் உதைப்பதாவது என்று எண்ணி ஒப்புக்கொண்டார்.

சில தினங்கள் முன்பு அவரிடம் சஞ்சீவி என்ற கிழவர் வந்து கண்ணில் நீர் விட்டுக் கதறி விட்டார். “அண்ணா, உங்களை சொந்த அண்ணா மாதிரியே நினைச்சு சொல்றேன் நம்ம தமிழ்ப் பண்பாட்டை நீங்கதான் காப்பாத்தனும். நம்ம தமிழ் நாட்டிலே இப்படி ஒரு அக்கிரமமான விழா நடக்கலாமா? நம்ம வீட்டுக் கிழவிங்களை அடக்க ஒடுக்கமா வீட்டோடு இரு என்று நாம சொல்லை. அவுங்களுக்கு நல்லாச் சுதந்திரம் குடுத்துத்தான் இருக்கோம். நகைக்கடையிலே, புடவைக் கடையிலே, ஏஸி ஓட்டலிலே, பஸ்ஸிலே, ரயிலிலே, விழாக்களிலே பாருங்கள். எல்லா
இடத்திலும் கிழவிங்கதான் மினுக்கிட்டுத் திரியறாங்க. உங்க சம்சாரம் நடத்தற பாட்டிகள் முன்னேற்றக் கழகத்திலே பாருங்க… கில்லாடிக் கிழவிங்க கூட்டம் அட்டகாசம் பண்ணது.”

அப்புசாமிக்குக் கேட்கக் கேட்கக் காதிலே ஜிலேபி நீங்கிய ஜீரா பாய்வது போலிருந்தது.

“சபாஷ் பாண்டியா?” என்று அந்தக் கிழவரைத் தட்டிக் கொடுத்தார். “சரியான போடு போடறீங்க… கிழவிங்க கொட்டம் அடங்கணும்.”

“எப்போ எப்போவெல்லாம் அதர்மம் மிகுந்து தருமம் நலிவடைகிறதோ அப்போ அப்போவெல்லாம் நான் அவதரிப்பேன்னு கீதையிலே பகவான் சொன்னாரில்லையா? அந்த மாதிரி கிழவிங்க தொல்லை எப்போ எப்போவெல்லாம் அதிகமாகப் போகுதோ அப்போ அப்போவெல்லாம் அவுங்களை அடக்க உங்க மாதிரி ஒருத்தர் பொறக்கறாரு, அவதரிக்கிறார்னும் சொல்லலாம்.”

அப்புசாமிக்கு உச்சி பல் செல்ஷியஸ் உறைந்து விட்டது. “நான் ஒரு அவதார புருஷன் என்கிறீங்களா?”

“ஆமாம். சந்தேகமென்ன?” “நான் ஏதோ சீதேக்கிழவியோட புருஷன்னு இத்தினி நாளா அஸால்ட்டா இருந்துட்டேன்,” வருந்தினார் அப்புசாமி.

“ஆஞ்சநேயருடைய பலம் அவருக்கே தெரியாது.”

“நான் ஆஞ்சநேயர் என்றீர் சந்தோஷம் இப்போ நான் எந்த சஞ்சீவி மலையைக் கொண்டு வரணும்? உம்ம பேர்கூட சஞ்சீவிதான். உம்மைத் தூக்கிக்கொண்டு கடலைத் தாண்டணுமா?

கிழவர் சஞ்சீவி விளக்கமாகச் சொன்னதன் சுருக்கமாவது சீதாப்பாட்டி ஒரு அழகிப்போட்டி நடத்தப் போகிறாள் அறுபது வயது தாண்டிய கிழவிகள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

அழகுக் கிழவிகளுக்கான ‘கிளவியோபாட்ரா போட்டி’ என்று அதற்குப் பெயர். மேற்படி போட்டியில் எல்லாக் கிழவிகளும் கலந்து கொள்ளலாம். சென்னை ராணி சீதை ஆச்சி ஹாலில் விரைவில் நடை பெறப் போகும் அந்த அழகுக் கிழவிப் போட்டியில் சஞ்சீவியின் மனைவியும் கலந்து கொள்ளத் துடிக்கிறாள்.மேற்படி போட்டி நடப்பது தமிழகக் கலாச்சாரத்துக்கு விரோதமானது. அதை எப்படியாவது அப்புசாமி நிறுத்திவிட வேண்டும்.

“உங்க சம்சாரம் ஒரு புரட்சிப் பாட்டியாக இருக்கலாம். ஆனால் ஊரிலுள்ள எல்லாக் கிழவிகளையும் தப்பாக ஊக்குவிக்கக் கூடாது. சார், உங்ககிட்டே சொல்றதுக்கென்ன?” என்றுசஞ்சீவி குரலைத் தாழ்த்திக் கொண்டார். “என் சம்சாரம் நிஜமாகவே ரொம்ப அழகாக இருப்பாள். வயசு அறுபத்திரண்டிலும் செக்கச் செவேல்னு நெகு நெகுன்னு சந்தன சோப்பாட்டம் இருப்பா. ஆனால் நான் அவளை ‘பியர்ஸ்!’ ‘பியர்ஸ்’ னுதான் செல்லமாக் கூப்பிடுவேன். இந்தப் பக்கமிருந்து பார்த்தா அந்தப் பக்கம் தெரியும். ஸீத்ரூ என் பாங்களே அந்த ரகம்.”

அப்புசாமி பல்லைக் கடித்துக் கொண்டார்.

“யோவ்! என் சம்சாரம் சீதே கூடத்தான் பேரழகி. நீர் என்னவோ உங்க சம்சாரம்தான் ஒரே அழகிங்கற மாதிரி ஜம்பம் அடிச்சிக்கிறீங்களே? இப்படியெல்லாம் கர்வப்படறதாலே தான் அழகிப் போட்டிங்க வைக்கறாங்க… அப்புறம் குய்யோ முறையோன்னு கத்தறது. என் சம்சாரத்தைவிட உம்ம சம்சாரம் அழகா. தங்க பெல்ட்டு மாதிரி இடுப்பு என் சீதேக்கு! இஞ்சி இடுப்பழகின்னு ஒரு பழைய பாட்டு வருமே அதைத்தான் நான் பாடறது. ஆனால் டபுக்குனு இழுத்துப் போர்த்துக் கொண்டுவிடுவாள்.”

“ரொம்ப மன்னிக்கணும். நான் அதிகப்பிரசங்கித்தனமாப் பேசிட்டேன். என் சம்சாரம் ஒரு சுமாரான அழகின்னு வெச்சுக்குங்க.”

அப்புசாமி கோபமாக, “நான் கல்யாணமானவன். யார் சம்சாரத்தையும் நான் வெச்சுக்கத் தேவையில்லை…” என்றார்.

“சார், மன்னிக்கணும். இந்த அழகிப்போட்டி நடக்கக்கூடாது. என் சம்சாரத்து அழகைப் பிறத்தியார் பார்க்கறதை நான் விரும்பலை. அவள் அழகு இத்தனை வயசிலும் ஒரு போதை ஊட்டற அழகு. சுபாவத்தில்லேயே கொஞ்சம் சுற்றுகிற சுபாவம்.”

அப்புசாமி கவலையுன், “கற்பு எல்லாம் கியாரண்டிதானே?” என்றார்.

“சே! சே! நெருப்பு சார்… ஆனால் பாருங்கோ…”

“ஆனால் பார்க்காதீங்கோன்னு சொல்லுங்கோ.”

“ஹி! ஹி! சரியாச் சொன்னீங்க. அம்பதிலும் ஆசை வரும்னு சிவாஜி கூடப் பாடியிருக்கார்.”

“புரிஞ்சது!” என்று அப்புசாமி தலையாட்டினார். “உம்ம சம்சாரம் போட்டியுலே கலந்து கொண்டால் அவளைப் பார்த்து எந்தக் கிழவனாவது கொத்திக் கொண்டு போயிடுவாங்களோன்னு பயப்படறீங்க.”

“நீங்க மகா புத்திசாலி சார். நீங்கதான் போட்டி நடக்காதபடி செய்யணும். இந்த சூட்கேஸிலே ஐம்பதாயிரம் ரூபா இருக்கு எப்படிச் செலவு செய்வீங்களோ… ஏதாவது பண்ணி இந்தப் போட்டியை உங்க மனைவி நடத்தாமல் பண்ணிடணும்.”

அப்புசாமி உடனடியாகச் செயலில் இறங்கினார்.

“கலாச்சாரக் காவலர்’ என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொண்டார். பலவீனமான பத்திரிகை நிருபர்களை வரவழைத்தார். காட்ட வேண்டியதைக் காட்டி, பெற வேண்டிய பப்ளிஸிட்டியைப் பெற்றார்.

‘அழகிப் போட்டியை நடத்தவிட மாட்டோம்!  

கலாச்சாரக் காவலர் அப்புசாமி’ யின் வீர முழக்கம்!’ என்று கொட்டை எழுத்தில் பத்திரிகைகளில் செய்தி வருமளவுக்குச் செய்து விட்டார்.

மேற்படி செய்தி வந்த பத்திரிகையை மனைவி சீதே மீது வீசி அடித்தார்.

சீதாப் பாட்டி அதை வாங்கி மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அதனாலே தன்னை விசிறிக் கொண்டாள்.

“ஆஸ் யூஷீவல் சாலஞ்சா? வெல்கம்,” என்றாள்.

“அடியே கெயவி! என்கிட்டே மோதாதே. நான் பார்த்தாலும் புலி, பாய்ஞ்சாலும் புலி!” என்று கர்ஜித்தார்.

“ராணி சீதே ஆச்சி ஹால் முன்னாலே எங்க கோஷ்டி நாளைக்கு மறியல்டீ மறியல்…”

சீதாப்பாட்டி சிந்திக்கத் தொடங்கினாள்.

(அவள் சிந்தனையின் விளைவு-அடுத்த வாரம்)

அப்புசாமியை இரண்டு போலீசார் தரையோடு தரையாகத்தரதர செய்து கொண்டு போனார்கள்.
ஒரு காவலர் (கால் பந்தாட்டத்தில் பரிசு பெற்றவர்) எட்டி உதைத்தார்.

அப்புசாமி எதற்கும் அஞ்சவில்லை. அடிவாங்க, அடி வாங்க குரல் உரத்து ஒலித்ததே தவிர குறையவில்லை.

காப்போம்! காப்போம்! கற்பைக் காப்போம்!

காட்டாதே காட்டாதே! அழகைக் காட்டாதே!

நடத்தாதே! நடத்தாதே! கிழவிகளுக்குப் போட்டி நடத்தாதே!
சாரம், சாரம் – சம்சாரம்!
சாரம் சாரம் – கலாச்சாரம்.
அப்புசாமியின் உதட்டின்மீது விண்ணென்று ஒரு காவலர் தன் பூட்ஸைப் பதிப்பித்தார்.

கொடகொடவென்று ரத்தம் கொட்டியது. சே! பல்செட்டை உடைத்துவிட்டானே பாவி என்பதே அப்புசாமியின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

காலைக் கையை உதறிக்கொண்டு சிலிர்த்து எழுந்தார், விடுபட்டார் போலீஸ் பிடியினின்று. பார்த்த சினிமாக்கள் பகபகவென்று ஞாபகத்துக்கு வந்தன. போலீசின் கையிலிருந்து தடியைப் பறித்துக்கொண்டார். தன்னை நெருங்கிய போலீஸைப் புயல் வேகத்தில் சுழன்று சுழன்று தாக்கினார்.

ஒரு போலீஸைத் தூக்கி வீசி எறிந்தார். மேற்படி போலீஸ் ஏதோ ஒரு நீச்சல் குளத்தில் போய் தொபுகடீரென்று விழுந்தார். இன்னொரு போலீஸ்காரரையும் தூக்கிக் கடாசினார். அவரும் கரெக்டாக அதே நீச்சல் குளத்தில் விழுந்தார். மேலும் பல காவலர்களைத் தூக்கித் தூக்கி எல்லாத் திசையிலும் எறிந்தார்.

என்ன ஆச்சரியம் – தொந்தியும் தொப்பையுமாகக எல்லாக் காவலர்களும் எங்கே வீசப்பட்டாலும் அதே நீச்சல் குளத்தில் விழுந்தார்கள். அப்படி விழுந்தாயிற்று என்றால் கதாநாயகன் ஜெயித்தாயிற்று என்று அர்த்தம்.

அப்புசாமி தனது கோஷ்டியுடன் பா.மு. கழகத்தை நோக்கி முன்னேறினார்.

கலாச்சாரக் காவலர் அப்புசாமி வாழ்க! ஜெய்! என்ற கோஷங்களுடன் அவரைத் தோளிலேயே கிழத் தொண்டர்கள் தூக்கி மகிழ்ந்தனர். திடுமென்று ஒரு ஜீப் வந்தது.

ஸ்தலத்துக்கு ஐ.ஜி.யே வந்து விட்டார்.

அடுத்த நிமிஷம் ‘டிஷ்யூ! டிஷ்யூ’ என்று துப்பாக்கிகள் குண்டுகளைக் கக்கின. ஒரே புகை மயம்! கண்ணீர்ப் புகைக் குண்டுகள்!

அப்புசாமியின் காது, மூக்கு, கண் போன்ற சகல துவாரங்களிலும் புகை புகுந்து அவரைத் திக்குமுக்காடச் செய்தது.

திடுக்கிட்டுக் கண் விழித்தார்!

இதெல்லாம் கனவுதானா? ஆனால் அறையெங்கும் ஒரே புகையாக இருக்கிறதே!

அவர் குழம்பியவராக விளக்கைப் போட்டார். கனவுப் புகையாயிருந்தால் கண் விழித்ததும் மறைந்திருக்க வேண்டுமல்லவவா?

ரொம்ப ஸ்டிராங்கான கனவாக இருந்திருக்குமோ என்று எண்ணிக் கொஞ்சம் இயற்கைத் நீரைத் (எச்சில்) தொட்டுக் கண்ணைத் தேய்த்துக் கொண்டார்.

ஊஹ¥ம். நிஜமான புகையேதான்.

அவர் அடிவயிற்றில் ஜிலீங் என்று

ஒரு கண்ணாடி ஜாடி விழுந்து நொறுங்கியது. முதலைப் பண்ணையிலிருந்து அவசரமாக ஒரு முதலை விரைந்து வந்து அவரது சிறுகுடலைக் கவ்வி இழுத்தது.

இது நிஜப்புகையாக இருக்குமானால்… இருக்குமானால்… இருக்குமானால்…

நெருப்பில்லாது புகையுமா?

யார் அந்த நெருப்பு – சீதேக் கிழவியைத் தவிர அந்த நெருப்பு யாராக இருக்க முடியும்.

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் அடைத்துக் கொல்லப் பார்த்த துரியோதனன் மாதிரி – சீதேக் கிழவி தன்னை ஒழித்துக்கட்ட அறைக் கதவைப் பூட்டி, நெருப்பு வைத்து விட்டாளா?

அடியே பத்தீனி! உனக்கு இத்தீனி கொழுப்பா, திமிரா? பதறினார். கொதித்தார். கொலையும் செய்வாள் பத்தினி என்ற பழமொழி வெறும் பேத்தல் அல்லவா?

சே! சே! சீதே அந்த அளவு போக மாட்டாள். என்னதான் பெண் முன்னேற்றத் தீவிரவாதியானாலும் இந்த மாதிரி குரூரமாகவெல்லாம் நடந்து கொள்ளமாட்டாள்.

‘கபால்’ என்று கதவைத் திறந்தார். வேகமாக மாடியிலிருந்து கீழே இறங்கினார்.

சீதாப்பாட்டி ஹாலில் அமைதியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். யோகப் பயிற்சியை ஒரு பெண் கூடுமானவரை கவர்ச்சிகரமாகச் செய்து காட்டிக் கொண்டிருந்தாள்.

“சீதே! ஏ சீதே!” அப்புசாமி அலறினார். “என்னை நெருப்பு வெச்சே கொளுத்துற அளவு நீ போயிட்டியா?”

சீதாப்பாட்டி எழுந்துகொண்டாள். “குட் மார்னிங்! எழுந்ததுமே டென்ஷனோடு எழுந்திருக்கீங்க? வாட்ஸ் ராங் வித் யூ?”

அப்புசாமி மனைவியை எடை போடுவது போல முறைத்தார்.

சீதாப்பாட்டி பதறாமல் “ஜஸ்ட் எ மினிட்,” என்று சொல்லி வாசற் கதவைத் தாழிட்டு வந்தாள். “டியர் சார், நேற்று உங்களோடு வந்த சஞ்சீவி என்ற ஓல்ட்மேனை என்ன செய்தீர்கள்? ஏதாவது சிதம்பரம் வேலை செய்து சூட்கேஸில் அடைத்து விட்டீர்களா? அவர் மிஸஸ் வந்து இங்கே கவலைப்பட்டுட்டுப் போகிறாள். வீட்டிலே ஐம்பதாயிரம் மிஸ்ஸிங்காம். அவரையும் காணோம். கடைசியாக அவர் உங்களுடன்தான் இருந்திருக்கிறார். வீடு பூரா ஒரே ·பெளஸ் ஸ்மெல்! அவரை என்ன பண்ணினீங்க? அவுட் வித் யூ.”

அப்புசாமி ஆடிப் போய் விட்டார். “என்னடி பேத்தறே? என் தொண்டர்களையெல்லாம் ரகசியமாக ருக்மாங்கதா லாட்ஜில் தங்க வெச்சிருக்கேன். சஞ்சீவியாரை ஸ்பெஷலாக ஏஸி ரூமில் தங்க வைத்திருக்கிறேன்.”

“ஐ ஹாவ் மை ஒன் டெளட்ஸ்,” என்ற சீதாப்பாட்டி, “பின்னே இத்தனை ஸ்மெல்லும் உங்க ரூமிலிருந்து வருவானேன்! கட்டுக் கட்டாக ஊதுவத்தி உங்க ரூமுக்கு வெளியே கொளுத்தி வைத்தேன். அப்படியும் ரூமை நெருங்க முடியவில்லை…”
 
அப்புசாமி கடகடவெனச் சிரித்தார். “அழுகல் நாற்றத்துக்குக் காரணம் கேட்கிறியாடி ஆரணங்கே. நாளைக்கு நடக்கப்ப போகிற உங்க ‘கிளவியோபாட்ரா’ அழகுப்போட்டிக்குன்னு ரெண்டு கூடை தக்காளியும் அழுகல் முட்டையும் ஸ்பெஷலாக வாங்கி வைத்திருக்கேன். சொய்ங் சொய்ங்குனு எறிய. இப்ப வேணும்னா உன் மேலே வீசட்டுமா?”

சீதாப்பாட்டி நிம்மதிப் பெருமூச்சு விடுபவள்போல், “மைகாட்! நல்லவேளை! நான் போலீஸ் கமிஷனருக்குப் போன் செய்ய இருந்தேன். சமூகவிரோத சக்தியாகச் செயல்பட்டால் அவர் என் ஹஸ்பெண்டாகவே இருந்தாலும் நான் டாலரேட் பண்ணிக்க மாட்டேன்” என்றாள்.

அப்புசாமி அவள் சொல்லிக் கொண்டிருந்தபோதே மாடிக்குத் தன் அறைக்குச் சென்று முட்டைக் கூடையை மூக்கைப் பிடித்துக் கொண்டு தூக்கி வந்தார்.

“ப்ளீஸ்! ப்ளீஸ்!” என்று சீதாப்பாட்டி கதறிவிட்டாள். “உங்கள் கூடையைத் தூக்கிக்கொண்டு இப்பவே எங்காவது தொலையுங்கள். எங்கள் அழகுப் போட்டியை வேணும்னா வித்ட்ரா பண்ணிக் கொண்டு விடறேன்.”

அப்புசாமி, “ஹையா! வெற்றி! வெற்றி! எங்கள் போராட்டம் வெற்றி!” என்று கூடையைச் சுற்றி வந்து கும்மி அடித்தார். “இப்பவே நான் சஞ்சீவிக்கு இந்த சந்தோஷ சமாச்சாரத்தைச் சொல்லுகிறேன்,” என்று புறப்பட்டார்.

“எக்ஸ்கியூஸ் மி… ஜஸ்ட் எ மினிட்” என்று சீதாப்பாட்டி அவரது அவசரத்துக்கு அணை போட்டாள்.

“நீங்கள் உங்கள் சஞ்சீவிகிட்டே சொல்றதுக்கு முன்னே நான் ஔவை சண்முகிகிட்டே போய் இன்·பா¡ம் பண்ணணும். என்னைப் பொறுத்தவரை வித்ட்ரா பண்ணிக்க முடியும் ஆனால் கமலும் இதற்குச் சம்மதிக்கணுமே…”

“கமல்ஹாசனா? ஔவை சண்முகியா?”

“வோன்ட் யூ ஸிட்டெளன்? சில விஷயங்களை உங்களுக்கு விளக்க வேண்டும். கமல்தான் எங்க ‘கிழவியோபாட்ரா’ போட்டிக்கு ஜட்ஜ்! ஸ்பெஷலாக அவர் ஔவை சண்முகி வேஷத்துடன் ஜட்ஜாக வருகிறார்.”

“அத்திரிபச்சா! கில்லாடியான யோசனையா கீது? சீதே! சீதே! எனக்கு ஓசி டிக்கெட்டு ஒண்ணு குடுடி…” அப்புசாமி தனது லட்சியத்தை மறந்து கெஞ்சினார்.

சீதாப்பாட்டி சிரித்தாள். “யூ ஸில்லி! உங்களுக்கு டிக்கெட்டாவது… காரியிங் டொமடோ டு பேங்களூர்! சிரிப்பார்கள் யாராவது. உங்ககிட்டே சர்ப்ரைஸாகச் சொல்ல வேண்டும் என்று ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்க அவசரப்பட்டு மறியல், பொறியல்னு ஆரம்பிச்சிட்டீங்க. பெட்டர் லேட் தேன் நெவர். இப்போ சொல்றேன் கேட்டுக்குங்கோ. கமல்ஹாசனோடு இன்னொருத்தரையும் ஜட்ஜாகப் போட்டிருக்கிறது. அவர் யார் தெரியுமோ? சாட்சாத் நீங்கள்தான்!”

அப்புசாமியின் கையிலிருந்து முட்டைக்கூடை தடாலென்று கீழே விழுந்தது. “நான்… நான்… நானும்… கமலோடு ஒரு ஜட்ஜா! அவர்கூட நானும் சரிசமமாக உட்காரப் போகிறேனா, ஓளவை சண்முகி மேக்கப்பிலேயே அவர் வரப் போகிறாரா? இன்னா சீதே! இதையெல்லாம் நீ முன்கூட்டியே சொல்றதில்லையா? அந்த சஞ்சீவிப்பயல் வந்து கெடுத்தான்.”

“லெட் அஸ் ·பர்கெட் அண்ட் ·பர்கிவ்…” என்று கணவனை ஆசுவாசப்படுத்தினாள். நீங்க அந்த சஞ்சீவி கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. ஏதாவது நீங்க செலவழித்திருந்தாலும் நான் கொடுத்துடறேன். நோ ப்ராப்ளம்…”

“சீதே! என்னை எப்படியெல்லாம் கெளரவப்படுத்தியிருக்கிறே… அது தெரியாமல் நான்…” அப்புசாமிக்குத் தொண்டை கரகரத்தது. “கமல் சார்கிட்டே என்னைப் பற்றிச் சொன்னாயா? என்ன கேட்டார்?”

“ரொம்பச் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் நீங்க ·பங்ஷன்போது அவரிடம் ரொம்ப டீசன்ட்டாக நடந்துக்கணும். ஔவை சண்முகி வேஷத்திலே இருப்பார். நைஸாகத் தொட்டுகிட்டெல்லாம் பார்க்கக் கூடாது.” சீதாப்பாட்டி எச்சரித்தாள்.

“சீதே!” என்றார் அப்புசாமி திடீர் ஞாபகம் வந்தவராக, “என் ஜிப்பாவைக் கொஞ்சம் மடிப்பா அயர்ன் பண்ணித் தர்றியா?”

“நோ ப்ராப்ளம்,” என்றாள் சீதாப்பாட்டி. “புதுசாகவே இரண்டு வாங்கி பீரோவில் வைத்தாச்சு – குர்தா அண்ட் பைஜாமாகவாகவே பர்ச்சேஸ் பண்ணிட்டேன்!”

அப்புசாமி எதிர்பாராத மகிழ்ச்சியில் குரங்குபோல ஒரு தாவுத் தாவி மனைவியைக் கட்டிக்கொண்டு விட்டார்.

கரப்பு மேலே விழுந்ததுபோல் “சீ!” என்று சீதாப்பாட்டி அவரை ஓர் உதறல் உதறிவிட்டாள். “இது மாதிரியெல்லாம் அப்ஸர்டாக நடந்து கொள்வீங்கன்னு தான் உங்ககிட்டே எதுவும் சொல்லாமல் இருந்தேன்ன. பிஹேவ் யுவர்ஸெல்·ப்… உங்க மறியல் கோஷ்டிக்கு சமாச்சாரத்தைச் சொல்லிவிட்டு வாங்க… ஈவினிங் ஸிக்ஸ¤க்கு ரிஹர்சல் இருக்கு. கமல் வர்றார். நீங்க வர்றீங்க… காம்ப்பெடிட்டர்ஸ் வர்றாங்க. க்விக்… வி ஆர் ரேஸிங் வித் டைம். ஈவினிங் எடிஷன் பேப்பர்லே, உங்கள் மறியல் வாபஸ்னு நியூஸ் வந்தாகணும்…”

அப்புசாமி “தங்கள் சித்தம் என் பாக்கியம்! இதோ புறப்பட்டேன் தாயே…” என்று தாவாத குறையாக விரைந்தார்.

“எக் பாஸ்கெட்! எக் பாஸ்கெட்! இதை எடுத்துக்கொண்டு தொலையுங் ள்,” சீதாப்பாட்டி பதறினாள். “சீக்கிரம் வந்து வீடெல்லாம் சென்டட் ·பினைல் போட்டுச் சுத்தம் பண்ணுங்க. ரூம் ஸ்பிரேயர் எடுத்து என் ரூமுக்கு ஸ்பிரே பண்ணி வையுங்க…”

“உத்தரவு மகாராணி” என்று அப்புசாமி கிளம்பினார்.

‘கிழவியோபாட்ரா’ போட்டிக்கென பா.மு.கழகத்தின் நாடக அரங்கம் விசேஷமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளப் போகும் கிழவிமார்களோ, நீதிபதி கமலோ யாரும் வந்திருக்கவில்லை.

அப்புசாமி துடித்தார்: “அவ்வை சண்முகி இன்னும் வரலையே. கிழவிப் பட்டாளத்தையும் காணோம்.”

நீதிபதி அமர்வதற்கான சிங்கார ஆசனத்தைச் சீதாப்பாட்டி காட்டினாள்.

“ப்ளீஸ், முதலில் நீங்கள் அதில் போய் உட்காருங்கள். கமல் வருகிறபோது வரட்டும். அவர் திடீரென்று பெங்களூர் போய்விட்டாராம். அநேகமாக நீங்கள் ஒருத்தரே ஒருத்தர்தான் ஜட்ஜாக இருக்கப் போகிறீர்களோ, என்னவோ.”

அப்புசாமிக்கு கமலைப் பார்க்க முடியவில்லையென்ற விஷயம் ஏமாற்றம் தந்தாலும் நீதிபதிப் பொறுப்பு தனக்கு மட்டுமே என்பதில் பெருமை வழிந்தது.

“நீங்க நீதிபதி ஸ்தானத்தில் உட்காருகிறீர்கள். அழகிகளின் பரெட் தொடங்குமுன் ஓர் அழகிய கிழவி வந்து உங்களுக்கு மரியாதை செய்வாள். இந்தக் கைப்பிடியைப் பிடித்து ஓர் இழுப்பு இழுப்பாள். திபுதிபு என்று பூக்கள் உங்கள்மேல் கொட்டும். அந்த அழகிய கிழவி யாராயிருக்கும் என்று நீங்கள் கெஸ் செய்யுங்கள் பார்க்கலாம். ஒரு சின்ன க்ளூ தர்றேன். ‘சீ’யில் ஆரம்பித்து ‘தா’வில் முடியும்!”

அந்தக் கஷ்டமான புதிரை விடுவிக்கச் சிறிய போராடினார். பிறகு பளிச்சென்று விடை தெரிந்தது.

“நீயா!” என்று ஆச்சரியப்பட்டவர், “நம்பவே முடியலை சீதே. உன் கையால் எனக்கு பூமாரி பெய்யப் போகிறியா?”

“ஆமாம். நம்ம இண்டியன் கல்ச்சர்படி ஒரு மனைவிக்கு அவள் புருஷன்தானே தெய்வம். சரி, நீங்க போய் உங்கள் நீதிபதி ஆசனத்தில் உட்காருங்கள்.”

அப்புசாமி மிடுக்குடன் அமர்ந்தார்.

சீதாப்பாட்டி “ஸ்மைல் ப்ளீஸ்! நீங்க வீடியோ காமெராவைப் பார்ப்பதுபோல இருங்க. நேச்சுரலாக சிரியுங்க. சீரியஸாக வெச்சுக்காதீங்க…” என்றெல்லாம் டைரக்ட் செய்தாள்.

அப்புசாமி, “இவ்வளவு சிரிப்பு போதுமா?” என்று கேட்டுக் கொண்டிருந்தபோதே சீதாப்பாட்டி கை பிடியைப் பிடித்து இழுத்தாள்.

தபதபவென்று அப்புசாமி மீது மலர்மாரி கொட்டவில்லை. அதற்குப் பதில் மண் மாரி! காரமான சிவப்பு மண்! (மிளகாய்த்தூள் என்று சொல்வார்கள்!)

அப்புசாமி, “ஐயோ, அம்மா! அப்பா!” என்று கண்ணையும், மூக்கையும், வாயையும் தேய்த்துக்
கொண்டு குதித்தார். சில விநாடிகள் குதித்தபிறகு அது வெறும் மிளகாய்ப் பொடி மட்டுமல்ல; செந்தட்டி இலைப்பொடியும் விசேஷமாகக் கலந்து தயாரிக்கப்பட்ட மிளகாய்ப்பொடி என்று தெரிந்தது. உடம்பு பூராப் பற்றி எரிவதுபோல் அரித்தது.

“ஆ! ஐயோ! அப்பா! எரியுதே! எரியுதே!” என்று கத்திக்கொண்டு ஹால் பூரா ஓடினார். “அடியே துரோகி! பாவி! சண்டாளி!”

தனியார் நர்ஸிங்ஹோம் ஒன்றில் ஐந்தே முக்கால் அடி நீளத்துக்கு ஒரு நீளமான சேனைக்கிழங்கு படுக்கையில் படர்ந்து கிடந்தது. கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தால்தான் அந்த வீக்கக் குவியலுக்குள் ஓர் அப்புசாமி மறைந்திருப்பது தெரிய வரும்.

மிளகாய்ப் பொடியும், செந்தட்டியும் அவரை இரண்டுநாள் படுக்க வைத்து விட்டன. உடம்பு பூராவும் வீங்கிப் பரிதாபமாகப் படுத்திருந்த அவரிடம் தினந்தந்தியை ஒரு நர்ஸ் அன்புடன் தந்தாள்.

சென்னையை அயர வைத்த கிழவியோபாட்ரா அழகுப்போட்டி! பாட்டிகள் முன்னேற்றக் கழகம் ஏற்பாடு செய்திருந்த தமிழக அழகிய முதியோர் போட்டி சிறப்பாக நடந்தேறியது. ஆர்ப்பாட்டக்காரர்களின் மறியல் பிசுபிசுத்தது! சிறந்த அழகியாக விமலா சஞ்சீவி தேர்வு.

“என் மனைவி அழகிய கிழவியாகத் தெர்ந்தெடுக்கப்பட்டதில் பெருமைப்படுகிறேன்.” அழகிக் கிழவியின் கணவர் பெருமிதம்!

‘வயசானாலும் அழகாயிருப்பது எப்படி?’ என்பது பற்றி பா.மு.கழகத் தலைவி திருமதி சீதா அற்புதமாக ஓர் உரை நிகழ் தியது நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போலிருந்தது.

அப்புசாமி பத்திரிகையைத் தூள் தூளாகக் கிழித்தார்.

“அடியோ! மிளகாப்பொடி தூவி என் மறியலைப் பொறியல் பண்ணிட்டே இல்லை… உன்னை… உன்னை…”

நர்ஸ் நறுக்கென்று ஓர் ஊசி ஏற்றியதால் அவரால் மேற்கொண்டு பாட்டியைத் திட்ட முடியவில்லை.

Print Friendly, PDF & Email

1 thought on “அப்புசாமியும் அழகிப் போட்டியும்

  1. ஹாஹாஹாஹா சிரிப்பு தாங்க முடியல … அவ்ளோ பிரமாதமா இருந்திச்சி … கதாசிரியர்களுக்கு மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *