அண்ணன் ஆறுச்சாமியின் அயல் நாட்டு பயணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 4, 2023
பார்வையிட்டோர்: 2,283 
 
 

அரசியல் களத்தில் ஆறுச்சாமிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. இதற்கும் அவனுக்கு நீண்ட நாட்களாக இருந்த கனவு இது. கட்சி தலைமையிடம் இதற்காக நீண்ட நாள் மன குறையுடன் இருந்திருக்கிறான். அவர்களும் இவனை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அதற்கெல்லாம் இப்பொழுதுதான் ஒரு விடிவெள்ளியாய் இந்த செய்தி கிடைத்திருக்கிறது.

அவனை “ஜிங்காங்க்” என்னும் நாட்டுக்கு ஏதோ பயிர் வளர்ப்பை பற்றி அறிந்து கொள்வதற்காக சென்று வர சொல்லியிருக்கிறார்கள். இதற்கும் இவனுக்கு பயிர் வளர்ப்பை பற்றி ஸ்நான பிராப்தி கூட கிடையாது. கட்சியில் கூட இவனை கட்சி விரோத ஆட்களை களையெடுப்பதற்கு கூட அனுப்பியதில்லை. ஏதோ ஒரு மந்திரியின் புண்ணியத்தில் இவன் பெயர் ஞாபகம் வர யாரையாவது அனுப்ப வேண்டுமே என்று மந்திரி சபை கூடி தீர்மானம் போட்ட போது “அங்கிருந்த எல்லோருக்கும் நாமே போகலாம் என்று ஆசையிருந்தும், ஒருவருக்கொருவர் காலை வாரிக்கொள்ள “இரகசியமாய் யார் போனாலும் சரி அத்தோடு அவர்கள் மந்திரி பதவியோ, இல்லை எந்த பதவியில் இருந்தாலும் அது காலியாகிவிடும்” இந்த செய்தியை கசிய விட்டு ஒருவருக்கொருவர் ஒன்றும் தெரியாமல் “ஜிங்காங்க்” நாட்டில் விளையும் புல்லை போன்ற ஒரு பயிரை பற்றி தெரிந்து கொள்ள, காரசாரமாய் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தினர்.

அந்த நேரத்தில் அகஸ்மாத்தமாய் அங்கிருக்கும் வெள்ளை வேட்டியுடன் உட்கார்ந்திருந்த அத்தனை பேருக்கும் குளிர்பானம் வந்ததா? (சும்மாதான்) கேட்கப்போன ஆறுச்சாமிக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்தது.

ஏன் இந்த ஆறுச்சாமியை அனுப்பக்கூடாது? ஒரு மந்திரி கேட்க, மற்றவரகள் இவனுக்கு கிடைச்சுட கூடாது என்ற நினைப்பிலேயே இருந்த எல்லோரும் உடனே எவ்வித எதிர்ப்பும் சொல்லாமல் சரி என்று சொல்லி விட்டார்கள்.

அப்புறம் என்ன? சும்மா வந்த ஆறுச்சாமிக்கு வெளி நாடு செல்ல அதுவும் “ஜிங்காங்க்” எனும் நாட்டுக்கு,அதுவும் உலக பட வரைபடத்தில் எங்கிருக்கிறது என்றே தெரியாத ஒரு நாட்டுக்கு செல்ல அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.

அவசர அவசரமாய் வீட்டுக்கு வந்து பையனின் பூகோள புஸ்தகத்தை எல்லாம் புரட்டி பார்த்து அந்த நாட்டை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல், பக்கத்திலிருந்த படித்த பலபேரை விசாரித்தார். (விளம்பர படுத்திக்கொண்டுதான்) அதாவது நாட்டின் தலையாய பிரச்சினையான “ஜிங்காங்க் புல்லினால்” நம் மாநிலத்தை பெரிய வளமான

மாநிலமாக்க வேண்டி அரசாங்கமே இவனை அனுப்பி வைப்பதாகவும், தான் பெரிய மனது பண்ணி சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தெரிவித்தான். அப்படி சொல்லியும் யாரும் அதை பற்றி அலட்டிக்கொள்ளாமல், ஏன் அவன் மனைவி கூட ஏதோ புல்லுக்கட்டு அறுக்க போகிறார் என்றே குறிப்பிட்டமையால் மனம் நொந்து “ஜிங்காங்க்” என்ற ஒரு நாடு இருக்கிறதா? தீவீரமாய் தேடி பார்க்க அவர்கள் ஏரியாவிலேயே பெரிய நூலகத்தை நாடி சென்றான்.

சென்றவன் அங்கு வைத்திருந்த உலக வரை படத்தை விழித்து விழித்து பார்த்து எல்லாம் ஒரே மாதிரியாக தெரிந்ததால், ஒன்றும் புரியாமல் அங்கு உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்தான். ஆரம்பத்தில் இவர் அழைப்பை கண்டு கோபத்துடன் முறைத்த அந்த பெண், இவனுடைய கண் விழிப்பையும், சோகமான முகத்தையும் பார்த்து என்னவோ ஏதோ என்று பீதியுடன் அருகில வர இவன் “ஜிங்காங்க்” என்ற நாட்டின் பெயரை சட்டென மறந்து விட்டு ஜாங்கிரியில் தொடங்கும் ஒரு நாடு எங்கிருக்கிறது? என்று கேட்டான்.

அந்த பெண் சட்டென கோபம் கொண்டு ஜாங்கிரியா? இவனுக்கு சட்டென நாம் தப்பாக கேட்டுவிட்டோமா? சந்தேகம் வர அதுதாங்க ஜாவுல தொடங்குமே? இழுத்தான்.

அட சே இப்ப போய் ஞாபக மறதி வந்து தொலைஞ்சுடுச்சு, கவலையுடன் அந்த பெண்ணை பார்க்க, அந்த பெண் ஜாம்பியாவா? ஜமைக்காவா? வரிசையாய் ஜ வில் தொடங்கும் நாடுகளை சொன்னாள்.

ஹூம்..அவள் கூட ஜிங்காங்க் என்ற பெயரை உச்சரிக்காததால் ஒரு வேளை அந்த மாதிரி நாடே இல்லையோ? நம்மை ஏமாற்ற இப்படி ஒரு திட்டத்தை நம்முடைய கட்சி போட்டு நம்மை இந்த நாட்டை விட்டு துரத்துபவதற்கு முயற்சி பண்ணு கிறார்களோ? கவலை வந்து மனதுக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டது.

இவர்கள் இருவரும் கவலையோடு உட்காந்திருப்பதை கண்ட நூலகர் அருகே வந்து என்ன விஷ்யம் என்று விசாரிக்க இவனும் “ஜ” வில் தொடங்கி எல்லா கதைகளும் சொன்னான்.

அவர் இதுதானா? என்ற அலட்சியமாக ஜ வா? ஜி யா? இல்லை ஜோ வா? கேட்டு விட்டு அங்கிருந்து நகர சட்டென இவருக்கு ஞாபகம் வந்து விட்டது, ஜி யில் தான் தொடங்கும், “ஜிங்காங்க்” மகிழ்ச்சியில் அங்கேயே குட்டி கரணம் அடித்திருப்பான், அதற்குள் யாரோ..ஸ்…ஸ்..என்று பாம்பு சீறுவது போல் சீற குசு குசுவென அந்த ஜிங்காங்க் கண்டு பிடிக்க சொன்னான்.

எப்படியோ அடித்து பிடித்து தேட அது எங்கோ வட அமெரிக்காவின் ஒரு மூலையில் இருந்தது. அப்பாடி பெருமூச்சு விட்டான்.

அந்த பெண் ஒரு சிரிப்புடன் தன்னுடைய “லேப் டாப்பை” எடுத்து கூகுளில் சென்று ஜிங்காங்க் தேடலில் அடித்தவுடன் காட்டிய விவரங்களை அழகாக சொன்னாள். ஆனால் அங்கு விளையும் புல்லை பற்றி எந்த விவரமும் தெரியாத்தால் சொல்ல முடியவில்லை.

எப்படியோ தான் போகப்போகும் நாட்டை பற்றி தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் நூலகததை விட்டு வெளியேறினான்.

கட்சி சார்பாக ஒரு பெரிய விழா ஏற்பாடு செய்யப்பட்டு “அண்ணன் ஜிங்காங்க்” நாட்டுக்கு சென்று நம்முடைய புகழையும் பெருமையையும், அந்த நாட்டுக்கு காண்பித்து வெற்றியுடன் திரும்புவார் என்று அங்கிருந்த அரசியல் “அடி பொடிகள்” நமக்கு கிடைக்கவில்லையே என்ற மன வருத்தத்துடன் இவரை பாராட்டி கட்சி கணக்கில் சோடாவையும் குடித்து அங்கிருந்து கிளம்பினர்.

விமான தளத்தில் அண்ணனை வழி அனுப்ப பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை ஏற்பாடு செய்து “அண்ணன் வாழ்க” “சென்று வருக வென்று வருக” இப்படி கோஷங்களை எழுப்பினார்கள். திடீரென்று ஒருவன் “புல்லுகட்டு அறுக்க செல்லும் எங்கள் அண்ணன், சொல்ல, அதற்கும் வாழ்க வாழ்க என்ற கோஷம் வானை பிளந்தது. விட்டிருந்தால் அவனை துக்கி சென்றே விமானத்துக்குள் உட்கார வைத்திருப்பார்கள், நல்ல வேளை அதற்கு அனுமதிக்காததால், நுழைவாயிலோடு நின்று விட்டார்கள். இருந்தாலும் பழக்க தோஷத்தில் மீண்டும் நாலு முறை “அண்ணன் வாழ்க” சென்று வா வென்று வா” சொல்லிவிட்டு கட்சி இதற்கு எப்பொழுது நம்மை கவனிக்கும் எதிர் பார்ப்புடன் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

இப்ப்படியாக ஆறுச்சாமி அண்ணன் மனதுக்குள் நடுங்கி வெளியில் உதறல் தெரியாமல் இருக்க இரு பக்க இருக்கைகளை பிடித்தபடி எப்படியோ ஏறி தன் இருப்பிடத்தை அடைந்தான். மனதுக்குள் பழக்க தோஷமாக பஸ்ஸுக்குள் தலையை வெளியே நீட்டி தொண்டர்களுக்கு கை காட்டுவது போல இங்கும் செய்ய முடியுமா என நினைத்தவன் சூழ்நிலையை பார்த்து அது முடியாது என்று உணர்ந்து சே..நம்ம கட்சி நம்மளை பழி வாங்கிடுச்சு, சம்சாரத்தையாவது கூட்டிட்டு போற மாதிரி ஏற்பாடு பண்ணியிருக்கலாம்.மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

ஐந்து நிமிடத்தில் ஒரு நடுத்தரமான மனிதர் இவர் அருகே வந்து உட்கார்ந்தார். அவர் நல்ல உடையணிந்து நாகரிகாமாய் இருந்தார். விமானம் கிளம்ப நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு “ஷீட் பெல்ட்” எப்படி அணியவேண்டும் என்று விமான பணிப்பெண் சொல்லிக்கொடுத்தாள்.

வழக்கம்போல் ஆறுச்சாமிக்கு புரியாமல் தடுமாற பக்கத்தில் இருந்தவர் இவருக்கு எப்படி அணிய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அணியவும் வைத்தார். அதை விட அவர் கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசியது பக்கத்தில் இருப்பவர்களுக்கு அழகாக தெரிய அனைவரும் அவரை ஆவலுடன் பார்த்தனர்.

ஆறுச்சாமிக்கோ தன்னை அவமானப்படுத்த எதிர்க்கட்சிகாரர்களால் அனுப்பி வைக்கப்பட்ட சூழ்ச்சி இவர் என்று மனதுக்குள் எண்ணம் வர அவரை பார்ப்பதையே தவிர்த்தான். .

இங்கிருந்து கிளம்பிய விமானம் மற்றொரு இடத்தில் இறங்கி அங்கிருந்து மற்றொரு விமானத்தில் ஏறி வட அமெரிக்காவை அடைந்து அங்கிருந்து “ஜிங்காங்க்” நாட்டுக்கு வேறொரு விமானத்தில் ஏற்றப்பட்டனர். இத்தனை தூரத்திற்கும் அண்ணன் ஆறுச்சாமிக்கு துணையாய் இருந்து அவருடனே கடைசி வரை கூட வந்தார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனிதர்.

ஆறுச்சாமியோ அந்த மனிதரிடம் பேசவே பயந்தான். இதற்கும் அவர் தமிழிலிலேதான் கஷ்டப்பட்டு பேசினார். பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் அவருடன் பேசி பழகினாலும் நம் ஆறுச்சாமி மட்டும் வாயே திறக்கவில்லை. அவனை பொறுத்தவரை இவர் எதிர்க்கட்சி ஆள் அவ்வளவுதான். ஏன் எதற்கு? என்பதெல்லாம் அவனையே கேட்டாலும் தெரியாது.

எப்படியோ மூன்றாவது நாளில் ஜிங்காங்க் நாட்டை அடைந்ததும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று வழக்கம்போல் அண்ணன் ஆறுச்சாமி விழிக்க, பக்கத்தில் உட்கார்ந்து வந்த ஆசாமி “வெளியே ஒர் அட்டையை வைத்து நின்று கொண்டிருந்தவனை அழைத்தார். வந்தவன் இவரை கண்டு புன்னகையுடன் வர அவர் ஆறுச்சாமியை காண்பித்து அழைத்து தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யும்படி ஏதோ பாஷையில் பேசினார். இதற்கும் அண்ணன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார்

அட்டை வைத்திருந்தவன், ஆறுச்சாமியிடம் வந்து வந்தனம் செய்து அவரை காரில் ஏற்றி அழைத்து சென்றான்.

காரில் ஏறியவுடன் கம்பீரமாய் நான் தமிழ்நாட்டில் இருந்து எங்கள் கட்சி ஆட்சி செய்து கொண்டிருக்கும் மாநிலத்தில் இருந்து வந்திருக்கிறேன். பெருமையுடன் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சொன்னான்.

கூட வந்தவர் “தெரியும் எங்கள் ஜனாதிபதி சொல்லி விட்டார்” தமிழில் சொல்ல

ஓ நான் வருவது உங்கள் ஜனாதிபதிக்கே தெரிந்து விட்டதா? பெருமையுடன் கேட்டான்.

உங்களுடன் வந்து, உங்களை பற்றி என்னிடம் சொல்லியது எங்கள் ஜனாதிபதிதான். சொல்லிவிட்டு அவன் வெளியே வேடிக்கை பார்க்க காரிலேயே மயக்கம் போடும் நிலைக்கு வந்திருந்தான் அண்ணன் ஆறுச்சாமி..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *