பெயர் இல்லாத தெரு

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 14,865 
 

(1966ல் வெளியான துப்பறியும் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

21 – 25 | 26 – 30

26

விபத்து நடந்த அன்று பெரியதம்பியும் சாந்தியும் பெங்களூருக்கு வந்துகொண்டிருந்தபோது கார் உருண்டு விழுந்தது அவன் நினைவுக்கு வந்தது.

காரிலிருந்து தூக்கி எறியப்பட்ட அவன் சிறிது நேரம் மயக்கத்துடன் இருந்தான். ஒரு சில விநாடிகள்தாம்! அவனுக்குச் சாந்தியின் அலறலைக் கேட்டதும் நினைவு திரும்பி விட்டது. அவளுக்கு என்ன நேர்ந்துவிட்டதோ என்னமோ என்று மெல்ல எழுந்து “சாந்தி சாந்தி” என்றான்.

இருளில் அவள் நிற்கும் இடத்தைக் கண்டுபிடிக்கச் சிறிது நேரம் பிடித்தது. கீழே உட்கார்ந்திருந்த அவள் மெல்ல தலையைத்தூக்கி “உங்களுக்கு ஒன்றுமில்லையே?” என்றாள்.

“ஒன்றுமில்லை. தலையில்தான் சற்று அடி! உனக்கு?” என்றான் பெரியதம்பி.

“எனக்கு அச்சமாக இருக்கிறது. உடலில் எங்கே அடிபட்டது என்றே தெரியவில்லை!” என்று சொல்லி எழுந்தாள் அவள்!

அவள் பக்கத்தில் போகக் காலடி எடுத்து வைத்த பெரியதம்பி. தடுமாறி விழப்போனான். அவனுக்கு அரை மயக்கமாக இருந்தது. சாந்தி ஓடிவந்து அவனைத் தாங்கிக் கொண்டாள்!

“என்னுடன் மெல்ல நடக்க முடியுமா?” என்றாள் சாந்தி.

“முடியும். என்னை வந்து தாங்கிக்கொள்” என்று அவள் தோளைப் பிடித்தபடி நடந்தான் பெரியதம்பி.

அதன்பின் சாந்தி சாலைக்குச் சென்று ஒரு காரை நிறுத்தி, அதில் அவனை ஏற்றிச் செல்லாமல் ஏரிக்கரை ஓரமாக இருந்த குடிசையின் பக்கம் அழைத்துச் சென்றது அவன் நினைவுக்கு வந்தது.

அவர்கள் இருவரும் குடிசைக்குச் சென்றுவிட்டு மீண்டும் சாலைக்கே போய்விடலாம் என்று திரும்பிய போதுதான் அவர்கள் எதிரே ஒரு கார் வந்தது. சாந்தி அவனை அந்தக் காரில் ஏற்றி உட்கார வைத்துவிட்டு, அவளும் அவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். மற்றொரு பக்கம், வேறு எவனோ உட்கார்ந்திருந்தான். காரின் முன் இரண்டு பேர்கள் இருந்தார்கள்.

பெரியதம்பியையும் சாந்தியையும் அந்தக் காரில் இருப்பவர்கள் தேடி வந்ததை எண்ணி வியப்படைந்திருந்தான் பெரியதம்பி. கார் விபத்துக்குள்ளாகி இருப்பதைப் பார்த்துவிட்டு, காரில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்று அவர்கள் தேடி வந்திருக்க வேண்டும் என்று ஊகம் செய்த பெரியதம்பி காரில் இருந்தவர்களை இருளில் உற்றுக் கவனித்தான்.

காரோட்டிக்குப் பக்கத்தில் இருந்த மனிதனையும், பக்கத்தில் இருந்த மனிதனையும் உற்றுப் பார்த்ததும், அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது!

பிறகு காரை ஓட்டியவனைப் பார்த்தான். அவன் உடல் நடுங்கியது.

அந்தக் காரில் வந்த மூன்று பேர்களில், காரை ஓட்டி வந்தவன் செல்லையா. அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனிதர்!

நிலவள நம்பி!

பக்கத்தில் உட்கார்ந்திழிந்தவன்

முத்தையா!

குத்துச் சண்டையில் வல்லவனைத் தோற்கடித்துக் கொன்றுவிட்டு, எந்த நிலவள நம்பிக்கு அஞ்சி அவன் சாந்தியுடன் ஓடிவந்தானோ, அதே நிலவள நம்பியின் காரில் அவன் மீண்டும் சிக்கிக்கொண்டது நினைவு வந்தது!

நிலவள நம்பியின் கூட்டத்தைச் சேர்ந்த செல்லையாவும் முத்தையாவும் தங்களது தலைவருடன் புறப்பட்டு வந்து அவனைப் பார்த்துவிட்டதை உணர்ந்து கொண்டான்!

அந்த விபத்தில் ஏன் இறக்காமல் தப்பினோம் என்று அவன் எண்ணியதும் அப்போது அவனுக்கு நினைவு வந்தது.

அவன் மெல்லச் சாந்தியைக் கிள்ளினான்! சாந்தியும் உண்மையை அப்போது உணர்ந்து கொண்டிருந்தாள்.


27

முதல் விபத்துக்கும் இரண்டாவது விபத்துக்கும் இடையில் நடந்த அத்தனை நிகழ்ச்சிகளும் பெரியதம்பியினுடைய நினைவுக்கு வந்தன.

பெரியதம்பியும் சாந்தியும் யாரிடமிருந்து தப்ப வேண்டும் என்று ஓடினார்களோ, அதே கொடியவர்களிடம் இப்போது வகையாகச் சிக்கிக் கொண்டார்கள்! நிலவள நம்பி வெற்றியுடன் நிமிர்ந்து உட்கார்ந்து அவர்களைப் பார்த்தார். அவருடைய கட்டளையை எதிர்பார்த்து என்ன வேண்டுமானாலும் செய்ய மிக முன்னேற்பாட்டுடன் இருந்தார்கள் செல்லையாவும் முத்தையாவும்.

நிலவள நம்பிதான் முதலில் பேசினார்: “நீங்கள் எங்களை ஏமாற்றிவிட்டுப் போய்விட்டதாக எண்ணி விட்டீர்கள். இயற்கையே இப்போது எனக்கு உதவி செய்திருக்கிறது இனிமேல் உங்களால் என் பிடியிலிருந்து தப்பமுடியாது! குத்துச்சண்டை போட்டியில் பணத்தை இழந்தாலும் மற்றவைகள் எல்லாம் என் திட்டப்படியே நடந்து வந்திருக்கின்றன!”

பெரியதம்பிக்கு இவர் எதற்காக இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என்பது புரியவில்லை.

பெரியதம்பி சொன்னான்: “உங்கள் திட்டம் எதுவானாலும் சரி. அது வெற்றியுடன் நிறைவேறியதில் மிக்க மகிழ்ச்சி. இப்போது இந்தச் சாந்தியை வழியில் எங்கே யாவது இறக்கிவிட்டு விடுங்கள். நம்முடைய கணக்கை நாம் தீர்த்துக் கொள்ளலாம். சாந்திக்கும் நமக்கும் ஒன்றும் தொடர்பு இல்லையே!”

இதைக் கேட்டதும் நிலவள நம்பி வாய்விட்டுச் சிரித்தார். “நம் கணக்கைத் தீர்த்துக்கொள்வதில் சாந்திக்குப் பங்கு இல்லை என்று யார் சொன்னது? அவள் தானே உன்னைக் காப்பாற்றினாள்? அவள் உனக்கு ஊக்கம் காட்டியதால்தானே நீ குத்துச்சண்டையில் தோல்வி பெறுவதற்குப் பதில் வெற்றி கண்டாய்?” என்றார் அவர்!

“இதோ பாருங்கள் நிலவள நம்பி, சாந்தி அங்கே வராமல் இருந்திருந்தாலும் இந்தக் குத்துச் சண்டையில் நான் வெற்றி பெற்றிருப்பேன். நான் வெற்றிபெற்று உங்களைக் கவிழ்த்துவிடுவது என்று முதலிலேயே முடிவு செய்துவிட் டேன்! ஏன் தெரியுமா?” என்றான் பெரியதம்பி வெறி கொண்டவனைப் போல்!

“சொல்லு, கேட்டுக் கொண்டிருக்கிறேன்!” என்று சொன்னார் நிலவள நம்பி.

“புலிக்குட்டியை நீங்கள் கொன்றுவிட்டதுடன், அவனுக்குப் பதில் என்னைக் குத்துச்சண்டை போடும்படி அழைத்து வந்து கட்டளையிட்டதும், நான் இறப்பது உறுதி என்று முடிவு செய்துவிட்டேன்! குத்துச்சண்டைக்குப் பின் என்னைக் கொன்றுவிட்டு, விபத்து ஒன்றில் நான் இறந்து விட்டதைப்போல் காட்டிவிட்டு, புலிக்குட்டி இறந்துவிட்டான் என்று விளம்பரப்படுத்திவிட முடிவுகட்டி விட்டீர்கள்! உண்மையான புலிக்குட்டியின் பிணத்தை உங்கள் தோட்டத்திலேயே புதைத்துவிட்டிருப்பீர்கள். ஏனென்றால். ஒரு மனிதன் எப்போது இறந்தான் என்பது பிணப்பரிசோதனையில் வெளியாகிவிடும். ஆகையால் நீங்கள் புலிக்குட்டியின் பிணத்தை வெளியே விடமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்!” என்றான் பெரியதம்பி.

நிலவள நம்பி கேலியுடன் சிரித்தார். “உன் கணக்கு இப்போதும் தவறாகிவிட்டது. புலிக்குட்டியின் பிணத்தை நான் என் காரில் கொண்டு வந்தேன். வழியில் எங்கேயாவது ஒரு விபத்தை உண்டாக்கி, புலிக்குட்டி விபத்தில் இறந்துவிட்டதைப்போல் போலீஸாருக்குக் காட்டிவிட நினைத்தேன். பெங்களூருக்கு வருவதற்குள் வழியில் உங்கள் காரே விழுந்து கிடந்தது வாய்ப்பாகப் போய் விட்டது. விழுந்து கிடந்தது சாந்தியின் கார்தான் என்று செல்லையாவும் முத்தையாவும் கூறினார்கள். மேலும் அது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது வாய்ப்பாகிவிட்டது! புலிக்குட்டியின் பிணத்தைக் காருக்குள் போட்டுவிட்டோம்! புலிக்குட்டியின் பிணம் தீயில் வெந்துவிட்டால், உண்மையில் அவன் இறந்த நேரத்தைப் பிணச்சோதனையில் கண்டு பிடிக்க முடியாது!” என்றார் அவர்.

இதைக் கேட்டதும் பெரியதம்பிக்குச் சற்றுத் தூக்கி வாரிப்போட்டது! சாந்திக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை!

சிறிது நேரம் கழித்து, “இப்போது எங்கள் இருவரையும் என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டான் பெரியதம்பி.

“உங்கள் இருவரையும் இன்னும் பெரிய ஆபத்தில் என்னால் சிக்கவைக்க முடியும்! எப்படி என்று சொல்லட்டுமா?” என்றார் நிலவள நம்பி.

எவரும் பேசவில்லை.

நிலவள நம்பி சொன்னார்: “இதோபார் பெரியதம்பி இன்று நீ குத்துச் சண்டை செய்து கொன்றுவிட்டாயே, அந்த வல்லவன் உன்னுடைய குத்தினால் மட்டும் இறக்கவில்லை. உன் கையுறையில் இருந்த நஞ்சு ஊசியிலிருந்து அவன் உடலில் நஞ்சு பாய்ந்து இறந்திருக்கிறான்! பிணச்சோதனையில் டாக்டர்கள் இதைக்கண்டு பிடித்திருக்கிறார்கள்! மூன்லைட் ஓட்டலில் நீதான் புலிக்குட்டி என்று எண்ணி ஒரு மனிதன் வந்து கையுறைகள் அடங்கிய பெட்டியைக் கொடுத்தான் அல்லவா? அவன் கையுறையில் நஞ்சு ஊசியை வைத்துத்தான் கொடுத்திருக்கிறான். புலிக்குட்டியே வல்லவனை எப்படியாவது குத்துச்சண்டையில் கொன்றுவிட வேண்டும் என்று முடிவு கட்டிவிட்டிருக்கிறான்! ஆனால் அந்தக் கையுறைகளை நான் பரிசோதித்துப் பார்த்தபோது அவைகளில் நஞ்சு ஊறிய ஊசி இருப்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இப்போது அந்த ஊசியை வைத்தே உன்னைக் கொலையாளியாக என்னால் மாற்றி விட முடியும்!”

”எப்படி?” என்றாள் சாந்தி வாயைத் திறந்து. அவளால் இப்போது சும்மா உட்கார்ந்திருக்க முடிய வில்லை!

நிலவள நம்பி சொன்னார்: “நல்ல கேள்வி கேட்டாய். இதில் உனக்கும் தொடர்பு இருக்கிறது. கேட்டுக்கொள். உண்மையான புலிக்குட்டியைப் பெரியதம்பி கொன்றுவிட்டு அவனுக்குப் பதில் பெரியதம்பியே புலிக்குட்டி என்னும் பெயருடன் வந்து குத்துச்சண்டை போட்டு நஞ்சு ஊறிய ஊசியால் வல்லவனைக் கொன்றுவிட்டான்! வல்லவன் தோற்க வேண்டும் புலிக்குட்டி வெற்றி பெறவேண்டும் என்று பிரபல சினிமா நடிகை சாந்தியும் பெரியதம்பியும் சேர்ந்து திட்டமிட்டு இந்தச் சதியைச் செய்தார்கள்! சாந்தி குத்துச் சண்டையின்போது பெரும்பணம் கட்டி எதிர்பாராத விதமாக ஏகப்பட்ட பணத்தை வெற்றி பெற்றுச் சேர்த்து கொண்டு, பெரியதம்பியுடன் காரில் விரைந்து சென்று விட்டாள். போகும்போது வழியில் கார் விபத்தை உண்டாக்கி, புலிக்குட்டி விபத்தில் இறந்ததைப்போல் காரில் போட்டுவிட்டுப் போய்விட்டாள்! இப்படி ஒரு கதை இந்தக் கதையை நான் சொன்னால் போலீஸார் நம்புவார்கள். புலிக்குட்டியைப் போல் இருக்கும் பெரியதம்பியையும் சாந்தியையும் போலீஸில் என்னால் பிடித்துக் கொடுக்க முடியும்!”

இப்படிக் கூறிவிட்டு நிலவள நம்பி சிரித்தார். அந்தச் சிரிப்பு அச்சம் தருவதாக இருந்தது. அவர் ஏதோ இன்னும் மிகப் பெரிய திட்டத்துடன் இருப்பதை அது உணர்த்தியது.

சாந்தி ஏதோ சிந்தனை செய்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவளைப் போல், “எங்களைப் போலீஸில் பிடித்துக் கொடுப்பதால் உங்களுக்குப் பயன் என்ன இருக்கிறது?’ என்று கேட்டாள்.

நிலவள நம்பி அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் . அவள் மேலும் பேசுவாள் என்று அவர் எதிர்பார்த்தைப் போலிருந்தது.

சாந்தி சொன்னாள்:

“எங்களிடம் உள்ள பணத்தை உங்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். எங்களை விட்டு விடுங்கள், நீங்கள் இழந்த பணத்தில் ஒரு பகுதியாவது உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் அல்லவா?”

நிலவள நம்பி நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“எவ்வளவு பணம்?” என்றார் அவர்.

“குத்துச் சண்டையில் நான் வெற்றி பெற்ற பணம்” என்றாள் சாந்தி.

அந்தப் பணத்தை அவள் தன் கைப்பையில் வைத்து, அதை அவள் தன் தோளில் மாட்டியிருந்தாள்.

நிலவள நம்பி சிரித்தார். “நான் என் சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்டேன்! நீ கொடுப்பதாகச்சொல்லுவது ஒரு துளி! சினிமா நடிகைகளிடம் கறுப்புப்பணம் பெட்டி பெட்டியாக இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன், உன்னிடம் உள்ள கறுப்புப் பணத்தையெல்லாம் கொடுத்து விடு! உன்னையும் பெரியதம்பியையும் விட்டு விடுகிறேன்! இதைத்தவிர வேறு வழியில்லை!” என்றார்.

சாந்தி சிறிது நேரம் சிந்தித்தாள் பிறகு “ஆகட்டும்” என்றாள்.

பெரியதம்பிக்கு வியப்பாக இருந்தது. அவளிடம் எவ்வளவு கறுப்புப்பணம் இருக்கும் என்று அவன் சிந்தித்தபடி உட்கார்ந்திருந்தான்.


28

கார் பெங்களூரை நெருங்கிக் கொண்டிருந்தது!

பெங்களூரை அடைந்ததும் கார் ஒரு பங்களாவின் முன் நின்றது. அது சாந்தியின் பங்களா அல்ல நிலவள நம்பிக்கு சொந்தமான பங்களா.

“நீங்கள் இருவரும் இங்கேதான் இருக்க வேண்டும். நமது ஒப்பந்தம் நிறைவேறியதும் நீங்கள் இங்கிருந்து வெளியேறலாம்” என்றார் நிலவள நம்பி.

சாந்திக்குச் சினம் பொத்துக் கொண்டு வந்தது. “என்னுடைய பங்களாவில் என்னை விட்டு விடுங்கள்! இங்கே நான் இருக்க விரும்பவில்லை!” என்று கத்தினாள் அவள். “உன்னுடைய பங்களாவில் உன்னுடைய விருப்பப்படியே கொண்டுபோய் விட்டுவிடுகிறேன். உடனே என்னிடம் பணம் தரமுடியுமா?” என்று கேட்டார் நிலவள நம்பி!

இந்தக் கேள்விக்குச் சாந்தி தயங்கினாள். பதில் சொல்லவில்லை.

நிலவள நம்பி மெல்லச் சிரித்தார். பணம் வந்தாலும் வராவிட்டாலும் எப்படியும் தாம் கூறிய கதையின்படி சாந்தியையும் பெரியதம்பியையும் நிலளை நம்பி பழிவாங்குவது என்று முடிவு செய்துவிட்டார் என்பதைப் பெரியதம்பி அவர் சிரிப்பைப் பார்த்ததும் தெரிந்துகொண்டான். அதே நேரத்தில் சாந்தி தன்னிடம் உள்ள கறுப்புப்பணத்தை. கணக்கில் வராத சினிமாப் பணத்தை நிலவள நம்பியிடம் கொடுப்பதாகச் சொன்னது உண்மையாகவா, அல்லது வாய்ப்புக் கிடைக்கும்வரை நேரத்தைக் கடத்தவர்? ஒரு தெளிவான முடிவுக்கு அவனால் வர முடியவில்லை! அதற்குள் சாந்தியே பதில் சொன்னாள்: “நிலவள நம்பி! உங்களிடம் நான் நம்பிப் பணத்தைக் கொடுத்து விடுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். பணத்தை வாங்கிக் கொண்டு நீங்கள் எங்கள் இருவரையும் கொன்றுவிடலாம். அல்லது போலீஸில் நாங்கள்தாம் புலிக்குட்டியைக் கொன்றதாகக் கூறலாம். விபத்து நடந்திருப்பது என் காரில், அந்தக் காரில் புலிக்குட்டியின் பிணம் இருப்பதால் உண்மையைச் சொன்னாலும் எங்களால் தப்புவது கடினம்! பெரியதம்பி தன்னைப் புலிக்குட்டி என்று சொல்லிக் கொண்டு குத்துச்சண்டை போட்டதே பெரிய தவறு இல்லையா?”

நிலவள நம்பி வாய்விட்டுச் சிரித்தார். “சாந்தி, நீ மிகவும் புத்திசாலி! உனக்கு அழகு மட்டுமல்ல. மூளையும் இருக்கிறது! நீ சொல்லுவதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும் பணத்தைக் கொடுத்துவிட்டு, என்னை நீ நம்ப வேண்டியதுதான்!” என்றார்.

“அதுதான் முடியாது! புலிக்குட்டி விபத்தில் இறந்து விட்ட வழக்கு முடியும்வரை என்னால் பணம் தரமுடியாது. அந்த வழக்கு முடிந்ததும், நான் ஒளித்து வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொடுத்து விடுகிறேன்! போதுமா?”

“ஆகட்டும்! நீ என்னை நம்பும் வரையில் என்னிடம் பணத்தைக் காட்ட வேண்டாம்! புலிக்குட்டி தற்கொலை செய்து கொண்டான் என்று போலீஸார் முடிவு செய்த பிறகு என்னிடம் பணத்தைக் கொடு! ஆனால் நீயும் பெரிய தம்பியும் மற்றவர்களைப் பரர்க்கவோ, போலீஸாருடன் தொடர்பு கொள்ளவோ விடமாட்டேன்! நீ பணம் கொடுக்க முடிவு செய்யும் வரையில் இங்கேயே சிறைப் பட்டிருக்க வேண்டியதுதான்!” என்றார் நிலவள நம்பி!

வேறு வழியின்றிச் சாந்தியும் பெரியதம்பியும் அந்தப் பங்களாவில் பாதுகாப்புடன் தங்கியிருந்தார்கள்!

நாட்கள் ஓடின. அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. சாந்தியிடம் இருந்த பணத்தை முன்பணமாகப் பெற்றுக் கொண்டார் நிலவள நம்பி. பெரியதம்பியிடம் இருந்த பத்தாயிரம் ரூபாயையும் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்லிப் பெற்றுக் கொண்டார். அவர்கள் அடிக்கடி தனியே கண்டு பேசி ஒரு முடிவுக்கு வர வாய்ப்பு அளித்தார் நிலவளநம்பி தப்பமுடியாது என்ற நம்பிக்கை வந்தால் எப்படியும் சாந்தி கறுப்புப் பணத்தைக் கொடுத்து விடுவாள் என எண்ணியது அவர் மனம். அவர் எண்ணம் ஓரளவுக்கு வீண் போகவில்லை.

இருபத்தைந்து நாட்கள் ஓடிவிட்டன. அவர்கள் தப்ப வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகையால் சாந்தி கறுப்புப் பணத்தைக் கொண்டுவர முடிவு செய்துவிட்டதாகச் சொல்லி, பெரியதம்பியை மட்டும் அனுப்ப நிலவள நம்பியிடம் உதவி கேட்டாள். நிலவள நம்பி பெரியதம்பியைத் தனியாக அனுப்பினால் பணத்துடன் ஓடிவிடுவான் அல்லது போலீசுக்குப் போய் நிலவளநம்பியைச் சிக்கவைத்து விடுவான் என்று எண்ணி, பெரியதம்பியுடன் செல்லையாவை அனுப்புவதாகச் சொன்னார்.

இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று சாந்தி ‘ஆகட்டும்’ என்றாள்.

பெரியதம்பியும் செல்லையாவும் மட்டும் நிலவள நம்பியின் காரில் சென்றார்கள். காரைச் செல்லையாவே ஓட்டிச் சென்றான்.

சாந்தியின் பங்களாவை அடைந்ததும். பங்களாவின் கதவைத் திறந்துகொண்டு இருவரும் உள்ளே சென்றார்கள். பங்களாவில் உள்ளே எல்லாம் அலங்கோலமாக இருந்தன. பங்களாவின் உள்ளே நிலவள நம்பியின் ஆட்கள் கண்டபடி பணத்தைக் கண்டுபிடிக்கத் தேடியிருக்கிறார்கள், தோல்வியடைந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்ட பெரியதம்பி மெல்லச் சிரித்தான்!

செல்லையா விழிப்புடன் அவன் பின்னாலேயே சென்றான்.

சாந்தியின் படுக்கை அறைக்குள் பெரியதம்பி போய், சுவர் ஓரமாக நின்று மேலும் கீழும் பார்த்தான். பிறகு சுவரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விரல்களால் பல தடவைகள் அழுத்தினான். சில வளைவுகளில், அந்தச் சுவரின் ஒரு பகுதி மட்டும், பருத்த கதவாக அப்படியே திறந்துகொண்டு திரும்பியது. சுவரின் ஒரு பகுதியை அறையின் குறுக்கே நிறுத்தியதைப் போல் நின்றது. சுவர் இருந்த இடத்தில் அடித்தளத்தில் ஒரு பெரிய பெட்டி இருந்தது. அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கினான் பெரியதம்பி!

அவனால் தூக்க முடியாதபோது, செல்லையா கை கொடுக்கக் குனிந்தான். மறுவிநாடி. மின்னலைப் போல் பெரியதம்பி நிமிர்ந்து அவன் கழுத்தில் குத்தினான். ஒரே குத்துதான். பொத்தென்று அப்படியே விழுந்தான் செல்லையா! அவன் உடல் குளிர்ந்து வந்தது! மூச்சு வரவில்லை! கண்கள் செருகின!

பெரியதம்பி, பெட்டியை இழுத்துக்கொண்டு, பெட்டி இருந்த இடத்தில் செல்லையாவைப் போட்டுவிட்டு மீண்டும் அந்தக் கதவைப் பழையபடியே திருப்பி வைத்து விட்டு, வெளியே வந்தான்! அவனுக்குக் கார்விடத் தெரியாது. ஆகையால் அவன் சற்றுத் தொலைவு பெட்டியுடன் நடந்துபோக முடிவு கட்டினான். பங்களாவின் கதவை மூடிவிட்டு நடந்தான்.

சற்றுத் தொலைவு வந்ததும் வாடகைக் கார் ஒன்றில் ஏறிக்கொண்டு புறப்பட்டான்.

“பெயர் இல்லாத தெருவுக்குப் போ” என்றான். வாடகைக்கார் பெயர் இல்லாத தெருவுக்குச் சென்றது. அப்போது இரவு நேரம். நடமாட்டம் இல்லாத நேரம். தெருவில் ஒரு பக்கமாக இறங்கிக்கொண்டு வாடகைக் காரை அனுப்பிவிட்டு, அந்தக் குறிப்பிட்ட வீட்டை அடைந்தான்.

அது பூட்டியே கிடந்தது!

சாந்திக்கு உரிமையான பழைய வீடு அது. அவள் அந்த வீட்டில் இருந்தபோதுதான் சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆகையால் பெரும் பணம் சேர்ந்த பின்பும் அந்த வீட்டை விடாமல் வாடகைக்கு இருந்த அந்த வீட்டை விலைக்கு வாங்கிப் பூட்டி வைத்திருந்தாள். அவள் உபயோகப்படுத்தாத பழைய் கார் ஒன்றும் கார்க் கூடத்தில் நின்றது. அந்தப் பழைய காரில் பணப் பெட்டியை மறைத்து வைத்தான் பெரியதம்பி. பிறகு ஒன்றும் தெரியாதவனைப் போல் நடந்தான். அவனுக்கு ஓர் ஐயம் வந்துவிட்டது உண்மையில் சாந்தி சொன்ன பழைய வீடு இதுதானோ, வேறு வீடோ? ஆகையால் எதற்கும் அவளிடம் பணம் வைத்திருக்கும் வீட்டைக் காண்பிக்க ஒரு காகிதத்தில் படம் வரைந்து, அதைத் தனது ஷூவில் மறைத்து வைத்துக்கொண்டு நடந்தான்.

சாந்தியின் திட்டப்படி பணத்தை அவன் எளிதில் எடுத்துச் செல்லும் இடத்தில் வைத்தாகிவிட்டது. இனி எப்படியாவது அவளையும் தப்ப வைத்து இருவரும் வேறு எங்கேயாவது ஓர் ஊருக்கு ஓடிவிட வேண்டும். கொந்தளிப்பு அடங்கும் வரையில் இருவரும் மறைந்து வாழ வேண்டும்! அவன் மீண்டும் புலிக்கூண்டை நோக்கி நடப்பதைப்போல நடந்தான்!

வழியில் மருந்துக்கடை ஒன்றுக்குப்போய், சில தூக்க மாத்திரைகளை வாங்கி அவைகளையும் ஷூக்களில் மறைத்து வைத்துக்கொண்டு அவன் புறப்பட்டான்!


29

பெரியதம்பி மட்டும் திரும்பிவருவதைக் கண்ட நிலவள நம்பி சீற்றத்துடன், “என்ன நடந்தது?” என்றுகேட்டார்.

செல்லையா, பணப்பெட்டியைக் கண்டதும் என்னைக் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் அவன் தோற்று விட்டான்! அவன் மயக்கமாகி விழுந்து விட்டான். நான் உண்மையை உங்களிடம் சொல்ல ஓடிவந்தேன்.

“பொய் சொல்லுகிறாய்! உன்னைக் கொல்லும்படி செல்லையாவுக்கு நான் கட்டளையிடவில்லை!” என்றார் நிலவள நம்பி.

“நீங்கள் கட்டளையிடவில்லை! அவன் பெட்டியுடன் ஓடிவிட எண்ணியிருப்பான்” என்றான் பெரியதம்பி.

நிலளை நம்பி முத்தையாவை அனுப்பிப் பார்த்து வரச் சொன்னார். காருடன் திரும்பி வந்த முத்தையா, செல்லையாவைக் காணவில்லை என்றும் கார் மட்டும்தான் இருந்தது என்றும் சொன்னான்.

நிலவள நம்பிக்குச் செல்லையா தன்னிடமிருந்து தப்பி ஓடி விட்டானோ என்ற ஐயம் வந்தது! பெரியதம்பி செல்லையாவைக் கொன்று விட்டிருந்தால், பணப்பெட்டியுடன் ஓடி விட்டிருப்பான் அல்லவா! அவன் ஏன் திரும்பி வரப் போகிறான் என்று நம்பினார்.

“பணம் எங்கே” என்றார் அவர்.

“பணம் இப்போது கிடைக்காது! பங்களாவுக்கு ஆட்களை அனுப்பி நீங்கள் பணத்தைத் தேடும் பழக்கத்தை விடும்வரையில் உங்களுக்குப் பணம் கிடைக்காது” என்றான் பெரியதம்பி.

நிலவள நம்பி சீறினார், சினந்தார் கொந்தளித்தார். என்றாலும் பணம் கிடைக்கும் வரையில் அவர்களைப் பக்குவமாக நடத்துவது என்று முடிவு செய்தார்.

அவர்மீது அவர்களுக்கு நம்பிக்கை வர இருவருக்கும் பங்களாவில் உள்ளே எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்று சலுகை கொடுத்தார். அந்தச் சலுகையைப் பயன்படுத்தித்தான் அன்று சாந்தி மெல்லத் தூக்க மாத்திரைகளை தேநீரில் கலந்து விட்டாள். நிலவள நம்பியும் முத்தையாவும் அந்தத் தேநீரை பருகிவிட்டு மயக்கமாக இருந்த அந்த நேரத்தில்தான், சாந்தியும் பெரியதம்பியும் நிலவள நம்பியின் காரில் தப்பிப் போக புறப்பட்டார்கள். இருவரும் காரில் வந்து உட்கார்ந்தார்கள். கார் புறப்படவில்லை. சாந்தி எவ்வளவோ முயன்றும் கார் புறப்படவில்லை, காரில் ஏதோ கோளாறு!

“இறங்கிப் போய்விடலாம்!” என்றான் பெரியதப்பி. “சற்றுப் பொறுங்கள்” என்றாள் சாந்தி, பிறகு அவள் காரின் பானெட்டைத் திறந்து ஏதோ பழுது பார்த்தாள். நீண்ட நேரம் கழித்துக் கார் புறப்பட்டு விட்டது.

ஆனால், அதே நேரத்தில் மயக்கம் சற்றுத் தெளிந்து நிலவள நம்பியும் முத்தையாவும் காரிலே வந்துவிட்டார்கள். அவர்கள் இருவரும் காரில் புறப்படுவதைக் கண்டதும் நிலவள நம்பி மற்றொரு காரில் அவர்களைத் துரத்தினார்.

இதனால் திட்டப்படி சாந்தி பணப்பெட்டியை எடுக்கப் பழைய வீட்டுக்கு, பெயர் இல்லாத தெருவுக்குப் போக முடியவில்லை. அவள் தப்பினால் போதும் என்று காரை மைசூர் போகும் சாலையில் விட்டாள்! மைசூரை நெருங்கிக் கொண்டிருந்தபோதுதான் அந்த இரண்டாவது விபத்து – மற்றொரு விபத்து நடந்தது.

லாரியில் மோதிய கார் வளைந்து வளைந்து ஓடியது. அவன்மீது சாய்ந்து விழுந்த சாந்தியைப் பின்சீட்டில் இழுத்துப போட்டு விட்டு, பிரேக்கைப் போட்டான் பெரிய தம்பி. கார் அப்படியே உருண்டது.


30

முதல் விபத்துக்கும், இரண்டாவது விபத்துக்கும் இடையில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும் பெரியதம்பிக்கு நினைவில் வந்தன! அதே நேரத்தில் நிலவளநம்பி இரகசியமாகப் போலீஸாருக்கு உதவி செய்வதைப்போல், தன்னையும் சாந்தியையும் போலீசார் இரகசியமாகத் தேடும்படி செய்துவிட்டார் என்பதும் நினைவில் வந்தது.

பெரியதம்பி தலையை இப்படியும் அப்படியும் ஆட்டி விட்டுச் சற்று நிமிர்ந்து பார்த்தான். எதிரே – வஞ்சிக்கொடி நின்றிருந்தாள்.

அவளுக்குப் பின்னால், அவனை வானவில் ஓட்டலிலிருந்து கடத்திவந்த கொடியவர்கள் நின்றிருந்தார்கள். பெரியதம்பி மெல்ல எழுந்தான்.

வஞ்சிக்கொடி அவனைப் பார்த்துக்கேட்டாள்: “பணம் எங்கே? இப்போதாவது சொல்லு!”

பெரியதம்பி அவளை உற்றுப்பார்த்துவிட்டு, “நிலவள நம்பியின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள் இல்லையா?” என்றான்.

அவள் பேசவில்லை.

“எனக்கு எல்லாம் நினைவு வந்து விட்டது. நானும் சாந்தியும் நிலவளநம்பியின் காரைத் திருடிச் சென்றபோது விபத்து நடந்தது. அந்தக் காரை நிலவள நம்பி தன் பெயரில் பதிவு செய்து வைத்திருக்கவில்லை. முத்தழகு என்னும் போலிப் பெயரில் பதிவு செய்து வைத்திருக்கிறார். விபத்தில் நான் சிக்கியதும் பணம் இருக்குமிடத்தைச் சொல்லிவிட்டால் போலீசாரிடமிருந்து என்னைத் தப்ப வைக்க உன்னை அனுப்பி வைத்திருக்கிறார்? இல்லையா!” என்றான் பெரியதம்பி

”ஆமாம், நீ மருத்துவ விடுதியிலிருந்து தப்பிய பிறகும் கூட உன்னைத் தேடித்தான் இங்கு வந்து காத்திருந்தேன். எப்படியும் நீ பணத்திற்காக இந்தப் பங்களாவுக்கு வருவாய் என்று காத்திருந்தேன். பணம் எங்கே? சொல்லிவிட்டு நீ தப்பிவிடு” என்றாள் வஞ்சிக்கொடி.

“பணம் இருக்குமிடத்தை நான் சொல்ல முடியாது. கொடியவர்கள் வலையில் அந்தப் பணத்தைச் சேர்ப்பதை விட, போலீசாரிடம் அதைச் சேர்ப்பதே மேல். நான் செய்த குற்றத்துக்கு அவர்கள் எனக்குத் தண்டனை அளிக்கட்டும்” என்றான் பெரியதம்பி.

“போலீசார் உன்னைத் தூக்கில் போடுவார்கள். ஏன் தெரியுமா? புலிக்குட்டியை நீ கொன்றுவிட்டாய். அடுத்தபடியாக வல்லவனை நஞ்சு கலந்த ஊசியால் குத்திக் கொலை செய்துவிட்டாய். மூன்றாவதாக செல்லையாவையும் நீ கொன்று விட்டிருப்பாய் என்றே நம்புகிறோம். புரிகிறதா?” என்றாள் வஞ்சிக்கொடி

பெரியதம்பி சிறிது நேரம் சிந்தித்தான். பிறகு, வஞ்சிக்கொடியிடம் தனியாகப் பேச விரும்புவதாகக் கூறி அவளை உள்ளே அழைத்துச் சென்றான். இருவரும் ஒருவருக் கொருவர் எதிராகப் பேச உட்கார்ந்தார்கள். அப்போது காலைச் சொரிவதைப்போல் காலணியில் செருகியிருந்த துப்பாக்கியை எடுத்தான். பெரியதம்பி துப்பாக்கியைச் சுட்டிக் காட்டியதும் –

வஞ்சிக்கொடி வீறிட்டாள்.

“கத்தாதே! பணத்தை நான் ஒளித்து வைத்திருக்கும் இடத்தை நான் ஒருவருக்கும் சொல்லப்போவதில்லை. நடந்ததைப் போலீசாரிடம் சொல்லி, பணத்தை அவர்களிடம் ஒப்படைக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு. அந்த அறையில் இருந்த தொலைபேசியை எடுத்தான். போலீசாருக்கு டயல் செய்தான்.

சிறிது நேரத்தில் போலீஸ் வண்டிகள் அந்தப் பங்களாவைச் சூழ்ந்தன. வஞ்சிக்கொடியும், அவளுக்கு உதவியாக இருந்தவர்களும் போலீஸ் வண்டியில் ஏறினர்.

பெரியதம்பி கையில் விலங்குடன் போலீஸ் வண்டியில் ஏறினான்.

மேலும் மேலும் தொடர்ந்து அவனும் பல குற்றங்களை செய்ததற்குத் தண்டனை பெறாமல் தப்பமுடியாது என்பதை அவன் உணராமல் இல்லை. அந்த நேரத்தில், நிலவள நம்பியைப் பிடிக்க விரைந்து சென்ற ஜீப்பைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தது.

-முற்றும்-

– பெயர் இல்லாத தெரு, முதற் பதிப்பு: 1966, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *