கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 67,577 
 
 

நாம் சில சமயம் வெளியூர் பயணம் செல்லும் பொழுதோ, மலைவாச ஸ்தலங்களுக்கு விடுமுறையில் செல்லும் பொழுதோ அப்படியே அதன் அழகில், அமைதியில், குளிரிச்சியில் சொக்கிப் போய்விடுவோம். போகும் வழியெல்லாம் தோன்றும் வழிகளும், கிளைவழிகளும் நமக்கு ‘அது எங்கே போகும்..?, அதன் முடிவில் என்ன இருக்கும்..?’ என்ற ஆர்வம் நம்மிடையே எழுந்துகொண்டே இருக்கும்.

நகரங்களிலும் மரங்கள் அசைய காற்றும் (காற்று வர அசையும் மரம்?) மலைவாசத்தில் அடிக்கும் காற்றும் அடிப்படையில் ஒன்றாயினும், அங்கு இருகும்போது அதை ரசிக்கும் மனமும் நேரமும் இருக்கிறது (கையில் கைப்பேசியும், இருந்தால் சிக்னலும் இருக்கக் கூடாது) குயில்களும், பறவைகளும் கூவுகின்றன, பலவித வண்ண மலர்கள் பூத்துச் சிரிக்கின்றன, ஏரிகளில் நீர் படபடத்துக் கொள்கின்றன, அருகே ஒரு உச்சியில் இருந்து நேற்றைய மழை, நீர்வீழ்ச்சிபோல் விழுகிறது, கைகோத்து சிந்தையில்லாமல் நடப்பது இதமாக இருக்கிறது… இன்னும் இரண்டு நாள் நீடிக்கும்.. எல்லாம் அழகாகத் தெரியும்.

தூரத்தே தெரிந்த மலையின் அப்பால் என்ன இருக்கும்? மனசு ஆர்வத்தில் துடித்தது.. அருகில் இருந்த உள்ளூர்க்காரரைக் கேட்டேன்.

“அங்கெல்லாம் அடர்ந்த காடு சார்…. யாரும் போக மாட்டார்கள். பாதை கிடையாது..” என்றார்.

எனக்குப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. அவரிடம் கேட்டேன்… அவர், “சார் அது காட்டிலாக்கா கட்டுப்பாட்டில் இருக்கிறது… யாரையும் அனுமதிப்பது இல்லை”. என்னால் ஆவலைக் கட்டுப் படுத்த முடியவில்லை. சென்று பார்த்து விடுவது என்று முடிவு செய்து விட்டேன். முதுகில் ஒரு பையில் ஒரு நாள் தேவையான உடை, கொஞ்சம் பிஸ்கட், கேக், பழம், தண்ணீர் எடுத்துக் கொண்டேன். கையில் ஒரு தடித்த உருட்டுக் கட்டை, டார்ச் லைட்டுடன், அடுத்த நாள் அதிகாலை கிளம்பிவிட்டேன். குத்து மதிப்பாக அந்த மலையை நோக்கி பயணம் துவங்கியது.. சின்ன வயதில் நம் தெரு முனைக்கு அப்பால் என்ன இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும் அல்லவா… அதே ஆர்வம்தான்.

கையில் உள்ள கட்டையால் வழியில் உள்ள தடைகளைத் தவிர்த்து முன்னேறினேன். தூரம் செல்லச் செல்ல காடு அடர்த்தியானது. மலை ஏறுவதும் கடினமாக இருந்தது.. இருந்தும் அந்த மலைக்கு அந்தப் பக்கம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. மதியம் சுமார் இரண்டு மணிக்கு உச்சியை அடைந்து விட்டேன்.. அங்கிருந்து பார்க்க இரு பக்கமும் ஒரே காடாகத்தான் தெரிந்தது. இருப்பினும் இறங்கித்தான் பார்ப்போம் என்று இறங்க ஆரம்பித்தேன். மாலை சுமார் ஐந்து மணி இருக்கலாம். கிட்டத்தட்ட கீழே வந்திருப்பேன் என நினைக்கிறேன். என் கண் முன் கண்ட காட்சி என்னாலேயே நம்ப முடியவில்லை…

(இந்தக் கதையை இங்கேயே முடித்திருக்கலாம், ஒரு பாதை.. ஒரு சின்ன டீக்கடை.. சிலர் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு மாலை மலர் படித்துக் கொண்டு.. என.. ) அனால் நடந்தது அது அல்ல.. என்ன சொன்னேன் “என் கண் முன் கண்ட காட்சி என்னாலேயே நம்ப முடியவில்லை…”

காடுகள் முடிந்து ஒரு பரந்த புல்வெளி என் கண்முன் விரிந்தது.. அந்தப் பள்ளத்தாக்கைச் சுற்றி நான்கு புறமும் மலைகள், மலைக் காடுகள். நடுவில் ஒரு மிகப் பெரிய ஏரி. ஏரியைச் சுற்றி மிக அழகான நேர்தியான நடைபாதை. புல்வெளியில் ஆங்காங்கே அழகிய பூந்தோட்டம், பூ மரங்கள். மலைக் காடும் புல்வெளியும் சங்கமிக்கும் இடத்தில் கனிவகை மரங்கள். மலையிலிருந்து ஓரிடத்தில் வெள்ளிச் சரிகைபோல் கொட்டும் நீர்வீழ்ச்சி. பின் சிறிய ஆறுபோல் சல சலத்து அந்த ஏரியில் சங்கமித்துக் கொண்டிருந்தது… அருவி தரும் நீரும் நிரம்பி வழிந்து எங்கோ சென்று கொண்டிருக்கும்தானே…! மாலைச் சூரியனின் கிரணங்கள் வெள்ளிச் சரிகையில் பட்டு வர்ண்ண ஜாலமாக வானவில் மலையில் பட்டுப் பிரதிபலித்தது..

இயற்கைச் சூழலின் ரம்யத்தில் லயித்த நான் அதைக் கவனிக்கவில்லை. அந்தப் புல்வெளி முடிவில், ஒரு சோலையின் நடுவில் ஒரு வீடு. என் கால்கள் என்னை அறியாமல் அங்கே அழைத்துச் சென்றது.. சுமார் அரைக் கிலோமீட்டர் நடைக்குப் பின் அந்த அழகான வீட்டின்முன் நிற்கிறேன். இன்னும் இருட்டவில்லை… முன் பக்கம் நேர்தியாகப் பராமரிக்கப் பட்டிருந்தது. தோட்டமும் நடைபாதையும் பார்க்க மிக அழகாக இருந்தது. மரத்தால் ஆன வீடு.. கீழ்தளமும் மேல் தளமுமாகக் கொஞ்சம் பெரிதாகவே இருந்தது.. யாரேனும் வீட்டில் இருக்கவேண்டும் என்று தோன்றியது..

நான் சற்று சந்தேகமாகக் கதைவைத் தட்டினேன். சிறிது நேரம் கழித்து மேல் தளத்தில் ஏதோ அரவம் கேட்டது. ஜன்னலைத் திறந்து யாரோ எட்டிப் பார்ப்பது போன்று இருந்தது. உடனே ஜன்னல் மூடப்பட்டது. எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது.. திரும்பி வந்தவழி ஓடிவிடலாமா என்றால் இந்த இருட்டில் காட்டில் எங்கே செல்வது? தயங்கி நிற்கையில் வாயில் கதவு திறக்கும் ஓசை கேட்டது. ஒரு வயதான மனிதர் சுமார் அறுபதிலிருந்து எண்பதுக்குள் எங்கே என்று மதிப்பிட முடியாத தோற்றத்தில், கைகளில், கழுத்தில் சுருக்கம், தீர்கமான கண்கள்… கூரிய பெரிய மூக்கு… என்னைப் பார்த்துக் கனைத்தார். நான் பட படவென ஆர்வக் கோளாரால் இங்கே வந்த விசயத்தைச் சொல்ல “உள்ளே வா…” என சைகையால் அழைத்தார். நான் அவர் பின்னால் தயக்கத்துடன் தொடர்ந்தேன்…

உள்ளே அமரச் சொன்னவர், ஒரு மூலையில் கட்டைகளை கனல் மூட்டி வைத்திருந்த இடத்தில் இருந்து சிறிது தண்ணீர் காச்சி டீ போன்ற பானம் ஒன்றைத் தந்தார்.. சிறிது நேர அமைதிக்குப் பின் ..

“எதுக்கு வந்த…..?” என்றார். அவர் குரல் கர கரவென்று இருந்தது..

“இல்ல சார்… ஒரு ஆர்வக் கோளாறு..”

“என்னைப் போல…” என்று சொல்லி சிரித்துக் கொண்டார்.. “இங்கயே தங்கி விடுகிறாயா…?”

“இல்ல சார்.. போகணும். மனைவி, பிள்ளைகள் எல்லாம் இருக்காங்க..”

மீண்டும் வினோதமாகச் சிரித்தார்… கையில் சில பழங்களை எடுத்துக் கொண்டு “வா…..” என்றார்.. அவர் பின்னாலேயே சென்றேன்..

அந்தப் பாதை ஏரிக் கரைக்குச் சென்றது. கரையில் மரத்தை வெட்டி அமைத்த இருக்கைகள் இருந்தது.. அதில் அமர்ந்து கொண்டோம்.. அந்தி நேரமாதலால் பறவைகள் நிறுத்தாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன… அன்றய இரை தந்த இறைவனுக்கு இரைந்து இசைத்து நன்றி புகல்கின்றனவோ? அவர் அமைதியாக இருந்தார்… சாயும்காலமாதலால் இருள் சூழத்துவங்கியிருந்தது. நான் மெல்ல அவரிடம் “இங்கே பயப்பட ஒன்றுமில்லையே…?” என்றேன்.

அவர் கர கரவென சிரித்துக் கொண்டே “ஏன் என்னைப் பார்த்தால் பயமாக இல்லை…? என்றார்.

கையில் உள்ள பழம் ஒன்றைக் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.. சட்டென்று நான் கொண்டுவந்தது நினைவுக்குவர எடுத்து நீட்டினேன். வேண்டாம் என கை அசைத்து மறுத்துவிட்டார். மீண்டும் ஒரு நீள் மவுனம்.

என்னைப் பார்த்து “நான் எப்படி இங்கே இருக்கிறேன் என்று தானே நினைக்கிறாய்…?” என்றார்.

“ம் … ம்…. “ என்றேன்.

“உன்னைப் போல்தான்…” என்று சிரித்து தூரத்தில் உள்ள மண் மேட்டைக் காண்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.. அவர் தொடர்ந்தார்..

“உன்னைப் போல் அதைத் தாண்டி என்ன இருக்கு என்று பார்க்கத் தோன்றி இறங்கினேன்.. எனக்கு இந்த இடம் பிடித்துவிட்டது… தங்கிவிட்டேன். எவ்வளவு அழகான இடம் பார்.. என்ன அமைதி பார்…” மெல்ல அமானுஷ்யமாகச் சிரித்தார்… எனக்கு முதுகுத் தண்டு சில்லிட்டது… ஏரியின் குளிரோ..?

வானத்து நிலா பளிச்சென்று ஏரியில் மின்னியது.. மெல்லிய காற்றலையில் ஏரி நீர் நிலவொளியில் மின்ன, வெள்ளி அருவி நீர்வீழ்ச்சியும் சற்று அமானுஷ்யமாய் இருந்தது.. எங்கள் இருவர் இழுக்கும் மூச்சின் ஒலியே அமானுஷ்யமாகக் கேட்டது.. அவர் அங்கு வந்ததிலிருந்து அந்த இடத்தில் என்னவெல்லாம் செய்தார் என்பதை விளக்கிக் கொண்டே செல்ல நேரம் சென்றது தெரியவில்லை….

‘சரி வா… படுக்கலாம்..’ என்று என்னை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மேல் தளத்தில் படுக்கச் சொன்னார். தரையில் படுக்க ஒரு இற்றுப் போன கம்பிளியும் கொடுத்தார். நான் கொண்டுவந்த பை, கட்டை முதலியவற்றை அருகில் வைத்துக் கொண்டு தூங்கச் சென்றேன்.. மிகுதியாக நடந்த களைப்பில் உடனே கண் இழுத்துவிட்டது.. ஆழ்ந்த தூக்கம்..

“என்னங்க…. என்னங்க எங்கே போயிட்டீங்க…?” என்ற மனைவியின் குரலும், “அப்பா… அப்பா..!” என்ற பிள்ளைகளின் கூச்சலுக்கிடையில் அந்தப் பெரியவரின் கர கர சிரிப்பொலி கேட்டது.. ஏரியிலிருந்து ஒரு பறவை பட படவென இறக்கை ஒலி எழுப்பி மேலே பறந்து சென்று நிலவில் போய் அமர்ந்துகொண்டு கீழே பார்த்து வினோதமாகக் கத்தியது… ஒரு குரங்கு அந்த வானவில்லின் வர்ணங்களை ஒவ்வொன்றாய்ப் பிரித்துப் போட்டுக் கொண்டிருந்தது… நான் “பிரிக்காதே… பிரிக்காதே…” என்று அலறிக்கொண்டு எழுந்தேன். அட, கனவு.. காலை மணி எட்டு இருக்கும்… சன்னல்வழி சூரியன் உள்ளே வந்திருந்தான்… (இங்கேயாவது கதையை முடித்திருக்கலாம்…)

எழுந்து சுற்று முற்றும் பார்க்க அந்த மரவீட்டின் மேல் தளத்தில்தான் இருந்தேன்… மெல்ல எழுந்து கீழே பார்த்தேன்… பெரியவரைக் காணவில்லை… கீழே வந்து தேடினேன்… “சார்…. ஐயா…. சார்…” என்று கூப்பிட்டுக் கொண்டே வாசலுக்கு வந்து சுற்று முற்றும் பார்த்தேன்.. அவரைக் காணவில்லை… ஏரிக்குச் செல்லும் பாதை வழி நடந்து தேடினேன்..

அங்கே…..!!!

நேற்று இரவு அவர் அமர்ந்திருந்த இடத்தில் அவர் வித்தியாசமாகப் படுத்திருந்தார். அவரை யாரோ பலமாக தாக்கியிருந்தார்கள். மண்டை உடைந்து இரத்தம் உறைந்திருந்தது.. மூச்சு இல்லை.. எனக்கு பதட்டமாக இருந்தது.. அங்கிருந்து ஓட எத்தணிக்கும் போதுதான் கவனித்தேன்… அவர் உடல் அருகில் நான் கொண்டு வந்த கட்டை இரத்தக் கறையுடன்…

எனக்கு ஏரிக்கரை ஓரத்தில் தெரிந்த மேடு கண்ணை உருத்தியது….

இனி…….

Print Friendly, PDF & Email

1 thought on “இனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *