(1966ல் வெளியான துப்பறியும் நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
11
பெரியதம்பி மீண்டும் கண்களைத் திறந்து பார்த்தான். போலீஸ் அதிகாரி அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். டாக்டர் குனிந்து அவனுக்கு ஓர் ஊசியைப் போட்டார். அது சற்று வலியைக் கொடுத்தது. ”இந்த ஊசி உனக்கு மனத்தில் துணிவைக் கொடுக்கும். எதையும் இனி மேல் உன்னால் தாங்கிக் கொள்ள முடியும்” என்றார் டாக்டர்.
‘தாக்குதலையும் அச்சத்தையும் தாங்கிக்கொள்ள முடியாதவர்களுக்கு மருந்துகள் இருக்கின்றன. இன்று இந்த மருந்துகள் இல்லாவிட்டால், உலகத்தில் பாதிப்பேர்களுக்கு வெறி பிடித்துவிடும்! உலகத்தில் எல்லாருக்கும் இந்த மருந்தைக் கொடுப்பதில்லை. சில வேளைகளில் வெறும் தண்ணீரைக்கூட ஊசியின் மூலம் உடலில் செலுத்திவிட்டு அச்சத்தைப் போக்கும் மருந்து இது என்கிறார்கள். பெரும்பாலும் அச்சமும் தாக்குதலும் மனவியாதி என்பதால், நோயாளி ஏதோ மருந்து உடலுக்குள் போயிருக்கிறது என்று நம்பிக் குணமடைந்தே விடுகிறான்! இப்படி இந்த டாக்டரும் நமக்கு உடலில் தண்ணீரைச் செலுத்தியிருப்பாரோ?’ என்று எண்ணியது பெரியதம்பியின் மனம்.
போலீஸ் அதிகாரி அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் இன்னும் அவனிடம் பேசக் காத்திருந்தார். பெரியதம்பியும் இப்போது அவரிடம் பேச விரும்பினான். வட துருவத்துக்கும் தென் துருவத்துக்கும் எவ்வளவு தொலைவு இருக்கிறதோ. அவ்வளவு தொலைவு இருந்தது நடந்த நிகழ்ச்சிகளுக்கும் போலீஸ் அதிகாரி சொன்ன நிகழ்ச்சிகளுக்கும்! உண்மையில் என்னதான் நடந்தது என்பதனை அவன் அறிந்திட விரும்பினான்.
பெரியதம்பி சொன்னான்: “டாக்டர் நீங்கள் பக்கத்திலேயே இருங்கள். நான் போலீஸ் அதிகாரியிடம் பேச விரும்புகிறேன். நீங்கள் பக்கத்தில் இருந்தால் என்னால் சற்றுத் துணிவுடன் பேச முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்றான்.
“ஆகட்டும்” என்று செர்ல்லி விட்டு முக்காலி ஒன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு டாக்டர் உட்கார்ந்தார்.
கட்டிலின் மற்றொரு இழுத்துப் பக்கம் முக்காலியை போட்டுக் கொண்டு போலீஸ் அதிகாரி உட்கார்ந்தார்.
பெரியதம்பி போலீஸ் அதிகாரியைப் பார்த்து சொன்னான்: “என்னை நம்புங்கள். என் பெயர் பெரியதம்பி. சென்னையில் புலிக்குட்டி என்னும் பெயரில் நான் குத்துச் சண்டை போட்டேன். புலிக்குட்டி இறந்துவிட்டதால், அவனுக்குப் பதில் நான் குத்துச் சண்டை போட்டேன். பிறகு நடிகை சாந்தியுடன் காரில் பெங்களூருக்கு வந்து கொண்டிருந்தபோது பெங்களூருக்கு முன், கார் விபத்துக்கு உள்ளாகிவிட்டது! இப்போது நான் பெங்களூர் மருத்துவ விடுதியில் அடிபட்டுக் கிடக்கிறேன்! இதுவே மெய்!”
இதைக் கேட்டதும், டாக்டரும் போலீஸ் அதிகாரியும் தாக்குதல் பெற்றவர்களைப் போல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
இவன் என்ன இப்படித் தலைகீழாகச்சொல்லிவிட்டான் என்று!
”என்ன டாக்டர்? ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்? நான் சொன்னதில் என்ன தவறு?” என்று கேட்டான் பெரியதம்பி.
டாக்டர் சொன்னார்: “உன் பெயர் பெரியதம்பி என்று சொல்லுகிறாய். அது உண்மை என்றே கொள்ளோம். மற்ற விவரங்கள் பெரும்பாலும் பொய்!”
“என்ன டாக்டர்! மற்ற விவரங்கள் பொய்யா? எப்படி?” என்று கேட்டான் பெரியதம்பி. அவன் இப்போது கொதிப்படையவில்லை. சற்று அமைதியுடனேயே அவன் கேட்டான். டாக்டர் உண்மையிலேயே அவன் உடலில் ஏதோ மருந்து செலுத்தியிருக்கிறார். அந்த மருந்துதான் அவனுக்கு அமைதியைக் கொடுத்திருக்கிறது என்பதை உணர முடிந்தது அவனால்.
டாக்டர் சற்று அமைதியுடன் அழுத்தமாகப் பேசினார். “விபத்து நடந்தபோது உன்னுடன் சாந்தி என்னும் பெண் இருந்தாள் என்று நீ சொன்னாயே, அது உண்மைதான். அவள் இறந்துவிட்டாள்! விபத்து நடந்தது என்று சொன்னாயே அது பெங்களூருக்கு முன்னால் நடக்கவில்லை. மைசூருக்குப் பக்கத்தில் மைசூருக்குப் பத்துக் கல் தொலைவில்தான் நீ சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. பெங்களூரிலிருந்து மைசூருக்கு வரும்போது தான் கார் விபத்து நடந்திருக்கிறது. இப்போது நீ மைசூரில் உள்ள மருத்துவவிடுதியில் இருக்கிறாய்! பெங்களூரில் இல்லை!”
பெரியதம்பி டாக்டரையும் போலீஸ் அதிகாரியையும் மாறிமாறிப் பார்த்தான். பிறகு சொன்னான்; “எல்லாமே என்னால் நம்ப முடியாதவைகளாக இருக்கின்றன! பெங்களூரை அடையும் முன்புதானே விபத்து நடந்தது. அதனால்தான் பெங்களூரில்தானே இருக்கவேண்டும் என்று எண்ணினேன். எல்லாம் கனவில் நடப்பதைப் போலிருக்கின்றன எனக்கு! எத்தனை நாட்களாக நான் மயக்கமாக இருந்தேன்? அது பற்றிச் சொல்லுங்கள்.”
போலீஸ் அதிகாரி சொன்னார்: “ஏழு நாட்களாக நீ நினைவு பெறாமல் கிடந்தாய். மாதக் கணக்கில் நீ நினைவு பெறாமல் இருந்து விடுவாயோ என்று நான் மிக அஞ்சினேன். விபத்து நடந்த தேதி ஏப்ரல் ஐந்து. இன்று தேதி பன்னிரண்டு. நேற்றுத்தான் உனக்கு நினைவு வந்தது.”
“என்ன? இப்போது ஏப்ரல் மாதமா? சற்றுப் பொறுங்கள்” என்று சொல்லிவிட்டு “இருக்கவே முடியாது! குத்துச் சண்டை நடந்தது மார்ச் மாதம் ஐந்தாம் தேதி. அன்று இரவுதான் விபத்து நடந்தது. ஒரு மாதத்திற்கு மேல் மயக்கமாகக் கிடந்திருக்கிறேனா? இருக்கவே முடியாது! சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள். இப்போது நடப்பது மார்ச்சு மாதம் தானே?” என்றான் பெரியதம்பி.
டாக்டர் தன் கைக்கடிகாரத்தை அவனிடம் காட்டினார். அதில் மாதமும் நாளும் தெளிவாக இருந்தன. டாக்டர் சொன்னபடி அப்போது நடந்துகொண்டிருந்தது ஏப்ரல் மாதம்தான்!
“என்னால் நம்பவே முடியவில்லை!’ என்றான் பெரியதம்பி.
போலீஸ் அதிகாரி, உடனே தன்கையில் மடித்து வைத்திருந்த செய்திப் பத்திரிகையை அவனிடம் காட்டி, “இந்த செய்திப் பத்திரிகையை நீ படித்துப் பார்!” என்றார்.
பெரியதம்பி செய்திப் பத்திரிகையின் முதல் பக்கத்தைப் பார்த்தான். புலிக்குட்டியைப் பற்றிய செய்தி அதில் வந்திருந்தது. புலிக்குட்டி வீரன் சென்னையில் நடந்த குத்துச் சண்டையில் வெற்றிபெற்றுவிட்டு காரில் பெங்களூருக்கு வந்துகொண்டிருந்தபோது விபத்து நடந்து இறந்து விட்டதாக அதில் போட்டிருந்தது! காரில் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் அதில் வந்திருந்தது. அந்தப் பத்திரிகையின் தேதியைப் பார்த்தான் பெரியதம்பி. மார்ச் மாதம் ஆறாம் தேதி வெளி வந்த பத்திரிகை அது!
போலீஸ் அதிகாரி சொன்னார்: “இந்தப்பத்திரிகையில் வந்த செய்தியை நீ முன்பே படித்திருக்கிறாய். புலிக்குட்டிக்குப்பதில் நீ குத்துச்சண்டை போட்டு வல்லவனைத் தோற்கடித்திருந்தால் புலிக்குட்டிக்குக் கிடைத்த புகழும் பணமும் உனக்குக் கிடைத்திருக்கும் என்றும் நீ கற்பனை செய்து கொண்டாய். அதே நேரத்தில் புலிக்குட்டிக்கு ஏற்பட்ட விபத்தும் உனக்கு ஏற்பட்டிருக்குமோ என்று அடிக்கடி நீ கற்பனை செய்து பார்த்துக்கொண்டாய். உண்மையிலேயே உனக்கு விபத்து நடந்ததும் மூளைக்கு ஏற்பட்ட தாக்குதலினால் நீ கற்பனை செய்து கொண்டிருந்ததையும் பத்திரிகையில் நீ படித்ததையும் கொண்டு நீதான் புலிக் குட்டி என்னும் பெயருடன் வல்லவனைத் தோற்கடித்து விட்டு, பெங்களூருக்கு வரும் வழியில் விபத்துக்குள்ளாகி விட்டதாக நீ எண்ணிக் கொண்டுவிட்டாய்!”
போலீஸ் அதிகாரி சொன்ன இதை ஒரு சிறிதும் ஏற்றுக் கொள்ளவில்லை பெரியதம்பி. நிலவளநம்பி, இறந்து கிடந்த புலிக்குட்டி, பெரியதம்பியைத் துரத்தி வந்த செல்லையா, முத்தையா வல்லவனைத் தோற்கடித்துவிட்டு அவன் தப்பி ஓடியது, சாந்தி அவனைக் காப்பாற்றிக் காரில் கொண்டுவந்தது – எல்லாம் அவனுக்கு இப்போது தெளிவாக நினைவில் வந்ததால் அவன் போலீஸ் அதிகாரியின் முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை.
டாக்டர் போலீஸ் அதிகாரி சொன்னதையாக உண்மையாக இருக்கும் என்று நம்பினார்.
பெரியதம்பி சிறிது நேரம் பேசவில்லை. அவன் மனம் மார்ச்சு மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து – ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி வரையில் அவன் எங்கே இருந்தான் எப்படி இருந்தான் என்று கண்டுபிடிப்பதிலேயே கருத்தைச் செலுத்தியது. அவனுக்கு அந்த ஒரு மாதத்தில் நடந்தது எதுவும் தெரியாது. எவ்வளவுதான் கவனப்படுத்த பார்த்தாலும் ஒன்றும் தட்டுப்படவில்லை! எதுவும் நினைவுக்கு வரவில்லை!
பெரியதம்பி போலீஸ் அதிகாரியைப் பார்த்து “நீங்கள் சொன்னதைக் கேட்டதும் எனக்குப் பெரும் குழப்பமாக இருக்கிறது ! ஒன்றும் புரியவில்லை எனக்கு! எல்லாம் குழப்பமாக இருக்கின்றன! எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்வீர்களா?” என்று கேட்டான்.
“சொல்லு, உனக்காக நான் எது வேண்டுமானாலும் செய்கிறேன்” என்றார் போலீஸ் அதிகாரி.
பெரியதம்பி சொன்னான்: “நான் சென்னையில் இருந்த போது ஒரு சிறிய ஓட்டலில் தங்கியிருந்தேன். அந்த ஓட்டலின் பெயர் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. மிட்லண்ட் ஓட்டல் என்பது அதன் பெயர். அந்த ஓட்டலின் பத்தாம் எண்ணுள்ள அறையில் என் பெட்டியை நான் வைத்திருந்தேன். என் பெட்டியின்மீது என் பெயர் எழுதியிருக்கும். நான் பெரியதம்பி என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று உங்களுக்கு வேறு என்னவேண்டும்? நீங்கள் சென்னைப் போலீஸுக்குச் செய்தி கொடுத்து அந்த அறையில் உள்ள பெட்டியைச் சோதித்துப் பார்க்கும்படி சொல்லுங்கள்” என்றான்.
“ஆகட்டும்” என்றார் போலீஸ் அதிகாரி.
அவர் புறப்பட்டபோது, பெரியதம்பி அவரிடம் கேட்டான்: “என் பெயரைப் பற்றி நீங்கள் இவ்வளவு துன்பம் கொள்கிறீர்களே! ஏன்? என் பெயர் என்னவாக இருந்தால் உங்களுக்கு என்ன? மற்ற நிகழ்ச்சிகளை விட்டுவிடுங்கள். என் பெயரைக்கூடவா நான் சொல்லுகிறபடி நீங்கள் கேட்கக்கூடாது”.
போலீஸ் அதிகாரி சிரித்தார். அவர் சொன்னார்: “நீ விபத்துக்குள்ளான கார் யாருக்கு உடைமையானது என்பதைக் கண்டுபிடித்தேன். அந்தக் கார் முத்தழகு என்பவனுக்கு உரிமையுடையது. அதன்படி பார்த்தால் உன் பெயர் முத்தழகாக இருக்கவேண்டும். அதை நீ ஒப்புக் கொள்ள மாட்டேன் என்கிறாயே!”
இது ஒரு புதிய புதிராக இருந்தது பெரியதம்பிக்கு! “கார் எனக்கு உடைமையானதா? இல்லை, நடிகை சாந்திக்கு உடைமையானது” என்றான் அவன்.
“நீ சொல்லுவது எதுவும் சரி இல்லை!” என்று சொல்லி விட்டு எழுந்து போய்விட்டார் போலீஸ் அதிகாரி.
பெரியதம்பி குழப்பத்துடன் தன் கண்களை மூடிக் கொண்டான். சென்னை மிட்லண்ட் ஓட்டலில் இருக்கும் அவன் பெட்டியைத்தான் அவன் இப்போது நம்பியிருந்தான்!
12
அன்று மாலை ஒரு வியக்கத்தக்க நிகழ்ச்சி நடந்தது. மருத்துவ விடுதியில் பொதுவார்டில் கிடந்த அவனை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார்கள் இரண்டு நர்சுகள்.
“என்னை ஏன் இங்குக் கொண்டு வருகிறீர்கள்?” என்று கேட்டான் அவன்.
நர்சுகளில் ஒருத்தி சிரித்துவிட்டுச் சொன்னாள், “பொதுவார்டில் ஏழைகள்தாம் இருப்பது வழக்கம், இலட்சக்கணக்கில் பணமுள்ள பணக்காரர்கள் இந்த மாதிரி தனி அறைகளில் தாம் இருக்கவேண்டும்.”
“இலட்சக்கணக்கில் பணம் இருக்கிறதா? என்னிடமா? என்னிடம் ஒரு பைசாக்கூட இப்போது இல்லை! என்னிடம் இருந்த பத்தாயிரம் ரூபாயும் தீக்கு இரையாகிக் காருக்குள் சிக்கிக் கொண்டுவிட்டது” என்றான் பெரியதம்பி.
அப்போது அந்த அறைக்குள் ஓர் அழகிய பெண் நுழைந்தாள்! அவள் நுழையுமுன், அவள் உடலில் பூசியிருந்த விலை உயர்ந்த சென்ட்டின் வாசனை மிக இனிமையாக, மருத்துவ விடுதியின் மருந்து வாசனைகளையும் மறைத்துவிட்டு, தெவிட்டாமல் வந்தது. அந்த அழகி பெரியதம்பியைப் பார்த்துச் சிரித்தபடி, “இப்போது எப்படி இருக்கிறது? உங்களைக் கண்டுபிடிப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது” என்றாள்.
“யார் நீ?” என்று கேட்டான் பெரியதம்பி.
“இது என்ன கேள்வி? என்னைத் தெரியவில்லையா? என் பெயர்தான் வஞ்சிக்கொடி. உங்களுடைய அத்தை மகள் நான்! இன்னும் உங்களுக்கு நினைவுவரவில்லையா? உங்களைச் சொல்லி என்ன பயன்? உங்களுக்குத்தான் உங்கள் பெயரே நினைவுக்கு வரவில்லையாமே! உங்கள் பெயர் முத்தழகு! பெரியதம்பி இல்லை! புரிகிறதா?” என்றாள் அந்தப் பெண்!
பெரியதம்பிக்கு வியப்பு மிக மிகுந்தது!
‘அவன் ஒரு பெரும் பணக்காரன்! அவன் பெயர் முத்தழகு! அவனைத் தேடி வஞ்சிக்கொடி என்னும் பெண் வந்திருக்கிறாள்! அடுத்தபடியாக என்ன நடக்கப் போகிறதோ?’ என்று துடித்தது பெரியதம்பியின் மனம்.
அவன் சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே, அந்த அழகி அவன் கட்டிலில் அவனுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு அவனை அன்புடனும் இரக்கத்துட னும் பார்த்தாள்.
13
வஞ்சிக்கொடி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவன் பெயர் பெரியதம்பி அல்ல, முத்தழகு என்று சொன்ன அந்த அழகியிடம் சிறிது பேசவிரும்பினான் பெரியதம்பி. அவன் அவளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு விட்டு “உண்மையில் நீ யார்?” என்றான்.
அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்: “பார்த்தீர்களா? இன்னுமா உங்களுக்கு நினைவு வரவில்லை! நான் தான் வஞ்சிக்கொடி. என்னையே நீங்கள் மறந்துவிட்டிருந்தால் வேறு எதுதான் உங்களுக்கு உங்கள் நினைவில் வரப் போகிறது!”
அவன் அவளை ஆழமாகப் பார்த்தான். அவளை அவன் இதுவரையில் எங்கேயும் பார்த்ததே இல்லை. அவளைப் போல் ஓர் உருவத்தை அவன் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை ! அவளைப் போல் தோற்றமுள்ள ஒரு பெண்ணைக் கூட அவன் பார்த்ததில்லை!
“நீ பொய் சொல்லுகிறாய். இவ்வளவு அழகாயுள்ள நீ இவ்வளவு மட்டமான பொய்யைச் சொல்லலாமா? நான் முத்தழகு அல்லன் என்பது உனக்கு மிகவும் நன்றாகத் தெரியும். ஆனாலும், வேண்டுமென்றே நீ பொய் சொல்லுகிறாய்! உனக்கு என்ன வேண்டும்? எதற்காக என்னிடம் வந்து இப்படி ஒரு நாடகத்தை நீ நடத்துகிறாய்?” என்று கேட்டான் பெரியதம்பி.
அவள் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு, அந்த அறையில் வேறு யாரும் இல்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு மெல்லப் பேசினாள்: “உங்கள் பெயர் பெரியதம்பிதான் என்றாலும், நீங்கள் உங்கள் பெயரைப் பெரியதம்பி என்றால், உங்கள் தலையில் இரண்டு கொலைக் குற்றங்கள் வந்து விழும்! இரண்டு கொலைகளைச் செய்த ஒருவரை இந்தக் காலத்துச் சட்டம் சும்மாவிடுமா? உண்மையை நீங்கள் அறிந்திருந்தால் விபத்திலிருந்து தப்பியிருக்க வேண்டாம், சாந்தியைப் போல் இறந்திருக்கலாம் என்று முடிவு செய்வீர்கள்! முத்தழகு என்று சொல்லி உங்களைக் காப்பாற்றவே நான் வந்திருக்கிறேன். இதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!”
பெரியதம்பிக்கு அவள் பேசியது ஒரு பெரிய புதிராக இருந்தது. அவன் இரட்டைக் கொலைகளைச் செய்தானா எப்போது? எப்படி? ஒன்றும் விளங்கவில்லை அவனுக்கு!
“என்ன நீ உளறுகிறாய்? எப்போது நான் யாரைக் கொலை செய்தேன்? குத்துச்சண்டையில் வல்லவன் என்னால் கொல்லப்பட்டது சட்டப்படி குற்றமில்லை! அவனுக்குப் பதில் நான் இறந்திருந்தாலும் சட்டப்படி அவனை எவரும் எதுவும் செய்யமுடியாது! குத்துச்சண்டையில் இது ஒரு விதி” என்றான் பெரியதம்பி.
“நீங்கள் சொல்வது மெய். என்றாலும் உங்கள் விளக்கத்தை இப்போது போலீசார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இயற்கையாக வல்லவனை நாக்கவுட் செய்து அவனைக் கொன்றிருந்தால் அது குற்றமில்லை! உங்கள் கையில் அணிந்திருந்த குத்துச் சண்டை உறைகளில் ஒன்றில் கண்ணுக்குத் தெரியாத விஷ ஊசி ஒன்று வைக்கப்பட்டிருந்தது! அந்த விஷ ஊசி கையுறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது! ஒரு சில குத்துக்களை விட்டதும் மெல்ல மெல்ல வெளியே வந்தது அந்த ஊசி! பிறகு, அது நேரிடையாக வல்லவனின் முகத்தில் பட்டதும், ஒரு சில விநாடிகளில் இறந்துவிட்டான் வல்லவன்! நீங்கள் போட்டுவிட்டுவந்த கையுறைகளைப் போலீஸார் சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். பிறகு வல்லவனின் உடலைச் சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். பிறகுதான் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்!”
வஞ்சிக்கொடியின் அழகு நல்ல பாம்பின் அழகைப் போலிருந்தது! இப்போது அவனுக்கு இந்தப் பாம்பிடமிருந்து இனித் தப்பமுடியாது என்பதை அவன் மனம் எண்ணியது. அவள் சொன்னது உண்மையாக ஏன் இருக்கக் கூடாது? சிறிதுநேரம் சிந்தித்தபடி உட்கார்ந்திருந்தான் பெரியதம்பி. படுத்துக்கிடந்த அவனால் இப்போது ஏதோ ஒரு வேகத்தில் எழுந்து உட்கார முடிந்தது. முதன் முதலில் மூன்லைட் ஓட்டலுக்கு அவன் சென்றபோது நடந்த நிகழ்ச்சி அவனுக்கு இப்போது நினைவில் வந்தது. எவனோ ஒருவன், அவனைப் புலிக்குட்டி என்று எண்ணிக் குத்துச்சண்டைக் கையுறைகளை அவனிடம் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். புலிக்குட்டி வல்லவனைக் கொன்று விட முடிவு செய்திருந்ததால், விஷ ஊசி கொண்ட அந்தக் கையுறைகளை அவன் பெறுவதாக இருந்திருக்கலாம். அந்தக் கையுறைகள்தாம் மூன்லைட் ஓட்டலுக்குத் தற்செயலாக வந்திருந்த பெரியதம்பியிடம் வந்து சேர்ந்தன! இதன் விளைவாக அவன் மீது கொலைக் குற்றமா? போலீஸாரிடம் புலிக்குட்டி ஏற்கனவே இறந்திருந்ததையும் நிலவள நம்பி அதை மறைத்துவிட்டு அவனைப் புலிக்குட்டியாக நடிக்கும்படி சொன்னதையும் போலீஸாரிடம் விளக்கிச் சொன்னால் என்ன? அவன் ஒரு முடிவுக்கு வருவதற்குள் மற்றொரு கொலையைப் பற்றிய விவரத்தை அவன் தெரிந்துகொள்ள மிகவும் விரும்பினான்.
“நீ சொன்ன இது உண்மையாகவே இருக்கட்டும் மற்றொரு கொலை என்ன?” என்றான் பெரியதம்பி.
வஞ்சிக்கொடி அமைதியுடன் சொன்னாள்: “அதைச் சொன்ன பிறகு நீங்கள் என் வழிக்கு வந்துவிடுவீர்கள்! ஆகையால் அதையும் சொல்லிவிடுகிறேன்! உண்மையில் குத்துச்சண்டை செய்ய இருந்த புலிக்குட்டியை நீங்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அவனுக்குப் பதில் நீங்கள் குத்துச்சண்டை செய்து பணத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்! வல்லவன் தோற்றுவிடுவான் என்று பணம் கட்டியவர்கள் உங்களுக்கு நிறையப் பணத்தைக் கொடுத்து புலிக்குட்டிக்குப் பதில் உங்களைச் சண்டை செய்யத் தூண்டி இருக்கிறார்கள். குத்துச்சண்டைக்கு முன்பே புலிக் குட்டியைக் கொன்றுவிட்ட நீங்கள் குத்துச்சண்டை முடிந்த அன்று, அவன் உடலை ஒரு காரில் வைத்து விபத்துக்குள்ளாக்கிவிட்டு நீங்கள் மறைந்துவிட்டீர்கள்! புலிக்குட்டி விபத்தில் இறந்துவிட்டான் என்று போலீஸார் எண்ணுவார்கள் என்று தவறான கணக்கைப் போட்டுவிட்டீர்கள்! கார் விபத்தில் புலிக்குட்டி இறக்கவில்லை. அதற்கு இருபத்து நான்கு மணி நேரத்துக்கு முன்பே சுட்டுக்கொல்லப்பட்டான் என்பதைப் பிணச் சோதனையில் போலீஸார் கண்டுபிடித்துவிட்டார்கள்!”
இதைக் கேட்டதும்தான் அவனுக்கு எவ்வளவு பெரிய ஆபத்தில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பது புரிந்தது! அவன் உண்மையிலேயே தப்பவேண்டுமென்றால், சாந்திதான் அவனுக்கு உதவவேண்டும். ஆனால், கன்னட நடிகை சாந்தி உயிருடன் இல்லை! ஆகையால் அவன் குற்றமற்றவன் என்பதை எப்படி எதைக்கொண்டு உறுதிப்படுத்த முடியும்?
மற்றொரு உண்மை நினைவில் வந்தது அவனுக்கு வஞ்சிக்கொடி சொன்னது அனைத்தும் உண்மை என்றால் வல்லவன் குத்துச்சண்டையில் இயற்கையாக அடிபட்டு இறக்கவில்லை. விஷ ஊசி பட்டத்தினால்தான் இறந்துவிட்டான் என்று செய்தி வந்திருக்காதா? அடுத்தபடியாக விபத்தில் இறந்த புலிக்குட்டியும் இயற்கையாக இறக்கவில்லை விபத்து நடப்பதற்கு முன் இருபத்துநான்கு மணி நேரத்துக்கு முன்பே கொல்லப்பட்டான் என்று செய்தி சொல்லாதா! போலீஸ் அதிகாரி கொடுத்த செய்திப் பத்திரிகையில் இவைகளெல்லாம் எதுவும் இல்லையே!
“வஞ்சிக்கொடி, நீ சொல்லுவது அனைத்தும் பொய், நீ சொல்லுவது உண்மையாக இருந்தால், இந்த இரண்டு கொலைகளைப் பற்றியும், பெரியதம்பியைப் போலீஸார் தேடுவது பற்றியும் செய்தி வந்திருக்கிறதா? அப்படி ஒன்றும் செய்தி வரவில்லையே!” என்றான் பெரியதம்பி
“விரைவு கொள்ளாதீர்கள். இந்தக் காலத்துப் போலீஸார் மிகவும் திறமைசாலிகள். குற்றவாளி பிடிபடும் வரையில் உண்மைகளைக் கண்டுபிடிக்காதவர்களைப் போல் நடிக்கிறார்கள்! நீங்கள் முத்தழகு என்று சொல்லி உங்களைக் காப்பாற்ற நான் வந்திருக்கிறேன். என் உதவியை நீங்கள் ஏற்றுக்கொண்டால் சரி. இல்லாவிட்டால் உங்களுக்கு மரணதண்டனை கிடைப்பது உறுதி!” என்றாள் வஞ்சிக்கொடி!
பெரியதம்பிக்கு இது ஒரு பக்கம் துன்பமாகவும், ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருந்தது!
“உண்மையில் நீ யார்? நிலவள நம்பி உன்னை அனுப்பி வைத்தாரா?” என்று கேட்டான் அவன்.
“நிலவளநம்பியை எனக்குத் தெரியவே தெரியாது!” என்றாள் வஞ்சிக்கொடி.
“நீ ஏன் எனக்கு உதவி செய்யவேண்டும்?” என்று கேட்டான் பெரியதம்பி.
“உங்கள் மீது உள்ள இரக்கத்தால் உங்களுக்கு நான் உதவி செய்ய வரவில்லை. எனக்குப் பணம் வேண்டும். பணத்தை நீங்கள் எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். உங்களை நான் காப்பாற்றிப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கிறேன். உங்கள் உயிர் தப்பவேண்டும் என்றால், பணம் இருக்கும் இடத்தைச் சொல்லுங்கள்!”
“பணமா? அது ஏது என்னிடம்? குத்துச்சண்டை போடுவதற்காகப் பெற்ற பத்தாயிரம் ரூபாயும் காரில் சிக்கிக் கிடந்து எரிந்து சாம்பலாகிவிட்டது என்று எண்ணுகிறேன். என்னிடம் ஒரு பைசாக்கூட இப்போது இல்லை!”
அவள் சிரித்தாள். அவள் சிரிப்பில் கேலி கலந்திருந்தது தான் சொன்னதை அவள் நம்பவில்லை என்பதை அந்தச் சிரிப்பு அவனுக்கு எடுத்துக்காட்டியது. அழகாக அவள் பற்களைக் காட்டிச் சிரித்தபோது பற்பசை விளம்பரம் செய்பவர்கள் பார்த்திருந்தால் அவளுக்கு ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்து அவளைப் படம் எடுத்திருப்பார்கள். பெரியதம்பிக்கு அவள் முகத்தில் ஒரு குத்து விட்டு அவள் பற்களை உதிர்க்க வேண்டும்போல் இருந்தது!
வஞ்சிக்கொடி சொன்னாள்: “உங்களிடம் பணம் இல்லையா? பணம் உங்கள் கையில் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதை எங்கே நீங்கள் மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்பதுதான் எனக்குத் தெரியவேண்டும். இல்லாவிட்டால் போலீஸ் அதிகாரியிடம் உங்களைப்பற்றி ஒரு சொல் சொன்னால் போதும், உங்களை உடனே அவர் கைது செய்து உங்களைச் சிறையினுள் உள்ள மருத்துவ விடுதிக்கு அனுப்பி வைத்துவிடுவார்? நீங்கள் முத்தழகு அல்லன் பெரியதம்பிதான் என்பதை நான் சொன்னால் போதும்!”
அவன் சற்று வியப்புடன் அவளைப் பார்த்தான். “என் பெயர் பெரியதம்பி என்று பல தடவைகள் சொல்லியும் போலீஸ் அதிகாரி நம்பவில்லை! இப்போது நீ சொன்னால் மட்டும் அவர் அதை நம்பிவிடுவாரா? அப்படிக் கைது செய்வதென்றால் நான்தான் பெரியதம்பி என்று சொன்னதும் அவர் என்னைக் கைது செய்திருக்க வேண்டாமா?” என்றான்.
“இங்கே நீங்கள் ஒரு தவறான கணக்கைப் போடுகிறீர்கள். நீங்கள்தான் பெரியதம்பி என்றாலும் சான்றுகள் அவ்வளவு இல்லை. விபத்துக்குள்ளான கார் முத்தழகின் கார், அடிபட்டுக் கிடக்கும் நீங்கள் முத்தழகு என்று அவர் எண்ணியிருக்கிறார்! உங்களுக்கு மூளையில் அடிபட்டதால் பெரியதம்பி என்று நீங்கள் உளறுவதாக எண்ணிக்கொண்டிருக்கிறார். நீங்கள் பெரியதம்பிதான் என்பதற்குச் சான்று கிடைத்தால் பிறகு அவர் ஒரு வினாடிகூடத் தாமதிக்கமாட்டார்!” என்றாள் வஞ்சிக்கொடி.
அப்போதுதான் அவனுக்கு போலீஸ் அதிகாரியிடம் அவன் பெரியதம்பி என்பதை உறுதிப்படுத்த சென்னை மிட்லண்ட் ஓட்டலில் அவனது பெட்டியை வைத்துவிட்டு வந்திருப்பதைப் பற்றிச் சொன்னது அவன் நினைவுக்கு வந்தது. அவர் இப்போது உண்மையைக் கண்டுபிடித்து விட்டிருப்பாரா?
இந்தக் கேள்வி அவனுக்கு எழுவதற்கும் அவன் இருந்த அந்த அறைக்குள் போலீஸ் அதிகாரி நுழைவதற்கும் மிகச் சரியாக இருந்தது!
ரேடியோவில் சென்னைப் போலீஸாருடன் தொடர்பு கொண்டு மிட்லண்ட் ஓட்டலில் பத்தாம் எண்ணுள்ள அறையைச் சோதனை போடச் சொல்லி, விடையுடன் வந்திருக்கும் அவர் இப்போது என்ன சொல்லப் போகிறார்?
பெரியதம்பின் உடல் மெல்ல நடுங்கியது!
போலீஸ் அதிகாரி சிறிது நேரம் அவனையும் வஞ்சிக் கொடியையும் மாறிமாறிப் பார்த்துவிட்டுச் சொன்னார். “நல்ல வேளையாக வஞ்சிக்கொடி வந்து, அடிபட்டுக்கிடக்கும் நீ முத்தழகு என்றாள். விபத்து நடந்த கார் முத்தழகின் கார் என்பதாலும், நீ முத்தழகுதான் என்று வஞ்சிக்கொடி சொன்னதாலும் எனக்கு வழக்கில் சற்றுப் பிடி கிடைத்தது. உனக்கு மூளை பாதிக்கப்பட்டிருப்பதால் உன் பெயர் பெரியதம்பி என்று நீ சொல்லுகிறாய். சென்னையில் உள்ள மிட்லண்ட் ஓட்டலில் பத்தாம் எண்ணுள்ள அறையைச் சோதித்துப் பார்த்த சென்னைப் போலீஸார், அங்கே ஒன்றையும் கண்டுபிடிக்க வில்லை? ‘பெரியதம்பி என்பவன் வந்து தங்கியது உண்மைதான், ஆனால் அவன் வந்த சில நாட்களிலேயே காலிசெய்துகொண்டு போய்விட்டான்’, என்று சென்னை போலீஸார் கூறினார்கள்! இனிமேலாவது உன் பெயர் முத்தழகு என்பதை நீ ஒப்புக்கொள்.”
பெரியதம்பி பேசவில்லை. அவனுக்கு சென்னையில் இருந்த அவன் பெட்டியைக் கிளப்பிச் சென்றது யார் என்று சிந்தனை ஓடியது!
14
பெரியதம்பி, தன் பெயர் முத்தழகுதான் என்று ஒப்புக் கொள்ளலாமா வேண்டாமா என்று சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான். அப்போது இருந்த சூழ்நிலையில், அவன் விரைந்து ஒரு முடிவுக்கு வரவேண்டியிருந்தது. அவன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான். போலீஸ் அதிகாரியிடம் அவன் சொன்னான்: “வஞ்சிக்கொடியைக் கண்டதும் என் நினைவு கள் தடுமாறத் தொடங்கிவிட்டன! என் பெயர் முத்தழகு தான் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது!”
போலீஸ் அதிகாரி மெல்லச் சிரித்தார். “நல்ல வேளையாக வஞ்சிக்கொடி வந்து சேர்ந்தாள்! இவள் வராவிட்டால் இன்னும்கூட நீ பெரியதம்பி என்பதுதான் உன் பெயர். சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில்தான் விபத்து நடந்தது. சாந்திதான் காரை ஓட்டிச் சென்றாள் என்றெல்லாம் ஒரே பிடிவாதமாக நீ பேசியிருப்பாய்” என்று சொன்னார் அவர்.
பெரியதம்பி பேசவில்லை.
போலீஸ் அதிகாரி சொன்னார்: “நீண்ட நேரம் உனக்குத் தொல்லை கொடுத்து உன்னை மீண்டும் குழப்ப நான் விரும்பவில்லை! டாக்டரிடம் பேசிவிட்டு நான் போகிறேன். டாக்டர் உன்னை விரைவில் குணப்படுத்தியதும், மீண்டும் நான் உன்னுடன் பேச வருகிறேன்.”
இப்படி அவர் சொல்லிவிட்டு வஞ்சிக்கொடியையும் பெரியதம்பியையும் இரண்டு மூன்று தடவைகள் மாறி மாறிப் பார்த்துவிட்டுப் போய்விட்டார்.
அவர் போனதும் வஞ்சிக்கொடி பெருமூச்சு ஒன்றை விட்டாள். அவள் பெரியதம்பியிடம் சொன்னாள்: “இந்த மனிதர் மிகக் கொடியவர். அவர் உங்களை அப்படியே இப்போது நம்பிவிட்டதாக எண்ணாதீர்கள். உங்கள் பெயர் முத்தழகு என்று நான் வந்து சொல்லாவிட்டால் இப்போது உங்களைப் பெரியதம்பி என்று முடிவுசெய்து உடனே கைது செய்து சிறைச்சாலைக்கு அனுப்பிவிடுவார். கைதிகளுக்குச் சிறையில் தனி மருத்துவ விடுதி இருக்கிறது தெரியுமா?”
வஞ்சிக்கொடி அவனை அச்சுறுத்துவதைப் போலிருந்தது அவள் இப்போது பேசியது! இது அவனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவன் அந்த அழகியை உற்றுப் பார்த்து விட்டுக் கேட்டான்: “அடுத்தபடியாக என்ன?”
“அடுத்த படியாக என்னென்பதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். உங்கள் பெயர் முத்தழகு அல்ல, நான் தவறாகச் சொல்லிவிட்டேன் என்று போலீஸ் அதிகாரியி டம் சொன்னால் போதும். அடுத்த விநாடி உங்கள் கைகளில் விலங்கு மாட்டப்படும்! கொலை செய்தவர்கள் அடிபட்டு மருத்துவ விடுதியில் கிடந்தாலும் இந்த ஊர் போலீஸார் விலங்கு போட்டுக் கட்டிலுடன் இணைத்து விடுவார்கள். என்னிடம் உண்மையைச் சொல்லிவிட்டு இந்த மருத்துவ விடுதியிலிருந்து நீங்கள் தப்பிப் போகலாம். இல்லாவிட்டால் நாளைக் காலையில் நான் வந்து உங்கள் பெயர் முத்தழகு இல்லை என்று உறுதிப்படுத்தி விடுவேன்” என்று சொன்னாள் வஞ்சிக்கொடி.
பெரியதம்பி சொன்னான் “என் மூளை கேடுற்றிருப்பதாக டாக்டரும் போலீஸ் அதிகாரியும் எண்ணுகிறார்கள். உண்மையிலேயே இனி என் மூளை கேடுற்றால் வியப்படைவதற்கில்லை! எனக்குத் தெரியாத ஓர் உண்மையை உன்னிடம் எப்படி நான் சொல்லமுடியும்?”
வஞ்சிக்கொடி சினத்துடன் எழுந்து கொண்டாள். “நீண்ட நேரம் உங்களிடம் உட்கார்ந்து என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. நாளைக் காலையில் நான் வரும்போது, பணத்தை நீங்கள் எங்கே மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்ற உண்மையை என்னிடம் நீங்கள் சொல்லவேண்டும். இல்லாவிட்டால் உங்களைப் பற்றிய உண்மையை நான் உறுதிப்படுத்திவிடுவேன். நான் நினைத்தால் உங்களை இந்த மருத்துவ விடுதியிலிருந்து என்னுடன் அழைத்துச் செல்லமுடியும். போலீஸ் அதிகாரி உங்களைக் கவனிக்க இப்போது ஒரு கான்ஸ்டபிளைக் காவலுக்குப் போட்டிருக்கிறார்.”
அவள் சொன்ன இந்தப் புதிய செய்தி அவன் அச்சத்தை மிகுதியாக்கியது! அவன் அவளிடம் மீண்டும் ஏதோ கேள்விகள் கேட்க எண்ணினான். அதற்குள் அவள் வெளியே போய்விட்டாள்.
வஞ்சிக்கொடி வெளியே போனபோது, கதவைச் சற்றுப் பரக்கத் திறந்துவிட்டுச்சென்றாள், கதவு தானாகவே மூடிக்கொண்டது. கதவு திறந்து மூடியபோது அறையின் வெளியே –
ஒரு மனிதன் நின்றிருப்பது தெரிந்தது! அவன் உயரத்தையும் தோற்றத்தையும் பார்த்தபோது அவன் எளிய உடையில் வந்திருக்கும் கான்ஸ்டபிளாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான் அவன்! அப்படியானால் வஞ்சிக்கொடி சொன்னது மெய். போலீஸ் அதிகாரிக்கு அவன் மீது ஐயம் வந்துவிட்டது. அவனைக் கொலையாளி என்று எண்ணித்தான் பாதுகாப்புக்காக ஒருவனை அங்கே காவலுக்குப் போட்டுவிட்டார். மறுநாள் காலை விடிந்ததும் அவன் வஞ்சிக்கொடியிடம் பணம் இருக்கும் இடத்தைச் சொல்லியாகவேண்டும். உண்மையில் பணம் இருக்குமிடத்தைப் பற்றியோ, பணத்தைப் பற்றியோ எதுவும் அவனுக்குத் தெரியாது. ஆகையால் அவன் போலீஸ் அதிகாரியையும், வஞ்சிக்கொடியையும் ஏமாற்ற முடிவு செய்தான்!
15
அடிக்கடி எழுந்து உட்காருவதும், அவனைப் போட்டிருந்த அறையில் உலாவுவதுமாக இருந்தான் பெரியதம்பி. அவனால் நடமாட முடிந்தது. எப்படியாவது தப்பிப் போய்விட வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் துணிவைக் கொடுத்துக் கொண்டே இருந்தது. அவன் அடிக்கடி எழுந்திருப்பதும் உட்காருவதுமாக இருந்ததைக் கண்ட நர்ஸ் ஒரு தடவை சொன்னாள். “நீங்கள் இதற்குள் இப்படி அடிக்கடி எழுந்திருப்பதை டாக்டர் விரும்பமாட்டார். டாக்டர் பார்த்தால் எங்களைத்தான் கண்டிப்பார்!”
பெரியதம்பி சிரித்தபடி சொன்னான்: “இத்தனை நாட்கள் படுத்துக்கிடந்த எனக்கு எப்படியோ இருக்கிறது. அதனால்தான் நான் எழுந்து நடந்து பார்த்தேன்!”
“டாக்டர் வரும்போது எழுந்து நடக்காதீர்கள்” என்று சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்.
அவன் போனதும், பெரியதம்பி மெல்ல எழுந்து சென்று கதவின் இடுக்கின் வழியாகப் பார்த்தான். அவன் இருந்த அறைக்குக் காவலாக நின்றிருந்த மனிதன், சுவர் ஓரமாக எதிர்ப்பக்கம் நின்றுகொண்டு, ஏதோ சிந்தனையுள் ஆழ்ந்திருந்தான். அவனைப் பார்த்தான் பெரியதம்பி.
அவன் இருந்த அறைக்குள் சுவரில் பதிக்கப்பட்ட நிலப்பேழை ஒன்று இருந்தது. அதன் சாவி பூட்டிலேயே தொங்கிக் கொண்டிருந்தது. பெரியதம்பி நிலப்பேழையைத் திறந்து பார்த்தான். அதில் அவனுடைய உடைகள் சலவை செய்யப்பட்டு இருந்தன. ஒரு கால் சட்டையும் ஒரு சட்டையுமே இருந்தன. பக்கத்தில் ஒரு சோடி ஷூக்கள் கிடந்தன. காலுறைகள் இரண்டும் பக்கத்தில் இருந்தன அவன் இப்போது அணிந்திருந்த உடை மருத்துவ விடுதியில் தரப்படும் வெள்ளை உடை. அவன் விபத்துக்குள்ளானபோது அணிந்திருந்து உடையை நர்ஸ் சலவைக்குப் போட்டுக் கொண்டுவந்து வைத்திருந்தாள். அவன் அந்த நிலப்பேழையை மூடிவிட்டுக் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டான்.
இருள் வந்தது. மருத்துவவிடுதியில் விளக்குகள் எரிந்தன. வெளியே நின்றிருந்த மனிதன் அந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவனுக்குப் பதில் வேறு ஒரு மனிதன் வந்தான். இவன் வந்ததும் பகலில் இருந்த அந்த மனிதன் போய்விட்டான். இரவுப் பாதுகாப்புக்கு மற்றொரு மனிதன் வந்துவிட்டான்.
அவனை வந்து பார்க்கவேண்டிய பெரிய டாக்டர்களும் குட்டி டாக்டர்களும் அவனைப் பார்த்துவிட்டுப் போய் விட்டார்கள்.
நர்ஸ் வந்து அவனுக்கு ஒரு குவளையில் பால் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போய்விட்டாள். மீண்டும் அவளோ, டாக்டரோ வரமாட்டார்கள். அவன் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த பொத்தானை அமுக்கினால்தான் நர்ஸ் வருவாள். ஆகையால் அவன் தன் திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கினான்.
அவன் தனது உடைகளை எடுத்துக்கொண்டு மருத்துவ விடுதியின் உடைகளைக் கழற்றி வைத்தான். ஷூக்களை அணிந்துகொண்டான். ஷூக்களில் ஒன்று சற்று இருக்கமாக இருந்தது. அதைச் சரியாகப் போடவில்லை என்று எண்ணிக்கொண்டான். ரப்பர் ஷூக்கள் என்பதால் அவன் நடந்தபோது ஓசை எழும்பவில்லை. அவன் எழுந்து நடந்த போது ஓசை எழும்பவில்லை. அவன் எழுந்து நடந்து விளக்கை அணைத்தான். அந்த அறையில் மற்றொரு விளக்கு மங்கிய வெளிச்சத்துடன் நீலநிறமாக எரிந்து கொண்டிருந்தது. தூங்கும்போது இரவு முழுவதும் அது எரிவது வழக்கம். அதை அவன் அணைக்கவில்லை. பெரிய விளக்கின் பல்பைக் கழற்றிவிட்டான். அந்த அறையில் இங்கும் அங்கும் தேடி ஒரு மெல்லிய கம்பியை எடுத்தான். சன்னலுக்கு வலைபோல் போடப்பட்டிருந்த கம்பியிலிருந்து ஒரு துண்டுக்கம்பியை அறுத்து எடுத்தான். அதைப் பல்பின் நுனியில் சுற்றிவிட்டு, கட்டிலின் மீது நின்று கொண்டு, மீண்டும் பல்பை விளக்கின் ஹோல்டரில் பொருத்தினான். சுவிட்டைப் போட்டான். மறுவிநாடி –
புஸ்ஸென்று ஓர் ஓசை வந்தது. மருத்துவ விடுதி முழுவதும் விளக்குகள் அணைந்துவிட்டன.
பெரியதம்பி வெளியே ஓடினான்! இருளில் அவன் ஏற்கெனவே பார்த்து வைத்திருந்த வழியாக ஓடி, தோட்டத்தின் பக்கம் விரைந்து, ஒளிந்து ஒளிந்து மருத்துவ விடுதியின் புறக்கடைப் பக்கம் ஓடினான்! ஓடினான்!
அவனைப் பார்த்துக்கொள்ள மருத்துவ விடுதியில் இருந்த கான்ஸ்டபிள், அவன் வெளியே போனதை உணராமல் விளக்கு வராதா என்று எண்ணியபடி உட்கார்ந்திருந்தான்.
பெரியதம்பிக்கு உடல் அச்சத்தால் வேர்த்தது, தலை வெடித்துவிடும் போல் இருந்தது. உடல் சோர்ந்தது. எங்கே பிடிபட்டு விடுவோமோ என்ற அச்சத்துடன் அவன் ஓடிக்கொண்டே இருந்தான். நீண்ட தொலைவு ஓடி வந்ததும் இனிமேல் அவனை எவரும் பிடிக்கமாட்டார்கள் என்று உணர்ந்துகொண்டு சற்று மெல்ல நடக்கத் தொடங்கினான்.
தொலைவிலே ஒரு பெரிய தோப்புத்தெரிந்தது. அந்தத் தோப்பின் நடுவில் ஒரு வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த வீட்டிற்குச் சென்று, இரவுப் பொழுதைக் கழிக்க அடைக்கலம் கேட்கலாம் என்று அவன் முடிவு செய்தான்.
தனி வீடு அது. தோட்டத்துக்குக் காவலாக எவரோ ஒரு சிறிய வீட்டைக் கட்டிக் கொண்டிருப்பதைப்போல் இருந்தது. அந்த வீட்டின் கதவைப் போய்த் தட்டினான் பெரியதம்பி.
பல தடவைகள் கதவைத் தட்டியதும், ஒரு வயதான கிழவி வந்து கதவைத் திறந்தாள்: அவன் கையில் ஒரு மின் பொறி விளக்கு இருந்தது. அதை அடித்து அவன் முகத்தைப் பார்த்த அந்தக் கிழவி, சிறிது அச்சத்துடன் பார்த்தாள். அவன் தலையில் கட்டப்பட்டிருந்த பெரிய கட்டைக் கண்டதும், “யாரப்பா நீ? தலையில் என்ன இவ்வளவு பெரிய கட்டு!” என்றாள்.
அவன் கிழவியின் கையிலிருந்த மின்பொறி விளக்கை வாங்கி அணைத்துவிட்டு உள்ளே சென்றான்.
“யார் நீ?” என்று அதட்டினாள் அந்தக் கிழவி.
“கூச்சல் போடாதீர்கள். இன்று இரவு மட்டும் இங்கு தங்கிவிட்டு நான் போய்விடுகிறேன். மருத்துவ விடுதியிலிருந்து நான் தப்பி வந்துவிட்டேன். டாக்டர்கள் என் மூளை அடிபட்டிருப்பதாகக் கூறி நாளை ஆப்ரேஷன் செய்யப் போவதாக இருந்தது! ஆப்ரேஷன் நடந்தால். நான் பிழைப்பது அரிது!” என்றான் பெரியதம்பி.
கிழவி அவனை ஏற இறங்க ஒரு தடவை பார்த்தாள்: அவள் மீது அவனுக்கு இப்போது நம்பிக்கை பிறந்தது!
”இந்தக் காலத்து டாக்டர்களுக்கு என்ன தெரியும்? எதற்கு எடுத்தாலும் ஆப்ரேஷன் செய்கிறார்கள்! இன்று இரவு நீ இங்கேயே தங்கியிரு. நான் மட்டும்தான் இங்கு இருக்கிறேன்” என்றாள் அவள்.
“நன்றி” என்றான் பெரியதம்பி.
கிழவி அவனைத் தூங்கச் செய்துவிட்டு போலீஸுக்குப் போன் செய்து விடுவாளோ என்று அஞ்சினான் அவன். ஆகையால், அவன் நீண்ட நேரம் அவளிடம் பேச்சுக் கொடுத்தபடி இருந்தான். அவன் ஒரு கார் விபத்தில் சிக்கி அடிபட்டதாகவும், அதனால் அவன் மூளை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று நம்பிய டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்ய முடிவு செய்ததாகவும். அந்த ஆப்ரேஷன் மிகவும் ஆபத்தானது என்றும் சொன்னான். தனக்கு உற்றார் உறவினர்கள் எவரும் இல்லை என்றும், அந்தக் கிழவிதான் அவனை காப்பாற்ற வேண்டும் என்றும் அவன் சொன்னான்.
கிழவிக்கு அவன்மீது இரக்கம் ஏற்பட்டுவிட்டது. அவனைத் தூங்கும்படி சொல்லிவிட்டு அவள் படுக்கப் போய் விட்டாள்.
ஷூக்களைக் கழற்றிய பெரியதம்பி இறுக்கமாக இருந்த ஷூவை விளக்கின் வெளிச்சத்தில் சோதித்துப் பார்த்தான். அந்த ஷூவின் உள்ளே ஏதோ அடைத்துக் கொண்டிருந்தது. அவன் விரல்களைவிட்டு, உள்ளே அடைத்திருந்த அந்தப் பொருளை வெளியே எடுத்தான்.
காற்றுப் புகாத பிளாஸ்டிக் கவர் ஒன்று அவன் கையில் இப்போது இருந்தது. அதை அவன் உடைத்துப் பார்த்தான். உள்ளேயிருந்த காகிதம் ஒன்று எட்டாக மடிக்கப்பட்டிருந்தது. என்ன அது என்று புரியாமல் அதைப் பிரித்துப் பார்த்தான். அதில் ஏதோ ஓர் இடத்துக்குப் போகும் வழி பென்ஸிலால் வரையப்பட்டிருந்தது. அந்த இடம் என்ன என்பதும் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
– தொடரும்
– பெயர் இல்லாத தெரு, முதற் பதிப்பு: 1966, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.