கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: புனைவு
கதைப்பதிவு: September 8, 2021
பார்வையிட்டோர்: 22,567 
 
 

அத்தியாயம்:௩ | அத்தியாயம்: ௪ | அத்தியாயம்: ௫

வஞ்சகன் பிடிபட்டான்

அதே வழியிலேயே வெகு நாட்களாகப் பயணித்துக் கொண்டிருந்தோம். நான் உடைந்த கோணமாணியை வைத்து எங்கள் இடத்தை அறிய முயற்சி செய்து கொண்டிருந்தேன். அது கொடுக்கும் முடிவுகள் நம்பத் தகுந்ததாக எப்போதும் இருந்ததில்லை. உறுதியாக நாங்கள் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிந்தாலும் அது மேற்கு நோக்கியே காட்டிக் கொண்டிருந்தது. நான் அதை நொந்து கொண்டிருந்தேன். பின் ஒரு நாள் மத்தியானம் அந்தப் பெண் வந்தாள்.

“மன்னிக்கவும்.” என்று சொன்னவள் “நானாக இருந்தால் இந்த பென்சன் மேல் ஒரு கண் வைத்திருப்பேன். அதுவும் அவன் பணி முறை வரும்போது.” என்றாள். என்ன சொல்ல வருகிறாய் என்று கேட்டேன். வான் ஸ்சோன்வர்ட்ஸின் தூண்டுதலால் நான் பெரிதும் நம்பும் ஒருவனைச் சந்தேகிக்கிறாளோ என்று தோன்றியது.

பென்சன் பணி செய்ய ஆரம்பித்த அரை மணி நேரத்தில் கப்பல் செல்லும் திசையை கவனித்தால் உங்களுக்கே நான் சொல்ல வந்தது புரியும். அவன் ஏன் எப்போதும் இரவு நேரப் பணியை மட்டுமே தேர்ந்தெடுக்கிறான் என்பதும் உங்களுக்கு புரியும். மேலும் கப்பலில் நடந்த வேறு விஷயங்களுக்கான காரணங்களும் உங்களுக்குத் தெரிய வரலாம்.” என்றாள்.

அதன் பின் அவள் தன் அறைக்குச் சென்று விட்டாள் எங்கள் உரையாடலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டு. பென்சன் தன் வேலையை ஆரம்பித்த அரை மணி நேரம் வரை நான் பொறுமையாகக் காத்திருந்தேன். அதன் பின் மேல் தளத்தை அடைந்தேன். முறை கோபுரத்தைக் கடந்து செல்லும் போது அவன் திசைகாட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது வடக்கில் சிறிது மேற்குப் பக்கம் வளைந்து காட்டியது. வடக்கில் இருந்து ஒரு புள்ளி மேற்கு நோக்கிக் காட்டியது. அதுதான் நாங்கள் செல்ல வேண்டிய வழி. சரியாகத்தான் இருந்தது. தவறுதலாக ஏதும் இல்லை என்று பார்த்ததும் எனக்கு பெரும் நிம்மதியாக இருந்தது. ஆனால் அவள் சொன்னதை எண்ணி மிகவும் கவலைப் பட்டிருந்தேன். நான் என் அறைக்குச் செல்ல எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு சிறிய சிந்தனை என் மனதில் தோன்றியது. அதனால் என் எண்ணத்தை மாற்ற எத்தணிக்கும் அந்த வேளை என்னை மரணப் படுக்கைக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று விட்டது.

முறை கோபுரத்தில் இருந்து கிளம்பிய அரை மணி நேரத்தில் கடல் நீர் கப்பலின் முன் புறத்தின் இடது பாகத்தில் விழுந்து நொறுங்கியது. அதே போல் வலது பக்கமும் கடல் இவ்வளவு பெரிதாக வந்து மோதுவதற்கு வாய்ப்பே இல்லை. காற்று சட்டென்று தடம் மாறும். அதற்காக இப்படி நீளமாக கனமாகவா. இதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும். நான் கோபுரத்தில் இருந்து திரும்பியதும் கப்பல் 8 புள்ளிகளாவது திருப்பப் பட்டிருக்க வேண்டும். நான் உடனே திரும்பி கோபுரத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். ஆகாயத்தைப் பார்த்த மறு நொடியே எனக்குப் புரிந்து விட்டது. எனக்கு நேராக இருக்க வேண்டிய விண் மீன்கள் எல்லாம் வலது பக்கம் இருந்தன. நாங்கள் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

ஒரு கணம் அங்கு நான் நின்று கொண்டிருந்தேன் எனது கணக்கு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக. பென்சனைக் குற்றவாளி என்று சொல்வதற்கு முன் நாம் சொல்வது மிகச் சரியாக இருக்க வேண்டும். ஆனால் இறுதியாக நான் உறுதி செய்ய நினைத்தது எனது மரணம்தான் என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் அதிலிருந்து எப்படித் தப்பித்தேன் என்று இன்னும் எனக்கு விளங்கவில்லை. முறை கோபுரத்தின் விளிம்பில் நான் நின்று கொண்டிருக்கும் போது ஒரு கனமான கை தோள்பட்டையில் அழுத்தி என்னை உள்ளே தள்ளியது. கோபுரத்தைத் தாண்டிய முக்கோண வடிவிலான அந்த மேல் தளத்தில் விழுந்த நான் எளிதாக என் கால்களை உடைத்திருப்பேன். இல்லையேல் வழுக்கிக் கடலில் விழுந்திருப்பேன். ஆனால் விதி என் பக்கமிருந்தது. எனக்கு லேசான சிராய்ப்புதான். நான் எழுந்து நிற்கும் போது கோபுரத்தின் கதவு அறைந்து சாத்தப்பட்டது. தளத்தில் இருந்து கோபுரத்திற்கு ஒரு ஏணி இருந்தது. அதில் ஏறி வேக வேகமாக கோபுரத்தை நோக்கி வந்தேன். ஆனால் பென்சன் அதற்கு முன் கதவை அழுத்தமாகப் பூட்டி விட்டான்.

ஒரு கணம் முட்டாளைப் போல பீதியில் உறைந்து நின்றேன். அவன் ஏன் அப்படிச் செய்தான். கீழே என்ன நடந்து கொண்டிருக்கிறது. பென்சன் ஒரு துரோகி என்றால் வேறு சிலரும் அவனுடன் இருக்கக் கூடும். அவர்களை இதுவரை அறியாமல் எப்படி நான் இருந்தேன். என் தவறுக்காக என்னையே நான் கடிந்து கொண்டேன். மேல் தளத்திற்குத் தனியாக வந்து மாட்டிக் கொண்டதற்காக. பின் இந்த சிந்தனை மற்றோரு பயங்கரமான கேள்வி எழுப்பியது. உண்மையில் இதற்குப் பின்னால் இருப்பவன் யார்.

கலத்திற்குள் இருப்பவர்களின் கவனத்தைப் பெறுவதற்கு ஏணியில் இருந்து வேகமாக இறங்கி வந்தேன். கோபுரத்தின் இரும்புச் சாளரத்தின் கதவுகளும் இழுத்து மூடப்பட்டிருந்தன. இப்படி ஒரு முட்டாள் போல் வந்து தேடியதை எண்ணி என்னை நானே சபித்துக் கொண்டு அப்படியே கோபுரத்தின் மீது முதுகை வைத்துச் சாய்ந்து கொண்டேன்.

நான் கப்பலின் முன் புறத்தைப் பார்த்தேன். கடல் கனமாகிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு அலையும் கீழ் தளத்தை முழுவதும் நனைத்தது. ஒரு கணம் அதை நான் பார்த்தேன். பின் என் உடல் முழுவதும் திடீரென்று குளிரால் நடுங்கியது. என் நனைந்த உடைகளோ என் முகத்தில் அறையும் அலைகளோ அதற்குக் காரணம் அல்ல. மரணத்தின் பிடி என் இதயத்தை இறுக்கியதால் ஏற்பட்ட நடுக்கம் அது. அந்த ஒரு நொடியில் வாழ்க்கைப் பாதையின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கடவுளை மிக அருகில் கண்டது போல் இருந்தது. ஆம் கப்பல் மெதுவாக மூழ்கடிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.

அப்போது தோன்றிய என் எண்ணங்களை எழுத்தில் வடிப்பது நிச்சயம் கடினம். கிட்டத்தட்ட முடியாது என்றும் சொல்லலாம். ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயம் நினைவில் இருந்தது. நான் அப்போது சிரிக்க ஆரம்பித்தேன். பைத்தியம் பிடிக்கவில்லை. சாதித்த வீரனாகவும் எண்ணிக் கொள்ளவில்லை. எனக்குப் புகைக்க வேண்டும் போல் தோன்றியது. கடவுளே. நான் எப்படிப் புகைக்க நினைத்தேன். அந்தக் கேள்வியே அபத்தமாய்த் தோன்றியது.

நான் நின்றிருந்த அந்தச் சிறிய மேடை முழுகியபோது நான் கவனித்துக் கொண்டிருந்தேன். உடனே நான் திரும்பவும் கோபுரத்தில் ஏற முயற்சி செய்தேன். மிக மெதுவாக மூழ்குவதை பார்க்கும் போது பென்சன் இதைத் தனியாகவே செய்வது போல் தோன்றுகிறது. தொட்டியில் நீர் தானாக நிறைக்க விட்டுள்ளான். சுக்கான்களைப் பயன்படுத்தவில்லை. கப்பல் இயந்திரத்தின் துடிப்பு நின்று மின் இயக்கியின் சீரான அதிர்வு ஆரம்பித்தது. முறை கோபுரத்தைப் பாதியளவு தண்ணீர் மூழ்கடித்து விட்டது. எனக்கு இன்னும் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். நீர் என்னை இழுத்துச் செல்லும் போது என்ன செய்ய வேண்டும் என்று எண்ணிப் பார்க்க ஆரம்பித்தேன். என் உடலின் ஆற்றல் தீரும் வரை நீந்திக் கொண்டே இருப்பதா. இல்லையேல் மூழ்கடித்தவுடனே விட்டுக் கொடுத்து என் வேதனையை நீக்கி விடுவதா.

கீழிருந்து மழுங்கடிக்கப்பட்ட இரண்டு சத்தங்கள் கேட்டது. துப்பாக்கி வெடிக்கும் சப்தங்கள் போல் அவை இருந்தன. பென்சனை யாரும் எதிர்த்து நிற்கிறார்களோ? இருந்தாலும் அதனால் எனக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை. எதிரியை என் அணியினர் வீழ்த்தி விட்டாலும் என் கதி அவர்களுக்குத் தெரிவதற்குள் நான் உயிரோடு இருக்க மாட்டேன். கோபுரத்தின் நுனியும் இப்போது மூழ்கி விட்டது. பின் தந்திக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டேன். அப்போது ஏற்பட்ட பேரலை என்னை முழுவதும் மூழ்கடித்தது.

முடிவு நெருங்கி விட்டதென்று உறுதியாகத் தெரிந்து விட்டது. அப்போது அனிச்சையாய் நான் ஒரு காரியம் செய்தேன். சிறு வயது முதல் செய்யாத ஒரு காரியம். கடவுளைக் கும்பிட ஆரம்பித்தேன். அதன் பின் கொஞ்சம் ஆசுவாசமானேன்.

நான் அதைக் கட்டியபடியே இருந்தேன். இப்போது நீர் அதற்கு மேல் செல்லவில்லை.

அதற்கு மாறாக விலகிச் சென்றது. கோபுர உச்சி இப்போது பெரிய அலையின் உச்சி கூடத் தொட முடியாத உயரம் சென்றது. கப்பலின் முக்கோண மேடை தெரிய ஆரம்பித்தது. உள்ளே என்னதான் நடந்தது. என் கதை முடிந்தது என்று பென்சன் அதற்குள் நினைத்து விட்டானா? இல்லை. அவனையும் அவனது கூட்டாளிகளையும் எங்கள் ஆட்கள் பிடித்து விட்டனரா? கடலில் கரையக் காத்திருக்கும்போது நான் அனுபவித்ததை விட இந்த மர்மம் என்னை மிகவும் அரித்தது. முதலில் கப்பலின் முக்கிய தளம் தெரிந்தது. அதன் பின் கோபுர வாசல் திறந்தது. அங்கே ப்ராட்லியின் முகமும் அந்தப் பெண்ணின் முகமும் தெரிந்தது. என்னைப் பார்த்ததும் அவன் முகத்தில் நிம்மதி படர்ந்தது.

“கடவுளுக்கு நன்றி சொல். மகனே.” என்று சொல்லிக் கொண்டே என்னை இழுத்து உள்ளே போட்டான். என் உடல் முழுவதும் குளிர்ச்சி அடைந்து மரத்துப் போய் இருந்தது. உள்ளே வந்ததே பெரிய சந்தோசமாய் இருந்தது. இன்னும் சில மணித்துளிகளில் என் வாழ்வு முடிந்திருக்கும். உள்ளே வந்தவுடன் அந்தக் கதகதப்பில் என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தேன். ப்ராட்லி கொடுத்த பிராந்தி என் தொண்டையில் இறங்கி உடம்பைச் சூடாக்கியது. அந்த பிராந்தி ஒரு சடலத்தையே உயிர்ப்பித்து இருக்கும்.

மைய வழியில் இறங்கிக் கீழே சென்ற போது ஜெர்மானியர்கள் எல்லாம் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் அணியின் இருவர் கைகளில் துப்பாக்கியோடு நின்றிருந்தார்கள். வான் ஸ்சோன்வர்ட்ஸும் அதில் இருந்தான். பென்சன் கீழே விழுந்து கிடந்தான் முனகிக் கொண்டு. அவன் அருகில் அந்தப் பெண் கையில் துப்பாக்கியோடு நின்று கொண்டிருந்தாள். நான் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இங்கே என்ன நடந்தது. சொல்.” என்று கேட்டேன்.

ப்ராட்லி அதற்கு பதில் அளித்தான். “நாடகத்தின் முடிவை நீங்களே பார்க்கிறீர்கள் சார்.” என்றான். “செல்வி லா ர்யூ இல்லாவிட்டால் இது வேறு மாதிரி இருந்திருக்கும். நாங்கள் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தோம். பென்சன் சாயந்திரம் சீக்கிரமே பணிக்கு வந்து விட்டான். அவனைக் கண்காணிக்க யாரும் இல்லை செல்வி லா ர்யூவைத் தவிர. அவள் கப்பல் மூழ்குவதை உணர்ந்து அதன் காரணத்தைத் தெரிந்து கொள்ள அறையில் இருந்து வெளியே வந்தாள். பென்சன் தொட்டியில் நீர் விடும் சுக்கான்களுக்கு அருகில் இருக்கும் நேரத்தில் சரியாக அவனைப் பார்த்தாள். அவளைப் பார்த்ததும் அவன் துப்பாக்கியை எடுத்து நேரடியாகச் சுட்டான். அவன் குறி தப்பியது. ஆனால் அவள் சுடும்போது தப்பவில்லை. அந்த இரண்டு குண்டு சத்தங்கள் எல்லோரையும் எழுப்பி விட்டன. நமது ஆட்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் முடிவு இதோ உங்களுக்கே தெரிந்ததுதான். செல்வி லா ர்யூ இல்லாவிட்டால் எல்லாம் தலை கீழாக மாறி இருக்கும். அவள்தான் நீர்த் தொட்டியை மூடி விட்டு ஓல்சனையும் என்னையும் எழுப்பி எக்கியை ஓட்டி விட்டுத் தொட்டியைக் காலி செய்ய வைத்தாள். ”

அவளது சூழ்ச்சியினால்தான் நான் மேல் தளத்திற்குச் சென்று என் விதியைத் தேடிக் கொண்டதாக அல்லவா நினைத்திருந்தேன். நான் அவள் முன் மண்டியிட்டு என்னை மன்னித்து விடு என்று கெஞ்சி இருப்பேன் நான் ஒரு ஆங்கிலேயனாக இல்லாமல் இருந்திருந்தால். அப்படி இல்லை என்பதால் என் நனைந்த தொப்பியைக் கழற்றித் தலையைக் குனிந்து பாராட்டுக்களை முணுமுணுத்தேன். அவள் ஒன்றுமே சொல்லாமல் அவள் அறைக்கு வேகமாகச் சென்று விட்டாள். நான் கேட்டது சரியானதுதானா? அந்த யூ 33 – இன் குறுகிய பாதையில் தவழ்ந்து வந்து என் காதுகளில் விழுந்தது விசும்பல் சத்தம்தானா?

பென்சன் அன்றிரவு இறந்து விட்டான். அவன் இறுதி வரை அழுத்தமாகவே இருந்தான். ஆனால் இறப்பதற்குச் சற்று முன் என்னிடம் எதோ சொல்ல வேண்டும் என்பது போல் சைகை செய்தான். நான் குனிந்து அவன் மெதுவாகக் கிசுகிசுத்த வார்த்தைகளைக் கேட்டேன்.

“நான் தனியாகத்தான் செய்தேன்.” என்று ஆரம்பித்தான். “எனக்கு உன்னைப் பிடிக்காது. அதனால்தான் இதைச் செய்தேன். உங்கள் இனத்தையே நான் வெறுக்கிறேன். சாண்டா மாநகாவில் உள்ள உங்கள் கப்பல் கட்டும் துறையில் இருந்து என்னை விரட்டி விட்டார்கள். கலிஃபோர்னியாவில் இருந்தே என்னைத் தூக்கி விட்டார்கள். நான் ஒரு ஜெர்மன் ஒற்றனாக மாறினேன். எனக்கு அவர்களைப் பிடிக்கும் என்பதால் அல்ல. அவர்களையும் எனக்குப் பிடிக்காது. ஆனால் நான் அமெரிக்கர்களை அழிக்க நினைத்தேன். அவர்களைத்தான் அதிகம் வெறுக்கிறேன். தந்திக் கருவியைக் கடலில் தூக்கிப் போட்டேன். காலம் காட்டி கோணமாணி இரண்டையும் நான்தான் உடைத்தேன். திசை காட்டும் கருவியையும் என் ஆசைப்படி வளைக்க ஒரு திட்டம் தீட்டினேன். வான் ஸ்சோன்வர்ட்ஸை அந்தப் பெண் பார்த்துப் பேசியதாக வில்சனிடம் சொன்னேன். அவனே அதைப் பார்த்ததாக அந்த மடையனையும் நம்ப வைத்தேன். என் திட்டங்கள் எல்லாம் தோல்வி அடைந்து விட்டன. இருந்தாலும் உன்னை நான் வெறுக்கிறேன்.”

அதன் பின்னும் அரை மணி நேரம் வரை அவன் சாகவில்லை. அதன் பின் அவன் பேசவும் இல்லை, சத்தமாக. அவனைப் படைத்தவனைச் சந்திக்கச் செல்வதற்குச் சில வினாடிகளுக்கு முன் அவன் உதடுகள் அசைந்தன. மெலிதான முனகலில் சில வார்த்தைகள் விழுந்தன. “என்னை – உறங்க – விடுங்கள்.” அவ்வளவுதான். பென்சன் இறந்து விட்டான். அவனைத் தூக்கிக் கடலில் போட்டு விட்டோம்.

புதிய நிலம்

அன்றைய இரவின் காற்று மிக மோசமான வானிலையை அறிவித்தது. கார் மேகங்கள் சூழ்ந்தது. வெகு நாட்களாக அவைகள் போகவே இல்லை. நாங்கள் எந்தப் பாதையில் பயணிக்கிறோம் என்பது தெரியவில்லை. திசைகாட்டியை முழுவதும் நம்ப முடியாமல் போனதால் எப்படிக் கண்டுபிடிப்பதென்றே தெரியவில்லை. பென்சன் அதில் என்ன செய்தான் என்றும் தெரியவில்லை. அதனால் அடுத்துக் கதிரவன் எழும் வரை எங்காவது ஊர்ந்து செல்வதென்று முடிவெடுத்தோம். அந்த நாளையும் அது கொடுத்த ஆச்சர்யங்களையும் என்றும் மறக்க முடியாது. பெருவின் கடற்கரையின் அருகில் இருப்பதாகக் கணக்கிட்டோம் இல்லை உத்தேசமாக எண்ணினோம். கிழக்கில் இருந்து வந்த காற்று திடீரென்று திசை மாறித் தெற்கு நோக்கி வீசியது. அப்போது முகத்தில் குளிர்ந்த காற்று அறைந்தது.

“பெரு” என்று கத்தினான் ஓல்சன். “பெருவில் எப்போது நீ பனிமலையை முகர்ந்திருக்கிறாய்?”

“பனிமலையா? அப்படி ஒன்றும் இங்கு தெரியவில்லையே” என்று ஒருவன் சொன்னான். “ஏன். வடக்கில் பதினான்கு புள்ளிகளில் இந்தக் கடலிலா?” என்று அதிசயித்தான்.

“அப்படி என்றால் நாம் தெற்கில் பதினான்கில் இருக்கலாம்.” என்றான் ஓல்சன்.

அவன் அதிகப்படியாகப் பேசுகிறான் என்று நினைத்தோம். ஆனால் அப்படித் தெரியவில்லை. அன்று மத்தியானம் தெற்கில் ஒரு பெரிய பனிமலையைப் பார்த்தோம். சில நாட்கள் வடக்கு நோக்கியே சென்று கொண்டிருப்பதாக நாங்கள் நினைத்தோம். ஆனால் ஏமாந்துதான் போனோம். மறுநாள் காலை ஒரு மெலிதான இன்ப அதிர்ச்சி கிடைத்தது. “நிலம் தெரிகிறது. வட மேற்கில் இருந்து வடக்கிற்குள்” என்று கோபுரத்தில் இருந்த திறந்திருந்த மைய வாயில் வழியாக.

நிலத்தைப் பார்க்க வேண்டும் என்றுதான் எல்லோரும் தவம் இருந்தோம். உறுதியாக நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால் கப்பலில் இருந்த மூன்று ஜெர்மானியர்கள் திடீரென்று உடல் நலமில்லாமல் ஆனவுடன் அந்த மகிழ்ச்சியும் உடனே கரைந்து விட்டது. கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மூவரும் வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். என்ன நடந்ததென்று அவர்களுக்கும் தெரியவில்லை. அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்று நான் கேட்டேன். எல்லோருக்கும் சமைக்கப்பட்ட உணவைத் தவிர எதுவும் இல்லை என்றார்கள். “எதாவது குடித்தீர்களா” என்று கேட்டேன். ஏனெனில் அங்கு மது புட்டிகள் இருந்தன சில மருந்துகளும் இருந்தன.

“தண்ணீர் மட்டும்தான்” என்று ஒருவன் முனகினான். “நாங்கள் மூவரும் இன்று காலை ஒரே நேரத்தில் தண்ணீர் குடித்தோம். புதிதாக ஒரு தொட்டியைத் திறந்தோம். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்”

நான் உடனே அதை ஆராய ஆரம்பித்தேன். அதைப் பார்த்ததும் திகிலான ஒரு உண்மை தெரிய ஆரம்பித்தது. யாரோ ஒருவன், பென்சனாக இருக்கலாம், கப்பலில் இருக்கும் அனைத்து நீரிலும் நஞ்சு கலந்திருக்கிறான். கரை வந்திருக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். கரையைப் பார்த்தவுடன் எங்களுக்கு நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது.

நாங்கள் பாதையைத் திருப்பினோம். செங்குத்தான குன்று போல் இருந்த அந்த நிலத்தை நோக்கி நாங்கள் வேகமாக சென்று கொண்டிருந்தோம். கப்பலின் இரு புறமும் பனி மூட்டத்திற்கு நடுவில் கடலுக்குள் இருந்து எழும்பிய செங்குத்தான பாறைகள் தோன்றி மறைந்தன. எங்களுக்கு முன் தெரிகின்ற இந்த நிலம் ஒரு பெரிய கண்டமாக இருக்க வேண்டும். அதனுடைய கரை அவ்வளவு பெரிதாக இருந்தது. அருகில் இருக்கும் மேற்கு நில பரப்பான ஆஸ்திரேலியா நியூஸிலாந்தில் இருந்து குறைந்த பட்சம் ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருப்போம் என்பது மட்டும் நிச்சயம்.

எங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டோம் உடைந்த கருவிகளையும் சேர்த்து. விளக்கப் படத்தில் தேடினோம். மண்டையைப் போட்டு உடைத்தோம். இறுதியாக ப்ராட்லி ஒரு யோசனை சொன்னான். கோபுரத்தில் இருந்து திசை காட்டும் கருவியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் என்னைக் கூப்பிட்டு அதைக் காட்டினான். அதன் முள் நேராக அந்த நிலப்பரப்பைக் காட்டியது. ப்ராட்லி சுக்கானை வலது புறமாகத் திருப்பினான். யூ-33 உடனே அதற்குக் கட்டுப்பட்டுத் திரும்பியது. ஆனால் திசை காட்டும் கருவி அப்படியே நேராக நின்றது.

“இதில் இருந்து என்ன தெரிகிறது” என்று கேட்டேன்.

“கேப்ரோனி பற்றி என்றாவது கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“பழைய இத்தாலிய மாலுமிதானே” என்றேன்.

“ஆம். அவரேதான். அவர் 1721 – ஆம் ஆண்டு கடல் பயணத்தை ஆரம்பித்தார். அவர் காலத்து வரலாற்று ஆசிரியர்கள் கூட அவரைப் பற்றி அதிகமாகக் குறிப்பிடவில்லை. அவர் இத்தாலிக்குத் திரும்பி வரும்போது அரசியல் சூழல் அவருக்குச் சாதகமாக இல்லாததால் இருந்திருக்கலாம். அவரது கண்டுபிடிப்பைக் கேலி செய்வது அந்தக் கால வழக்கமாய் இருந்தது. அவரது புத்தகம் ஒன்றை, ஒன்றே ஒன்றுதான் என்று நினைக்கிறேன், படிக்க நேர்ந்தது. தென் கடல்களில் அவர் ஒரு கண்டத்தைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். ஒரு வினோதமான உலோகத்தால் ஆன ஒரு கண்டம் திசை காட்டும் கருவியைப் பற்றி இழுக்கக் கூடியது. பாறைகளால் சூழ்ந்த யாரும் வசிக்க முடியாத துறை முகமோ கடற்கரையோ இல்லாத ஒரு கண்டம். நூற்றுக்கணக்கான மைல் தொலைவு நீண்டது. அவரால் அங்கு கப்பலை நிறுத்தவே முடியவில்லை. அங்கிருந்த பல நாட்களில் ஒரு உயிரினத்தையும் அவர் பார்க்கவில்லை. அதை அவர் கேப்ரோனா என்று பெயர் வைத்து விட்டுக் கிளம்பி விட்டார். இப்போது நாம் பார்த்துக் கொண்டிருப்பது கேப்ரோனா கடற்கரை தான். இதுவரை யாரும் தொடாத 200 வருடங்கள் மறந்த ஒரு நிலம்.

“நீ சொல்வது சரி என்றால், இரண்டு நாட்களாக நமது திசைகாட்டி ஏன் அப்படி வேலை செய்தது என்பது புரிகிறது. கேப்ரோனாதான் நம்மை அதனுடைய மரணப் பாறைகளுக்கு இழுத்து வந்திருக்கிறது. நாம் அதனுடைய சவாலை ஏற்றுக் கொள்வோம். கேப்ரோனாவில் தரை இறங்குவோம். இவ்வளவு பெரிய கரையில் நமக்குத் தோதான இடம் கட்டாயம் இருக்கும். அதைக் கண்டுபிடிப்போம். அதே போல் நமக்கு நீரும் தேவை. தண்ணீரைக் கண்டுபிடிக்கவிட்டால் நாம் இறந்து விடுவோம்.”

அதனால் யாருமே இதுவரை கண்டிராத அந்தப் பெரு நிலப்பரப்பின் கரையை நோக்கி நாங்கள் சென்றோம். கடலின் ஆழத்தில் இருந்து செங்குத்தாக மலைகள் எழும்பி இருந்தன. பழுப்பு நீலம் பச்சை என்று பல வண்ணங்கள் சூழ்ந்திருந்தன. உலர்ந்த பாசிகள் செடிகள் தாமிரத்தின் துரு படர்ந்திருந்தன. எங்கு பார்த்தாலும் துருப் பிடித்த காவி நிறத்தில் இரும்பு கந்தகக்கற்கள் நிறைந்திருந்தன. அந்தப் பாறைகளின் நுனிகள் உடைந்து போய் இருந்தாலும் எல்லாம் ஒரே சம உயரத்தில் ஒரு சமவெளியின் எல்லைகள் போல் அமைந்திருந்தன. பாறைகளின் சரிவுகளில் அவ்வப்போது பசுமையான தாவரங்களையும் கண்டோம். அதையெல்லாம் காணும்போது கேப்ரோனாவின் கரைகள் மோசமானதாக இருந்தாலும் இங்கிருந்த காடுகள் உள்வாங்கி நிலப் பரப்பிற்குள் சென்று விட்டது போலிருந்தது.

ஆனால் உவமானங்கள் எவ்வளவு கவித்துவமாக இருந்தாலும் அவை வறண்ட தொண்டையை நனைக்காது. கேப்ரோனாவின் அழகை வர்ணிக்க வேண்டுமென்றால் எங்களுக்குத் தண்ணீர் தேவை. அதனால் கரையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தோம். நாங்கள் அருகே செல்லச் செல்ல ஆழம் தெரியாத பள்ளங்கள் தெரிந்தன. அதே செங்குத்துப் பாறைகள் எங்கும் வரவேற்றன. இருட்டிய நேரத்தில் கரையில் இருந்து சற்று ஒதுங்கியே கப்பலை நிறுத்தினோம். தண்ணீர் பற்றாக்குறை எங்களை இன்னும் முழுமையாகத் தாக்க ஆரம்பிக்கவில்லை. ஆனாலும் அதற்கு வெகு நேரம் ஆகி விடாது. அதனால் வானத்தின் முதல் வெளிச்சக் கீற்று தெரிய ஆரம்பித்தவுடனேயே நான் அந்த பயங்கரக் கரையை அளவெடுக்க ஆரம்பித்தேன் நம்பிக்கை இல்லாமல்.

நண்பகல் நேரத்தில் நாங்கள் முதன்முதலாய் ஒரு மணல்பரப்பைக் கண்டோம். அது ஒரு குறுகலான மணல் திட்டு. ஒரு மலையின் அடியில் இருந்தது. இதுவரை கண்ட மலைகளிலேயே சிறிதாக இருந்தது. அதன் அடியில் பாதி புதைந்த நிலையில் பெரிய பாறைகள் சிதறிக் கிடந்தன. ஏதோ ஒரு காலத்தில் கேப்ரோனாவின் தடுப்புச் சுவர்களை இயற்கை சூறையாடியதற்கான ஊமையான ஆதாரங்கள். வித்தியாசமான பொருள் ஒன்றை ப்ராட்லிதான் முதன் முதலில் காண்பித்தான் அந்தப் பாறையின் மேல் அலைகள் பின் வாங்கிய நேரத்தில்.

“ஒரு மனிதன் போன்று இருக்கிறது.” என்று சொல்லிவிட்டு இருவிழிநோக்காடியை என்னிடம் கொடுத்தான். நான் அதை நீண்ட நேரம் பார்த்து ஆராய்ந்து விட்டு உறுதியாக அது கிடத்தி வைக்கப்பட்ட ஒரு மனித உருவம்தான் என்று சொல்லி இருப்பேன். லா ர்யூவும் எங்கள் அருகிலேயே மேல் தளத்தில் இருந்தாள். நான் திரும்பி அவளைக் கீழே போகச் சொன்னேன். நான் சொன்னவுடன் மறு வார்த்தை சொல்லாமல் அப்படியே கீழே சென்று விட்டாள். நான் உடனே என் சட்டையைக் கழற்றினேன். நாப்ஸ் என்னைக் கேள்வி கேட்பது போல் பார்த்தது. அது என்னுடன் அலைகளில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டது. அதனால் மறக்காமல் என்னை உற்று நோக்கியது.

“என்ன செய்யப் போகிறீர்கள். சார்.” என்று கேட்டான் ஓல்சன்.

“கடற்கரையில் இருக்கும் அந்தப் பொருள் என்னவென்று பார்க்க போகிறேன். அது மனிதனாய் இருந்தால் ஒன்று கேப்ரோனாவில் மனிதர்கள் இருக்கக் கூடும். இல்லையேல் யாருடைய கப்பலாவது கரை ஒதுங்கி இருக்க வேண்டும். அதன் உடையைப் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று நினைக்கிறேன்” என்று பதில் அளித்தேன்.

“சுறா மீன்கள் இருக்காதா. எதற்கும் கத்தி ஒன்றை எடுத்துச் செல்லுங்கள்” என்றான்.

“இதோ பிடியுங்கள்” என்று ஒருவன் கத்தினான்.

அது ஒரு நீளமான மெலிதான கத்தி. அதை என் பற்களுக்கு நடுவில் எளிதாக வைத்துக் கொண்டு செல்லலாம் அதனால் அதை வாங்கிக் கொண்டேன்.

“கூர்ந்து கவனித்துக் கொண்டிரு” என்று ப்ராட்லியிடம் சொல்லிவிட்டுக் கடலில் குதித்து அந்தக் கரையை நோக்கி நீச்சல் அடிக்க ஆரம்பித்தேன். நான் விழுந்தவுடன் என் பின்னால் இன்னொரு சத்தம் உடனே கேட்டது. திரும்பிப் பார்த்தால் நம்பிக்கையான நாப்ஸ் ஒரு வீரனைப் போல் பின் தொடர்ந்தது.

அலைகள் அவ்வளவு வேகமில்லை. அதே போல் கடல் நீரோட்டமும் அவ்வளவாக இல்லை. அதனால் எங்களால் எளிதாகக் கடக்க முடிந்தது. அந்தக் கரை முழுவதும் சிறு கூழாங்கற்கள் நிறைந்திருந்தன. அலைகள் அவைகளை வழவழப்பாக மாற்றி இருந்தன. மணல் மிகக் குறைவாகவே இருந்தது. கப்பலில் இருந்து பார்க்கும் போது எல்லாமே மணலாகத் தெரிந்தது. நண்டுகள் நத்தைகள் பொதுவாக எல்லாக் கடற்கரையிலும் இருக்கும். ஆனால் இங்கு அவைகள் தென்படவே இல்லை. கரை சின்னதாக இருப்பதாலும் சுற்றி இருக்கும் கடல் வெகு ஆழமானதாக இருப்பதாலும் கேப்ரோனா மிகத் தொலைவில் இருப்பதாலும் காரணமாய் இருக்கலாம்.

படுத்துக் கிடக்கும் அந்த உருவத்தை நானும் நாப்ஸும் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளை என் மூக்கை வைத்தே கண்டுபிடித்து விட்டேன். அது மனிதனோ இல்லை எதுவோ ஆனால் நிச்சயமாக ஒரு உயிரினம்தான். உயிரோடு இருந்தது. இப்போது செத்துக் கிடக்கிறது. நாப்ஸ் சிறிது நின்று முகர்ந்து உறும ஆரம்பித்தது. சிறிது நேரம் கழித்துச் சற்று உட்கார்ந்து வாயை மேலே தூக்கி வானத்தைப் பார்த்துப் பயங்கரமாக ஊளையிட ஆரம்பித்தது. நான் ஒரு சிறு கல்லை அதன் மேல் தூக்கிப் போட்டு அமைதியாக இரு என்று அதட்டினேன். அதனுடைய வினோதமான சத்தம் எனக்குக் கலவரமாய் இருந்தது. நான் அந்த உருவத்தின் அருகில் வந்து பார்த்த பின்னும் அது மனிதனா இல்லை மிருகமா என்று முடிவுக்கு வர முடியவில்லை. அந்தப் பிணம் வெகுவாக வீங்கி இருந்தது கொஞ்சம் சிதைந்தும் இருந்தது. அதன் உடம்பிலோ கீழோ உடை உடுத்தி இருந்ததற்கான எந்தவித அடையாளமும் இல்லை. சின்னதாய்ப் பழுப்பு நிறத்தில் முகத்தில் நெஞ்சில் வயிற்றில் முடிகள் இருந்தன. உள்ளங்கால்கள் கைகள் தோள்பட்டைகள் முதுகு வேறெங்கும் முடி இல்லை. அந்த உயிரினம் கிட்டத்தட்ட மனிதனின் உயரத்தில் இருந்தது. அதன் அமைப்புகளும் மனிதன் போலவே இருந்தன. ஆனால் அது மனிதன் தானா?

என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. மனிதக் குரங்கு போலத்தான் இருந்தது. அதன் கால் விரல்கள் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருந்தன பிலிப்பைன்ஸ் நாட்டின் போர்னியோவில் உள்ள மரத்தில் வாழும் மனிதர்கள் போல். இதே போல் இன்னும் விலங்குகள் வேறு நாடுகளிலும் இருக்கின்றன. முக வெட்டைப் பார்க்கும் போது ஜாவாவின் மனிதக் குரங்கிற்கும் பில்டவுன் என்னும் புராதன சஸ்ஸேக்சில் இருந்த விலங்கிற்கும் பிறந்த குழந்தை போல் இருந்தது. அதன் அருகில் ஒரு மரத்தாலான வளைந்த தடி ஒன்று இருந்தது.

அந்த விஷயம் என்னைச் சிந்திக்க வைத்தது. இங்கே சுற்றுப்புறத்தில் மரங்கள் எதுவும் இல்லை. சிதைந்த கப்பலும் எதுவுமில்லை. கடல் பிரயாணம் சென்று வந்த உயிரினம் என்று சொல்வதற்கு எந்தவிதமான அறிகுறிகளும் தென்படவில்லை. பரிணாமத்தில் மனிதனுக்குக் கீழே விலங்கினத்தின் மேலே இருக்கக் கூடிய ஒரு உயிரினத்தின் உடல்தான் அது. எப்படி இருந்தாலும் கடல் வழியே சென்றிருக்க வாய்ப்பில்லை. ஆக அது கேப்ரோனாவின் உயிரினம்தான் என்று முடிவுக்கு வந்தேன். உள்நாட்டில் இருந்து வந்து அந்தச் செங்குத்துப் பாறைகளில் இருந்து கீழே விழுந்திருக்கலாம். அப்படி இருந்தால் கேப்ரோனாவில் மனிதர்கள் இல்லாவிட்டாலும் ஏதோ உயிரினங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் எப்படி அந்தப் பகுதிக்குள் செல்வது. அதுதான் கேள்வி. இந்தச் செங்குத்துப் பாறைகளைப் பக்கத்தில் வந்து பார்த்தபின் எனக்கு ஒரு உண்மை தெளிவாகத் தெரிந்தது. எந்த ஒரு உயிருள்ள மனிதனும் இவ்வளவு பெரிய பாறைகளைத் தாண்டி வந்திருக்க முடியாது. விரல்களின் தடங்கள் எதுவும் இல்லை. ஒரு குழப்பத்தினுடனேயே நான் திரும்பி விட்டேன்.

கப்பலுக்கு திரும்பும் வேளையிலும் எங்களுக்கு சுறா மீன்கள் எதுவும் தென்படவில்லை. நான் கண்டவற்றை விளக்கியவுடன் எல்லோரும் தங்கள் அனுமானங்களையும் கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனாலும் புது நம்பிக்கையும் உறுதியும் கொடுத்தது இந்த ஆராய்ச்சி. நான் நினைத்தது போலவே அவர்களும் நினைத்தார்கள். முடிவு தெரிந்ததுதான். தண்ணீர் இல்லை. எங்களின் தாகம் இன்னும் அதிகமாகியது.

மீதி நாளில் மிக நுணுக்கமாக அந்த ஆளில்லாத கரையை அலசிக் கொண்டிருந்தோம். வேறு எந்தவிதமான தடயமும் கிடைக்கவில்லை. கூழாங்கற்களுடன் கூடிய இன்னொரு மணல் திட்டு எதுவுமில்லை. கதிரவன் மறைந்த அந்த நேரத்தில் எங்கள் ஆர்வமும் மங்க தொடங்கின. அந்தப் பெண்ணிடம் பேச நினைத்தேன். அவள் பிடி கொடுக்கவேயில்லை. தாகம் ஒரு பிரச்சினை என்றால் என் இதயத்தை நொறுக்கி சோகமும் சேர்ந்தே வாட்டியது. அன்றைய தூங்கா இரவின் சாபத்தை மறு நாள் விடியல் நீக்கியது வெளிச்சம் பரப்பி.

வழி கிடைத்தது

காலையில் தேடியபோதும் நம்பிக்கை அளிப்பது போல் எதுவும் நடக்கவில்லை. கேப்ரோனாவிற்குள் நுழையவே முடியாது என்றே எல்லோரும் முடிவெடுத்தோம். இருந்தாலும் நாங்கள் விடவில்லை. மத்தியானம் அடித்த இரண்டு ஊதல் ஒலிக்கு பின் ப்ராட்லி என்னிடம் கடலைக் காண்பித்தான். அங்கே ஒரு மரத்தின் கிளை இலைகளுடன் மிதந்து கொண்டிருந்தது. அதை ஆற்று நீர் அடித்துக் கடலில் சேர்த்திருக்கலாம் என்று சொன்னான்.

“ஆம். அந்த செங்குத்துப் பாறைகளின் மேலிருந்து கடலில் விழுந்திருக்கலாம்.” என்றேன் நான்.

ப்ராட்லியின் முகம் சுருங்கி விட்டது. “நானும் அதை நினைத்தேன். இருந்தாலும் நான் சொன்னதை நம்பவே நினைக்கிறேன்” என்றான்.

“நீ சொல்வதுதான் சரி” என்று கத்தினேன். “ஒரு விஷயத்தை நிரூபிக்கும் வரை எதுவும் சொல்ல முடியாது. நாம் எந்தக் கோணத்தையும் விட்டு விட முடியாது. இது ஆற்று நீரில்தான் வந்தது. அந்த ஆறு எங்கே என்று கண்டுபிடிப்போம்” என்று ஒரு கை விரல்களை மடக்கிக் காற்றில் மெலிதாகக் குத்தினேன் உறுதியின் அடையாளமாக ஆனால் நம்பிக்கை இல்லாமல். “அங்கே பார்” என்று திடீரென்று கத்தினேன். கரைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தைக் காண்பித்தேன். அங்கே சில பூக்கள் புற்கள் மற்றும் சிறு இலைகளுடன் கூடிய கிளையும் மிதந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. நாங்கள் அந்தத் தண்ணீரையும் கடற்கரையையும் அளந்து கொண்டிருந்தோம். ப்ராட்லி இறுதியில் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்தான். அல்லது அப்படி நம்பினான். ஒரு வாளியும் கயிறும் கேட்டான். வந்தவுடன் வாளியைக் கீழே இறக்கித் தண்ணீரை மொண்டான். அதைச் சுவைத்துப் பார்த்து நிமிர்ந்தவுடன் நேராக என் கண்களை நோக்கி மிகவும் மகிழ்ச்சியாகச் சொன்னான் “நான் அப்போதே சொன்னேனே” என்றான்.

“இந்தத் தண்ணீர் கொஞ்சம் வெதுவெதுப்பாகவும் புத்தம் புதியதாகவும் இருக்கிறது” என்றான்.

நானும் அதை வாங்கிக் குடித்துப் பார்த்தேன். மிகவும் வெதுவெதுப்பாகவும் புதிதாகவும் இருந்தது. அதே வேளை ஒரு கெட்ட சுவை இருந்தது.

“நீ எப்போதாவது தலைப்பிரட்டைகள் நிரம்பிய குட்டையில் இருக்கும் தேங்கிய நீரைக் குடித்துப் பார்த்ததுண்டா” என்று ப்ராட்லி கேட்டான்.

“அதே தான்.” ஆச்சர்யத்தோடு கத்தினேன். “அதே சுவைதான். சின்ன வயதில் நான் அனுபவித்திருக்கிறேன். இருந்தாலும் ஓடக்கூடிய நீரோடையின் நீர் எப்படி இவ்வாறு இருக்க முடியும். ஆனால் எந்த பூதம் இவ்வளவு சூடாக்கியது. இந்தத் தண்ணீர் எப்படியும் 70, 80 பாரன்ஹீட் வெப்பமாவது இருக்கும் அல்லவா. அதைவிடக் கொஞ்சம் அதிகமாகக் கூட இருக்கும்.”

“ஆம்.” என்று ஒத்துக் கொண்டான் ப்ராட்லி. “அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் எங்கிருந்து வருகிறது.”

“இப்போது புரிந்து விட்டதால் அதையும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.” என்று சொன்னேன். “கடலில் இருந்து வர வாய்ப்பில்லை. அதனால் நிலத்தில் இருந்துதான் வந்திருக்க வேண்டும். அதைப் பின் தொடர்ந்தால் போதும் நிச்சயம் கண்டுபிடித்து விடலாம்.”

நாங்கள் ஏற்கெனவே கரைக்கு மிக அருகில்தான் கப்பலை நிறுத்தி இருந்தோம். இருந்தாலும் கப்பலின் முன் பகுதியை கரைப் பக்கம் திருப்பி நிறுத்துமாறு உத்தரவிட்டு மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்தோம். போகும்போது தண்ணீரை எடுத்துச் சுவைத்துக் கொண்டே சென்றோம் அந்த நன்னீர் உற்பத்தி ஆகும் இடத்தை விட்டு வேறு வழியில் சென்று விடக்கூடாது என்ற ஆர்வத்தில். கடற்கரையில் ரொம்ப மிதமான காற்று வீசியது. எப்பொழுதாவது வேகம் எடுக்கும். கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் இருந்தும் இன்னும் தரை தட்டவே இல்லை. கரைக்கு அருகில்தான் இருந்தோம். ஆனாலும் கரையில் எந்தவிதமான பள்ளமும் இல்லை எதாவது ஒரு சின்ன ஊற்றாவது வருவதற்கு. கரையின் ஒரு 200 அடியில் இருந்தும் கூட கடல் நீரில் சுத்தமான குடி நீர் கலக்குமாறு ஒரு ஆற்றின் பெரிய முகவாய் இல்லை. அலை குறைந்து கொண்டே வந்தது. அத்துடன் சேர்த்து நன்னீர்ச் சுழலின் வேகம் நாங்கள் பாறைக்குச் செல்வதைத் தடுத்து இருக்கும் கப்பல் இயங்காமல் இருந்தால். நாங்கள் இருந்த இடத்தில் நிற்பதற்கே ரொம்பச் சிரமமாய் இருந்தது. ஒரு சுவருக்கு 25 அடிக்குப் பக்கத்தில் வந்து விட்டோம். அதற்கு ஒரு முடிவே இல்லாதது போல் நீண்டு கிடந்தது. நாங்கள் தண்ணீரையும் சுவரையும் பார்த்துக் கொண்டே வந்த போது ஓல்சன் சொன்னான் இந்தத் தண்ணீர் கடலுக்கடியில் இருக்கும் ஊற்றிலிருந்து வருகிறது என்று. அதனால்தான் சூடாக இருக்கிறது என்றான். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒரு புதர்ச் செடி அடர்த்தியான இலைகள் மற்றும் பூக்களுடன் வெளி வந்து கப்பலின் பின் புறத்திற்குச் சென்றது.

“பூக்கள் பூக்கும் புதர்ச் செடிகள் நீருக்கடியில் இருக்கும் குகைகளில் இருக்கும் ஊற்றுக்கள் ஊறும் பகுதியில் முளைப்பதில்லை.” என்று ப்ராட்லி சொன்னான்.

ஓல்சன் தலையசைத்தான். “ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது” என்றான்.

“எனக்குப் புரிந்து விட்டது” என்று மகிழ்ச்சியாகக் கத்தினேன். “அங்கே பாருங்கள்.” என்று எங்களுக்கு நேராக இருந்த பாறையின் விளிம்பில் ஒரு இடத்தைக் காட்டினேன். நான் காட்டிய இடத்தை எல்லோரும் உற்று நோக்கினார்கள். அங்கே ஒரு கரிய பாறைத் திறப்பில் இருந்து கடலுக்குள் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. “நிலத்தில் இருக்கும் ஆற்றின் புதையுண்ட ஒரு நீரோட்டம்.” என்று கத்தினேன். அது செடி கொடிகள் வளர்ந்த நிலப்பரப்பின் மீது பாய்கிறது. ஆக அங்கே கதிரவன் ஆசி பெற்ற ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. எந்தவொரு பூமிக்கடியில் இருக்கும் குகையும் நாம் பார்த்தது போன்ற தாவரங்களை வளர்க்காது. இந்தப் பாறைகளின் பின் ஒரு வளமான நிலம் நிச்சயம் இருக்கிறது தண்ணீரும் இருக்கலாம்.”

“ஆம். சார்.” என்றான் ஓல்சன். “நீங்கள் ஒரு உண்மையைச் சொல்லி இருக்கிறீர்கள். பாறையின் பின்னால் என்று”

ப்ராட்லி சிரித்தான் வருத்தத்தோடு. “நீங்கள் இன்னொரு விஷயத்தையும் கூட சொல்லலாம். அறிவியல் செவ்வாய் கிரகத்தில் கூட தண்ணீரும் தாவரங்களும் இருப்பதாகச் சொல்கிறது.”

“நிச்சயம் இல்லை.” என்று திரும்பவும் நான் சேர்ந்து கொண்டேன். “இந்த யு-33 கப்பல் வானத்தில் செல்வதற்கு உருவாக்கப்படவில்லை. நிச்சயம் நீருக்கடியில் செல்லும்”

“அந்த வெறுமையான இடத்திற்குள்ளா நீங்கள் கப்பலைச் செலுத்தப் போகிறீர்கள்” என்று கேட்டான் ஓல்சன்.

“நிச்சயம் செய்வேன், ஓல்சன்” என்று பதில் சொன்னேன். “லட்சத்தில் ஒரு தடவை கூட நாம் உயிர் வாழ்வதற்கான வாய்ப்பு கேப்ரோனாவின் மேல் இல்லை உணவும் நீரும் அங்கு இல்லை என்றால். அந்தப் பாறையில் இருந்து வரும் இந்த நீர் உப்பானது இல்லை. இருவரும் குடித்திருந்தும் குடிக்க உகந்ததாகவும் இல்லை. நிலத்திற்குள் இந்த தண்ணீர் சுத்தமாக இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம். பழங்கள் மூலிகைகள் மற்றும் தேவையான அனைத்தும் கிடைக்கும். நாம் இங்கேயே இருந்து தாகத்தினாலும் பசியினாலும் இறந்து போகலாம் வெறும் சில நூறு அடிகளில் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு. ஆற்று நீரிலும் பயணிக்கும் வழி நமக்கு இருக்கிறது. நமக்கு அதைப் பயன்படுத்துவதில் என்ன பயம்?”

“நிச்சயம் அதன் பின் செல்வோம்” என்றான் ஓல்சன்.

“நானும் அதைப் பார்த்துவிட எண்ணுகிறேன்” என்று சம்மதித்தான் ப்ராட்லி.

“பிறகென்ன. கீழே செல்வோம். வாழ்த்துக்கள். சொர்க்கமா நரகமா என்று பார்த்து விடுவோம்” என்று ஒருவன் கீழிருந்து கத்தினான்.

“எல்லோரும் கீழிருக்கும் இடத்திற்குச் செல்லுங்கள்” என்று உத்தரவிட்டேன். ஒரு நிமிடத்தில் மேல் தளமே காலியாகி விட்டது. கோபுரத்தின் வாசலையும் அடைத்தாகி விட்டது. பின் மெதுவாக நீரில் மூழ்க ஆரம்பித்தது. அதுதான் கடைசித் தருணம் என்று தோன்றியது. அங்கு இருந்த எல்லோரும் அப்படித்தான் எண்ணி இருப்பார்கள்.

கீழே இறங்கும் போது கோபுரத்தில் நான் அமர்ந்து இருந்தேன். கோபுரத்தின் மேலிருந்த பாவொளி விளக்கைப் போட்டுவிட்டு அதன் மங்கிய ஒளி பரவுவதை நீரில் பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் ரொம்ப மெதுவாகக் கீழிறங்கிக் கொண்டிருந்தோம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கப்பலின் முன் பகுதி மட்டும் சரியானபடி இறுத்தி விட்டு. கீழே இறங்க இறங்க நான் அந்தப் பாறை மீதிருந்த கருப்புத் திறப்பைப் பார்த்தேன். அந்தப் பிளவினுள் ஒரே நேரத்தில் அரை டஜன் யூ கப்பல்களை அனுப்பலாம். கிட்டத்தட்ட ஒரு உருளை போல இருந்தது. ஆனால் நரகம் போல் ஒரே கருமை நிறம் அப்பி இருந்தது.

என் உத்தரவைத் தொடர்ந்து கப்பல் மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது. எனக்குள் ஒரு விசித்திரமான உள்ளுணர்வு தோன்றியது. ஆனால் அவை எதுவும் நல்லதாக இருக்கவில்லை. நாம் எங்கே போகிறோம்? இந்த பெரிய அகண்ட வாய்க்கால் நம்மை எங்கே இட்டுச் செல்லும். கதிரொளிக்கும் வாழ்க்கைக்கும் நாம் நிரந்தரமான விடை கொடுத்து விட்டோமோ. இப்பொழுது நாம் பார்த்ததை விட இன்னும் பெரிய அபாயங்களைச் சந்திக்க இருக்கிறோமோ. தேவையற்ற எண்ணங்களில் என் மனம் அலை பாயாமல் இருக்கக் கீழே நடக்கும் விஷயங்களைக் காது கொடுத்துக் கேட்டேன். இந்தக் கப்பலின் அணைத்து மாலுமிகளுக்கும் நான்தான் கண் போன்றவன். அவர்களைச் சரியாக வழிநடத்த என்னால் முடிந்த அனைத்து வழிமுறைகளையும் நான் கடைபிடிக்கிறேன். ஒரு நூறு அடி போயிருப்போம். முதல் ஆபத்து அப்போது வந்து கண் சிமிட்டியது. அந்தக் குகை வழி செங்குத்தாகத் திரும்பியது. ஆற்றின் மீது மிதந்து வரும் குப்பைகள் சட்டென்று அந்தப் பாறையின் மீது ஆற்றின் வலிமையான நீரோட்டத்தில் மோதி இடது புறம் திரும்புவதை என்னால் பார்க்க முடிந்தது. இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் செங்குத்தாகத் திரும்ப வேண்டியதால் கப்பலின் பாதுகாப்பை எண்ணி நான் மிகவும் பயந்து கிடந்தேன். ஆனால் முயற்சி செய்வதைத் தவிர வேறெதுவும் முடியாது. ஆபத்து வருவதைப் பற்றி யாரையும் நான் எச்சரிக்கவில்லை. அதனால் தேவையற்ற பயம் மட்டுமே மிச்சம். ஒரு வேளை அந்தப் பாறையில் மோதினாலும் சட்டென பறி போய் விடும் அனைத்து உயிர்களையும் இந்த உலகத்தின் எந்தவித சக்தியாலும் காப்பாற்ற முடியாது. முழு வேகத்தில் செல்ல உத்தரவிட்டு ஒருவித வெறியோடு அந்த ஆபத்தை எதிர் கொள்ளக் காத்திருந்தேன். அங்கே திரும்ப வேண்டும் என்றால் இடது புறம் திரும்பும் அந்தச் சுவரை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. எங்களைப் பாதுகாக்கக் கப்பலின் மின் விசைப் பொறிகளின் சக்தியைத்தான் அப்போது முழுவதும் நம்ப வேண்டி இருந்தது. ஒருவழியாக நாங்கள் அதைக் கடந்து விட்டோம். ஆனால் அது மயிரிழையில் தப்பிய தருணம். அப்படித் திரும்பிய போது நீரோட்டத்தின் வேகத்தினால் கப்பலின் பின் பகுதி சுவரில் தொம்மென்று இடி வாங்கியது. கப்பல் முழுவதும் ஒரு பேரதிர்ச்சி பரவியது. இரும்பினால் ஆன கப்பலின் உடற்பகுதி பாறையைத் தேய்த்ததால் நாராசமாக சத்தம் காதைப் பிளந்தது. ஒரு கணம் சட்டென்று நீர் பரவி நம்மைச் சமாதி கட்டி விடும் என்று நினைத்தேன். ஆனால் கீழிருந்து எல்லாம் சரியாக இருக்கிறது என்று குரல் கேட்டது.

இன்னொரு ஐம்பதடி தூரத்தில் இரண்டாவது திருப்பம் வந்தது. இப்போதும் இடது புறம் திரும்பியது அந்த வளைவு. அது மிகவும் எளிதான வளைவாக இருந்தது. அதனால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் கடந்து விட்டோம். அதன் பின் வெண்ணையில் வழுக்கியது போன்ற எளிதான பயணமாக இருந்தது. இருந்தாலும் என் உள்ளுணர்வு பயம் கக்கியபடியே இருந்ததால் ஒவ்வொரு நொடியும் என் நரம்புகள் வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. அதன் பின் ஒரு நூற்றைம்பது இருநூறு அடி வரை அந்தக் கால்வாய் நேராகச் சென்றது. தண்ணீரும் கொஞ்சம் லேசானது என் மனதும் கூட. நான் கீழிருப்பவர்களிடம் கத்தினேன் பகல் வெளிச்சத்தைப் பார்த்ததாக. உடனே திருவிழா வந்தது போல் அனைவரும் கூச்சலிட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் நாங்கள் கதிரவன் ஒளியில் நனைந்த நீரில் எழ ஆரம்பித்தோம். உடனே நான் சூழிட நோக்கியை உயர்த்தி அந்த வினோதமான நிலப்பரப்பைப் பார்த்தேன்.

வினோத உலகம்

நாங்கள் இப்போது ஒரு அகலமான மெதுவாகச் செல்லும் ஆற்றின் நடுவில் இருந்தோம். அதன் இரு கரைகளிலும் 150 முதல் 200 அடி வரை கிளைகள் பரப்பி பிரமாண்டமான மரங்கள் வளர்ந்து இருந்தன. கப்பலுக்கு அருகில் எதோ ஒன்று வந்து சூழிட நோக்கியில் மோதியது. அகலமாய் விரிந்த வாய் ஒன்று தெரிந்தது. பின் தெறித்த நீர் வழிந்தோடியது. கோபுரமே நடுங்கியது அந்தப் பொருள் பக்கத்தில் வந்த போது. சிறிது நேரத்தில் சென்று மீண்டும் திரும்பியது. மரங்களின் மேல் என் பார்வை திரும்பியது. அங்கே எதோ ஒன்று வவ்வாலின் இறக்கையுடன் இருந்தது. திமிங்கிலம் போன்று பெரிதான ஒரு உயிரினம் ஆனாலும் அது ஒரு பெரிய பல்லி போன்று இருந்தது. திரும்பவும் சூழிட நோக்கியின் மீது எதோ ஒன்று மோதி நீரைத் தெளித்தது. நான் கப்பலை மேலேற்றுவதற்கு உத்தரவிடும் போது எனக்கு வேர்த்து விட்டது. என்ன மாதிரியான ஒரு வினோதமான உலகத்திற்கு விதி எங்களை அழைத்து வந்திருக்கிறது என்று வியந்தபடியே மேலேறினோம்.

மேல் தளம் நீரில் இருந்து வெளியே தெரிந்ததும் நான் கோபுரத்தின் கதவைத் திறந்து வெளியே வந்தேன். மைய வழியின் கதவைத் திறந்து பணியில் இல்லாத அனைவரும் ஏணியில் ஏறி வந்தனர். ஓல்சன் நாப்ஸை ஒரு கையில் ஏந்தி வந்து கொண்டிருந்தான். சில நேரங்களாய் யாரும் எதுவும் பேசவில்லை. ஒவ்வொருவரும் என்னைப் போல் ஆச்சர்யத்தில் உறைந்து விட்டனர். ஏதோ வேற்று கிரகத்தில் நுழைந்து விட்டது போல் இருந்தது அங்கே இருந்த மரம் செடி கொடிகளைப் பார்க்கும்போது. அங்கே இருக்கும் புல் கூட நமது பூமியைச் சார்ந்தது போல் இல்லை. செழிப்பாக உயரமாக வளர்ந்திருந்தது. ஒவ்வொரு புல்லின் நுனியிலும் பளிச்சென்று ஒரு பூ பூத்திருந்தது. ஒவ்வொன்றும் ஒரு நிறத்தில் ஊதா மஞ்சள் கருஞ்சிவப்பு நீலம் என்று அனைத்தும் மனிதனின் கற்பனைக்கே எட்டாத அளவு மனதைக் கொள்ளை கொள்ளச் செய்தன. ஆனால் உயிரினங்கள்? அவை எல்லாம் கூட்டம் கூட்டமாய் இருந்தன. உயர்ந்த பெரணி போன்ற மரங்களில் குரங்குகள் பல்லிகள் மற்றும் பாம்புகள் இருந்தன. பெரிய பூச்சிகள் இங்கும் அங்கும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. பிரமாண்டமான உருவங்கள் அந்த அடர்ந்த காட்டினுள் உலாவிக் கொண்டு இருந்தன. ஆற்றினுள் ஏகப்பட்ட உயிரினங்கள் நெளிந்து கொண்டிருந்தன. வானத்தில் பெரும் உயிரினங்கள் இறக்கை அடித்துப் பறந்து கொண்டிருந்தன. இவை எல்லாம் எத்தனையோ காலங்களுக்கு முன்னால் அழிந்து விட்டதென்று நாம் பாடத்தில் படித்திருக்கிறோம்.

“அங்கே பாருங்கள்” என்று ஓல்சன் கத்தினான். “ஒரு ஒட்டகச் சிவிங்கி மேலே எழும்புகிறது. எங்கிருந்து என்றால்…” என்று அவன் சுட்டிய திசையை நோக்கிப் பார்த்தோம். அங்கே கண்ணாடி போன்று பளபளப்பாய் நீளமான கழுத்தின் மேல் ஒரு சின்ன தலையுடைய ஒரு மிருகம் நீரினுள் இருந்து எழுந்தது. இப்போது அதன் முதுகுப்புறமும் தெரிந்தது. அதன் மேலிருந்து நீர் சொட்ட எழுந்தபோது அது பழுப்பு நிறத்தில் பளபளப்பாய் இருந்தது. அது எங்களைத் திரும்பிப் பார்த்தது. பல்லி போன்ற அதன் வாயைத் திறந்து ஒரு பெருத்த சீற்றத்தை வெளியிட்டது. அது ஒரு 16 அல்லது 18 அடி நீளம் இருக்கும். அது கிட்டத்தட்ட கீழ் ஜுராசிக் காலத்திய ப்லீஸியோசாரஸின் படிமம் போன்று இருந்தது. எங்களைப் பார்த்ததும் கோபம் கொண்ட எருமையைப் போல் வேகமாகப் பாய்ந்து வந்தது. அது வந்த வேகத்தைப் பார்த்தால் எங்களையும் கப்பலையும் நொறுக்கிச் சாப்பிட்டு விடும் போல் இருந்தது.

அந்த உருவம் வாயை அகலத் திறந்து கொண்டு எங்களைத் துரத்திய போது நாங்கள் ஆற்றில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தோம். அதன் நீண்ட கழுத்து ரொம்ப உயரமாய்த் துருத்திக் கொண்டிருந்தது. அதனுடைய நான்கு துடுப்புகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தன. அதனால் மிக வேகமாக அதனால் நீந்த முடிந்தது. அது கப்பலின் பக்கவாட்டிற்கு அருகில் வந்தபோது அதன் பற்கள் கோபுரத்தின் மேலிருந்த ஒரு கம்பத்தில் பதிந்தது. அது ஏதோ பல் குச்சி எடுக்கப்பட்டது போல் சட்டென்று உடைந்து வெளியேறி விட்டது. இவ்வளவு பெரிய வலிமையைப் பார்த்தவுடன் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒரு அடி பின் வாங்கினோம். ப்ராட்லி தன் துப்பாக்கியை எடுத்துச் சுட்டான். குண்டு அதன் கழுத்தில் பட்டது. அதனால் அது சுருண்டு விடும் என்று பார்த்தால் அதன் கோபம்தான் அதிகமாகியது. அதனுடைய சீற்றம் இப்போது கர்ண கொடூரமான சத்தமாக அதிகரித்தது. பின் அது பாதியளவு நீரினுள் இருந்து எழுந்து மேல் தளத்தின் சாய்ந்த பகுதியில் ஏறி எங்கள் அனைவரையும் முழுங்கி விடப் பார்த்தது. ஒரு டஜன் குண்டுகளாவது சுட்டிருப்போம் எங்களில் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் அனைவரும் சேர்த்து. எவ்வளவு சுட்டாலும் அது அடங்குவது போல் தெரியவில்லை. மென்மேலும் எங்களை நெருங்கிக் கொண்டே இருந்தது.

அந்தப் பெண் மேல் தளத்தில் என் பின்னால் நின்றிருந்தாள். ரொம்ப தூரம் இல்லை. எங்களுக்கு நேர்ந்த பேராபத்தைப் பார்த்த பின் நான் அவளை மைய வழியின் கதவை நோக்கித் தள்ளினேன். நாங்கள் இருவரும் சில நாட்களாகப் பேசிக் கொள்ளவில்லை. இப்போதும் பேசவில்லை. அவள் என்னை அலட்சியமாகப் பார்த்தாள். அந்தப் பார்வையே பல அர்த்தங்கள் கற்றுக் கொடுத்தது. வெடுக்கென்று என் கையை உதறி விட்டாள். பலவந்தத்தைத் தவிர அவளிடம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அதனால் அவளை மறைத்து நின்று கொண்டேன் ஒருவேளை அந்த மிருகம் மேல் தளத்திற்கு வந்து விட்டால் அவளுக்குப் பாதுகாப்பாக இருக்கலாம் என்றெண்ணி. அப்படி இருக்கும் போது அந்த மிருகம் சடாரென்று தன் கையை வைத்துப் பக்கவாட்டில் இருந்த இரும்புக் கம்பியைப் பிடித்துத் தன் தலையை நீட்டி ஒரு ஜெர்மனைக் கவ்விக் கொண்டது. நான் ஓடிச் சென்று என் துப்பாக்கியால் அதன் உடம்பில் சுட்டு எப்படியாவது அவனைக் காப்பாற்றி விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கதிரவனைக் கூடச் சரியாகச் சுட்டிருக்கலாம்.

பெரும் அலறல் சத்தத்துடன் அந்த ஜெர்மனை அது கப்பலில் இருந்து இழுத்துச் சென்றது. கப்பலில் இருந்து இறங்கியதும் ஆற்றினுள் அவனைக் கவ்விக் கொண்டு நீந்த ஆரம்பித்தது. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தோம். ஓல்சன்தான் மவுனத்தைக் கலைத்தான். இப்போது யார் பக்கம் அதிக பேர் இருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டான். பென்சன் இறந்து விட்ட பிறகு இப்போது நாங்கள் ஒன்பது பேரும் ஜெர்மானியர்கள் எட்டு பேரும் இருந்தோம். அந்தப் பெண்ணை யார் பக்கமும் இது வரை சேர்க்கவில்லை. அவள் பெண்ணாய் இருந்ததால். இப்போது நிச்சயம் அவள் எங்கள் பக்கம்தான் என்று தெரியும்.

ஓல்சன் சொன்னது அனைவருக்கும் புரிந்திருக்கும். அதன் பின் நாங்கள் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களைச் சுற்றி ஒரே கூப்பாடு போட்டுக் கொண்டு பயங்கரமான ஜந்துக்கள் உலவிக் கொண்டிருந்தன பயம் என்பதே இல்லாமல் வெறும் பசி கோபத்துடன். அவைகள் கப்பலின் மேல் ஏறி நெளிந்து கொண்டிருந்தன. அதனால் பின் வாங்கிக் கொண்டே இருந்தோம். அதனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் அதன் மேல் துப்பாக்கியை எடுத்துச் சுட்டுக் கொண்டே இருந்தோம். அங்கே எல்லாவிதமான கோரமான பயங்கரமான பெரிதான உருவங்கள் இருந்தன மேஸோசோயிக் காலத்திய பயங்கரங்கள். அந்தப் பெண் சட்டென்று உள்ளே சென்று விட்டதைக் கவனித்தேன். ஆவலுடன் நாப்ஸையும் உடன் எடுத்துச் சென்றாள். நாப்ஸ் குலைத்துக் குலைத்து மிகவும் களைப்பாகி இருந்தது. அது குட்டியானதில் இருந்து இப்போதுதான் அதன் முகத்தில் பயத்தை நானும் பார்க்கிறேன். அதை ஒன்றும் சொல்ல முடியாது. அவள் சென்ற பிறகு ப்ராட்லி மற்றும் அனைவரையும் கீழே அனுப்பி விட்டேன். வான் ஸ்சோன்வர்ட்ஸ் இன்னும் சிறையிலேயே இருந்தான்.

மைய வழியின் கதவை அடைக்கு முன் அந்த மிருகங்கள் மிகவும் அருகில் வந்து விட்டன. அதன் பின் கோபுரத்திற்குச் சென்று முழு வேகத்தில் கப்பலைச் செலுத்துமாறு உத்தரவிட்டேன் எப்படியாவது அந்த மிருகங்களின் கோரப் பிடியில் இருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணி. ஆனால் அது பயனில்லாமல் போய் விட்டது. அவைகள் எளிதாகக் கப்பலை முந்த முடிவது மட்டுமில்லாமல் ஆற்றில் மேலும் போகப்போக அதைப் போன்ற உயிரினங்களின் எண்னிக்கை மிக அதிகமாய் இருந்தது. அதில் மேலும் அதே வேகத்தில் பயணிக்க மிகவும் பயமாய் இருந்தது. அதனால் வேகத்தைக் குறைத்து அந்தச் சீறும் உயிரினங்களின் நடுவில் மெதுவாகப் போகுமாறு சொல்லி விட்டேன். கேப்ரோனாவின் நிலத்தில் வந்து இறங்குவதற்கு வேறெந்த கலத்தைக் காட்டிலும் நாங்கள் நீர்மூழ்கியில் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதற்கு முன் உலகைப் பிடிக்கும் எண்ணத்துடன் யாராவது கேப்ரோனாவிற்குத் தெரியாமல் படை எடுத்து வந்திருந்தால் அவர்கள் உயிருடன் திரும்பி இருப்பார்கள் என்பது சந்தேகமே. ஆனால் எனக்கு இப்போது தெரிந்து விட்டது இந்த இடத்தை ஒரு நீர்மூழ்கியைத் தவிர வேறு எந்தக் கருவியாலும் நெருங்க முடியாது.

கதிரவன் மறையுமுன் இன்னொரு 40 மைல்களாவது நாங்கள் பயணித்திருப்போம். நீரில் மூழ்கி இரவைக் கழிப்பதற்கும் பயமாக இருந்தது. ஏனெனில் ஆற்றின் அடியில் இருக்கும் களி மண்ணில் கப்பல் சிக்கி விடும் அபாயமும் இருக்கிறது. நங்கூரம் பாய்ச்சி நிறுத்தவும் சிரமமாய் இருந்தது. அதனால் கரையோரம் சென்று அந்தப் பல்லிகளின் தொல்லைகளுக்கு நடுவில் சட்டென்று ஒரு பெரிய மரத்தில் நங்கூரத்தைப் பதித்தேன். கொஞ்சம் தண்ணீரையும் மொண்டு குடித்துப் பார்த்தோம். நல்ல சூடாக இருந்தது. முன்னைக் காட்டிலும் இனிப்பாக இருந்தது. தேவையான உணவு ஏற்கெனவே இருந்தது. இப்போது தண்ணீரும் கிடைத்து விட்டதால் புத்துணர்ச்சியோடு இருந்தோம். இருந்தாலும் புத்தம் புதியதாய் மாமிசம் கிடைக்கவில்லை. பல வாரங்கள் ஆகி விட்டன கறி சாப்பிட்டு. இந்த விலங்குகளைப் பார்த்ததும் எனக்கு ஒரு திட்டம் உருவானது. அதன் கறி கிடைத்தால் சாப்பாடு ஒன்றும் அவ்வளவு மோசமாக இருக்காது என்றே தோன்றியது. மேல் தளத்தில் இருபது துப்பாக்கிகள் இருந்தன. அதில் இருந்து ஒன்றை எடுத்தேன். என்னைப் பார்த்ததும் ஒரு பெரிய உருவம் மேல் தளத்தில் ஏறியது. நான் கோபுர உச்சிக்குச் சென்றேன். மேல் தள உயரத்திற்கு தன் பிரமாண்டமான உடம்பைத் தூக்கியதும் நான் துப்பாக்கிக் குண்டுகளை அதன் இரு கண்களுக்கு நடுவில் அனுப்பினேன்.

அது ஒரு நிமிடம் என்னைப் பார்த்து என்னிடம் எதோ பேசியது போல் இருந்தது. “இவனிடம் என்ன கொடுக்கா இருக்கிறது. கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும்”. அதன் பின் தன் நீண்ட கழுத்தை நீட்டிப் பெரிய வாயைப் பிளந்து கொண்டு என்னை விழுங்க வந்தது. ஆனால் நான் அந்த இடத்தில இல்லை. கோபுரத்தின் பின்னால் விழுந்து விட்டேன். விழுந்த வேகத்தில் இறந்தே போயிருப்பேன். அதன் பின் அதன் சின்னத் தலை திரும்பவும் என்னை நோக்கி வேகமாக வந்தது. இப்போது நான் மைய வழியின் கதவுக்கருகில் வந்து விழுந்தேன்.

யார் மேல் தளத்தில் வந்து குத்துகிறார்கள் என்று ஓல்சன் மேலே பார்த்தான். உடனே ஒரு கோடரியை எடுக்க ஓடினான். அதை எடுத்து வந்தவுடன் சற்றும் தாமதிக்கவில்லை. ஏணியில் வேகமாக ஏறி வந்து அதன் முகத்தில் அறைய ஆரம்பித்தான். அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் அளவுக்கு மூளை இல்லை என்று நினைக்கிறேன். வெட்டப்பட்டுக் குத்தப்பட்டுக் கண்களுக்கு நடுவில் துப்பாக்கிக் குண்டு பதிந்த நிலையிலும் அது ஓல்சனை நோக்கி ஊர்ந்து அவனை எப்படியாவது விழுங்கி விட வேண்டும் என்று எண்ணியது. இத்தனைக்கும் அதன் உடம்பு மைய வழியின் கதவைக் காட்டிலும் பன்மடங்கு பெரிதாக இருந்தது. ஓல்சன் அதன் தலையை வெட்டும் வரை அது தன் முயற்சியை விடவே இல்லை. பின் இரண்டு பேர் கதவைத் திறந்து மேலே வந்து ஒருவன் கவனித்துக் கொண்டிருக்க இன்னொருவன் பின்னாலிருந்த ஒரு பாகத்தை வெட்டி எடுத்தான். ப்ராட்லி அதற்கு ப்ளீசியோசாரஸ் ஓல்சானி என்று பெயர் வைத்தான். அதற்குள் ஓல்சன் அதன் நீண்ட கழுத்தை வெட்டினான். அதில் இருந்து அருமையான வடிசாறு செய்யலாம் என்று சொல்லிக் கொண்டே. கோபுரத்தின் மீது படிந்த ரத்தக் கரையையும் அழுக்கையும் துடைத்து முடிப்பதற்குள் அருமையான கறியும் கொதிக்கும் குழம்பும் தயார் செய்து வைத்து விட்டார் எங்கள் சமையல்காரர். அங்கிருந்து எழுந்த அருமையான வாசம் அந்த மிருகத்தின் மேலும் அதன் வகையறாக்கள் மேலும் ஒரு நன்மதிப்பை எங்கள் அனைவர் மனதிலும் நிறைத்தது.

– தொடரும்…

தமிழாக்கம்: சு.சோமு, Translation of the book ‘The Land That Time Forgot’ by Edgar Rice Burroughs
வெளியான மாதம்/ஆண்டு: May 2017 in kdp.amazon.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *