கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 5, 2023
பார்வையிட்டோர்: 2,319 
 

“விட்டுக் கொடுத்தவன் கெட்டதாக வரலாறில்லை..’ என்பது கர்த்தர் வாக்கு;

கர்த்தரின் மலைப் பிரசங்கம் மனிதனின் மனப்பிணிக்கு மா மருந்து;

டிசம்பர் 26ல் மலைப் பிரசங்கச் சொற்பொழிவு நிகழ்த்தவிருக்கிறார், மலைப் பிரசங்கமாமணி, அருட்தந்தை பீட்டர் ஆரோக்கிய சாமி அய்யா அவர்கள்;

உறையைக் கேட்பீர்…! உள்ளம் குளிர்வீர்…!;

அனைவரும் வாரீர்…!”

ஆட்டோவில் வைத்து தொடர்ந்து அறிவிப்பு செய்துகொண்டே இருந்தார்கள்.

கிட்டத் தட்ட ஒரு வாரமாக…


கிறித்தவர் வீடுகளெல்லாம், மழலையர்ப் பள்ளி கருத்தாக்கத்தின் நிறுவனர் ,ஜெர்மன் கல்வியாளர், பிரீட்ரிச் ஃபுரோபெல் (1782–1852) அவர்களின், பெயரைத் தாங்கியுள்ள ‘ஃப்ரோய்பெல் நட்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிற, தட்டையான முனைகளுடன், கூம்பு வடிவத் தோற்றமும் கொண்ட காகித நட்சத்திரங்கள் அலங்கரிந்தன.

இரவு நேரத்தில் அந்த நட்சத்திரத்தின் உள்ளே பொருத்தப்பட்ட சோலார் விளக்கின் பிரகாசத்தால், வானத்திலிருந்து நிஜ நட்சித்திரமே வந்து தொங்குகிறார்போல் அசத்தியது.

இந்த நட்சத்திரங்களை செய்யும் சிறு தொழில் கைவினைஞர்களின் வயிறு குளிர்ந்தது.

சிறுதொழில் கைவினைஞர்கள் செய்த கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, பூந்தொட்டிகள் போன்ற போன்றவைகளும் வீட்டு முகப்பையும், வரவேற்பறையையும் அலங்கரித்தன.

கிறிஸ்துமஸ் ஆஃபர் அறிவிப்பால் கடைத் தெரு மொத்தமும் கோலாகலமாகின.

விட்டுக் கொடுத்தவன் கெட்டதாக வரலாறில்லை…!” என்றுத் தொடங்கி, இந்த அறிவிப்பை அடிக்கடிக் காதில் வாங்கியப் பலருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற மனிதத் தன்மை அடிமனதில் ஆழப் பதிந்தே விட்டது..

விளம்பரத்தின் வீரியம் அது.


அருட் தந்தை பீட்டர் ஆரோக்கிய சாமி.

‘மலைப் பிரசங்க மாமணி’

என்கிற பட்டம் பெற்றவர்.

புகழ் பெற்றப் பேச்சாளர்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்த தேவாலயத்தில் வழிபாடு நடத்துவதற்காக, நியமிக்கப்பட்ட பாதிரியார்.

வேதங்களையும், வேத ஆகமங்களையும் கரைத்துக் குடித்தவர்தான்; இருப்பினும், கன்ஸர்-வேடிவ் சிந்தனைகளை கண்டிக்கும் சித்தனையாளர்.

அவரின் கட்டுப்பாட்டிலுள்ள, அந்தத் தேவாலயத்தின் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்தார்.

டிசம்பர் 24 (கிறிஸ்துமஸ் ஈவ்) தொடங்கி டிசம்பர் 26 (பாக்சிங் டே) முடிய அனைத்தையும் அருமையாய், நேர்த்தியாய்த் திட்டமிட்டார்.

1800-களில் மகாராணி விக்டோரியா அரியணையில் இருந்தபோது உருவான சாங்கியம்தான் “பாக்ஸிங் டே”.

இந்த நாள் டிசம்பர் 26 அன்று கொண்டாடப்பட்டது.

இந்த நாளில், செல்வந்தர்கள், கிறித்துமஸ் கிஃப்ட் பாக்ஸ் வழங்கி ஏழைகளின் மனதைக் குளிர்வித்தனர்.

அதைத் தொடர்ந்து சில தேவாலயங்களிலும் இந்த முறைப் பின்பற்றப்பட்டது.

தேவாலயத்திற்கு வருவோர் ஆண்டு முழுவதும் சிறுகச் சிறுக அளித்தப் பணம், பொருள்களையெல்லாம், சமமாகப் பிரித்துப், பேழைகளில் வைத்து, கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான டிசம்பர் 26 ல் ஏழைகளுக்குக் கொடுத்தார்கள்.

பேழையில் வைத்துக் கொடுத்ததால் அதை “பாக்ஸிங் டே”, என்றும் அழைத்தார்கள்.

பாதிரியார் பீட்டர் ஆரோக்கியசாமி; புதுமையை விரும்பும் புரட்சியாளர் அல்லவா…!

வெறும் வசனங்களும், தத்துவங்களும் மட்டுமே உதிர்க்கும் பாதிரியார்களிடமிருந்து வேறுபட்டவரல்லவா அவர்;

முதல் முதலாக அந்த வட்டாரத்திலேயே, பாக்ஸிங் டே அறிவித்தார்.

ஊரிலுள்ள ஏழை-பாழைகள் அனைவருக்கும் இந்த இந்த அறிவிப்பு மகிழ்சியைக் கொடுத்தது.

ஏழைகளிடம் இரக்கம் காட்டும் பாதிரியாரைப் போற்றிப் புகழ்ந்தவண்ணம் இருந்தனர்.


டிசம்பர் 24

‘கிறிஸ்துமஸ் ஈவ்…!’

‘மிட் நைட் மாஸ்க்…!’ வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டன.

வண்ண விளக்குகளால் ஜொலித்தது தேவாலயம்.

முகப்பிலும், பிரகாரங்களிலும் நின்ற மரங்களிலெல்லாம், ‘குபீர் குபீர்’ என வண்ண வண்ணமாய்ப் பூத்துக் குலுங்கி, மினுமினுக்கி வரவேற்றன மின்சாரப் பூக்கள்.

இசைத் தட்டு எழுப்பிய பிரார்த்தனை கீதங்கள் செவிகளை நிறைத்தன.

நடு நடுவேக் கீதத்தை, நிறுத்திவிட்டு, நள்ளிரவுத் தொழுகைக்கு வருவோரை வரவேற்றது விழாக்குழு.

“மனித குலம் ஞானவொளி பெற, இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை கிறிஸ்துமஸ் விழா மீண்டும் உறுதிப்படுத்துகிறது;

ஏசுவின் பிறந்த நாள் விருந்தான கிறிஸ்துமஸ் மாபெரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் நள்ளிரவுப் பிரார்த்தனைகளுடன் தொடங்குங்கள்;

‘கிறிஸ்துமஸ் ஈவ்’ நாளில் கிறிஸ்துவர்கள் கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன்; ஒருவரை ஒருவர் மிகுந்த மகிழ்ச்சி, அமைதி, பரஸ்பர பரிசு வழங்குதல் ஆகியவற்றுடன் வாழ்த்திக் கொள்ளுங்கள்.!”

பக்தர்களை வழி நடத்தினார்கள்.

“உங்கள் உடமைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்க!”

“உங்கள் உடைமைகளுக்கு நீங்களேப் பொறுப்பு…!”

மெழுகு வர்த்தி ஏற்றும் போது எச்சரிக்கையாக இருங்கள்.

உடைகளைப் பாந்தமாகச் சுருட்டிக் கொண்டு, ஜோதி ஏற்றுங்கள்.

குழந்தைகள் ஜாக்கிரதை;

பக்தர்களுக்கு எச்சரிக்கைச் செய்தார்கள்.

கண்ட இடங்களில் குப்பைகளைப் போடாதீர்கள்.

கண்ட கண்ட இடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றாதீர்கள்.

ஆலயத் தூய்மையை அறிவித்தார்கள்.

“ஆமென்…!” என்றார்கள்.

“பூலோகத்தாரே யாவரும்
கர்த்தாவில் களிக் கூருங்கள்,
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப், பாட வாருங்கள்.”

கிறிஸ்துமஸ் கரோல்’

கீர்த்தனைகளைப் பாடினார்கள்.

கீதங்களைக் கூட்டாக இசைத்தார்கள்.

“ஏசு சீவிக்கிறார்… ஏசு சீவிக்கிறார்…!”

என்ற பரமபிதாவின் இருப்பைப் போற்றினார்கள்.

மணிக்கொரு முறை அடிக்கும் , தேவாலயக் கடிகார மணி “டாண்…டாண்…” என்று பதினோரு முறை அடித்தது.

அடித்து முடித்ததும் சிறப்பாய்ப் பதிவு செய்த வசனம் ஒலித்தது.

மத்தேயு 5-7 அதிகாரங்களில் இயேசு கொடுத்தப் பிரசங்கமே மலைப் பிரசங்கம் என்றறியப்படுகிறது;

மத்தேயு 5:1-2 வசனங்களை அவ்வாறு கூறக் காரணம், அவர் மலையில் அமர்ந்திருந்த போது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்;

இயேசு தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னதுதான் மலைப் பிரசங்கம் என்னும் மாபெறும் பொக்கிஷங்கள் ஆகும் ..!.”


பீட்டர் ஆரோக்கியசாமி ஆற்றப்போகும் மலைப் பிரசங்க உரையைப் பற்றி அவ்வப்போது டிரைலர் போல அறிவித்துக் கொண்டிருந்தது விழாக் குழு.

பக்தி மட்டுமேப் பிரதானமாய், மௌனமாய் வந்து, பிரார்த்தனை மண்டபத்தில் மண்டியிட்டுக் கண்மூடி தியானித்துச், சிலுவையிட்டுக்கொண்டு அமைதியாய்த் திரும்பும் ஒரு சிலரைத் தவிர பெறும்பாலானவர்களின் மனப்பாங்கு ரசிக்கத்தக்கதாய் இருந்தது.

ஒரு சில மணித்துளிகள் பிரார்த்தனை மண்டபத்தில் மண்டியிட்டுவிட்டு அவசரமாக வெளியேறுவதும்;

சுற்றுப் பிரகாரத்தில், மரத்தடியில் கும்பல் கும்பலாக அமர்வதும்;

கலாய்ப்பதும், கதை பேசுவதுமாகக் களிக்கும் கூட்டமே அதிகம் இருந்தது.

பைபிள் பெருமை, வசனங்களின் கூர்மை, கர்த்தரின் தியாகம், பாதிரியாரின் நாவன்மை, சுவிஷேஷங்களின் புனிதம் என்றெல்லாம் ஆன்மீகமாய்ப் பேசும் பக்தர்களும் அங்கங்கே இருக்கத்தான் செய்தார்கள்.


டிசம்பர் 25

“ஏழை எளியோருக்கு உதவி செய்து அன்பை வெளிப்படுத்துவோம்…!”

போப்பாண்டவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்தார்..

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர் கட்சித் தலைவர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், நடிகர்கள்…

ஊடகங்கள் மூலம் வாழ்த்துச் சொன்னார்கள்.

அனைத்துச் சானல்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகள், கேளிக்கைகள், பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள் என அமர்க்களப்பட்டன.

புத்தாடைப் புனைந்து கொண்டார்கள்.

ஒருவருக்கொருவர் கிறித்துமஸ் வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொண்டார்கள்.

‘மிட் நைட் மாஸ்க்’ சென்று, விடிய விடியக் கேளிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கூடச் சுணக்க மில்லாமல் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.

வீட்டில் அனைவரும் சேர்ந்துப் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியாக உண்டார்கள்.

பிற மதத்தவர்களையும் விருந்துக்கு அழைத்து விருந்தோம்பலில் மகிழ்ந்தார்கள்.


டிசம்பர் 26

பாக்ஸிங் டே

தேவாலயத்திற்கு வெளியே விழா மேடை அமைக்கப் பட்டிருந்த்து.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் ‘டிஸ்ட்ரிக் மேஜிஸ்ட்ரேட்’ தமிழரசன்’ அவர்கள்.

ஏழை மக்களுக்குக் ‘கிறிஸ்த்துமஸ் பரிசுப் பெட்டி’த் தருவது தான் தமிழரசனின் பணி.

விழாத் தொடங்கியது.

பிரார்த்தனை கீதம் இசைக்கப்பட்டது

சிறப்பு விருந்தினர் வரவேற்கப்பட்டார்.

முன் மொழிதல், வழி மொழிதல் எல்லாம் முறைப்படி முடிந்தன.

சால்வை அணிவித்தல்.

நினைவுப் பரிசு வழங்கல் என விழாத் தொடக்கம் சிறப்பாக முடிந்தது.

பார்வையாளர் பிரிவில், அந்தஸ்த்துக்குத் தக்கபடி இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

முதன்மைப் பாதிரியார்தான் சிறப்புப் பேச்சாளர் என்பதால், அவரைப் பார்வையாளருக்கு அறிமுகம் செய்து வைத்தார் விழாக்குழுத் தலைவர் எபிநேசர்.

ஏசுநாதரின் மலைப் பிரசங்கத்தைக் கண்முன் நிறுத்தியது அவரின் ஆற்றல் மிகு பிரசங்கம்.

“யெகோவாவுக்கு நண்பர்களாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்…?;

யெகோவாவின் வழிநடத்துதல் தேவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், அவரிடம் அன்பு காட்டக் கற்றுக்கொள்ள வேண்டும்;

அதேசமயம், மற்றவர்களிடமும் அன்பு காட்ட வேண்டும். இல்லையென்றால், கடவுளிடம் நம்மால் அன்பு காட்ட முடியாது;

எல்லாருக்கும் இரக்கம் காட்ட வேண்டும்;

எதிரிகளுக்கும்கூட இரக்கம் காட்ட வேண்டும்;

யாரிடமும் பாரபட்சம் காட்டக் கூடாது;

‘நண்பர்களிடம் மட்டும் அன்பு காட்டினால் போதாது. எதிரிகளிடமும் அன்பு காட்ட வேண்டும்;

விட்டுக் கொடுத்தலே உறவை வளர்க்கும்;

மனதார மன்னிக்க வேண்டும்.”

போன்ற நீதிகள்தான் பிரசங்கத்தின் பிரதானம் என்றாலும் அதைப் பேச்சாளர் மணிப்பிரவாள நடையில், தமிழும், ஆங்கிலமும் கலந்துச் சொன்ன விதம், குரல் ஏற்ற இறக்கங்கள், மெய்பாடுகள் அனைத்தின் கலவையாய் அப்படி ஒரு பரவசம் ஊட்டியது, பார்வையாளர்களுக்கு.

“பாதிரியாரின் சொற்பொழிவைக் கேட்ட மேஜிஸ்ட்ரேட் தமிழரசன் சிறிது நேரம் மெய் மறந்துத்

தன்னை இழந்து அமர்ந்து விட்டார்.

தொழில் வாழ்க்கையில் கோர்ட்டும், வக்கீலும், டிக்ரியும், ஈரங்கியும், வாய்தாவுமாய் இருக்கும் அவல நிலையை நினைத்து மருகியது சிறப்பு விருந்தினரின் மனம்…!

நீதிபதி தமிழரசன் அவர்கள், ஏழை எளியோருக்கு கிறிஸ்துமஸ் ‘கிஃப்ட் பாக்ஸ்’ வழங்கி, ‘பாக்ஸிங் டே’ யை நிறைவுச் செய்தார்….


கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்தது.

எல்லாத் துறைகளையும் போல நீதித் துறையும் பிஸியானது.

உரிமையியல் நீதி மன்றத்தில், நீதிபதி தமிழரசனின் முன் வந்தது ஒரு சிவில் வழக்கு.

காம்பவுண்ட்டு சுவர் இடிப்பது சம்பந்தமான பிரச்சனை.

“பில்லர் போட்டு முக்கால் அடிக் காம்பவுண்டு 200 அடிக்கு எடுக்கணும்னா நாலரை அஞ்சு லட்சம் செலவாகும்…இருக்கற காம்பவுண்டை பக்கத்து மனையினர் இடிக்கத் தடை விதிக்கக் கோரித் தொடர்ந்த வழக்கு அது.”

பக்கத்து மனை ‘ட்ரஸ்ட்’ என்பதால் கோரிக்கைதான் வைத்தான் வாதி.

“இரண்டடி அகலமுள்ள 250 அடி நீளம் வால் வீச்சு;

சுவரின் அகலம் 2 அடி;

காம்பவுண்டை இடிச்சா 2×250 = 500 சதுர அடி ட்ரஸ்ட்டுக்கு ஸ்பேஸ் கிடைக்கும்.

தேவைன்னா, பக்கத்து மனைக்கட்டுக்காரர் சுவர் கட்டிக்கட்டும் இல்லேன்னா வேலி வைக்கட்டும் டிரஸ்ட்டுக்கோ, வழிபாட்டுத் தலத்துக்கோ எந்த பாதிப்புமில்லை…..!’

‘கட் அண்ட் டிரை’யாய் வாதாடினார் பிரதிவாதியான பாதிரியார் ஆரோக்கியசாமி.

‘பாக்ஸிங் டே’யன்று, ‘விட்டுத் தருபவன் கெட்டுப் போவதில்லை’ என்று வலியுறுத்திய, மலைப் பிரசங்கச் சொற்பொழிவைக் கேட்டு ஆச்சரியத்தில் உரைந்த மாஜிஸ்ட்ரேட் தமிழரசன்…!;

இன்று, “விட்டுத் தருதல் என்ற பேச்சுக்கே இடமில்லை…!”

பாதிரியார் ஆரோக்கியசாமியின் உறுதியான மறுப்பைக் கேட்டு அதிர்ச்சியில் உரைந்தார்.

– 22-11-2022, ஆனந்த விகடன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *