தொழிலதிபராக சில ஆலோசனைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,416 
 

முழுப் பரீட்சை விடுமுறைவிட்ட கோடைக் காலத்தில், ஊருக்குத் தெற்கே உள்ள சந்தையில், முழங்கால் அளவுக்கு மேல் மேடிட்டு இருந்த விற்பனை மால் ஒன்றில் நான், ஆனந்தன், ரவி, வடிவேல் நால்வரும் இருந்தபோது முருகன் வந்தார். 40 வயதுக்கு மேல் ஆகியிருந்த முருகனுக்கு இரண்டு காரணங்களால் நீர்மூழ்கி என்று பெயர். கிணறுகளில் விழுந்துவிட்ட ஸ்பேனர் முதல் பிணம் வரை எடுத்து வந்து மேலே போடுகிற, ‘தம்’ கட்டுகிற சூரத்தனத்தால் அந்தப் பெயர். முருகனை ஊரில் போதையில் இல்லாத நிலையில் பார்த்தவர்கள் குறைவு என்பதாலும் அதே பெயருக்கு அவர் பாத்தியப்பட்டு இருந்தார்!

அன்றைக்கு முருகன் என் ஆழ் மனதில் பதிய வேண்டும் என விதி இருந்திருக்க வேண்டும். அவர் குடிக்கவில்லை. ஐஸ் நம்பர் விளையாடி முடித்து, அடுத்த விளை யாட்டு தீர்மானம் ஆகாத நிலையில், சிறுவர்கள் நாங்கள் வெப்பம் திளைத்துக்கொண்டு இருந்தபோது என்னை, ”இங்க வா கண்ணு!” என அழைத்தார். நாங்கள் மூன்று பேர் அவர் அருகில் சென்றோம்.

ஊரில் வெள்ளிக்கிழமை சந்தை. பிரதானமாக, செம்மறி ஆடுகளுக்காகப் பெயர் பெற்ற அது, ஊரின் வாழ் சூழ் பாழ் எனப் பல நிலைகளையும் தீர்மானித்தது. செம்மறி தவிர காய்கறி, கண் மை, பாட்டுப் புத்தகம், பூட்டு ரிப்பேர், சுக்கு, மிளகு, சூரிக்கத்தி எனப் பலதுக்கும் அது தளமாக இருந்தது.

வாதறக்காச்சி மரங்களை உள்ளிட்டு நிழல் தந்த சந்தையின் எட்டு ஏக்கர் பரப்பில் எந்த இடத்திலும் பொன்னிற ஆட்டு முடிகளும் மரகத விதையாய்க் கண்டு கடைசியில் மக்கி எருவாகும் ஆட்டுப் புழுக்கைகளும் விரவிக்கிடக்கும்.

முருகன், ”உங்களுக்கெல்லாம் ஒரு வித்தை காட்டப்போறேன்” என்று இரண்டு ஆட்டுப் புழுக்கைகளைக் கையில் எடுத்தார். முதல் புழுக்கையை இரண்டாகக் கடித்து அதில் பாதியை என் கையில் தந்தார். ஆட்டுப் புழுக்கையைக் கடிக்கிறாரே இந்த ஆள் என்று எனக்கு ‘உவ்வே’ வந்தது. அடுத்தும் ஒரு புழுக்கையை எடுத்துக் கடித்தார் (இது பாவனை என்று தெரிய அடுத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று). ஒரு பாதியை எங்களுக்குத் தந்தார்.

”இப்ப இந்த ரெண்டு அரைப் புழுக்கையையும் ஒண்ணா ஒட்டவெச்சித் தர்றேன் பாரு. எவ்வளவு பந்தயம்?” என்றார். நாங்கள் காசு எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும், இரண்டு அரைப் புழுக்கைகளை ஒட்டவைத்த முழுப் புழுக்கையை அவர் வாயில் இருந்து எடுத்துக்காட்டினார். முருகன் தொழிலதிபர் ஆகாமலேயே செத்துப்போனார். அவர் எப்படி புழுக்கையை ஒட்டவைத்தார்? வாய்க்குள் வைத்து இருந்த பிசின் என்ன? அல்லது, மந்திரம் என்ன? என்று கன காலம் வியந்து யோசித்தவாறே இருந்தேன். அப்புறம் எதோ ஒரு புத்தகத்தின் வாயிலாக விடை தெரிந்தது.

இப்பவும் தொழிலதிபருக்கான குணவிலாசம் உள்ள நீங்கள் அந்தச் சூட்சுமத்தை அறிந்திருக்க வேண்டும். அதாவது, முருகன் இரண்டாவது வாயில் போட்ட புழுக்கையைக் கடிக்கவே இல்லை. சும்மா குதப்பியதோடு சரி. முதலில் கடித்த புழுக்கையின் அடுத்த பாதியைத்தான் எங்களிடம் காண்பித்து இருக்கிறார்!

எனக்கு ஆட்டுக் குட்டிகளின் மீது நேசம் அதிகரித்தவாறே இருந்தது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது தோட்டத்தில் பாத்திகளுக்கு இடையில் தண்ணீர் ஓடி முடிந்த ஒரு குளுகுளு மாலையில் ‘நான் இனிப் படிக்கப்போகவில்லை. ஆடு மேய்க்கப் போகிறேன்’ என்று நான்கு பக்கத்துக்கு அப்பாவுக்குக் கடிதம் எழுதினேன்.

வீட்டுத் திண்ணையில் வைத்து விவாதிக்கப்பட்ட கடிதச் சாரம், எனக்கும் ஆடுகளுக்கும் சாதகமாக இருக்கவில்லை.

”இவ்வளவு சிறப்பா லெட்டர் எழுதியிருக்கானே. இப்பவே இவ்வளவு சிந்தனைத் தெளிவுன்னா… அடேங்கப்பா! இவன்லாம் கலெக்டர் ஆனா, நாட்டுக்கே நல்லது!” கடிதத்தைப் படித்துவிட்டு ஒரு அண்ணன் வந்து இப்படிச் சொன்னதும் நான் பள்ளி செல்வது தவிர்க்க இயலாததாயிற்று. மனசாட்சியின் சொல்படி நடக்க எளியவர்களுக்கு எப்போதும் அனுமதி இல்லை.

பிளஸ் டூ முடித்த பிறகு கல்லூரி போகக் காசுக்குத் தட்டுப்பாடு வந்ததில் நாடு ஒரு கலெக்டரை இழந்தது!

ஊரில் உத்தேசமாக 50 ஆடுகள் மேய்க்கும் வளப்பம் உள்ள நிலம் இருந்தும் ஆட்டுப் பராமரிப்பு குடும்பத்தால் இயலாது போயிற்று. ஆடு மேய்ப்பவர்கள் கடவுளுக்குச் சமமானவர்கள். அடக்கம் அமரருள் உய்க்கும் என வள்ளுவர் ஆடு மேய்ப்பவர்களைத்தான் சொல்லியிருக்கிறார். அத்தனை பொறுமை வேண்டும். அத் தொழில் பெரும்பாலும் உங்களைக் கைவிடுவது இல்லை.

(ஆலோசனை-1: எல்லாத் தொழில்களுக்கும் இந்தப் பொறுமை பொருந்தும்).

கடைசியாக, 20 ஆடுகளுக்கு மேல் எங்கள் பட்டியில் இருந்த பருவம் எனக்கு நினைவிருக்கிறது. நான் 22 வயதில் முற்றா இளைஞனாக ஒரு தொழிலில் சுற்றிக்கொண்டு இருந்தபோது, அப்பா என்னைவிடத் துடிப்பாக ஆடுகளுடன் அலைந்துகொண்டு இருந்தார். தொழிலை மேன்மையாக்குகிறேன் என்று பட்டி ஆடுகளை விற்றார். அந்தத் தொழில் காலியான சில நாளில் வெறுங்கிடைக்குத் திரும்பினார். எனது தொழிலுக்கு நான் இரங்கற்பா எழுத ஆடுகளின் தயவு தேவையாக இருக்கவில்லை.

அப்புறம், தோட்டம் அப்பாவின் பொறுப்பில் இருப்பதால் இன்றளவும் ஆறேழு ஆடுகள் தோட்டத்தில் இருக்கும். நான் வீட்டைவிட்டு, ஊரைவிட்டு வெளியேறிவிட்டேன். குடும்பத்தினரின் சடைவு மற்றும் அதிருப்தியைச் சம்பாதித்துக்கொள்ள மாத, இரு மாத இடைவெளிகளில் ஊருக்குப் போவது உண்டு.

இப்படியான காலகட்டத்தில்தான் தம்பி என என்னால் அழைக்கப்படும் நண்பன் புவனராஜன் என்னைச் சந்தித்தான்.

தடை தாண்டும் ஓட்டத்தை நினைவூட்டும் வகையில், எங்கள் வீட்டு வெளித் திண்ணையில் செயல்படும் மாலை நேர புரோட்டாக் கடையைத் தான் ஏற்று நடத்துவதாகச் சொன்னான். எந்த ஒரு பரிசோதனையையும் தாங்கக்கூடிய வன்மையை அது பெற்றிருந்ததால், நான் அதற்குச் சம்மதம் சொன்னேன்.

சூடேறாத காலைப் பொழுது ஒன்றில் இளங்காற்றின் இசைப் பின்னணியில் எனக்கும் அவனுக்குமான உரையாடல் இவ்விதமாக இருந்தது. ”அண்ணா! ஃபர்ஸ்ட் நாம செய்யவேண்டியது பக்காவா ஒரு போர்டுண்ணா. வினைல் போர்டே வெச்சுக்கலாம்” என்றான் புவனராஜன்.

”முதல்ல நாம செய்ய வேண்டியது ஒரு நல்ல மாஸ்டரைப் பிடிக்கணும்.”

”அது பாத்துக்கலாம். நம்ம கடைக்கு ஒரு பேரு சொல்லுங்க?”

”புவனராஜன் புரோட்டா ஸ்டால். இதைவிட ஒரு சூப்பர் பேரு கிடைக்குமா?”

”விளையாடாம வேற பேரு சொல்லுங்க?”

”ஹோட்டல் சுதமதி.”

”இது யாரு?”

”மக்கள் யாக்கை உணவின் பிண்டம் இப்பெருமந்திரம் இரும்பசி அறுக்கும்… அதாவதுடா, மணிமேகலை இருக்கா இல்லியா. அவ வந்து மாதவி சாயல்ல மட்டும் இல்லாம சுதமதி சாயல்லையும் இருக்கறா. சுதமதி வந்து…”

”நாம தமிழ் வளர்ச்சிக் கழகம் நடத்தலைண்ணா. ஹோட்டல் நடத்தப்போறோம்.”

”சரி, விடு தம்பி. சிந்தாதேவின்னு வெச்சிடுவோம். அமுத சுரபியை மணிமேகலைக்குத் தந்தது ஆபுத்திரன். அந்த ஆபுத்திரனுக்கே தந்தது சிந்தாதேவி.”

புவனராஜன் கோபப்படவில்லை என்றாலும் கூட உடனடியாக இடத்தைக் காலி செய்தான். அன்றைய மாலை நேரத்தில் இருந்து அவனது கடமைகள் தொடங்கின. நாள் கூலிக்கு புரோட்டா போட வந்தவன் என் முன்னாள் மற்றும் எந்நாளுக்குமான ஒரு நண்பன். நாளின் சம்பளத்தை நள்ளிரவுக்கு முன்பாக நான்கு பிரிவாகப் பிரித்து வாங்கிக்கொண்டான். எங்கள் கடையை அடுத்தே மதுக் கடை இருந்தது இதற்குக் காரணம்.

அடுத்த முறை நான் ஊருக்குச் செல்லும்போது இரண்டு ஆடுகள் இறந்துபோய்விட்ட தாக அப்பா கூறினார். அப்போது புவன ராஜனும் அருகில் இருந்தான். ‘ஆடுகள் ஏன் இறந்தன’ என்ற கேள்விக்கு அப்பா சொன்ன பதில் ஆச்சர்யமாக இருந்தது. கடையில் மீதியான புரோட்டாக்களை ஆடுகளுக்குப் போட்டதாகவும், மைதாவின் நொதித்தல் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஆடுகள் வயிறு உப்பி உயிர் இழந்ததாகவும் சொன்னார்.

(ஆலோசனை-2: ஆடுகளுக்கு புரோட்டாவை உணவாக அளிக்கக் கூடாது.)

”யாருக்கு இப்படி ஆட்டுக்கு புரோட்டா போடுற ஐடியா வந்துச்சு?” என்றபோது அப்பா, புவனராஜன் இருவருமே ஒருசேர அறியாமையை ஒப்புக்கொண்ட தொனியில் புன்சிரிப்பை உதிர்த்தார்கள்.

அப்போது அவர்களைப் பார்க்கும்போது நாகஸ்வர இரட்டையர்கள்போலக் காட்சி அளித்தனர். மணிமேகலைக் காப்பியத்தில் இருந்து கடைக்குப் பெயர் சூட்டியிருந்தால் நிகழ்ந்திருக்கப் போகும் உயிர் அபாயங்களை நினைத்து நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன்.

புவனராஜன் சீக்கிரம் வேறொரு தொழிலுக்குச் சென்றான். அடுத்த முறை ஊருக்குப் போனபோது குளிர்ந்த மாலையில் அப்பா ஆடுகள் இரண்டு இறந்துவிட்டதாகச் சொன்னார். எனக்குக் கோபம் வரவில்லை. நாங்கள் குடும்பத்தில் சண்டையெடுக்க யாரும் எதிர்பாராத காரணிகளைக் கையாளுவது பழக்கம். நீலநாக்கு, கோமாரி போன்ற நோய் களால் அவை இறந்திருக்காது என்பதை அறிவேன். ”எப்படிங்கப்பா செத்துச்சு?”

”ஒரு ரூபா ரேஷன் அரிசி இருக்குல்ல. அம்மா ஆட்டுக்கு அரைச்சு ஊத்தினப்ப கொஞ்சம் அதிகமா ஊத்திட்டா!”

ஒரு ரூபாய் அரிசியால் நஷ்டப்படவும் ஆள் உண்டு என எண்ணியபோது, அதன் புதிர்த் தன்மையால் அமைதி ஆனேன்.

(ஆலோசனை-3: நஷ்டச் செய்திகளை மாலை நேரம் அல்லது குளிர்ந்த சூழலில் ஏ.சி. அறைகளில் அறிவியுங் கள்.)

(ஆலோசனை-4: மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக எது ஒன்றையும் மிதமிஞ்சிப் பிரயோகிக்காதீர்கள்.)

இதற்கு இடையில்தான் என் நண்பர்கள் சிலர் லட்சக் கணக்கில் முதலிட்டு ஆட்டுப் பண்ணை வைத்தது. சமவெளிக்காரர்கள் சேர்ந்து தமது பிராந்தியத்துக்கு அப்பாற்பட்ட ஒரு மலையடிவாரத்தில் வைத்த பண்ணை அது. அந்த ஆடுகளின் தன்மை, அப்புறம் அந்தப் பகுதி மனிதர்களின் தன்மை இரண்டையும் கண்டடைவதற்கு முன்னமே உற்சாகத்தில் முக்கால்வாசி போய்விட்டது. அப்புறம் பட்டாபட்டி டவுசருக்கு மேல் வெள்ளைவேட்டி கட்டின மேலாளர்கள் பலர் பார்வையிட்டு, விதவிதமான நடைமுறைகளை அங்கு அமல்படுத்தினார்கள். ஆட்டுப் பண்ணையின் மீது செலுத்தப்படும் ஆதிக்கக் கரங்களின் எண்ணிக்கை ஆடுகளைக் காட்டிலும் அதிகமாக இருந் ததால், பண்ணை தனது செயல்பாட்டை இழந்தது.

அதனால்தான் சமீபத்தில் தோழி ஒருவர் ஆட்டுப் பண்ணைபற்றிப் பேசியபோது நான் சொன்னது ஒரே வாக்கியம்தான்.

”பண்ணைக்கு ஒரு மேலாளர் மட்டும் இருக்கிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள்.”

(ஆலோசனை-5: மேலாளர் என்பவர் பலரது யோசனைகளைக் கேட்டு இறுதியாக சரியான முடிவை எடுத்து, அதை ராணுவ நிர்தாட்சண்யத்துடன் அமலாக்குகிறவராக இருப்பார். இப்படி எவ்வளவு அதிக மேலா ளர்களைப் பெறுகிறீர்களோ அவ்வளவு பெரிய அதிபர் நீங்கள்!)

எட்டு மாதங்களுக்கு முன்னால் மாமனார் மூன்று செம்மறி ஆடுகள் வாங்கினார். எண்ண அலைகள் வேலை செய்கிறது என நினைத்துக்கொண்டேன். இல்லாவிட்டால் தேனீ வளர்ப்பதில் வல்லவரான அவர், இந்த வேலையில் ஈடுபடவேண்டியது இல்லை.

ஆடு ஒவ்வொன்றும் 1,400 ரூபாய். மொத்தம் 4,200 ரூபாய். என் கண் முன்னால்தான் விலை பேசி வாங்கினார். உண்மைகளைத் தெரிவிக்க 900 வார்த்தைகளுக்கும் அதிகமாக எழுதிக்கொண்டு இருப்பவனின் சொல் அவர் முன்னால் எடுபடாது என்பதனை நான் நன்கு அறிவேன்.

மேய்த்துக்கட்டி, தண்ணிவைத்து, புழுக்கை அள்ளி சில மாதங்களுக்குப் பிறகு அவை பெற்றுத் தரப்போகும் நிகர நட்டம் அப்போதே என் மனக்கண் முன்னால் தெரிந்தது.

(ஆலோசனை-6: ஆடுகள் வாங்கும்போது இளம் ஆடுகளாக வாங்க வேண்டும் அல்லது சினைத் தருணத் துடன் ஈன்றிப் பெருக்கும் நிலையில் உள்ளவற்றை வாங்க வேண்டும். இடை நிலையில் கொள்ளப்படுகிறவை மிக வெற்றியைத் தாரா. ஆடுகளுக்கு உள்ள இதே விதிதான் ஆலைகளுக்கும்.)

அந்த மூன்று ஆடுகளும்… நானும் மகளும் தமிழரசி, ஸ்டெல்லா, அகிகோ எனப் பெயரிட்டுக் கொஞ்சுவதற்கு ஏதுவாக இருந்தன. இது பொருள் மதிப்பில் படாது.

மற்றபடி காட்டுக்குக் கொஞ்சம் புழுக்கைகள் மிஞ்சின. பனிக் காலத்தில் நள்ளிரவுக் குளிரில் தொட்டி ஆட்டோவில் அவற்றை ஏற்றிப்போய் விற்றுவிட்டு வந்த மாமனார், இரண்டு நாட்கள் காய்ச்சலில் படுத்திருந்தார். என்ன விலைக்கு விற்றது என்று கேட்டதற்கு அசலுக்குத்தான் போச்சு என்றார். உளவுத் திறமை மூலம் அவர் 200 ரூபாய் நட்டத்துக்கு விற்றதை பிற்பாடு அறிந்தேன். சாதாரணமாகக் காய்ச்சலில் படுக்கும் ஆசாமி அல்ல அவர். ஆன்மாவில் விழுந்த அடியாக அவர் அந்த ஆட்டு வியாபாரத்தை எண்ணியிருக்க வேண்டும்.

இறுதியாகவும் தொழிலதிபர் ஆவதற்குத் தீர்க்கமான ரெண்டே ரெண்டு குணங்களை அறிந்துகொண்டேன். ஒன்று, இரண்டு அரைப் புழுக்கைகள் ஒன்றாக மாறும் விந்தைக்கு உங்களுக்கு விடை தெரிந்துவிடக் கூடாது.

இரண்டாவது, அந்த விந்தை அல்லது வித்தைபற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்க வேண்டும். அதே நேரம் அதைப்பற்றி யாரிடமும் கேள்வி கேட்காமலும் பகிர்ந்துகொள்ளாமலும் இருந்துவிட வேண்டும்!

– மே 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *