கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 3,876 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6

அத்தியாயம்-3

“சார்… நான் அப்படியெல்லாம் ஃபீல் பண்ண மாட்டேங்க! நீங்க எந்த வேலை செய்ய சொன்னாலும் செய்வேங்க!” என்றாள் அவசரமாக ரேகா!

“அப்புறம் என்னங்க? இந்தப் பொண்ணு இங்கேயே இருக்கட்டும்.”

“சரி….. உன் பேரென்ன சொன்னே? ரேகாவா? ரேகா… பாதரோட நம்பிக்கைக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும். ஓக்கே?”

“கண்டிப்பா சார்”

“மம்மி.. யாரிது பெட்டியும் கையுமா?” ஜீன்ஸும், டி சர்ட்டும் அணிந்து மதமதப்பாய் இருந்த சுபத்ரா ரேகாவை ஏற இறங்க பார்த்தபடி கேட்டாள்.

அம்பிகா சொன்னாள்.

“ஓ… அனாதை ஆஸ்ரமத்திவேர்ந்து வந்த டிக்கெட்டா? நம்ம வீட்லே வேலை கொடுக்கணும்னு முடிவே பண்ணியாச்சா? உனக்கும் வேற வேலையில்லே? டாடிக்கும் வேற வேலையில்லே” ரேகாவை பார்த்த முதல் பார்வையிலேயே திருப்தியில்லாமல் சுபத்ரா எரிச்சலுடன் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

“அவ சின்னப் பொண்ணு…. விளையாட்டா பேசிட்டுப் போறா. தப்பா நினைச்சுக்காதே என்ன?” அம்பிகா ஆறுதலாய் சொன்னாள்.

“இல்லே… நான் தப்பா எதுவும் நினைச்சுக்கலே!”

“அம்பிகா.. இந்த பொண்ணை அவுட் ஹவுசிலே தங்க வச்சிடு. நான் வர்றேன்“ என்று புறப்பட்டு விட்டார் ஏகாம்பரம்.

“சரிங்க.. வா.. ரேகா….” என்று அழைத்துச் சென்று அவள் தங்கும் அறையை காட்டினாள்.

“வந்து…!”

“என்ன ரேகா?”

“நான் இன்னைக்கே வேலையிலே ஜாய்ன் பண்ணிக்கலாமா?”

“வேண்டாம்.. ஆக்ஸிடன்ட்ல அடிபட்டு வந்திருக்கே! ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்புறம் ஜாய்ன் பண்ணிக்க”

“ரொம்ப நன்றிங்க! அப்புறம்…”

”சொல்லு… வேறென்ன”

“நான் உங்களை எப்படி கூப்பிடறது? மேடம்னா?” அம்பிகா அவளையே சில கணங்கள் பார்த்தாள்.

“வேண்டாம்! அம்மானு கூப்பிடு”

“அம்மா!” உச்சரித்துப் பார்த்தாள்.

சிலிர்த்து போனாள் அம்பிகா. “இன்னொரு முறை சொல்லு!”

“அம்மா”

“என் பொண்ணு சுசீலாவே கூப்பிடற மாதிரி இருக்கு ரேகா” அவள் கையை கெட்டியாய் பற்றிக் கொண்ட அம்பிகா…ரேகாவின் கண்களில்எதையோ தேடினாள்.

”அம்மா இங்கே என்ன பண்ணிட்டிருக்கே? உனக்கு போன்…!” எரிச்சலுடன் வாசலில் வந்து நின்று கூப்பிட்டாள் சுபத்ரா.

“இதோ..வந்துட்டேன்! ரேகா…வர்றேம்மா! சாப்பாடு அனுப்பறேன்… சாப்பிடு என்ன?” என்று சுபத்ராவின் பின்னால் ஓட்டமும் நடையுமாய் விரைந்தாள்.


அர்விந்த்… அந்த ஹாஸ்பிடலுக்குள் நுழையும் போதே… அதிர்ச்சி காத்திருந்தது.

‘நேற்று சிகிச்சைக்காக சேர்த்திருந்த பெண்.. நேற்றே இங்கிருந்து போய்விட்டாள்’ என்றதும் நம்ப முடியாமல் அவன் தங்கியிருந்த அறைக்கே சென்று பார்த்தான். அந்த இடத்தில் இன்று வேறொரு நோயாளி!

அர்விந்த் குழம்பிப் போனாள்.

ஏன், எதனால் அந்தப் பெண் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போனாள்? அவள் பெயரைக் கூட தெரிந்து கொள்ளவில்லை. இன்று விசாரித்து உரியவர் வீட்டில் பத்திரமாய் ஒப்படைக்க வேண்டும் என்றல்லவா நினைத்திருந்தேன்? ஏனிப்படி ஒரு காரியம் செய்தாள்? ஒருவேளை… அவள் நார்மலான மனநிலை உள்ள பெண்ணில்லையோ? சேச்சே…அப்படியிருக்காது எவ்வளவு தெளிவாய் என் பெட்டி எங்கே என்று கேட்டாளே!

அர்விந்தால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

ஹாஸ்பிடலில் பில்லுக்கான பணத்தை செலுத்தி விட்டு வெளியில் வந்தான்.

காரில் அமர்ந்தவன்…யோசனையுடன் காரை கிளப்பாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.

எவ்வளவு நேரம் அப்படியிருந்தானோ?

“ஹலோ அர்விந்த்… என்ன இங்கே?” என்ற பரிச்சயமான, ஆச்சர்யமான குரலைக் கேட்டு கலைந்தான்.

ஏகாம்பரம் நின்றிருந்தார்.

“ஹலோ… அங்கிள்!”

“என்ன அர்விந்த் இங்கே? இந்த வழியா கார்ல போய்கிட்டிருந்தேன். அப்பதான் உன்னோட கார் கண்ல பட்டுச்சு! ஹாஸ்பிடல்ல யாரையாவது பார்க்க வந்தியா?”

“நோ அங்கிள். அது ஒரு பெரிய கதை” என்றவன் நடந்ததை எல்லாம் கூறினான்.

அவன் சொல்ல சொல்ல, ஏகாம்பரம் வியப்பில் ஆழ்ந்தார்.

“ஏன் அர்விந்த்? எதுக்காக அந்தப் பொண்ணு சொல்லாம கொள்ளாம போய்ட்டா?”

”அதுதான் எனக்கும் புரியலே அங்கிள்.”

“அவ பேரென்ன சொன்னேற”

“எனக்கே தெரியாது.”

“சரி.. விடு! அதையே நினைச்சி குழம்ப வேண்டாம். ஆமா.. நேத்து சுலோவோட பிறந்தநாள் தெரியுமில்லே? ஏன் வரலே”

“நேத்து டைட்வொர்க் அங்கிள், வெரி சாரி”

“இட்ஸ் ஓக்கே! தனியா பிசினஸ் எண்ணிட்டிருக்கியே…எப்படி போய்க்கிட்டிருக்கு?”

”எவ்ரிதிங் இஸ் கோயிங் பைன் அங்கிள்”

”ஏம்பா.. இந்த வயசிலே உங்கப்பா தனியா கம்பெனிய நடத்திக்கிட்டிருக்காரே. அந்த பொறுப்பை நீ ஏத்துக்கிட்டு நடத்தலாமில்லே? அதை விட்டுட்டு தனியா எதுக்குப்பா நீ நடத்தணும்”.

“அங்கிள்.. எந்த விஷயத்திலேயும் ஆர்வத்தோடு முழு மனசோட ஈடுபடனும். மத்தவங்களுக்காகன்னு தங்களோட விருப்பத்தை காலடியில் போட்டு நசுக்கிட்டு விருப்பமேயில்லாம எதிலேயும் ஈடுபடறது எனக்கு பிடிக்காத விஷயம். சின்ன வயசிலேர்ந்தே கம்ப்யூட்டர் இன்ஜினீயரா வரணும்னு ஆசை, அதுக்காகவே படிச்சேன். இந்த படிப்பை ஆதாரமா வச்சுக்கிட்டு பாரின் போய் லட்சம் லட்சமா சம்பாதிக்கலாம். ஆனா, எனக்கு அதிலே விருப்பமில்லே. என்னோட படிப்பு தந்த அறிவை நம்ம நாட்டிலே, நம்ம மண்ணிலே பயன்படுத்தணும்னு ஆசைப்பட்டேன். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கணும்னு விருப்பப்பட்டேன், என்னோட கனவுகளுக்கு நேர்மாறான அப்பாவோட கிரானைட் பிஸினஸை நான் எப்படி எடுத்து நடத்த முடியும்? அதனால் தான் என் இஷ்டப்படி தனியா கம்பெனி நடத்தி அதிலே வெற்றியும் அடைஞ்சுட்டேன்.”

“என்ன இருந்தாலும் உங்கப்பாவுக்குப் பிறகு..அந்த கம்பெனிக்கு எல்லாமே நீதானே அர்விந்த்? கூட தம்பி, தங்கைன்னு பிறந்திருந்தாக்கூட அவங்ககிட்டே ஒப்படைக்கலாம். ஆனா, அதுக்கும் வழியில்லே. உங்கப்பா என்கிட்டே சொல்லி சொல்லி புலம்பறார்.”

“….”

“இதுக்கு ஒரே வழிதான் இருக்கு.”

“என்ன அங்கிள்?”

“உனக்கொரு கல்யாணம் பண்ணி.. வரப்போற மருமககிட்டே கம்பெனி பொறுப்பை ஒப்படைக்கறதுதான்.”

“அதுவும் எப்படி சாத்தியமாகும். அங்கிள்! வரப்போறவ என்னை மாதிரி டேஸ்ட் உள்ளவளா இருந்தா?” சிரித்தபடி கேட்டான் அர்விந்த்.

“உங்கப்பா இஷ்டப்படி பொண்ணை தேடிட்டா… எல்லாமே சாத்தியம்தானே அர்விந்த்?”

“கிடைக்கணும். கிடைக்கறவ எனக்கு பிடிக்கணும். எவ்வளவு விஷயங்கள் இருக்கு தெரியுமா?”

“நானும் உங்கப்பாவும் ப்ரன்ட்ஸானது நாங்க ரெண்டு பேரும் ஒரே பிஸினஸ் லைனில் இருந்ததால்தான், ”

“ஐ.. நோ”

“யு.நோ.. சுபத்ராவுக்கும் இந்த லைனில் இன்ட்ரஸ்ட் இருக்கு.”

“ஸோ.. வாட் அங்கிள்?”

“நத்திங். நேரமாச்சு.. அர்ஜென்ட்டா ஒருத்தரை பார்க்க கிளம்பிட்டிருக்கேன். பை அர்விந்த்.” இதழோரம் ஒரு சிறு புன்னகையை நெளிய விட்டு அவனிடமிருந்து விடைபெற்று சென்றார் ஏகாம்பரம்.

அர்விந்த் தோள்களை குலுக்கிக் கொண்டு காரை உசுப்பினாள்.

அத்தியாயம்-4

அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட ரேகா… குளித்து முடித்து வேலையில் ஈடுபட்டாள். கிச்சனில் நுழைந்து காபி போடுவதிலிருந்து…அனைவருக்கும் பரிமாறுவது வரை அவளே செய்தாள்.

“ரேகா… நீ கணக்கு வழக்கெல்லாம் பார்த்தால் போதும். இதெல்லாம் நீ ஏம்மா செய்யறே? அதுக்குதான் குக் இருக்காங்களோ” என்றாள் அம்பிகா.

“பரவாயில்லேம்மா! ஆஸ்ரமத்துலே எல்லா வேலையும் எல்லாருமே செய்வோம்.. இங்கே சும்மாயிருக்க எனக்கு என்னமோ மாதிரியிருக்கு! இதுக்கூட செய்யலேன்னா… எப்படிம்மா?”

“வாங்கற சம்பளத்துக்கு அவ வேலை செய்யுறா! உனக்கேன் கரிக்குது? செய்யட்டுமே!” என்றாள் பட்டென்று சுபத்ரா.

”சுபி… என்ன இது கெட்ட பழக்கம்? ரேகா உன்னை விட வயசிலே பெரியவ! அவளைப் போய் அவ இவன்னு மரியாதையில்லாம பேசறே?” அதட்டினார் ஏகாம்பரம்.

“இந்த வீட்லே… வேலைக்காரிய அவ இவன்னு சொல்லக் எனக்கு உரிமையில்லாம போச்சா? சே… வரவர இந்த வீட்லே எனக்கு நிம்மதியே இல்லாமப் போய்டுச்சி!” கையை உதறி… சாப்பிடாமலே எழுந்து சென்று விட்டாள் சுபத்ரா.

“சுபி…சுபி..”அம்பிகா கூப்பிட கூப்பிட போய் விட்டாள்.

“விடு… அம்பிகா! அவ பசி தாங்கமாட்டா! தானே வருவா!” என்றார் ஏகாம்பரம்.

“வளர்ந்துட்டாளே ஒழிய இன்னும் பச்சைக் குழந்தை மாதிரி பிடிவாதம் பிடிக்கிறது மாறலே” என்றான் அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்த தினேஷ்.

அவ…அப்படியென்ன தப்பா பேசிட்டா?” என்றாள் கனகா.

“கை நீட்டி சம்பளம் கொடுக்கறவன் ஆண்டவனுமில்லே. கைநீட்டி வாங்கறவங்க அடிமையுமில்லே! உழைப்புக்கேத்த கூலியை தானே வாங்கறாங்க? இலவசமா தந்துடலியே! அதுக்காக மனுஷனை மனுஷனே மரியாதை குறைவா நடத்தறதோ, கேவலமா பேசறதோ. கூடாது கனகா! ரேகா… இன்னும் கொஞ்சு கூட்டு வையம்மா”

கணவன் அவளுக்காக பரிந்து பேசியதுக்கண்டு நெஞ்செரிந்தது கனகாவிற்கு. ஆனால், தினேஷின் பெற்றோர்களுக்கோ பிள்ளையும் தங்களைப்போல் இருக்கிறானே என்ற சந்தோஷம்.

மூன்று குழந்தைகளை வைத்து கொண்டு, ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட இல்லாமல் பசியோடு வாடிய காலம் ஒன்றிருந்ததே! அந்த பசி கொடுமையால் தானே தங்கள் மகள் சுசிலாவை ஒரேயடியா இழந்தனர்? இன்று உணவிருக்கிறது. பசியில்லை! இதற்கு காரணமும் சுசீலா தானே! அவள் போட்ட பிச்சைதானே இந்த பணம், கார், பங்களா…எல்லாமே!

பழையவை எட்டிப் பார்த்தது ஏகாம்பரத்திற்கு கண்கள் கலங்கியது.

ரேகாவிற்கு ஆரம்பத்தில் சுபத்ரா, கனகாவின் உதாசீனம் மனம் வருத்தியதென்னவோ நிஜம்.ஆனால்
ஏகாம்பரம், அம்பிகாவின் அன்பும், தினேஷி சிநேக மனப்பான்மையும் அவளுக்கு ஆறுதலை தந்தன. யார் என்ன திட்டினாலும்… பொறுத்து கொண்டாள்.

“அம்மா.. நான் சாப்பாடை சுபத்ராம்மா ருமுக்கே கொண்டு போய் தரட்டுமா?” என்றாள் ரேகா.

“ப்ச்.. வேணாம் ரேகா! அவ எரிஞ்சு விழுவா” என்றான் தினேஷ்!

“இதெல்லாம் எனக்கு பழகிப்போச்சி. பாவம் சாப்பிடாம எத்திரிச்சுப் போய்ட்டாங்க “

“ரேகா சொல்றதும் சரிதான். நீ கொண்டு, போய் கொடு ரேகா” என்றாள் அம்பிகா.

ரேகா தட்டோடு அகன்றதும் அம்மாவை ஏறிட்டான் தினேஷ்.

“என்னம்மா நீங்க? ரேகாவைப்போய் இந்த வேலையெல்லாம் செய்ய சொல்லிக்கிட்டு? ரேகா ஆர்பனேஜ் வளர்ந்தவளாயிருந்தாலும் படிச்சிருக்கா! அவ படிப்புக்கேத்த வேலை கொடுக்க முடியாவிட்டாலும் வீட்டை மேனேஜ் பண்ற பொறுப்பை கொடுத்திருக்கீங்க! கிட்டத்தட்ட மேனேஜர் மாதிரி! ரேகா வலிய வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டு செய்றா! ஏற்கனவே நம்ம சுபிக்கு ரேகான்னாலே பிடிக்கலே. வேலைக்காரி மாதிரி டீஸ் பண்ணிட்டிருக்கா! இப்ப அவ ரூமுக்கே சாப்பாடு கொண்டு போய் கொடுக்க சொல்றீங்க! இது போதாதா சுபிக்கு? சுபிக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்துட்டீங்க! அதனால மனுஷங்களை மதிக்கத் தெரியலே அவளுக்கு”

“நல்லா சொல்லுப்பா உங்கம்மாவுக்கு!” என்று ஆமோதித்தார் ஏகாம்பரம்.

“ஒரு பொண்ணை அநியாயமா இழந்தோம். அதனால சுபி செய்யற எந்த ஒரு சின்ன தப்பையும் கண்டிக்க மனசு வரலைங்க! நான் என்ன பண்ணட்டும்?”

“சரி…சரி… அந்த பொண்ணை இனிமேல் வீட்டு வேலை எல்லாம். செய்ய அனுமதிக்காதே! பாதருக்கு தெரிஞ்சா… என்னை என்ன நினைப்பார்? அவளை வெளிவேலைகளுக்கு அனுப்பி பழகு!”

“சரிங்க!” என்றாள் அம்பிகா.


கட்டிலில் குப்புற கவிழ்ந்து படுத்திருந்தாள் சுபத்ரா. கதவு திறந்து தான் இருந்தது. ஆனாலும் உள்ளே போக பயமாக இருந்தது.

கதவின் மேல் இருவிரல்களால் தட்டி சப்தமெழுப்பினாள் ரேகா.

பாம்பை போல் திரும்பி தலை தூக்கிப் பார்த்த சுபத்ராவுக்கு… அடங்கியிருந்த கோபம் கிளர்ந்தெழுந்தது.

“எங்கே வந்தே?”

“சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்”

“நான் கேட்டேனா?”

“கோபத்துல சாப்பிடாம வந்துட்டீங்க! வயித்தை காயப்போடாதீங்க… சாப்பிடுங்க!”

“ஸ்டாப்பிட்! நீ யாரு எனக்கு அட்வைஸ் பண்ண? மரியாதையா வெளியே போய்டு”

“சாப்பாடை உதாசினம் பண்ணாதீங்கம்மா…!”

சுபத்ரா எழுந்து அவள் அருகில் வந்தாள். “என்ன சாபம் தர்றியா? சாப்பாடை உதாசீனம் பண்ணினா, எனக்கு சாப்பாடு கிடைக்காதா? நான் என்ன உன்னை மாதிரி அப்பா, அம்மா இல்லாத அனாதையா? எடுபிடி வேலைக்கு வந்த அனாதை… நீ… நீ எனக்கு அட்வைஸ் பண்றியா? மரியாதையா எல்லாம் எடுத்துக்கிட்டு வெளியே போய்டு!” அவளின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இதயத்தை ரம்பம் போல் அறுக்க… திகைத்துபோய் நின்றிருந்தாள்.

”போன்னு…சொல்றேனில்லே?” ஆத்திரத்தில் அவள் கையிலிருந்த தட்டை பறித்து அவள் மீதே வீசியெறிய… அதிலிருந்த சாப்பாடும் சாம்பாரும் ரேகா மேல் அபிஷேகமாக… கண்களில் சாம்பார் பட்டு திக்கென்று எரிந்தது.

துடித்துப்போய் விட்டாள் ரேகா!


வோல்டேஜ் குறைந்து சோகையாய் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

தூக்கம் வரவில்லை. கண்களை மூடவும் முடியவில்லை. திறக்கவும் முடியவில்லை. இரண்டு நாட்களாகியும் எரிச்சல் அடங்கவேயில்லை.

‘நான் என்ன பண்ணிவிட்டேன்? சுபத்ராவிற்கு என்னைக் கண்டால் பிடிக்கவில்லை? அனாதைகள் இவ்வுலகின் பாவ சுமைகளா? ஒதுக்கி வைக்கப்பட்ட கருவேப்பிலைகளா? அனாதை என்கிற முத்திரை நாங்கள் வலிய விரும்பி வாங்கிக் கொண்ட பட்டமா என்ன? எங்களுக்கும் இதயம் இருக்கிறது. அன்புக்கு ஏங்கும் மனசு இருக்கிறது. சுயநலக்கார பெற்றோர்களால் வீதியில் வீசியெறிப்பட்ட எங்களை குப்பையாய் நினைத்து வெறுக்கும் உலகத்தாரின் மனோபாவம் என்று மாறும்?’

‘சுபத்ரா என்னை தீயாய் வெறுக்கிறாள். இனிமேலும் நான் இங்கிருப்பது சரியா?’

‘வேறெங்கே போவது? சித்தி, அத்தை என்று உனக்கு உறவினர்கள் இருக்கிறார்களா… அவர்களை தேடிப்போக? சுபத்ரா சின்னப் பெண்! தன் அம்மாவின் அன்பை பங்கு போட்டுக்கொள்ள விரும்பாத குழந்தை மனசை கொண்டவள்! அவளை உன் அன்பால் மாற்ற முடியாதா என்ன? இதைவிட பாதுகாப்பான இடம் வேறெங்கே இருக்க முடியும்? தாய் தந்தையைப் போல் அன்பை கொட்டும் இவர்களை விட நல்லவர்கள் வேறிடத்தில் கிடைப்பார்களா? கொஞ்சம் பொறுத்துக் கொண்டிரு! இவர்களே….வேறு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்வார்கள்!’ தன்னைத்தானே சமாதானப்படுத்தி கொண்டாள் ரேகா.


அர்விந்தின் செல்போன் சிணுங்கியது. காரை ஒரு ஓரமாய் நிறுத்தி விட்டு பேசினான்.

“ஹலோ…!”

“ஹாய் அர்விந்த்”

“ஹலோ சுபி… நல்லாருக்கியா? என்ன… ரொம்ப நாளா உன்கிட்டேர்ந்து போன் வர்றதில்லே?”

“இதே கேள்விய நான் திருப்பிக் கேட்டா?”

“ஓ… ஸாரி சுபி! டைட் வொர்க்! மூச்சு விடக்கூட நேரமேவில்லே…!”

“டெய்லி ஒரு அஞ்சு நிமிஷம் எனக்காக ஒதுக்க முடியாதா அர்விந்த்”

“ஓக்கே… ஒக்கே.. இவி டெய்லி பேசறேன் ஓக்கே?”

“அர்விந்த்… நான் உங்களைப் பார்க்கணுமே!”

“எப்ப?”

“இப்ப?”

“இப்பவேவா? அப்படியென்ன அவசரம்?”

”மனசு சரியில்லே அர்விந்த். உங்களை பார்க்கணும் போலிருக்கு”

“என்னாச்சு?” என்றான் ஆச்சர்யமாய்.

“எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலே!”

“ஏன் சுபி… என்னென்னவோ பேசறே?”

“எங்க வீட்டுக்கு அனாதை ஆஸ்ரமத்திலேர்ந்து ரேகான்னு ஒருத்தி வந்திருக்கா! அம்மாவும், அப்பாவும் அவளை தலைமேல தூக்கிவச்சிட்டு ஆடறாங்க அர்விந்த்!”

“அப்படியா?” என்று வாய் பேசியதே தவிர, அவன் கண்கள் காருக்கு வெளியே எதையோ பார்த்து அகன்றது.

‘யாரவள்?’ சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைகிற அந்த பெண். ஹாஸ்பிடலில் சேர்த்திருந்தேனே. அவளைப் போலவே இருக்கிறதோ அவள்தானோ?

கையில் பெரிய பையுடன் சூப்பர் மார்க்கெட்டிற்குள் சென்று கொண்டிருந்தாள் ரேகா!

போனில் சுபத்ரா பேசிய எதுவும் சிந்தையைத் தொடவில்லை.

“கபி… ஐ… கான்டாக்ட் லேட்டர்!“ என்று போனை கட் பண்ணிவிட்டு அவசர அவசரமாய் காரை விட்டு இறங்கினான் அர்விந்த்.

– தொடரும்…

– தேவியின் பெண்மணி, பிப்ரவரி 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *