கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 4,405 
 
 

மன்னன் சுந்தரபாண்டியனுக்கு சொல்ல முடியாத வருத்தம், மகள் இளவழகியுடைய போக்கை எண்ணி. இளவழகியின் தாய் ராணி மங்கையர்கரசிக்கும் இதே கவலைதான். இளவழகிக்கு பத்து வயதாகிறது. அரண்மனை பாடசாலைக்குப் போகும் அவள் சமத்துவத்தை கற்றுக் கொள்வதற்கு பதில் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சண்டையிட்டு வருவதாய் தினமும் ஒரு புகார் வந்த வண்ணம் இருந்தது.

இது இரண்டாம் நிலை வயது. இந்த வயதில என்னக் கற்றுத் தருகிறோமோ அதுதான் அவர்களுடைய வாழ்க்கைக்கு அடிகோள். அது மட்டுமில்லாமல், சுந்தரபாண்டியனுக்கு இளவழகி ஒரே மகள். அவருக்குப் பிறகு இந்த ராஜ்ஜியத்தை பரிபாலனை செய்கிற பொறுப்பும், தகுதியும் இளவழகிக்கு வந்தாக வேண்டும் என்ற கவலை இப்போதே சுந்தரபாண்டியனுக்கு வந்து விட்டது.

எடுத்துச் சொன்னால் புரிந்துக் கொள்ளும் பருவமும் இல்லை. அடித்துச் சொன்னால் திருத்திக் கொள்ளும் வயதும் இல்லை. என்ன சொல்லி இந்தக் குழந்தைக்குப் புரிய வைப்பது..?

“தந்தையாரே! இனிமேல் நான் கல்வி கற்றுக் கொள்ள பாடசாலைக்குப் போக மாட்டேன். ஆசிரியர்கள் அரண்மனைக்கே வந்து எனக்குப் பாடங்களை கற்றுத் தர உத்தரவிடுங்கள் தந்தையே..” என்றாள் கோபமாக.

“மகளே இளவழகி, பாடசாலை கல்வி கற்பதற்கு மட்டுமல்ல, வாழ்க்கைப் பாடத்தையும் கற்றறிய வேண்டிய இடம். அங்கே நாம் நம்முடைய ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடாது…” என சுந்தரபாண்டியன் கனிவுடனும், அன்புடனும் சொன்னார்.

“தந்தையே! நான் இந்த நாட்டின் இளவரசி. என்னை அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களுடன் அமரச் சொல்கிறார். மற்ற மாணவிகள் என் முன்னே எழுந்து நின்று, எனக்குத் தெரியாத கேள்விகளுக்கு பதில் அளித்து என்னை விடவும் தங்களை புத்திசாலியாக காட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் எனக்கு சமமானவர்கள் இல்லை. நான் அவர்களுடன் பாடம் பயில விரும்பவில்லை.”

ஆதிக்கம் மேவிய மகளுடைய வார்த்தைகளைக் கேட்டு மன்னன் துயருற்றுப் போனார்.

“நகர்வலம் போகின்ற நேரத்தில் குடிமக்கள் வீடுகளில் விருந்துண்டு, தன்னுடைய சமநிலையை உலகுக்கு பறைசாற்றிய பெருந்தன்மை கொண்ட சுந்தரபாண்டியனின் வம்சத்தில் இப்படியொரு குழந்தையா..?” என ஊர் மக்கள் பேசத் துவங்கினர்.

மறுநாள்…

கோவர்த்தன நாட்டில் இருந்து ஆயகலையிலும் கற்றுத் தேர்ந்த மிகப் பெரிய ஆசிரியரான சுதர்சனன் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் அரண்மனை நந்தவனத்தில் அவளுக்குப் பாடம் கற்றுத் தருவது என்று ஏற்பாடானது.

முதல் நாள் நந்தவனத்திற்கு வந்து இளவழகியை மரபீடத்தில் அமர்த்திவிட்டு தான் தரையில் அமர்ந்துக் கொண்டார் சுதர்சனன். இளவழகிக்கு மகிழ்வாய் இருந்தது.

அடுத்த நாள் சுதர்சனன் இளவழகிக்கு தெரிந்த பாடங்களை படிக்கச் சொன்னார். மூன்றாம் நாள்… நான்காம் நாள்… ஐந்தாம் நாள் என்று அதுவே தொடர, இளவழகிக்கு படிப்பே வெறுத்துப் போனது.

“தாயே, எனக்கு படிப்பே பிடிக்கவில்லை. தந்தையார் கொண்டு வந்த ஆசிரியர்க்கு அறிவியலும் தெரியவில்லை. விஞ்ஞானமும் புரியவில்லை. எனக்கு ஆசிரியரை மாற்றுங்கள்…” என்றாள்.

இளவழகி ஒரே பாடத்தை படித்து சோர்ந்து போனாள். சுதர்சனனோ ஒரு பாடத்தைக் கூட முழுமையாக கற்றுத் தந்தபாடில்லை. இளவழகி படிக்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்க, சுதர்சனன் அவைக்கு அழைத்து வரப்பட்டான்.

“என்ன ஆசிரியரே! இளவழகி உங்கள் பாட முறைகளால் திருப்தி அடையவில்லை என்று கூறுகிறாளே. உங்கள் பதிலென்ன..?”

சுதர்சன் புன்முறுவல் பூத்தான்.

“நான் கற்பிக்கும் முறை வித்தியாசமானது என்பதை அறிந்து தானே, தாங்கள் என்னை ஆசிரியராக நியமித்தீர்கள்…”

“ஆமாம் சுதர்சனரே. ஆனால், நீங்கள் எதையும் கற்றுத் தரவில்லை என்றல்லவா அவள் சொல்கிறாள்…”

“இல்லை. நான் கற்றுத் தந்ததை அவள் சரிவர கற்றுக் கொள்ளும் வரை, நான் அடுத்தப் பாடத்திற்கு எப்படி போக முடியும்..?”

“கற்றுத் தந்தீரா..! எனக்கு அப்படி ஞாபகமில்லை…” என்றாள் இளவழகி.

“இல்லை குழந்தாய், நான் உனக்கு கற்றுத் தந்த முதல் பாடத்தையே நீ கற்றுக் கொள்ளாதபோது, நான் அடுத்தப் பாடத்தை எப்படி கற்றுத் தர முடியும்?” என்றார் புன்னகை மாறாமல்.

அனைவரும் புரியாமல் விழித்தனர்.

“குழந்தாய், முதல் நாள் வந்ததும் உன்னை மரபீடத்தில் அமர்த்தி விட்டு, நான் தரையில் அமர்ந்துக் கொண்டேன் அல்லவா. அதுதான் முதல் பாடம். எவருக்கும் தன்னுடைய கல்வி, கேள்வி, பணம், பதவி இவற்றை எண்ணி செருக்கு ஏற்படக் கூடாது. எந்த இடத்திலும் தன்னைத் தாழ்ந்தவனாய் கருதும் பணிவு வேண்டும். அந்தப் பணிவே வாழ்க்கையில் அணி. அதை உணர்த்தவே உன்னை மரபீடத்திலும் நான் தரையிலும் அமர்ந்தேன். ஆனால் அந்தப் பணிவை நீ இதுவரை கற்றுக் கொள்ளவேயில்லையே குழந்தாய்…”

அதீத புத்தியுடன் சுதர்சனன் பேசிய போது, இளவழகிக்கு தன் செயலில் மண்டிக்கிடந்த தவறும், தன் செருக்கால் ஏற்பட்ட அவமானமும் நன்றாகப் புரிந்தது.

“தந்தையே! உயர்வும், பதவியும் உலகத்தில் விளைவன. அதற்குத் தகுதி உள்ளவராய் நம்மை மாற்றிக் கொள்வதுதான் வாழ்க்கையின் முதல் பாடமென்று எனக்குக் கற்றுத் தந்த சுதர்சனன் அவர்களையே நம்முடைய குருகுலத்தின் தலைமை ஆசிரியராய் நியமித்து விடுங்கள்” என்றாள் இளவழகி.

அன்று மலர்ந்த மலராய் முகமகிழ்வோடு பேசி மகளை, பூரிப்போடும், அவளுக்கு அனைத்தையும் புரிய வைத்த சுதர்சனனை அர்த்தப் புஷ்டியுடனும் பார்த்தார். தன்னை வாட்டிய பெருந்துயர் அகன்றுவிட்ட மகிழ்வில் மன்னர் பெருமகிழ்வு கொண்டார்.

– April 2010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *