ஓர் ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. இருந்தாலும் அவர் பெருங்கருமியாக இருந்தார். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்.
ஒருநாள், அந்தக் கருமி, துறவி ஒருவரிடம் சென்றார்.
“”சுவாமி, நான் இறந்த பிறகு என் சொத்துக்கள் அனைத்தையும் தரும காரியங்களுக்குத்தான் கொடுக்கப் போகிறேன்… ஆனால் ஊர் மக்கள் என்னைக் கருமி என்று திட்டுகிறார்கள்… ஏன் என்று தெரியவில்லை!” என்று வருத்தத்துடன் தனது குறையைக் கூறினார்.
அதற்கு துறவி,””அப்பா… வருந்தாதே! ஒரு சமயம் பசுவுக்கும் பன்றிக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை இப்போது உனக்குச் சொல்கிறேன். அதன் மூலம் உனக்கு உண்மை விளங்கும்…” என்றார்.
“”சொல்லுங்கள் சுவாமி…” என்றார் அந்தக் கருமி.
“”ஒரு பன்றி, பசுவைப் பார்த்து, “பசுவே, மக்கள் எல்லோரும் உன்னைப் பற்றியும் உன் இனிய இயல்புகள் பற்றியும் புகழ்ந்து பேசுகின்றனர். நீ அவர்களுக்காகப் பால் தருகிறாய். ஆனால், நானோ உன்னைவிட அதிகம் பயன் தருகிறேன். ஆம்… என் உடலையே இறைச்சிக்காக மக்களிடம் கொடுக்கிறேன். இருந்தாலும் மக்கள் என்னைப் பாராட்டாமல் இகழ்கிறார்களே? இதன் காரணம் என்ன?’ என்று வருத்தத்துடன் கேட்டது.
பன்றி சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த பசு, சற்றே யோசித்துவிட்டு, “பன்றியே… நீ சொல்லுவது உண்மைதான். நாம் இருவருமே மக்களுக்குப் பயன் தருகிறோம்… ஆனால், நான் உயிருடன் இருக்கும்போதே பயன்படுகிறேன்!’ என்றது.
“ஓ… அதனால்தான் உனக்குப் பாராட்டா?’ என்று கேட்டது பன்றி.
இப்படித் துறவி சொல்லி முடித்ததும், தன் தவறை உணர்ந்தார் அந்தக் கருமி.
“வாழும்போதே பிறருக்கு வாரி வழங்குவேன்!’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் அந்த செல்வந்தர்.
– குடந்தை பாலு (ஜூலை 2012)