கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 46,472 
 
 

ரவியும், வினோத்தும் சகோதரர்கள். ரவி பத்தாம் வகுப்பும் , வினோத் ஆறாம் வகுப்பும் படிக்கின்றனர். இருவரும் படிப்பில் படுசுட்டி. ரவி எப்பொழுதும் ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டே இருப்பான். எங்கே ‘வினாடி – வினா ‘ போட்டிகள் நடத்தப்பட்டாலும் , ரவி அதில் கலந்துக் கொண்டு பரிசுகளைப் பெற்று வருவான். ஆனால், வினோத் பாடப் புத்தங்களை மட்டும்தான் படிப்பான். இருப்பினும் வினோத்துக்கு ஓவியங்கள் வரைவதில் அதிகம் ஈடுபாடு உண்டு. அதனால் தான் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஓவியப்போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்றுள்ளான். ரவியும், வினோத்தும் சில சமயங்களில் சின்ன சின்ன சண்டைகள் போட்டாலும் , கடைசியில் ரவி வினோத்தை சமாதனம் செய்து விடுவான்.

ரவிக்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆரம்பமானது. அதனால் தனியறையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது பள்ளியிலிருந்து வீடு திரும்பிய வினோத் ரவியிடம் சென்று , “அண்ணா, நான் மாநில அளவில் நடைபெறப் போகின்ற ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. தலைப்பு என்ன தெரியுமா? ‘வானவில் ‘ தமிழ்நாடு முழுக்க மொத்தம் முப்பத்தெட்டு பேர் கலந்துக் கொள்கிறார்கள். அவர்களில் குட்டிப் பையன் நான் மட்டும்தானாம். இன்றிலிருந்து ஏழாவது நாள் ஓவியப்போட்டியில் கலந்துகொள்ள வேண்டும். எனக்காக வானவில் பற்றி ஏதாவது தகவல் சொல்லு அண்ணா!” என்றான். அதை கேட்டபடியே வந்த அப்பாவும், அம்மாவும் , “வினோத், அண்ணாவுக்கு தேர்வு இருக்கு., தொந்தரவு பண்ணக் கூடாது” என்றனர். வினோத்தும் “சரிம்மா” என்றபடி சோர்வாய் படுக்கைக்குச் சென்றான்.

ஆறு நாட்களுக்குப் பிறகு, ரவிக்கு தேர்வுகள் எல்லாம் முடிந்து விட்டன. வினோத்தை பள்ளியிலிருந்து கூட்டி வர, ரவி கிளம்பினான். பேருந்திலிருந்து கவலையுடன் இறங்கினான் வினோத் . இருவரும் வீட்டை நோக்கி மண் பாதையில் நடக்கத் தொடங்கினர். சுற்றிலும் இருள் பரவத் தொடங்க , வானத்தில் தோன்றிய முழு நிலவு அதனை விரட்டியது. ரவி வினோத்திடம், “மன்னிச்சுடு வினோத், எனக்கு தேர்வுகள் இருந்ததால் , உனக்கு உதவி செய்ய முடியவில்லை . நாளைக்கு ஓவியப்போட்டிக்கு தயார் ஆகிவிட்டாயா ” என்றான். அதற்கு வினோத் “இல்லை, எனக்கு வரையத் தோணலை. ஏன்னா இதுவரை நான் வானவில்லையே பார்த்ததில்லையே! இதில் நான் வெற்றி பெற மாட்டேன். பயமா இருக்கு ” என்றான் கவலையாய்.

– அப்பொழுதான் அந்த அதிசயம் நிகழத் தொடங்கியது.

மறுநாள்…

ஓவியப்போட்டி நடந்து முடிந்திருந்தது. அரங்கத்தில் இருந்த நாற்காலிகள் அனைத்திலும் மாணவர்களும், பெற்றோர்களும் அமர்ந்திருந்தனர். சரியாக அரை மணி நேரம் கழித்து , ஓவியப்போட்டியின் முடிவை அறிவிப்பதாகக் கூறிய நடுவர்கள் நான்கு பேரும் தனியறைக்குச் சென்றனர். ஒவ்வொரு ஓவியமாக பார்த்துக் கொண்டே வந்தவர்களுக்கு , ஒரு மிகப் பெரிய வியப்பு காத்திருந்தது. அபூர்வமான ஒரு ஓவியமும், கீழே அதற்கான தகவலும் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்து பார்த்தவர்கள் மேலும் வியந்தார்கள்.

அரை மணி நேரம் கழித்து , விழா மேடையில் சிறப்பு விருந்தினர் பேசத் தொடங்கினார். “இந்த ஓவியப் போட்டிக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு ‘வானவில்’ இதனால் பெரும்பாலானோர் காடுகள், மலைகள், கோட்டைகள் இவற்றின் மேல் வானவில் தோன்றியதுபோல் வரைந்திருந்தனர். ஆனால், ஒரு சிறுவன் முற்றிலும் மாறுபட்ட ஒரு இடத்தில் வானவில் தோன்றுவது போல் வரைந்திருந்தான். இணையதளத்தில் ஆராய்ந்தபோது அந்தத் தகவல் நூறு சதவிகித உண்மையென்று தெரிந்தது. எனவே அந்தச் சிறுவன் மாநில அளவில் முதல் பரிசை தட்டிச் செல்கிறான். அந்தச் சிறுவனின் பெயர் ‘வினோத்’”.

அரங்கத்தில் கரவொலி எழும்ப வினோத் மேடைக்குச் சென்றான். ரவியும், அவனது பெற்றோரும் மகிழ்ந்தார். சிறப்பு விருந்தினர் வினோத்தின் கழுத்தில் தங்கப் பதக்கத்தை அணிவித்து , கையில் சான்றிதழையும் தந்தார். பின், அவனைப் பேசுமாறு பணிந்தார். வினோத் பேச ஆரம்பித்தான்.

“இந்த வெற்றிக்குக் காரணம் என் அண்ணா ரவிதான். பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது இருட்டிவிட்டது. இருவரும் நிலவொளியில் பேசியபடியே சென்றோம். அப்போது திடிரென மழைத்தூறல் போடத் தொடங்கியது. ஓடிச்சென்று ஒரு கட்டிடத்தின் வெளியே நின்றோம். பத்து நிமிடங்களுக்குப் பிறகு மழைத்தூறல் நின்றது. அப்போது ரவி, என் கண்களை தன் கைகளால் மூடி நிலவுக்கு எதிர்திசையில் திரும்பி நிற்க வைத்தபடி சொன்னான். “இப்போ , உன் கண்களை திறந்து வானத்தைப் பார்!”

நான் வானத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன். அந்த இரவு நேர வானத்தில் சிதறிக் கிடக்கும் விண்மீன்களின் ஊடே வானவில் தோன்றியிருந்தது. முதலில் சிவப்பு, பின் வரிசையாய் ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என ஏழு வண்ணங்களுடன் அரைவட்டமாய் வானவில் பிரகாசித்தது. பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. அதனை வியந்தபடியே “அண்ணா, இரவு நேரங்களில் வானவில் தோன்றுமா?” என்றேன்.

அதற்கு ரவி, “ஆமாம், வினோத்! முழுநிலவு வானத்தில் இருக்கும் நேரத்தில் மழைத்தூறல் பெய்தபிறகு, நிலவுக்கு எதிர்திசையில் வானவில் தோன்றும். இது எப்பொழுதாவது அரிதாக நிகழும். மேலும் வானவில் தோன்றி மறைவதற்கு மூன்று நிமிடங்கள் தான் எடுத்துக் கொள்கிறது” என்றான். “இயற்கை நமது கற்பனைக்கும் எட்டாத பல அதிசயங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் இந்த ‘இரவு நேர வானவில்’. இதனை ஓவியப் போட்டியில் வரைந்து, இந்தத் தகவலையும் எழுது. முதல் பரிசு உனக்குத்தான் ” என்றான் ரவி, இது உண்மையாகிவிட்டது.” உணர்ச்சி மயமாகப் பேசினான் வினோத்.

கேட்ட சிறப்பு விருந்தினர் ரவியை மேடைக்கு அழைத்துப் பாராட்டினார். இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட Encyclopaedia என்றழைக்கப்படும் ‘உலகப் பொது அறிவு’ நூலை பரிசாக வழங்கினார். அரங்கமே அதிரும் வண்ணம் கரவொலி எழுந்தது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த அவர்களின் பெற்றோரின் கண்களில் இருந்து ஆனந்தம் நீராக வழிந்தது.

– கோகுலம் இதழில் வெளிவந்த கதை.

Print Friendly, PDF & Email

1 thought on “வானவில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *