கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 32,493 
 
 

முன்னொரு காலத்தில் கமலாபுரம் என்னும் ஊரில் ஒரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் தினமும் வெளியூர் சென்று கை வினை பொருட்களை வாங்கி வந்து ஊர் ஊராய் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தான். அவனுக்கு ஒரு மனைவி. அவள் வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு, தினமும் இவன் வாங்கி வரும் கைவினை பொருட்களை தரம் வாரியாக பிரித்து கொடுத்து அவனுக்கு உதவி செய்வாள். அதன் பின் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பண்டம் என்று விலை வைப்பார்கள். (குட்டீஸ் பண்டம் என்பது அந்த காலத்தில் பணத்திற்கு பதிலாக பொருளை மாற்றி கொள்வது).

. வணிகன் அன்று வெளியூர் சந்தைக்கு சென்று நிறைய கைவினை பொருட்களை வாங்கி வந்தான். அகல் விளக்கு, வண்ண வண்ண கை வளையல்கள், ஆபரணங்கள், போன்றவைகள் நிறைய வாங்கி வந்தான். அவன் மனைவி அவைகளை ஒவ்வொன்றாய் பிரித்து வைத்தாள். அப்பொழுது ஒர் ஜோடி வளையல்களின் அழகு அவள் மனதை பறித்தது. வணிகனிடம் இதை நான் வைத்து கொள்கிறேன் என்றாள். வணிகன் அதை வேறொருவர் கேட்டிருக்கிறார், அதனால் உனக்கு அடுத்த முறை வாங்கி வந்து தருகிறேன் என்றான்.

இவளுக்கு மனசே கேடவில்லை. அதன் அழகு அப்படி அவள் மனசை ஈர்த்து விட்டது. இரவு இருவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருக்கும்பொழுது, இவள் மெதுவாக எழுந்து அந்த ஜோடி வளையல்களையும் மறைத்து வைத்து விட்டாள்.

மறு நாள் காலை வழக்கம்போல் வணிகன் எழுந்து தயாரானான். அவன் மனைவி எல்லா பொருட்களையும் ஒரு பெரிய துணி பையில் போட்டு அவனிடம் கொடுத்தாள். அவன் அதை சுமந்து கொண்டு வியாபாரம் செய்ய கிளம்பினான்.

பண்ட மாற்று முறை என்பதால் தனியாக ஒரு பையையும் எடுத்து செல்வான்.

ஒரு வளையல் ஜோடி கொடுத்தால், இரண்டு ஆழாக்கு தானியமோ இல்லை, இரண்டு பெரிய கருப்பட்டி துண்டுகளோ கிடைக்கும். இன்னும் கொஞ்சம் அதிக மதிப்புள்ள பொருள் என்றால் அதற்கு நகைகள் கூட கிடைக்கும். இப்படி நிறைய பொருட்களை சேகரித்து அதை சந்தைக்கு சென்று கொடுத்து இந்த கை வினை பொருட்களை வாங்கி வருவான்.

வணிகனின் மனைவி அவன் போன பின் அவசர அவசரமாக அவள் ஒளித்து வைத்திருந்த வளையலை எடுக்க சென்றாள்.ஆனால் அந்த வளையல்கள் வைத்த இடத்தில் காணவில்லை, சுற்று முற்றும் தேடி பார்த்தாள் எங்கும் கிடைக்கவில்லை. எங்கு போயிருக்கும்? என்னவாயிருக்கும் என்று அதிர்ச்சியாய் நின்றாள்.

இங்கு இப்படி இருக்க அந்த ஜோடி வளையல்களின் கதை என்னெவென்றால்

குச்சியூர் என்னும் ஊரில் இரு திருடர்கள், வசித்து வந்தனர். அவர்கள் இரவானதும் பலரது வீட்டில் கன்னம் வைத்து எது கிடைத்தாலும் சுருட்டி கொள்வர். அவர்கள் ஒரு முறை ஒரு வீட்டில் கன்னம் வைத்து உள்ளே போய் அங்கிருந்த ஒரு பித்தளை சொம்பை தூக்கி வந்து விட்டனர். அந்தோ பரிதாபம், அவர்கள் திருடிய இடம் ஒரு மந்திரவாதியின் வீடு. அவன் பித்தளை சொம்பை யார் எடுத்தார்கள் என்று கண்டு பிடித்து விட்டான். அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அவர்கள் வளையலாய் ஆகிவிடுவார்கள் என்று மந்திரம் போட்டு விட்டான்.

இதை அறிந்த திருடர்கள், ஐயோ வென்று அந்த மந்திரவாதியிடம் ஓடி பித்தளை சொம்பை கொடுத்து விட்டு மன்னிப்பு கேட்டார்கள். இவர்களின் கெஞ்சலை பார்த்த மந்திரவாதி சரி. நீங்கள் இரவு மட்டும் மனிதர்களாகவும், பகலில் வளையல்களாகவும் இருப்பீர்கள், வளையல்களாக உங்களை பார்த்த உடனே அதன் அழகில் மயங்கி எடுத்து கொள்ள வேண்டும் என்று யாராவது ஒளித்து வைத்தால் அன்று உங்களுக்கு முழு உருவம் கிடைத்து விடும். என்று விமோசனம் சொன்னார்.

அது போலவே வணிகனின் மனைவி ஆசைப்பட்டு அந்த வளையலை கணவனுக்கு தெரியாமல் ஒளித்து வைக்க, வளையல்கள் சாப விமோசனம் பெற்று

மனிதர்களாக உருமாறி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினர்.

அப்படி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு திருடன் தன் நண்பனிடம் நாம் இனிமேல் திருட்டு தொழிலை விட்டு விட்டு உழைக்க ஆரம்பிக்க வேண்டும் என்றான். அதை கேட்ட மற்றவன் ஆமாம், ஆமாம், இனி மேல் நாம் இந்த திருட்டு தொழிலை விட்டு விடலாம், முடிவு செய்தவர்கள், சரி, பாவம் அந்த பெண், வளையல்களை ஒளித்து வைத்து விட்டு காலையில் அதை தேடிக் கொண்டிருப்பாளே? ஒருவன் கேட்க மற்றவன் கொஞ்சம் பொறு, நாம் அவன் கணவனுக்கு இதன் மூலம் ஏதாவது உதவி செய்து விடலாம் என்றான்.

வணிகனுக்கு அனறு அதிகமாக வியாபாரம் ஆகவில்லை. மன சோர்வுடன்,வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.. அப்பொழுது இரு திருடர்களும், அவனிடம் சென்று பேசினர்.. ஐயா எங்களிடம் கொஞ்சம் ஆபரணங்கள் இருக்கின்றன, அதை உங்களுக்கு கொடுக்கிறோம். இதை கொண்டு போய் இந்த ஊர் கிராம தலைவரிடம் ஒப்படைத்தால் அவர் உங்களுக்கு பொன்னும் பொருளும் அளிப்பார். என்றான். வணிகனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதை நீங்கள் செய்யலாமே? என்னிடம் ஏன் கொடுக்கிறீர்கள் என்று கேட்டான்.

அவர்கள் நடந்த கதையை சொன்னார்கள். வணிகனின் மனைவி மூலம்தான் தாங்கள் சாப விமோசனம் பெற்றதும், இனிமேல் திருட்டு தொழிலை செய்வதில்லை

என்று முடிவு செய்துள்ளோம். இது எல்லாம் கிராம தலைவர் வீட்டில் கொள்ளை அடித்தது. இதை கொண்டு போய் ஒப்படைத்து பரிசுகளை பெற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் இதை கண்டு பிடித்து கொண்டு வந்து தருபவர்களுக்கு பரிசு வழங்குவார்கள் என்று அறிவித்து உள்ளார்கள். அதனால் தைரியமாக எனக்கு புதரில் கிடந்தது என்று சொல்லுங்கள்.

வணிகன் மகிழ்ச்சியாக அதை பெற்றுக்கொண்டு கிராம தலைவரை பார்க்க சென்றான்.

வீட்டுக்கு வந்த பொழுது வணிகனின் மனைவி இவனை பயத்துடன் வரவேற்றாள். அவளுக்கு அந்த வளையல்கள், காணாமல் போனது ஒரு புறம், தன் கணவன் அதை எங்கே என்று தேடி, அதை நம்மிடம் கேட்டால் என்ன சொல்வது? இந்த கவலைகள்தான்.

ஆனால் வணிகனோ மிக மகிழ்ச்சியாக இருந்தான். அது மட்டுமல்ல தன் மனைவியை கூப்பிட்டு அவள் கையில் ஒரு பொருளை துணியால் சுற்றி கொடுத்தான். அதை பிரித்து பார்த்தாள்.

“ஒரு ஜோடி வளையல்கள்” அச்சு அசலாக காணாமல் போன வளையல் போல் இருந்தது. கேள்விக்குறியுடன் கணவனை பார்க்க,அவன் நடந்த அனைத்தையும் சொல்லி கிடைத்த பரிசுப்பொருளில் உனக்கு பிடித்த வளையல்களையும் வாங்கி வந்தேன் என்றான்.

வணிகனின் மனைவிக்கோ மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. இருந்தாலும், தான் வளையலை மறைத்து வைத்தது தவறு என்றும், இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் என்றும் அவனிடம் உறுதி கூறினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *