தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 9,537 
 
 

ஓர் ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார்.

அவரை எல்லோரும் மூடர் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர்.

இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் கோடியில் ஒரு சாமியார் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார்.

“”கடவுளை நினைச்சுத் தவம் பண்ணு. உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்..” என்று அந்தச் சாமியார் கூறினார்.

மன்னார்சாமியும் கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் அவர் எதிரில் தோன்றினார்.

“”பக்தனே, உனக்கு என்ன வரம் வேண்டும்?” கடவுள் கேட்டார்.

“”தவம் செய்தால் கடவுள் வந்து வரம் கொடுப்பார்னு அந்த சாமியார் சொன்னார், அதான்…” என்றார் மன்னார்சாமி.

“”என்ன வரம் வேண்டும், கேள்…” என்றார் கடவுள்.

“”அதான் கேட்டேனே வரம்… கொடேன்…” என்றார் மன்னார்சாமி.

இப்போது கடவுளுக்கே குழப்பம் வந்து விட்டது. கடவுள் பிரத்யட்சம் செய்துவிட்டால் யாருக்காவது வரம் கொடுத்தே ஆக வேண்டும்…. அதுவும் தவம் செய்தவருக்குத் தவறாமல் வரம் கொடுத்தே ஆக வேண்டும்.

ம்… என்ன செய்யலாம்? – கடவுள் யோசித்தார்.

“”பக்தா, இப்போது நீ என்ன நினைக்கிறாயோ, அதையே வரமாகக் கொடுக்கின்றேன்… பெற்றுக் கொள்… போ!”

“”அய்…யய்ய….யோ… நான் ஒண்ணும் நினைக்கவே இல்லையே!”

“”அதான்…” என்று சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து விட்டார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

பலனை நோக்கிய உழைப்புதான் உயர்வைத் தரும்!

– கலைப்பித்தன், கடலூர். (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *