ஓர் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாம். அதற்கு முன்பு ஒரு பெரிய ஆலமரம். அதன் கீழே தினமும் ஒரு பாட்டி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாளாம். தினமும் பாட்டி வடை சுட்டு விற்பதை ஒரு காகம் கவனித்து வந்ததாம்.
ஒருநாள் வழக்கம்போல பாட்டி சூடான எண்ணெயில் வடையைப் பொறித்து எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்தக் காகம் சர்ரெனப் பறந்து வந்து தட்டிலிருந்த வடையைக் கொத்திக் கொண்டு மரக்கிளையில் அமர்ந்து கொண்டது. பாட்டி கோபத்துடன் காகத்தைச் சபித்தாளாம்.
சற்று நேரத்தில் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நரி மரத்தினடியில் நின்று கொண்டு,
“”காக்கா, காக்கா நீ ரொம்ப அழகாக இருக்கிறாய்! உன் குரலும் இனிமையாகத்தான் இருக்கும். எங்கே ஒரு பாட்டுப் பாடு” என்றதாம்.
ஒரு நிமிடம் நரியை உற்றுப் பார்த்த காகம் வடையைத் தன் கால்களில் வைத்துக் கொண்டு,
“”நான் அழகாக இல்லையென்பதும் என் குரல் அவ்வளவு இனிமையாக இல்லை என்பதும் எனக்குத் தெரியும்! நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ” என்றதாம்.
அதிர்ச்சியடைந்த நரி, “”என்ன? காகங்கள்கூட புத்திசாலிகளாகி விட்டனவே?” என்றதாம்.
அதற்கு காகம், “”என் கொள்ளுப் பாட்டி உன் கொள்ளுத் தாத்தாவிடம் ஏமாந்த கதை எனக்குத் தெரியும். என் பாட்டி சாகும்போது புகழ்ச்சிக்கு மயங்கக்கூடாது என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்” என்றதாம்.
எகத்தாளமாக சிரித்த நரி, “”அது சரி! புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம் என்று சொன்ன பாட்டி வடையைத் திருடுவது மட்டும் யோக்கியம் என்று கற்றுக் கொடுத்தாளா?” என்று கிண்டலடித்ததாம்.
“”நான் வடையைத் திருடவில்லை! நீண்ட நாட்களாக இந்தப் பாட்டியைக் கவனித்து வருகிறேன். எப்பவும் ஒருமுறை உபயோகித்த எண்ணெயைத் திரும்பத் திரும்ப வடை சுடப் பயன்படுத்துகிறாள். இப்படி உடலுக்குக் கேடு உண்டாக்கும் தெருவோர உணவினை உண்ணும் குழந்தைகள், அபாயகரமான நோய்க்கு உள்ளாகி மிகுந்த துன்பமடைகிறார்கள். குழந்தைகள் நோய்வாய்ப்படுவதைக் கண்ட பின்பும் இந்த பேராசைக்காரப் பாட்டி திருந்தவில்லை. எனவேதான் இந்த வடையை சுகாதார ஆய்வாளரிடம் எடுத்துப் போகப் போகிறேன். நீ நினைப்பது போலத் திருடித் தின்று வாழும் காக்கையல்ல நான். இந்த நகரம் தூய்மையாக இருக்க நாங்கள்தான் காரணம். நீயும் இனி ஊரை ஏமாற்றிப் பிழைக்காமல் உழைத்து வாழக் கற்றுக் கொள்! வடை என்ன! விருந்தே சாப்பிடலாம்” என்று கூறிவிட்டுப் பறந்து போனது.
நரி சோகத்துடன் வடை போச்சே என்றவாறு இனிமேலாவது உழைத்து வாழலாம் என்ற நம்பிக்கையோடு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தது.
– ஆகஸ்ட் 2012