முன்னொரு காலத்தில் சோபவதி என்ற ஒரு நாடு இருந்தது. இந்த நாட்டை யசகேது என்ற மன்னன் ஆண்டு வந்தான். இந்த நாட்டின் தலைநகரில் மிகப் பிரமாண்டமான, அழகான கவுரி கோவில் ஒன்று இருந்தது. அந்த கோவிலின் தெற்கே ஒரு பெரிய குளம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று இந்த கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவர். அவர்கள் கோவில் குளத்தில் நீராடிவிட்டு கவுரி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
ஒரு ஆண்டு சித்திரை பவுர்ணமி அன்று பிரம்மஸ்தலம் என்ற ஊரில் இருந்து தளவாய் என்ற இளவரசன் இக்கோவிலுக்கு வந்தான். அதே நாளில் சுதாபட்டா என்பவரின் மகள் மதனசுந்தரியும் இதே கோவிலுக்கு புனித நீராட வந்தாள். மதனசுந்தரி ஒரு பேரழகி. அவளைப் பார்த்த தளவாய் அவள் அழகில் மயங்கினான்.வாழ்ந்தால் மதனசுந்தரியுடன் தான் வாழ்வது என முடிவு செய்து கொண்டான்.
மதனசுந்தரியும் தளவாயைப் பார்த்தவுடன் அவன் மேல் அன்பு கொண்டாள். அவளிடம் ஊர், பெயர் எல்லாம் கேட்டுக் கொண்ட பின் ஊர் திரும்பினான் தளவாய். ஆனால், ஊரில் அவனால் மதனசுந்தரியைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இதனால் சாப்பிடாமல் தூங்காமல் இருந்தான் அவன் உடல் மெலிந்தது.
இதைப் பார்த்த அவனது அம்மா, “”ஏன் மகனே இப்படி இருக்கிறாய். உனக்கு என்ன வேண்டும் என கேள்,” என்றாள். தளவாயும் தனது அம்மாவிடம் மதனசுந்தரியைப் பற்றி கூறினான். உடனே தளவாயின் அப்பாவிற்கு இந்த விஷயம் தெரியவந்தது.
அவர் தளவாயை அழைத்தார். “”மகனே இதற்காகவா கவலைப்படுகிறாய் சுதாபட்டா நமக்கு உறவினர்தான். சொத்து, குடும்பம் எல்லாவற்றிலும் நாம் அவர்களுக்கு சமமானவர்கள்தான். நாம் போய் விட்டால் உடனே அவர் திருமணத்திற்கு சம்மதித்து விடுவார், கவலையை விடு,” என்றார்.
அடுத்த நாள் எல்லாரும் முறைப்படி மதனசுந்தரி வீட்டுக்குச் சென்றனர். அங்கு, “”எனது மகனுக்கு உன் மகளை திருமணம் செய்து கொடு,” என சுதாபட்டாவிடம் தளவாய் அப்பா கேட்டுக் கொண்டார். அவரும் அதற்கு சம்மதித்தார். ஒரு நல்ல நாளில் தளவாய்க்கும், மதன சுந்தரிக்கும் திருமணம் நடந்தது. இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் மதனசுந்தரியின் தம்பி, தளவாய் வீட்டிற்கு வந்தான். “”வீட்டில் துர்கா பூஜை நடத்துகிறோம், அதற்கு நீங்கள் இருவரும் வர வேண்டும்,” என தளவாயிடம் கூறினான். தளவாயும் அதற்கு ஒப்புக் கொண்டான். அடுத்த நாள் தனது மனைவி மைத்துனருடன் மாமனார் வீட்டிற்கு புறப்பட்டான் தளவாய். எல்லாரும் சோபவதி என்ற நகரில் உள்ள துர்கா கோவிலை அடைந்தனர். அங்கு மதனசுந்தரியின் அம்மா, அப்பா எல்லாரும் வந்திருந்தனர்.
கோவிலின் மூலஸ்தானத்திற்குள் ஒவ்வொருவராகத் தான் சென்று வழிபட முடியும். எனவே, முதலில் துர்காதேவியை தரிசிக்க தளவாய் சென்றான். அங்கு துர்கா தேவி சிலை தனது 18 கைகளுடனும் கோபமான முகத்துடனும் பயங்கரமாக காட்சி அளித்தது.
துர்காதேவியை பார்த்த தளவாய் அப்படியே பக்தி பரவசத்தில் மூழ்கினான். “”மக்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு உயிர்ப்பலி கொடுத்து உன்னை வழிபடுகின்றனர். நான் என்னையே ஏன் உனக்கு பலியாக கொடுக்கக் கூடாது,” என துர்காதேவியைப் பார்த்து தளவாய் கேட்டான். பின்னர், அங்கு இருந்த வாள் ஒன்றை எடுத்தான். தனது தலைமுடியை கோவில் மணியுடன் சேர்த்து கட்டினான். வாளால் தனது தலையை வெட்டினான். உடல் தனியே கீழே விழுந்தது.
நீண்ட நேரம் வெளியே காத்திருந்த மதனசுந்தரியின் தம்பி, பொறுமை இழந்து கோவிலுக்குள் நுழைந்தான். அதற்கு தனது அக்காவின் கணவர் தலை வேறு உடல் வேறாக கிடந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின்னர், தளவாய் செய்தது போலவே அவனும் தனது தலையை வெட்டி உயிரைப் போக்கினான்.
கோவிலுக்குள் போன தம்பியையும் காணவில்லை. என தேடிய மதனசுந்தரி, நேராக கோவிலுக்குள் சென்றாள். அங்கே இரண்டு பேரும் தலை வேறாக உடல் வேறாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். “”ஐயோ, நான் இப்போது என்ன செய்வேன்? என் வாழ்வு இருண்டு விட்டதே!” என அலறினாள்.
“”நான் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பயன், நானும் உயிரை விடுகிறேன்,” என கூறிக் கொண்டு வாளை எடுத்தாள்.
அப்போது கோவிலின் உள்ளே இருந்து ஒரு குரல் ஒலித்தது. “”மகளே அவசரப் படாதே, உன் கணவர் மற்றும் தம்பியின் பக்தியை மெச்சினேன். நீ இப்போது அவர்கள் தலையை எடுத்து உடலின் மேல் பொருத்து, இரண்டு பேருக்கும் உயிர் வந்து விடும்,” என துர்கா தேவியே பேசினாள்.
இதைக் கேட்ட மதனசுந்தரி வாளைக் கீழே போட்டாள். அவசர அவசரமாக ஓடிச் சென்று இரண்டு பேரின் தலையையும் எடுத்தாள். ஆனால், அவசரத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் எந்த தலை எந்த உடலுக்கு சொந்தம் என பார்க்காமல் தன் கணவன் உடலின் மேல் தம்பி தலையையும், தம்பி உடலின் மேல் கணவர் தலையையும் வைத்து விட்டாள். உடனே இருவரும் உயிரும் பிழைத்து விட்டனர்.
அவர்கள் உயிருடன் வந்தபோது தான் மதனசுந்தரிக்கு தான் செய்த தவறு தெரிய வந்தது. பேரதிர்ச்சி ஏற்பட்டது. அவளுக்கு இப்போது யாரை கணவராக ஏற்றுக் கொள்வது என்ற பிரச்னையும் ஏற்பட்டது.
மதனசுந்தரியின் கணவன் தலை எந்த உடலில் இருக்கிறதோ அதுதான் அவனது கணவன். ஏனென்றால் தலையை வைத்துதான் உடல் இருக்கிறது அல்லவா எனவே கடைசியாக கணவரின் தலையுள்ள உடலை கணவனாக ஏற்றாள்!