யானையும் சுண்டெலியும்…

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 8,475 
 
 

காட்டில் ஒரு குளத்தின் உள்ளே இறங்கி யானை ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த சுண்டெலி ஒன்று, யானையைப் பார்த்து, “நீங்க குளித்தது போதும்! மேலே வாருங்கள். எனக்கு சாமி தரிசனம் செய்ய நேரமாகிவிட்டது’ என்று அதட்டலாகச் சத்தம் போட்டது.

யானையும் சுண்டெலியும்யானைக்குக் கோபம் வந்தது. “டேய், பொடியா, நீயா என்ன விரட்டுகிறாய்? என் முன்னே வா… உன்னை மிதித்துப் போட்டு விடுகிறேன்…’ என்று கூறியது.

“என்னை மிதிப்பது இருக்கட்டும்…. என் கடவுள் வழிபாட்டுக்குக் குறுக்கே நிற்காதீர். வழிவிடும். நான் அவசரமாகக் குளித்துச் செல்ல வேண்டும்’ என்றது சுண்டெலி.

“ஏய்… பொடியா… இவ்வளவு பெரிய குளத்தில் உனக்குக் குளிக்கவா இடமில்லை? குளத்தின் கரை

யோரத் தண்ணீரே உனக்கு அதிகம். அதில் குளித்துச் செல். நான் குளிக்கும் இடம் மிகவும் ஆழம். இங்க வந்தால் குளத்தில் மூழ்கிச் செத்துப் போய்விடுவாய். ஒழுங்காகக் குளித்துவிட்டுப் போ…’ என்றது யானை.

“நான் குளத்துக்குள் இறங்கினால் நீர் எழுந்து வரும்போது என்னை மிதித்துப் போட்டுவிடுவீர். அதனால் சீக்கிரமாகக் குளத்திலிருந்து வெளியே வாரும். அப்போதுதான் நான் குளத்தில் இறங்கிக் குளிக்க முடியும்!’

சுண்டெலி பயந்தது போல அடம் பிடித்தது.

பொடியனாக இருக்கிறான். கடவுள் பற்றி வேறு சொல்கிறான். கண்ணில் பயம் வேறு தெரிகிறது. நாம்தான் விட்டுக் கொடுப்போமே என்று எண்ணிய யானை, கஷ்டப்பட்டு எழுந்து குளத்தை விட்டு வெளியே வந்தது. “எலிப் பொடியா, நான் கரையேறிவிட்டனே. நீ போய் சீக்கிரம் குளித்துவிட்டு வா… நான் இன்னும் குளித்து முடியவில்லை…’ என்று பெரிய மனது வைத்துச் சொன்னது.

யானையைக் கூர்ந்து நோக்கிய சுண்டெலி, “எனக்கு இப்போது குளிக்கும் எண்ணமே போய்விட்டது. நான் குளிக்கவில்லை. நீர் வேண்டுமானால் குளிக்கச் செல்லலாம்’ என்று திமிராகப் பதில் கூறியது.

இதைக் கேட்டதும் யானைக்குக் கடுங்கோபம் வந்தது!

“பொடிப் பயலே, கிண்டலா பண்ணுறே… ஒரே மிதியில் உன்னைக் கொன்று விடுகிறேன் பார்…’ என்று பிளிறிக் கொண்டே சுண்டெலியை நோக்கி வந்தது.

பயம் இருந்தாலும் சுண்டெலிக்குத் திமிர் மட்டும் அடங்கவில்லை. “என்னுடைய செருப்பை நேற்று குளிக்கும்போது தவறவிட்டு விட்டேன். அதை நீர்தான் அணிந்திருப்பீரோ என்று எனக்குச் சந்தேகம் வந்தது. அதனால்தான் உம்மைக் குளத்தைவிட்டு வெளியே வரும்படி சொன்னேன்… நீரும் வெளியே வந்தீர். எனது சந்தேகமும் தீர்ந்தது. நான் வருகிறேன்!’ என்றபடியே யானை அருகில் வருவதற்குள் வேகமாக ஓடி மறைந்தது.

“இந்தச் சிறிய சுண்டெலி, நம்மை இந்தப் பாடு படுத்திவிட்டதே! இது எனக்கு ஒரு பாடம்தான்! பெரியோரை மதிக்கத் தெரியாத சிறியோருக்கு இடம் கொடுப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்தச் சிறிய சுண்டெலி எனக்கு உணர்த்திவிட்டதே!’ என்று எண்ணிக் கொண்டே குளிக்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுக் காட்டுக்குள் திரும்பியது யானை.

– க.பரமசிவன், மதுரை.(டிசம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *