மூடத்தனத்தால் ஏமாந்த வியாபாரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 9,539 
 
 

கங்கைக் கரையில் சிறிய நகரம் ஒன்று இருந்தது. அங்கே காவி உடை அணிந்த ஒருவன் வசித்து வந்தான். அவன் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அதனால், அவனை மௌன சாமி என்று எல்லோரும் அழைத்தனர்.

தினமும் அந்த மௌனசாமி வீடுவீடாகச் சென்று, பிச்சை எடுத்து உண்பது வழக்கம்.

மௌனசாமி வழக்கம் போல் ஒரு நாள் பிச்சை எடுக்கச் சென்றான்.

அப்பொழுது, ஒரு வீட்டில் வியாபாரியின் மகள் பிச்சை போட வந்தாள். அவள் மிக அழகானவள். திருமணம் ஆகாதவள்.

அவளைக் கண்டதும் மயங்கிய மௌனசாமி. மெய்மறந்து, கடவுளே!’ என்று பெருமூச்சு விட்டான்.

அந்த வார்த்தை காதில் விழுந்ததும், ஓடி வந்து பார்த்தான் வியாபாரி.

மௌனசாமியோ அப்பொழுது கண்களை மூடியபடியே அழகியை நினைத்து, கற்பனையில் ஆனந்தமாக மிதந்து கொண்டிருந்தாள்.

வியாபாரி உடனே மௌனசாமியின் காலில் விழுந்து வணங்கி, “மௌனசாமியாகிய நீங்கள் வாய் திறந்து, கடவுளே! என்று சொன்னதில் ஏதோ ஒரு ரகசியம் உள்ளது. கருணை கூர்ந்து, தாங்கள் அதை விளக்கிக் கூறவேண்டும்” என்று பணிவோடு வேண்டினான்.

வியாபாரியின் மூடத்தனத்தை அறிந்த மௌனசாமி, சூழ்ச்சி செய்ய தீர்மானித்தான்.

வியாபாரியே! உன்னுடைய சொத்து சுகம் யாவும் அழிந்து, உனக்கு மரணம் நேரப் போவதை ஞானப்பார்வையினால் உணர்ந்தேன், அதனால், என்னை மறந்த நிலையில் மௌனம் கலைந்து, ‘கடவுளே’ என்று கூறிவிட்டேன்” என்றான் மௌனசாமி.

சொத்து, சுகம் அழிவு, மரணம்’ என்ற சொற்களைக் கேட்டதுமே வியாபாரி நிலைகுலைந்து, தள்ளாடிய நிலையில், ”சுவாமி இதற்கு ஒரு பரிகாரம் கூறி, என்னைக் காப்பாற்ற வேண்டும் என்ற மன்றாடினான்.

மௌனசாமி கண்களை முடி, சிறிது நேரம் யோசித்து. வியாபாரி, தான் விரித்த வஞ்சகவலையில், சரியாக விழுந்து விட்டான் என்பதை அறிந்து, உள்ளம் பூரித்தான்.

“நீ மிகவும் நல்லவன், நீண்ட காலம் சொத்து சுகத்துடன் வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கூறுகிறேன். உன் பெண்ணுக்கு கெட்ட நேரம் தொடங்கி விட்டது. அவளுக்குத் திருமணம் செய்து வைத்தால், அன்று இரவே அவள் கணவனை இழந்துவிடுவாள். உனக்கும் மரணம் நேரிடும். ஆகையால், உன் மகளை ஒரு கூடையில் வைத்து மூடி, அதன் மேலே ஒரு விளக்கை ஏற்றிவைத்து, இன்று இரவு பன்னிரண்டு மணிக்கு கங்கையில் மிதக்க விடு” என்று கூறி புறப்பட்டு விட்டான் மௌனசாமி.

அவன் சொன்னபடியே வியாபாரி செய்தான்.

கங்கையில் வியாபாரியின் மகளுடன் கூடை மிதக்கிறது.

மௌனசாமி ஆவலுடன் வேறு ஒரு பகுதியில் காத்திருக்கிறான்.

அடுத்த நாட்டு இளவரசன், கங்கைக் கரையில் இரவு முகாம் போட்டிருந்தான். மறுநாள் என்ன செய்வது என்று இளவரசனும் பரிவாரங்களும் யோசனையில் ஆழ்ந்திருந்தனர்.

அப்பொழுது விளக்குடன் கூடை ஒன்று மிதந்து வருவதைக் கண்டான் இளவரசன். அதை எடுத்து வரும்படி கட்டளையிட்டான்.

கூடை கொண்டு வரப்பட்டது. திறந்ததும் வியாபரியின் மகள் அழுது கொண்டே எழுந்து விவரத்தைக் கூறினாள்.

இளவரசன் அவளைத் தேற்றி, காந்தர்வ மணம் செய்து கொண்டான். மௌனசாமி ஏமாற்றம் அடையாமல் இருக்க அதே கூடியில் கருங்குரங்கு ஒன்றை வைத்து மூடி, விளக்கை ஏற்றி வைத்து, மிதக்கவிட்டனர் இளவரசனின் குழுவினர்.

கரையில் ஆவலோடு காத்திருந்த மௌனசாமி, கூடையைக் கண்டு குதித்து ஓடி, அதை தூக்கிச் சென்று திறந்தான்.

கூடைக்குள் இருந்த கருங்குரங்கு கோபத்துடன் மௌனசாமியைக் கடித்து, சின்னாபின்னமாக்கி விட்டது. அவன் வெளியில் தலைகாட்டவில்லை.

காவி உடையில் திரிந்து, மூடத்தனமானவர்களை ஏமாற்றுகின்றனர் சிலர்.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *