(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
நோயைப் போக்கும் மருந்து
மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளையிடம் பாடங்கேட்க ஒரு செல்வர் சென்றார். சென்றவர் திருவாவடுதுறையை அடைந்து அவரிடம் பாடம் கேட்டுவந்தார். அவ்வூரில் உணவு விடுதி கிடையாது. மடத்தில் தான் உண்ணவேண்டும். பகல் 12 மணிக்கு உணவு. பின் இரவு 9 மணிக்கு உணவு. இருவேளை உணவே உண்டு. பகல் 11 மணிவரை பாடம் நடக்கும். பாடத்தின் மீதுள்ள ஆசையால் பகலில் பசி தோன்றுவதில்லை. இரவு சாப்பிடுவதற்குமுன் செல்வர்க்குப் பசிவந்து மிகவும் துன்புறுவார். ஒரு நாள் பிள்ளை அவர்களிடம் படிக்கவந்த செல்வர் பசி தாங்கமுடியவில்லை என்ற இதைச்சொன்னார். அப்போது பிள்ளை அவர்கள், நன்றாகப் பசித்த பின் உண்ணுதல் வேண்டும். அவ்விதம் உண்டால் உடம்பிற்கு மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை என்று இக்குறளைச் செல்வருக்குச் சொன்னார். செல்வரும் “இது நன்மை தரும்” என்று அவ்விதமே பசித்த பின் உண்ணும் பழக்கத்தை அடைந்தார்.
மருந்தென வேண்டாவாம்; யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றி உணின். (68)
அருந்தியது = முன் உண்ட உணவு
அற்றது = நன்றாகச் செரித்துவிட்டதை
போற்றி = (சில குறிகளால்) நன்கு தெரிந்துகொண்டு
உணின் = பின் உணவை உட்கொண்டால்
யாக்கைக்கு = அவன் உடம்பிற்கு
மருந்து என = மருந்து என்று
வேண்டாவாம் = வேறொன்று வேண்டியதில்லை.
கருத்து: பசிவந்ததை அறிந்து உண்டால் நோய் அணுகாது.
கேள்வி: மக்கள் நோய் வராமல் காக்க யாது செய்தல் வேண்டும்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.