மனுநீதிச் சோழனுடைய கூறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2022
பார்வையிட்டோர்: 1,692 
 
 

(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பல ஆண்டுகட்கு முன்பு ஒரு பெரிய நகரிலே நீதி மன்றத் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் நல்லொழுக்கம் அமையப் பெற்றவர். அறநெறியிலே முறைமைபெற நடந்துகொண்டார். அதனால் அவருடைய புகழ் எங்கும் பரவியிருந்தது. அந்த நீதிமன்றத் தலைவரின் வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரர் நீதிமன்றத் தலைவரின் நேர்மையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு அதற்குத் தகுந்த சமயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்.

பக்கத்து வீட்டுக்காரருடைய முருங்கை மரத்தின் கிளை ஒன்று நீதிமன்றத் தலைவருடைய தோட்டத்திற் குள் நீண்டு நின்றது. அக்கிளையிலே காய்கள் நன்கு காய்த்திருந்தன. நீதிமன்றத் தலைவரின் மனைவி ஒரு நாள் அந்த முருங்கைக் கிளையிலிருந்த காய்களில் பலவற்றைப் பறித்துக் கறியாக்கிவிட்டாள். முருங்கை மரத்துக் குரியவர் செய்தியை உணர்ந்தார். “இந்த நீதி மன்றத் தலைவர் மனுநீதிச் சோழனுடைய ஒரு கூறு என்று எல்லோரும் கூறுவதை இப்பொழுது நான் பார்த்து விடுகிறேன்,” என்று எண்ணிக்கொண்டார். எண்ணிக்கொண்டவர் நீதிமன்றத் தலைவரின் மனைவி முருங்கைக் காய்களைப் பறித்துவிட்டதாகக் குற்றச் சாட்டு ஒன்றை நீதிமன்றத் தலைவரிடம் கொண்டு போய்க் கொடுத்தார். அதனைப் பார்த்த நீதிமன்றத் தலைவர் தாம் அதனை நன்கு உசாவுவதாக வாக்களித்தார். வீட்டிற்கு வந்தவுடன் தம்முடைய மனைவியைப் பார்த்து, “நீ பக்கத்து வீட்டுக்காரருடைய தோட்டத்து முருங்கை மரத்திலே இருந்து காய்களைப் பறித்தாயா?” என்று கேட்டார். பறித்ததாகக் கூறினாள் மனைவி.

முறைமன்றத் தலைவர் முறைமன்றத்திற்குச் சென்றதும் தமக்கு ஒரு ரூபா ஒறுப்புக்கட்டணம் விதித்துக்கொண்டார். உடனே அந்த ரூபாயை எடுத்து முறைமன்றத்திலே செலுத்திவிட்டார்.

வழக்குத் தொடுத்தவருக்கு இந்தச் செய்தி தெரிந்தது. அவர் மிகுந்த வியப்படைந்தார். “இந்த முறைமன்றத்தலைவர் உண்மையில் மனுநீதிச் சோழனாகத்தான் விளங்குகிறார். நான் இவருடைய அற நெறியைப் போற்றுகிறேன். உயரிய நிலைமையில் அமர்ந்திருப்பவர்கள் நேர்மையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். அதுதான் மிகவுஞ் சிறந்தது,” என்று முறைமன்றத் தலைவரைப் போற்றினார். அவருடைய நேர்பட ஒழுகுங் குணத்தைத் தாமும் பலரிடம் பாராட்டத் தொடங்கினார்.

”நேர்பட ஒழுகு” (இ – ள்.) நேர்பட – நேர்மையான வழியிலே, ஒழுகு – நீ நடப்பாயாக.

– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *