கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 12, 2022
பார்வையிட்டோர்: 1,868 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்குறள் கதைகள்

அரசியல்

இறைமாட்சி

அரசனது நற்குண நற்செய்கைகள் கரிகாலன், சிறு வயதில் தன் மாமனாகிய இரும் பிடர்த் தலையார் என்ற புலவர் பாதுகாப்பில் வளர்ந்து வந்தான். புலவர் இவனுக்கு வேண்டிய அறிவு நூல்களை எல்லாம் கற்பித்து இவனைக் கல்வி கேள்விகளில் வல்லவனாகச் செய்தார். இதனால் இவன் சோழ நாட்டிற்கு அரசனாக வந்ததும், மக்கள் எல்லாரிடமும் அன்பு மொழிகள் பேசி மகிழ்ந்ததோடு அவர்கள் விரும்பியதையும் கொடுத் துச் சிறந்தவனாக விளங்கினான். இவ்விதம் விளங்கி யதனால் இந்த அரசன், “காவிரிக்குக் கரை கட்ட வேண்டும்” என்று விரும்பினான். இதை அறிந்த மக்கள் அரசன் கருத்துப்படி நடப்பதே நம் கடமை என்று பல ஆண்டுகள் செய்து முடிக்க வேண்டிய கரையைச் சில நாட்களில் செய்து

முடித்து மன்னனுக்குப் புகழை உண்டாக்கினர். இவ்விதம் மக்கள் வேறு; அரசன் வேறு; என்று இல்லாமல் ஒற்றுமை மனப்பான்மையோடு புகழ் ஓங்கச் சோழன் ஆட்சிசெய்து வந்தான். வள்ளுவரும், இன்சொல்லோடு கொடுத்து அளிக்கும் அர சனுக்கு உலகோர் அவன் நினைத்தவற்றைக் கொடுத்துப் புகழை உண்டாக்குவர்” என்று கூறியுள்ளார்.

இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண்ட அனைத்து இவ்வுலகு.

இன் சொலால் = அன்பு மொழியுடனே
ஈத்து = கொடுத்து
அளிக்க வல்லாற்கு = காக்க வல்ல அரசனுக்கு
இவ்வலகு = இந்த உலகம்
தன் சொலால் = தன் புகழோடு பொருந்தி
தான் கண்ட அனைத்து = அந்த அரசன் நினைத்தவிதமே நடப்பதாகும்.

கருத்து: ஈகையும், இன் சொல்லும் உடைய அரசன் எண்ணியவி தமே இவ்வுலகமக்கள் நடப்பார்கள்.

கேள்வி: எவ்வி தமன்னன், மனப்படி மக்கள் நடப்பார்கள்?

– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *