(1955 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரண்டு மன்னர்களுக்குள் பகையுண்டாயிற்று. இருவரிடமும் படைப்பலமும், பொருட்பலமும் மிகுதியாக இருந்தன. அவர்கள் போரிட்டு ஒருவரையொரு வர் தொலைத்து விடவேண்டும் என்று உறுதி பூண்டு நின்றார்கள். இருவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஓர் அரசன் படையைத் திரட்டிக்கொண்டு பகைவ னுடைய அரணைச் சூழ்ந்து கொண்டான். மற்றவன் கோட்டைவாயிற் கதவுகளை அடைத்துக்கொண்டு படையுடன் உள்ளே இருந்தான்.
ஒரே குலத்தைச் சேர்ந்த இரண்டு அரசர்கள் பகைத்துப் போருக்கு முனைந்து நிற்றலைக் கோவூர் கிழார் என்னும் புலவர் கண்டார். அந்தோ இவர்கள் போரைத் தொடங்கினால் பல வுயிர்கள் வீணாக இறந்து படுமே என்று வருந்தினார். அவர் விரைந்து அவ் வரசர்களிடம் புகுந்தார்.
‘நீங்கள் போர்த் தொழிலைத் தொடங்காதீர்கள். அவ்வாறு தொடங்குவீர்களானால் பல உயிர்கள் இறந்து தொலையும். இருவரும் ஒரே குடியைச் சேர்ந்தவர்களாதலின் யார் தோற்பினும் அப்பழி இருவரையுமே சாரும். இருவரும் வெற்றியடைத் லென்பதும் முடியாது’ என்று அறிவுரைகள் பல கூறிப் போர்த்தொழில் நிகழாமல் தடுத்துவிட்டார்.
“போர்த்தொழில் புரியேல்” (இ – ள்.) போர்த்தொழில் – போரிடுதலாகிய தொழிலை, புரியேல் – நீ செய்யாதே.
– கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர், ஆத்திசூடி விளக்கக் கதைகள் (இரண்டாம் புத்தகம்), முதற் பதிப்பு: டிசம்பர் 1955