புத்திசாலி சகோதரர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 9, 2018
பார்வையிட்டோர்: 7,335 
 

ராமுவும், சோமுவும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிற மாணவர்கள். இவர்களின் பெற்றோர் அந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்கள். இருவரும் நல்ல புத்திசாலிகள். அவர்கள் அம்மாவுக்கு எல்லா உதவிகளும் செய்து நல்ல பிள்ளைகளாகவும் பெற்றோர் சொல் பேச்சு கேட்கும் குழந்தைகளாகவும் இருந்தனர்.

ராமுவும், சோமுவும் உள்ளுரில் உள்ள பள்ளியிலியே படித்து வந்தனர்.அவர்கள் படித்து வந்த பள்ளி அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்தது.தினமும் நடந்தே பள்ளிக்கு சென்று மாலையில் பள்ளி விட்டவுடன் வீடு திரும்புவர்.

அவர்கள் படித்து வந்த பள்ளியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மதியம் மேல் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். எல்லா வகுப்பு மாணவர்களும் ஒரு இடத்தில் கூடி பாட்டு, நடனம், நாடகம், எது வேண்டுமானாலும் நடத்தலாம். அப்படி கலைத்திறமையை காண்பிக்க போகும் குழந்தைகள், திங்கள் கிழமையே பேர் கொடுத்து விடவேண்டும். வெள்ளிக்கிழமை அவர்கள் பேரை கூப்பிட்டு அனைத்து ஆசிரியர்களும், எல்லா வகுப்பு மாணவர்களும் கூடி இருக்கும் இடத்தில் அவர்கள் செய்ய இருக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்திக்காட்ட வேண்டும்.அனைவரும் அதை பார்த்து இரசித்து மகிழ்வர்.ராமுவும் சோமுவும் ஒரு முறை நாடகம் நடத்துவதற்கு பேர் கொடுத்தனர்.ராஜா ஒருவருக்கு தண்டனை கொடுப்பது போலவும் அதை எதிர்த்து தண்டனை பெற்றவர் வசனம் பேசுவது போலவும் நடிப்பதாக பேர் கொடுத்தனர். அதற்காக தினமும் மாலை பயிற்சி எடுத்துவிட்டு வீட்டிற்கு நேரங்கழித்தே வந்தனர்.

அவர்கள் அம்மாவிடமும் வருகிற வெள்ளி அன்று நாடகம் போடுவதால் இந்த வாரம் முழுவதும் வீடு வர நேரமாகும் என்று சொல்லிவிட்டதால் பெற்றோர்கள் இவர்களைப்பற்றி கவலைப்படவில்லை.

இரண்டு நாள் கழித்து இவர்கள் நேரங்கழித்து வீடு வந்த பொழுது அவர்களின் சித்தப்பா வீட்டிலிருந்தார்.இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் அவர்களின் சித்தப்பா ராமு, சோமு, நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார்.

என்ன உதவி சித்தப்பா என்று கேட்க இன்னைக்கு இராத்திரிக்கு மட்டும் என் கடையில போய் படுத்துக்க முடியுமா? என்று கேட்டார். இவர்கள் இருவரும் தன் தந்தையின் முகத்தை பார்க்க அவர் நானும், உங்க சித்தப்பாவும் இன்னைக்கு இராத்திரி அசலூர் போறோம்.

வீட்டுல அம்மா கூட அவங்கம்மா வர்றதா சொல்லிட்டாங்க, ஆனா உங்க சித்தப்பா அரிசி கடையில இன்னைக்கு தான் அரிசி மூட்டை வந்து இறங்கியிருக்கு. அதனால யாராவது போய் படுத்துட்டா நல்லாயிருக்கும் அப்படீன்னு கேட்கிறான். நான் நீங்க சின்ன பசங்க வேண்டாம் அப்படீன்னு சொல்லிட்டேன்.

சொன்னவுடன் ராமுவுக்கும் சோமுவுக்கும் கோபம் வந்து விட்டது. நாங்க ஒண்ணும் சின்ன பசங்க இல்லை, நாங்க இன்னைக்கு இராத்திரி சித்தப்பா கடையில போய் படுத்துக்கறோம். சொன்னவர்களை அவர்கள் அப்பா கவலையுடன் பார்த்து உங்களாலே தனியா இராத்தி கடைக்குள்ள படுத்துக்க முடியுமா?நீங்க கவலைப்படாமே போய்ட்டு வாங்க, நாங்க இராத்திரி சாப்பிட்டுட்டு சித்தப்பா கடையிலே போய் படுத்துக்கறோம்.

இரவு சாப்பிட்டு விட்டு இருவரும் கிளம்பினர். சித்தப்பா அரிசி கடை ஊருக்கு தள்ளி இருந்தது. நல்ல இருள், இவர்கள் இருவரும் அப்பாவிடமும், சித்தப்பாவிடமும் சொல்லிவிட்டார்களே தவிர அந்த இருளை பார்த்தவுடன் பயம் மனதுக்குள் வந்து ஒருவரை ஒருவர் இறுக்கி பிடித்துக்கொண்டனர். சித்தப்பா கடையை திறந்து உள்ளே சென்றுகதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு அங்கிருந்த சாக்கு துணி இரண்டை போட்டு படுத்து கொண்டனர்,உள்ளேயும் இருட்டாக இருந்ததால் இருவரும் பேச்சு மூச்சு காட்டாமல் பயத்துடன் அருகருகே படுத்துக்கொண்டனர்.

நடு சாமம் இருக்கலாம், ஏற்கனவே பயத்தால் தூக்கம் வராமல் படுத்து இருந்த இவர்களுக்கு யாரோ சுவற்றை இடிக்கும் சத்தம் கேட்டது. இருவருக்கும் பயத்தில் உடலெல்லாம் வேர்த்து என்ன செய்வது என்று புரியாமல் உட்கார்ந்திருந்தனர்.

இப்பொழுது சுவர் இடிந்து ஒரு ஓட்டை விழுவதையும் அதற்குள் ஒரு தலை உள்ளே எட்டிப்பார்ப்பதையும் பார்த்த இவர்களுக்கு பயத்தில் வேர்த்து வழிய ஆரம்பித்தது.சுவரில் ஓட்டை போட்டு வருபவன் நிச்சயம் திருடந்தான் என்பதை உண்ர்ந்த இருவரும் என்ன செய்வது என திகைத்து விட்டனர்.

திடீரென்று ராமுவுக்கு ஒரு யோசனை தோன்றியது, சுற்று முற்றும் பார்த்தான் கடையில் திருஷ்டி பூசணிக்காய் இருந்தது தொ¢ய வர சோமுவிடம் மெல்ல அதை எடுக்க சொன்னான். அதை தன் முகத்தில் வைத்துக்கொண்டு சோமுவை ஒரு வெண்மையான் பிளாஸ்டிக் பை ஒன்றை எடுத்து தலையிலிருந்து போர்த்துக்கொள்ள் செய்தவன், நம்ம டிராமாவை இப்ப நடத்தப்போறோம். நான் பேச பேச நீயும் என்னை எதுத்து பேசணும் சா¢யா? என்று கிசுகிசுத்தவன் திடீரென்று ஹ்..ஹ்..ஹ்ஹ்..வா வா உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

சோமு தலையில் வெள்ளை பிளாஸ்டிக் பையை மூடிக்கொண்டு ஹ்..ஹ்..நானும் உன்னைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இன்று வசமாக மாட்டிக்கொண்டாய் என்று சத்தம் போட்டு சிரித்தான்.இருவரும் மாறி மாறி மாட்டிக்கொண்டாய், மாட்டிக்கொண்டாய் என்று சிரிக்க ஆரம்பித்தனர்.

திருடுவதற்கு முழு உடலையும் உள்ளே நுழைத்த உருவம் எதிரில் பூசணிக்காய் தலையுடன் ஒரு குட்டி உருவமும், வெள்ளை உடல் போர்த்திய உருவமும் சிரித்துக்கொண்டு குதிப்பதை பார்த்து பயந்து வெல வெலத்து வந்த ஓட்டை வழியே மீண்டும் தலையை நுழைத்து வெளியேறிய உருவம் தலை தெறிக்க ஓடும் காலடி சத்தத்தை இருவரும் கேட்டனர்.

அப்பாடி..! நிம்மதி பெருமூச்சு விட்டு இருவரும் இரவு முழுவதும் நிம்மதியாய் உறங்கினர்.

மறு நாள் அப்பாவிடமும், சித்தப்பாவிடமும் சொல்லி சொல்லி சிரித்தனர். அன்று பள்ளியில் இவர்கள் போட்ட நாடகம்தான் நன்றாக இருந்ததாக அனைவரும் சொன்னார்கள்.

நாங்கள் இராத்திரியே இந்த நாடகத்தை போட்டு ஒருவரை ஓடச்செய்துவிட்டோம் என்று பெருமையுடன் இருவரும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)